Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

State of Northeastern states – Neglect & Growth of extremist forces

Posted by Snapjudge மேல் ஜூலை 13, 2007

அவர்களும் இந்நாட்டு மன்னர்களே!

எஸ். சையது இப்ராஹிம்

தீவிரவாதச் செயல்கள் தொடர்பாக உளவுத் துறை அண்மையில் மத்திய அரசுக்கு ஓர் அறிக்கை அளித்தது. அதில், “வடகிழக்கு மாநிலங்களில் வேகமாக வளர்ந்து வரும் தொழிலாக தீவிரவாதம் மாறி வருகிறது. கடந்த ஆண்டு இந்தத் தொழிலில் புழங்கிய தொகை ரூ. 250 கோடி’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

  • அருணாசலப் பிரதேசம்,
  • அசாம்,
  • மணிப்பூர்,
  • மேகாலயா,
  • மிஜோரம்,
  • நாகாலாந்து,
  • திரிபுரா ஆகியவை வடகிழக்கு மாநிலங்கள் ஆகும். இவை 7 சகோதரிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

சீனா, மியான்மர், வங்கதேசம், பூடான் ஆகிய நாடுகளால் சூழப்பட்டுள்ள இந்த மாநிலங்களின் மொத்த மக்கள்தொகை சுமார் 3 கோடி.
நாடு சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளாகியும் இன்னும் 6 மாநிலத் தலைநகரங்களுக்கு ரயில் வசதி இல்லை. இடாநகர் (அருணாசலப் பிரதேசம்), கொஹிமா (நாகாலாந்து), ஷில்லாங் (மேகாலயா) ஆகிய தலைநகரங்களில் அனைத்து வசதிகளும் கொண்ட விமான நிலையங்கள் இல்லை.

இயற்கை வளங்கள் மிகுதியாக இருந்தும், நவீன வேளாண்மை நுட்பம் தெரியாததால் ஆண்டுதோறும் ரூ. 3500 கோடிக்கு அத்தியாவசியப் பொருள்களைப் பிற மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யும் அவலம் நிலவுகிறது.

நாட்டின் மொத்த தேயிலை உற்பத்தியில் மூன்றில் இரு பங்கு, பிளைவுட் உற்பத்தியில் 60 சதவீதத்தை அளித்தாலும் வருவாயில் ஒரு பைசா கூட திரும்ப முதலீடு செய்யப்படுவதில்லை. கல்வி, சுகாதாரம், தகவல் தொடர்பு இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளன. இன்னும் மின்சாரத்தைப் பார்க்காத பல கிராமங்கள் உள்ளன. கடந்த நிதியாண்டில் மத்திய நிதி நிறுவனங்கள் ஒதுக்கீடு செய்த ரூ. 50 ஆயிரம் கோடியில் அசாம் மாநிலத்திற்கு வழங்கப்பட்டது வெறும் ரூ. 114 கோடி. நாகாலாந்துக்கோ ரூ. 4 கோடி மட்டுமே. மற்ற மாநிலங்களுக்கு ஒரு பைசா கூட வழங்கப்படவில்லை.

இதனால் உணவுப்பற்றாக்குறை, வேலையில்லாத் திண்டாட்டம், நிதி நெருக்கடி போன்ற பிரச்னைகளில் சிக்கி இந்த மாநிலங்கள் திணறுகின்றன. அசாமின் கடன்சுமை ரூ. 10 ஆயிரம் கோடி.

இந்த நிலைக்கு யார் காரணம்? அண்டை நாடுகளில் இருந்து அகதிகளாக வருபவர்களை இரு கரம் நீட்டி வரவேற்று, அன்பு காட்டி அரவணைக்கும் அரசு, ஏன் இந்த 3 கோடி மக்களின் வளர்ச்சித் திட்டங்களில் அக்கறை காட்டாமல் புறக்கணிக்கிறது?. வடகிழக்கு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு வருவது பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தொடங்கியது. புறக்கணிப்புக்கு இதுதான் காரணம் என்று ஏதேனும் ஒன்றை மட்டும் சுட்டிக்காட்டி விட முடியாது. புறக்கணிப்பின் விளைவு தீவிரவாதம்.

“1960-களில் ஷில்லாங் பகுதியில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய- மாநில அரசுகள் உரிய நிவாரணம் வழங்கியிருந்தால் நாங்கள் ஆயுதங்களைக் கையில் எடுத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது’ என்று மிஜோ தேசிய அமைப்பின் தலைவர் லால்தெங்கா தெரிவித்தது நினைவுக்கு வருகிறது. அவர் கூறுவதும் உண்மைதான்.

ஆரம்பத்தில் போராட்டங்களை ஒடுக்க ராணுவத்தை ஏவி மக்களை ஆயுதம் தூக்க வைத்தது மத்திய அரசு என்றால் மிகையல்ல. இருப்பினும் அரசின் இந்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை.

நாகாலாந்தில் நாகா சோஷலிஸ்ட் தேசிய கவுன்சில் அமைப்புடன் மத்திய அரசு மேற்கொண்ட உடன்படிக்கையால் அங்கு தற்போது அமைதி நிலவுகிறது. பேச்சுவார்த்தைக்குக் கிடைத்த வெற்றி இது.

ஆனால், அசாம் மாநிலத்தில் உல்ஃபாவுடன் மத்திய அரசு செய்து கொண்ட உடன்படிக்கை 2006-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தோடு முடிவடைந்தது. இதையடுத்து, தற்போது அந்த மாநிலத்தில் தீவிரவாத செயல்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளன என்பதை அண்மைச் சம்பவங்கள் உணர்த்துகின்றன. இதை மனதில் கொண்டு பல்வேறு தீவிரவாத அமைப்புகளுடன் மத்திய அரசு பேச்சு நடத்த வேண்டும். பேச்சுவார்த்தை மீது தீவிரவாத அமைப்புகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் கீழ்கண்டவற்றையும் செய்யலாம்.

வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் நடைமுறையில் உள்ள மக்கள் நலனுக்கு எதிரான ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். மத்திய திட்டக்குழுவின் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியாவின் பரிந்துரைப்படி, வடகிழக்கு மாநிலங்களுக்கு உரிய போக்குவரத்து வசதி செய்துதர வேண்டும். குறிப்பாக “வடகிழக்கு ஏர்லைன்ஸ்’ என்ற பெயரில் புதிய விமான நிறுவனத்தைத் தொடங்கி சேவை அளிக்க வேண்டும்.

இந்தத் திட்டத்தை அமல்படுத்தினால் 7 மாநிலங்களில் இயற்கை எழில் மிகுந்த பகுதிகளைப் பார்வையிட ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவர். இதன் மூலம் பொருளாதாரம் வளர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது. ஏற்கெனவே அறிவித்த வடகிழக்கு மாநிலங்களுக்கானக் கொள்கையை அமல்படுத்துவதில் மத்திய அரசு உரிய கவனம் செலுத்தலாம். மியான்மர் சாலையைத் திறந்துவிடலாம்.

இது போன்ற நடவடிக்கைகள் வடகிழக்கு மாநில மக்களின் சமூக, பொருளாதார நிலையை உயர்த்தினால், பேச்சுவார்த்தையே ஒருவேளை தேவையில்லாமல் போய்விடும்.

இருப்பினும், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள 3 கோடி மக்களும் நம் சகோதரர்கள், அவர்களும் இந்நாட்டு மன்னர்கள் என்பதைக் கருத்தில் கொண்டு இப் பிரச்னையில் மத்திய அரசு உரிய கவனம் செலுத்துமா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: