Sujatha – Vaaram oru Paasuram (Kalki) : 39
Posted by Snapjudge மேல் ஜூலை 9, 2007
வாரம் ஒரு பாசுரம் – 39
சுஜாதா
கல்கி ஜூலை 15, 2007
வழக்கொழிந்து போன பல அழகான சொற்களை மறுபடி நோக்கி ஒரு இலேசான பெருமூச்சு விடுவதற்கான வாய்ப்புகள் ஆழ்வார் பாசுரங்கள் பலவற்றில் உள்ளன.
‘திறம்புதல்’ என்ற சொல்லைக் கொஞ்சம் கவனிக்கலாம். இதற்குத் தப்புதல் என்பது பொருள். இதன் எதிர்ப்பதம் திறம்பாமை. திறம்பாத கடல் என்றால் அலையடித்துச் சலிக்காத கடல். திறம்பாத உலகம் – சலியாதிருக்கிற உலகம், திறம்பாது – நான் சொல்வதை என்றால் தப்பாமல், தவறாமல்… இப்படித் தீர்மானிக்கப்பட்ட நெறியிலிருந்து தவறாமையைக் குறிக்கும் வார்த்தை இது. நம்மாழ்வார்
திருவாய்மொழியில் இதனை அத்தனை வேறுபட்ட பொருள்களிலும் ஒரே பாசுரத்தில் பயன்படுத்தியுள்ளார்.
“திறம்பாமல், மண் காக்கின்றேன் யானே என்னும்;
திறம்பாமல், மலை எடுத்தேனே என்னும்;
திறம்பாமல், அசுரரைக் கொன்றேனே என்னும்;
திறம் காட்டி, அன்று ஐவரைக் காத்தேனே என்னும்
திறம்பாமல், கடல் கடைந்தேனே என்னும்;
திறம்பாத கடல்வண்ணன் ஏறக்கொலோ
திறம்பாத உலகத் தீர்க்கு என் சொல்லுகேன் –
திறம்பாது என்திரு மகள் எய்தினவே?”
ஒரு தாய் தன் மகள் மேல் கண்ணன் வந்து என்ன என்னவோ
பிதற்றுகிறாளே என்று கவலைப்படுவதாகப் பத்துப் பாடல்களின்
வடிவில் ஆழ்வார், பகவத்கீதையின் 18ஆவது அத்தியாயக் கருத்துகள் அத்தனையையும் அழகாகச் சொல்லிவிடுகிறார்.
இந்தப் பெண் நான்தான் பூமியைத் தவறாமல் காக்கிறேன் என்கிறாள். நான்தான் மலையைத் தூக்கினேன் என்கிறாள். அசுரனைக் கொன்றேன் என்கிறாள். என் திறமையைக் காட்டி அன்று பாண்டவர்களைக் காப்பாற்றினேன் என்கிறாள். பாற்கடலைக் கடைந்ததும் நான்தான் என்கிறாள். அலை ஓயாத (திறம்பாத) கடல் வண்ணனான திருமால் வந்து புகுந்ததால் இது நிகழ்ந்ததா! தவறு செய்யாத (திறம்பாத) உலகத்தவர்களுக்கு என்ன சொல்வேன். என் மகளுக்குத் தப்பாது (திறம்பாது) இது வந்துவிட்டதே. ஏழுமுறை இந்தச் சொல்லைப் பயன்படுத்தியுள்ளார் ஆழ்வார் – ஏழு முறையும்
திறம்பாமல்.
மறுமொழியொன்றை இடுங்கள்