Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Joint management of airspace – Defence and the civil aviation ministry

Posted by Snapjudge மேல் ஜூலை 9, 2007

வானில் ஓர் எல்லைப் பிரச்னை!

வி. கிருஷ்ணமூர்த்தி

இந்தியாவின் வான் பாதுகாப்புக்கு முழுப் பொறுப்பு வகிக்கும் பாதுகாப்புத் துறைக்கும், சிவில் விமானப் போக்குவரத்துத் துறைக்கும் இடையே தற்போது எல்லைப் பிரச்னை எழுந்துள்ளது.

இவை இரண்டும் தனித்தனித் துறைகள்தான் என்றாலும் இரண்டுக்கும் களம் (AIRSPACE) ஒன்றுதான். இமயம் முதல் இந்தியப் பெருங்கடல்வரையும், அரபிக்கடல் முதல் வங்காள விரிகுடாவரையும் பெரும்பாலான வான்பகுதி இந்திய விமானப் படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தப் பகுதிகளில் பறக்கும் விமானங்கள் அனைத்தும் பாதுகாப்புத் துறையின் அனுமதி இல்லாமல் செல்ல முடியாது. இதுதவிர நாட்டில் பல்வேறு பயிற்சித் தளங்கள் உள்பட சுமார் 60 இடங்களில் தரைத் தளங்கள் விமானப்படையின்கீழ் செயல்படுகின்றன.

இந்த விமானத் தளங்கள் உள்ள பகுதியில் சிவில் விமானப் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் பல்வேறு பிரச்னைகள் எற்படுகின்றன. உதாரணமாக, சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வானில் பெரும் பகுதி, தாம்பரம் விமானப் படைத்தளம் மற்றும் அரக்கோணத்தில் கடற்படையின் விமான தளம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவற்றின் எல்லைகளுக்கு அப்பால் மீதம் உள்ள வான்பகுதியை நம்பியே சென்னை விமான நிலையம் செயல்பட வேண்டிய நிலை உள்ளது. இத்தகைய வான்பகுதி எல்லைப் பிரச்னை காரணமாக சென்னைக்கு கிழக்கே புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டமே கைவிடப்பட்டது.

நாட்டில் தற்போது 13 சர்வதேச விமான நிலையங்கள் உள்பட 126 விமான நிலையங்கள் உள்ளன. நாட்டின் மொத்த வான்பகுதியில் 28 லட்சம் சதுர கடல்மைல் (நாட்டிக்கல் மைல்) மட்டுமே விமானப் போக்குவரத்துத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது தவிர விமான நிலையங்கள் இல்லாத இடங்கள் உள்பட 28 விமானப் படைத் தளங்களில் சிவில் விமானங்களுக்கென தனிப் பகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. பல்வேறு சிறிய விமான நிலையங்கள், பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு இல்லாததால் விரிவாக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டும் தற்போதைய தேவை மற்றும் எதிர்கால தேவையைக் கருத்தில் கொண்டும் விமானப் போக்குவரத்துக்கான புதிய வரைவுக் கொள்கையை மத்திய அரசு உருவாக்கியது.

இதில், பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பல வான்பகுதிகளை சிவில் விமானப் போக்குவரத்துக்கு அளிக்க வேண்டும். நாட்டின் வான் பகுதியில் விமானப் படையின் கட்டுப்பாட்டைக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட சில அம்சங்கள் பாதுகாப்புத் துறைக்கும் விமானப் போக்குவரத்துத் துறைக்கும் இடையே வெளிப்படையான மோதலுக்கு வழிவகுத்துள்ளது.

இதுதவிர, விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரஃபுல் பட்டேல், இந்தத் துறையின் செயலர், இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் தலைவர் ஆகியோர் தொடர்ந்து வான் பகுதி தொடர்பான பிரச்னையில் பாதுகாப்புத் துறையை வெளிப்படையாக விமர்சித்து வருகின்றனர். மத்திய அரசின் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்களின் இத்தகைய வெளிப்படையான விமர்சனங்கள் பாதுகாப்புத் துறை தரப்பை ஆத்திரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி வரைவு விமானப்போக்குவரத்துக் கொள்கை தொடர்பான ஆட்சேபனைகளைப் பகிரங்கமாகத் தெரிவித்தார். விமானப்போக்குவரத்தில் பல்வேறு நிலைகளில் படிப்படியாகத் தனியார்மயத்தை ஊக்குவித்துவரும் விமானப்போக்குவரத்துத் துறையை நம்பி விதிகளை தளர்த்த முடியாது என்பதே அந்தோனியின் வாதம். பாதுகாப்புத் துறையின் எதிர்ப்பை அடுத்து விமானப் போக்குவரத்துக்கான வரைவுக் கொள்கை இறுதி வடிவம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசின் இரு முக்கியத் துறைகளுக்கிடையே ஏற்பட்டுள்ள இத்தகைய பிரச்னைக்குத் தீர்வுகாண வெளியுறவுத் துறை அமைச்சர் தலைமையில் பல்வேறு துறை அமைச்சர்கள் அடங்கிய உயர் நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. 1999-ல் ஏற்பட்ட கார்கில் சண்டைக்குப் பின்னர் வான்பகுதி மேலாண்மைக்கான ஓர் அதிகார அமைப்பை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டது. இத்திட்டம் முறையாக நிறைவேறாததே தற்போதைய பிரச்னைக்குக் காரணம்.

1995-ல் ரஷிய விமானங்கள் புருலியாவில் ஆயுதங்களைக் கொட்டின, 2001 செப்டம்பர் 11-ல் அமெரிக்காவில் உலக வர்த்தக மையம், ராணுவத் தலைமையகம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்த சிறிய ரக பயணி விமானங்கள் பயன்படுத்தப்பட்டது, அண்மையில் இலங்கையில் விடுதலைப்புலிகள் வான்தாக்குதலைத் தொடங்கி இருப்பது, சில பயங்கரவாத இயக்கங்கள் வெடிபொருள்கள் நிரப்பப்பட்ட ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தத் தொடங்கி இருப்பது ஆகியவை நாட்டின் வான்பாதுகாப்பு தொடர்பான கவலையை அதிகரித்துள்ளன.

இதைக் கருத்தில் கொண்டு செயல்பட்டால்தான் நாட்டின் வான்பகுதி எல்லைப் பிரச்னைக்குச் சரியான தீர்வைக் காண முடியும். நாட்டின் பாதுகாப்பா, விமானப் போக்குவரத்து வளர்ச்சியா? என்றால் பாதுகாப்பான விமானப்போக்குவரத்து என்பதே அனைவரின் கருத்தாகும்.

விமானப்படை, விமானப் போக்குவரத்துத் தலைமை இயக்குநர் அலுவலக அதிகாரிகள் அடங்கிய வான்பகுதி மேலாண்மைக்கான ஒழுங்குமுறை ஆணையத்தை ஏற்படுத்துவதே தற்போதைய பிரச்னைக்குத் தீர்வாக அமையும் என்பதே பல்வேறு தரப்பினரின் கருத்து.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: