Thiruvengimalai Saravanan: Thillaiyaadi Valliammai (Notable Women Series in Kumudham)
Posted by Snapjudge மேல் ஜூலை 7, 2007
குமுதம்
மறக்க முடியாத மங்கைகள்
தில்லையாடி வள்ளியம்மை
திருவேங்கிமலை சரவணன்
போராளிகளில் எத்தனையோ வகை உண்டு. அதிலும் பெண் போராளிகளின் வாழ்க்கை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. அதில் மிகவும் உருக்கமானது தில்லையாடி வள்ளியம்மையின் கதை. தியாகம், லட்சியம், அர்ப்பணிப்பு இந்த மூன்று வார்த்தைகளுக்கு அர்த்தம் சொல்ல வேண்டுமென்றால் அதற்கு அவருடைய பெயர் ஒன்று போதும்.
தமிழ்நாட்டில் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள சிறிய ஊர்தான் தில்லையாடி. அதில் வசித்து வந்த ஜானகி என்கிற பெண்மணியை மணம் முடித்தார். பாண்டிச்சேரியைச் சேர்ந்த முனுசாமி என்கிற இளைஞர். நெசவுதான் அவர்களின் தொழிலாக இருந்தது. வாழ்க்கை ஏதோ சுமாராகப் போய்க் கொண்டிருந்தது. அது பிரிட்டிஷ் ஆட்சிக்காலம். திடீரென்று இங்கிலாந்திலிருந்து துணி வகைகள் இறக்குமதியானதால் உள்ளூர் நெசவுத் துணிகளுக்கு மவுசு குறைந்தது. முனுசாமியின் குடும்பமும் வறுமையில் வீழ்ந்தது. செய்வதறியாது தவித்தார் முனுசாமி.
அவரைச் சந்தித்த ஒரு கங்காணி (வெளிநாட்டுக்கு ஆள் அனுப்பும் ஏஜெண்ட்) “தென்னாப்பிரிக்காவுக்கு போ, அங்கே சுகமாக வாழலாம். நிலம் வாங்கலாம், வீடு வாங்கலாம்” என்று ஆசை காட்டினார். முனுசாமியும் கையிலிருந்த பணத்தை எல்லாம் புரட்டிக் கொடுத்து கர்ப்பிணியாக இருந்த தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு கப்பலேறினார்.
தென்னாப்பிரிக்காவில் கரை இறங்கி ஜோகன்ஸ்பர்க் நகரத்தில் சிறிய உணவு விடுதியைத் தொடங்கினார். நாட்கள் செல்லச் செல்லத்தான் கறுப்பர்களுக்கும் இந்தியர்களுக்கும் தென்னாப்பிரிக்கா எப்படிப் பட்ட நரக பூமி என்பது அவர்களுக்குப் புரிந்தது. தென்னாப்பிரிக்காவின் கறுப்பர் இனத்து மக்கள் தங்களை அடிமையாக்கிச் சுரண்டிய வெள்ளையர்களிடம் மோதல் போக்கைக் கொண்டிருந்ததால் வைரச் சுரங்கங்களில் வேலை செய்ய மலிவான சம்பளத்துக்கு இந்தியர்களை, குறிப்பாக தமிழர்களை, குடியமர்த்திக் கொண்டிருந்தார்கள் வெள்ளையர்கள்.
ஆனால் அவர்களின் உரிமைகளைப் பறித்து, சுகாதாரமற்ற இழிவான வாழ்க்கை நிலைக்குத் தள்ளி, இனரீதியாக ஒதுக்கி வைத்து மிக மோசமாக நடத்தினார்கள். அதையெல்லாம் பார்த்து முனுசாமிக்கு அதிர்ச்சியாக இருந்தது. அப்போதுதான் 1898_ம் வருடம் மகளாகப் பிறந்தார் வள்ளியம்மை. வெள்ளையர்கள் தமிழர் களைப் புழு பூச்சிகளை விடக் கேவலமாக நடத்தியதைக் கண்டவாறு வளர்ந்தாள் வள்ளியம்மை.
வெள்ளையர்களால் புறக்கணிக்கப்பட்ட சேரிப் பகுதியில் வளர்ந்த வள்ளியம்மைக்கு, நாமும் மனிதர்கள்தானே, நம்மை ஏன் இப்படி மிருகங்களுக்கும் கீழாக நடத்துகிறார்கள் என்பதே புரியாமல் இருந்தது. இந்திய வம்சாவளியினர் அங்கே வாழ வேண்டுமானால் 3 பவுண்ட் தலை வரி கட்ட வேண்டும், அனுமதியின்றி வெள்ளையர் பகுதிக்குள் நுழையக்கூடாது. சிறுவர்கள் வெள்ளயர் குழந்தைகள் படிக்கும் பள்ளியின் பக்கமே செல்லக் கூடாது. வாக்குரிமை கிடையாது. வெள்ளை எஜமானர்கள் அவர்களை அடிக்கலாம், உதைக்கலாம். என்ன கொடுமை செய்தாலும் யாராலும் எதையும் கேட்க முடியாது.
இந்த நிலையில்தான் இந்தியர்களின் விடிவெள்ளியாக அங்கே தோன்றினார் காந்திஜி. ஒரு வழக்கு விஷயமாக தென்னாப்பிரிக்கா வந்தவர் அவர்களின் நிலை கண்டு வருந்தி, அவர்களுக்காகப் போராட முடிவு செய்து அங்கேயே நிரந்தரமாகத் தங்கி விட்டார். பல போராட்டங்களை சாத்வீகமான முறையில் போராட ஆரம்பித்திருந்தார். வெள்ளையர்களின் கறுப்புச் சட்டத்தை எதிர்த்து அவர் அங்கே நடத்தத் துவங்கியிருந்த போராட்டத் தீ இந்தியர்களிடையே காட்டுத் தீ போல் பரவிக் கொண்டிருந்த நேரம் அது. சிறுமி வள்ளியம்மை தன் தாய் தந்தையருடன் காந்திஜியின் போராட்டங்களில், கூட்டங்களில் கலந்து கொண்டாள். காந்திஜியின் போராட்ட குணம் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.
1913_ம் வருடம் கேப்டவுன் நீதி மன்றம் ஒரு விபரீதமான சட்டத்தைப் பிறப்பித்தது. “கிறிஸ்துவச் சட்டப்படியும் திருமணப் பதிவாளர் சட்டப்படியும் நடக்காத எந்தத் திருமணமுமே செல்லாது” என்கிற அந்த சட்டம் இந்தியர்களை நிலைகுலையச் செய்தது. இதனால் இந்திய தமிழ்ப் பெண்கள் தங்களின் மனைவி என்கிற சட்டபூர்வமான அந்தஸ்தை இழந்தார்கள். குழந்தைகள் தங்களின் வாரிசு உரிமையை இழந்தார்கள். இந்த கொடுஞ்சட்டத்தை எதிர்த்து காந்திஜி பெரும் போராட்டத்தை அறிவித்தார்.
அப்போது வள்ளியம்மைக்கு வயது 16. தன்னைப் பெற்றவர்களையே கூட அப்பா, அம்மா என்று அழைக்க முடியாத படி மாற்றிய அந்தக் கொடு மையை எதிர்த்து காந்தியடிகளின் அறப்போராட்டத்தில் சேர்ந்தாள் வள்ளியம்மை. தன் தந்தை உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும் அதைப் பொருட்படுத்தாமல் களத்தில் குதித்தாள்.
1913_ம் வருடம் அக்டோபர் மாதம் 29_ம் தேதி ஜோகன்ஸ்பர்க் நகரத்திலிருந்து நியூகாசில் நகருக்கு ஒரு பெண்கள் சத்தியாகிரகப் படை புறப்பட்டது. அதில் காந்திஜியின் மனைவி கஸ்தூரிபாயுடன் வள்ளியம்மையும் கலந்து கொண்டாள். இந்தப் படை செய்த பிரசாரம் தொழிலாளர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வெலை நிறுத்தத்தில் போய் நின்றது. ஊர் ஊராகச் சென்று சுரங்கத் தொழிலாளர்களைச் சந்தித்து வள்ளியம்மை செய்த பிரசாரத்தைக் கண்டு காந்திஜி உள்ளம் பூரித்தார். தடைகளை மீறி அனுமதி இல்லாத இடங்களுக்குச் சென்று வந்ததற்காக வெள்ளையர்கள் போராட்டக்காரர்களைக் கைது செய்தனர். ஏராளமானோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 16 வயது வள்ளியம்மையும் கடுங்காவல் தண்டனையை ஏற்று சிறைக்குச் சென்றார். கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு சிறையில் அளிக்கப்பட்ட வேலைகளும் தண்டனைகளும் கொஞ்ச நஞ்சமல்ல. உரிய அபராதத் தொகை கட்டினால் விடுதலை செய்வோம் என்று வெள்ளையர்கள் சொன்னர்கள். ஆனால் வள்ளியம்மை மறுத்து விட்டாள். மூன்று மாதம் கடுங்காவல் தண்டனை.
சிறையில் வள்ளியம்மையின் உடல் நிலை மிகவும் மோசமாகியது. Êசத்தியாகிரக போரட்டத்தில் இளமைத் துள்ளலோடு மிடுக்குடன் நடந்து சென்ற வள்ளியம்மை இப்போது கிழிந்து போன வாழை நாராய் நிலைகுலைந்து போனாள். இதற்கு மேலும் சிறையில் இருந்தால் உயிருக்கே ஆபத்து என்கிற நிலையில் விடுதலை செய்யப்பட்டாள். ஒரு ஜமுக்காளத்தில் துணியோடு துணியாய் கிடத்தப்பட்டிருந்த எலும்புக் கூடு போன்ற வள்ளியம்மையைப் பார்த்து காந்திஜி மனம் வருந்தி கண்ணீர் விட்டார். “வள்ளியம்மா, சிறை சென்றதற்காக இப்போது நீ வருந்துகிறாயா?’’ என்று குரல் கம்மக் கேட்டார். வள்ளியம்மையிடமிருந்து பளிச்சென்று பதில் வந்தது. “வருத்தமா? இப்போது கூட இன்னொரு முறை சிறை செல்ல நான் தயார். தாய் நாட்டிற்காக உயிர் கொடுக்க விரும்பாதவர் யார் இருப்பார்?’’ நெகிழ்ந்து போனார் காந்திஜி.
ஆனால் வள்ளியம்மையின் உடல் நிலை மேலும் மேலும் மோசமடைந்தது. நோயிலிருந்து மீள முடியாமல் 22.2.1914_ம் வருடம் திரும்பி வர முடியாத மரணத்தை அடைந்தாள் வள்ளியம்மை. காந்திஜி உள்ளிட்ட எல்லா தலைவர்களும், கறுப்பு இனத்தவர்களும் கண்ணீர் விட்டனர். ஜோகன்ஸ்பர்க் நகரத்தில் ஒரு நினைவுச் சின்னத்தைத் திறந்து வைத்த காந்திஜி, “இந்த நகரத்தின் முக்கிய அம்சமே இது வள்ளியம்மா பிறந்த இடம் என்பதுதான். அந்த இளம் பெண்ணின் உருவம் என் கண் முன்னாலேயே நிற்கிறது. சத்தியத்திற்காக உயிர்த்தியாகம் செய்தவள் வள்ளியம்மை” என்று மனம் உருகிப் பேசினார். வள்ளியம்மையின் உயிர்த் தியாகம் வீண் போகவில்லை. போராட்டத்துக்கு பயந்து கறுப்புச் சட்டத்தை வாபஸ் பெற்றது வெள்ளை அரசாங்கம்.
அதன் பிறகு இந்திய விடுதலைப் போராட்டத்துக்குத் தலைமை ஏற்க இந்தியா திரும்பிய காந்திஜி தன்னுடன் வள்ளியம்மையின் நினைவுகளையும் தாங்கி வந்தார். பல பொதுக்கூட்டங்களில் வள்ளியம்மையின் தியாகத்தைப் பற்றி உணர்ச்சிகரமாகக் குறிப்பிட்டார். தன்னுடைய புத்தகங்களில், கட்டுரைகளில் எல்லாம் அந்த இளம் பெண்ணிடம் இருந்த லட்சிய வேட்கை பற்றி பக்கம் பக்கமாக எழுதினார். தமிழ்நாட்டுக்குப் பயணம் வந்தபோது வள்ளியம்மையின் சொந்த ஊரான தில்லையாடிக்கு வந்து அந்த மண்ணை வணங்கிப் போற்றினார்.
இன்றைக்கும் தில்லையாடி கிராமம் தன் மண்ணின் மகளான வள்ளியம்மையின் நினைவுகளைப் பெருமையுடன் தாங்கியபடி இருக்கிறது.
நன்றி : த. ஸ்டாலின்
குணசேகரன் தொகுத்த ‘விடுதலை வேள்வியில் தமிழகம்’ (எஸ். சோமசுந்தரன்), நிவேதிதா
பதிப்பகம் வெளியீடு.
மறுமொழியொன்றை இடுங்கள்