Waste Management – Power generation from Garbage
Posted by Snapjudge மேல் ஜூலை 6, 2007
நகர்ப்புற திடக்கழிவுகளிலிருந்து எரிசக்தி!
என். விட்டல்
அரசியல்வாதிகளுக்கும் காந்தியவாதிகளுக்கும் கிராமப்புறங்கள் புனிதமானவை. கிராமங்களில்தான் இந்தியா வாழ்கிறது என்று உணர்ந்ததால், இந்தியாவின் எதிர்காலத்தையே கிராம ராஜ்யத்தின் வலுவோடு வளப்படுத்த காந்திஜி கனவுகண்டார்.
பெரும்பாலான வாக்காளர்கள் இன்னமும் கிராமங்களில்தான் வாழ்கின்றனர் என்பதால் நமது அரசியல்வாதிகளுக்கும் கிராமப்புறம் புனிதமானதாகத் திகழ்கிறது.
எது எப்படியிருந்தாலும் இந்தியா மாறிக்கொண்டிருக்கிறது. நாளுக்குநாள் நகர்மயமாதல் அதிகரித்து வருகிறது. வேலைவாய்ப்பு நகரங்களில்தான் என்பதால் நம் நாட்டின் 40 சதவிகித மக்கள் நகரங்களில்தான் இப்போது வசிக்கின்றனர். எல்லா ஊர்களிலும் பெரு நகரங்களிலும் சேரிப்பகுதிகள் வளர்ந்து கொண்டே வருவது இதற்கு நல்ல ஆதாரம்.
நகர்ப்புற வசதிகளைக் கிராமங்களிலேயே ஏற்படுத்தினால், நகர்ப்புறமயத்தைத் தடுக்கலாம் என்று குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் ஐ.ஐ.டி.யின் பேராசிரியர் பி.வி. இந்திரேசனும் எப்போதிருந்தோ கூறி வருகின்றனர். இருந்தாலும், இந்தியா மேலும் மேலும் நகர்மயமாவதைத் தடுக்க முடியாது. நகர்ப்புறப் பகுதிகளுக்கு முக்கியத்துவம் தந்து அவற்றைத் திறமையாக, ஒழுங்காக நிர்வகிப்பது எப்படி என்று ஆலோசிப்பதே இப்போதைய தேவை.
நகரப்பகுதிகளுக்கு மிகவும் சவாலான பணியாக இருப்பது, குப்பைகளை எப்படி அகற்றுவது அல்லது பயனுள்ள வகையில் பயன்படுத்துவது என்பதுதான். நகரங்களில் சேரும் குப்பைகளின் அளவும், தரமும் நகரவளர்ச்சியோடு நேரடியாகத் தொடர்பு உடையது என்பது வேடிக்கையானது! இந்தியாவில் நகர்ப்புறங்களில் ஒரு நாளில் ஒரு நபருக்கு 400 கிராம் வீதம் குப்பைகள் சேருவதாக ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
அமெரிக்காவில் நபர் வாரி குப்பை அளவு தலா ஒன்றரை கிலோ முதல் 2 கிலோ வரை இருக்கிறது. இதுதான் உலகிலேயே அதிகபட்ச அளவாகும்.
இந்தியா முழுவதும் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் டன் வீதம் குப்பை சேருகிறது. இதில் பெரிய நகரங்களின் பங்கு 60 சதவிகிதத்துக்கும் மேல். அதாவது 40 சதவிகித மக்கள்தொகை 60 சதவிகித குப்பைகளைக் கொட்டுகின்றனர்.
குப்பைகளை அகற்றுவதும், அவற்றைப் பயனுள்ளதாக மாற்றுவதும் நகர நிர்வாகங்களுக்குச் சவால் விடும் வேலையாகும். பொதுவாக நகர்ப்பகுதிகளில் குப்பைகளை அகற்றினால் அவற்றைத் திறந்த வெளியில் எங்காவது பள்ளம் பார்த்து கொட்டி நிரப்புவதே நடைமுறையாக இருக்கிறது.
இப்படி குப்பைகளைத் திறந்தவெளிப் பள்ளங்களில் கொட்டி நிரப்பிய பிறகு அடுத்த சுகாதார பிரச்னைகள் ஆரம்பமாகின்றன. அவற்றைப் பெருச்சாளிகளும் பன்றிகளும் தோண்டி துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றன. குப்பைகளிலிருந்து வடியும் கழிவுநீர் நிலத்தில் ஊறி, நிலத்தடி நீர்மட்டத்தையும் தரைக்கடியில் உள்ள நீரோட்டத்தையும் பாழ்படுத்துகிறது. அதுமட்டும் அல்ல, “”குப்பையை எங்கள் பகுதியில் கொட்டாதே!” என்று ஆங்காங்கே போர்க்குரல்கள் எழுகின்றன. எங்கு பணக்காரர்கள் இல்லையோ, எங்கு செல்வாக்கானவர்கள் இல்லையோ அந்த இடம் பார்த்து குப்பைகளைக் கொட்டிவிடுகின்றனர் உள்ளாட்சிமன்ற அதிகாரிகள்.
குப்பைகளை அகற்றுவதற்கு 3 வழிகள் உள்ளன.
1. குப்பைகளை எரிப்பது. அதன்மூலம் 90 சதவிகித குப்பைகளைக் குறைத்துவிடலாம்.
2. மண்புழுக்கள் போன்றவை மூலம் குப்பைகளை மக்கவைத்து எருவாக மாற்றுவது.
3. குப்பைகளைத் தொட்டியில் போட்டு, வெளிச்சமும், காற்றும் படாமல் மறைத்து அதிலிருந்து மீத்தேன் வாயுவைத் தயாரிப்பது.
இதே குப்பை மலைபோலக் குவிந்தால் இந்த மூன்று முறையில் ஏதாவது ஒன்றை கடைப்பிடிப்பது கூட கடினமான பணிதான்.
இப்படி குப்பைகளைப் பரத்தி கொட்டவும் பிறகு வேறு வடிவத்துக்கு மாற்றவும் நிறைய நிலப்பகுதியும் ஆள்பலமும் தேவை. அவை உள்ளாட்சி மன்றங்களிடம் இல்லை. எனவே குப்பைகளை உடனுக்குடன் அகற்றி, வேறு வடிவத்துக்கு மாற்றவும் எரிபொருளாகப் பயன்படுத்தவும் முன்னுரிமை தரவேண்டும்.
மேலை நாடுகளில் குளிர்காலத்தின்போது வீடுகளை கதகதப்பாக வைத்திருக்க எரிபொருள்களைப் பயன்படுத்துகின்றனர். அந்த எரிபொருளை உள்ளாட்சி மன்ற நிர்வாகம் குப்பைகளிலிருந்து தயாரித்து குழாய் வழியாக எல்லா வீடுகளுக்கும் அனுப்புகிறது. இதனால் குப்பையும் பயனுள்ள பொருளாகிறது, எரிபொருள் செலவும் மிச்சப்படுகிறது. பெட்ரோல், டீசல் போன்றவற்றை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் செலவும் கணிசமாக மிச்சப்படுகிறது.
ஐரோப்பா முழுவதும் 5 கோடி டன் எடையுள்ள குப்பைகளை, 400 சிறு ஆலைகள் மூலம் எரிபொருளாக மாற்றிப் பயன்படுத்துகின்றனர். அமெரிக்காவில் மக்கள் நெருக்கமாக வாழும் நகரங்களில் இந்த வழியையே பின்பற்றுகின்றனர். அமெரிக்காவில் உள்ள இத்தகைய 100 ஆலைகள் 2,800 மெகா வாட் மின்சாரத்தைத் தயாரிக்கின்றன. இதனால் 104 கோடி காலன் எரிபொருள் மிச்சப்படுகிறது. 2002-ல் அமெரிக்காவின் 15 மாநிலங்கள், இத்தகைய எரிசக்தி ஆலைகளுக்கு 85 சதவிகித குப்பைகளை அளித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
குப்பையை எரிபொருளாக மாற்றுவது இரண்டு நிலைகளைக் கொண்டது. முதல் பகுதி கழிவுகளிலிருந்து எரிபொருளைத் தயாரிப்பது. கரி உருண்டைகளைப் போல சிறு கழிவு உருண்டைகளைத் தயாரிப்பது முதல் கட்டம். நிலக்கரிச் சுரங்கங்களிலிருந்து வெகு தொலைவில் உள்ள பகுதிகளுக்கு இந்த கரி உருண்டைகள் மிகவும் பயன்படும்.
உதாரணத்துக்கு ஹைதராபாதில் ஒரு டன் நிலக்கரியின் விலை ரூ.1,800. குப்பையிலிருந்து பெறப்படும் கரி உருண்டையின் விலை ரூ.1,000. இதை ஹைதராபாத் பகுதி தொழிற்சாலைகளும் ஏழைகளும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த உருண்டைகளைத் தயாரிக்கும் ஆலைகள் டன்னுக்கு ரூ.200 கூடுதலாக விலை வைத்தாலும் வாங்குகிறவர்களுக்கு அது குறைந்த விலைதான். கரி உருண்டையைத் தயார் செய்யும் ஆலைக்கும் நல்ல லாபம் கிடைக்கும்.
தொழில்நுட்ப வளர்ச்சி வாரியம் என்ற உயர் அமைப்பு ஆந்திரத்தின் ஹைதராபாத், விஜயவாடா ஆகிய இரு நகரங்களில் சோதனை அடிப்படையில் இத்தகைய கரி உருண்டைகளைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் ஆலையை நிறுவியது. இரண்டின் உற்பத்தித்திறன் தலா 6 மெகாவாட். இதில் ஹைதராபாத் ஆலை 50 சதவிகிதம் திறனுடனும், விஜயவாடா ஆலை 80 சதவிகிதம் திறனுடனும் செயல்படுகின்றன. இதிலிருந்து தெரிவது என்னவென்றால் கரி உருண்டைகளைத் தயாரிப்பது, மின்சாரத்தைத் தயாரிப்பதைவிட லாபகரமானது.
இதேபோன்ற ஆலைகளை நாடு முழுவதும் நிறுவி, அன்றாடம் 50 டன் குப்பைகளைக் கையாண்டு கரி உருண்டைகளைத் தயாரித்தால் 20 டன் எடையுள்ள கரி உருண்டைகளைப் பெறலாம். இது ஒவ்வொன்றும் 10 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பைத் தரும். இந்த ஆலைக்கு மிகக்குறைந்த நிலப்பரப்பு இருந்தால் போதும். இதனால், சுகாதாரம் சீர்கெடுவதும் தடுக்கப்படும்.
50 டன் எடையுள்ள குப்பைகளை அன்றாடம் கையாளும் திறன் உள்ள எரிபொருள் தயாரிப்பு ஆலையை நிறுவ ரூ.80 லட்சம் செலவாகும். கரி உருண்டைகளை டன் ரூ.1,000 என்று விற்கலாம். இந்த ஆலை மழைக்காலத்தில் செயல்படாது. எனவே ஆண்டில் 10 மாதங்கள்தான் இதில் உற்பத்தி இருக்கும். அன்றாடம் 20 டன் கரி உருண்டைகளைத் தயாரிக்க முடியும். ஆண்டுக்கு ரூ.10 லட்சம் இதில் வருமானம் கிடைக்கும்.
இந்த ஆலையின் வடிவமைப்பு, இயங்கு திறன் ஆகியவற்றை மேலும் சீரமைத்து, ஆலைக்கான பாகங்களை நல்ல தரத்தில் தயாரித்து நாடு முழுவதும் வழங்கினால் இதன் உற்பத்தித்திறன் பலமடங்கு அதிகரிக்கும். அடுத்து இந்த ஆலையை நிறுவ வங்கிகளைத் தேர்வு செய்து அல்லது நிதியங்களை நியமித்து அவற்றின் மூலம் முதலீடு செய்யலாம்.
மாநில அரசுகளும் உள்ளாட்சி மன்றங்களும் இதில் தீவிர அக்கறை காட்டி, அன்றாடம் 50 டன் குப்பைகளைக் கையாளும் எரிபொருள் உற்பத்தி ஆலைகளை நிறுவலாம். குப்பைகள் கிடைப்பதைப் பொருத்து இந்தத் திறனை அதிகப்படுத்திக் கொள்ளலாம். காலவரம்பு நிர்ணயித்து இதை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும். தகவல் தொழில்நுட்பத்துறையில் நிர்வாகத்துடன் ஊழியர்களும் லாபத்தைப் பகிர்ந்துகொள்ளும் அதே வழிமுறையைக் கையாண்டால் இந்த ஆலைகளால் ஏராளமானவர்களுக்கு வேலைவாய்ப்பும் நல்ல வருவாயும் கிடைக்கும். நகர்ப்புற திட்டமிடலில் தொடர்புள்ள அனைவரும் இதில் கவனம் செலுத்துவது நல்ல பொருளாதார பலன்களைத் தரும்.
(கட்டுரையாளர்: ஊழல் ஒழிப்புத்துறை முன்னாள் ஆணையர்.)
Mani said
மிகவும் உபயோகமான பதிவு. நன்றி.
குப்பை பதிவுகளை வைத்து ஏதாவது செய்ய முடியுமா என விளக்கவும்.
bsubra said
:)))
கழிவு மூலம் எரியும் தெருவிளக்குகள் « Friendly Fire said
[…] நகர்ப்புற திடக்கழிவுகளிலிருந்து எர… […]
anbarasan said
anbarasan said
migavum payanullathaga iukirathu.intha industry yeppadi kattuvathu.yenakku ithan project deatils vendum pls send me soon
karthik said
yenaku biogas plant housil yepadi amaipadhu,adhan seimuraigal patri vilakkamaga koorungal.