Madurai Vaidyanatha Iyer – Temple entry anniversary of dalits
Posted by Snapjudge மேல் ஜூலை 6, 2007
வரலாறு படைத்த ஆலயப் பிரவேசம்!
வி.கே. ஸ்தாணுநாதன்
நம் நாட்டின் வரலாற்றில் – குறிப்பாக, தமிழக வரலாற்று ஏடுகளில் ஜூலை மாதம் 8-ஆம் நாள் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாளாகும். பழம்பெருமை வாய்ந்த மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் பிரபல காந்தியவாதியான அமரர் எ. வைத்தியநாத அய்யர் துணிவுடன் ஹரிஜன சகோதரர்களை வழிபாட்டிற்கு அழைத்துச் சென்றார். இந்த ஆலயப் பிரவேசம் காலம்காலமாக ஹரிஜன சகோதரர்களுக்கு மறுக்கப்பட்டு வந்த உரிமையை வழங்க வழிவகுத்தது.
தீண்டாமையை ஒழிக்கவும் ஹரிஜனங்களின் முன்னேற்றத்திற்காகவும், அமரர் வைத்தியநாத அய்யர் ஆற்றிய பணிகள் சொல்லில் அடங்கா. 1935 முதல் 1955 வரை தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கத்தின் தலைவராக இருந்தார். தீண்டாமைக் கொடுமையால் துன்புற்று வந்த ஹரிஜனங்களுக்காக அயராது பாடுபட்டு வந்தார்.
பல்லாண்டுகளாக வழக்கத்திலிருந்த மரபு காரணமாக அந்நாள்களில் ஹரிஜனங்கள் ஆலயத்திற்குள் நுழைய அனுமதி அளிக்கப்படவில்லை. 1937ம் ஆண்டு தமிழகத்தில் ராஜாஜி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கத் தொடங்கிய பிறகு விரைந்து ஹரிஜன ஆலயப் பிரவேசத்திற்கு வழிவகுக்கும் சட்டத்தை இயற்ற வேண்டுமென அய்யர் வலியுறுத்தி வந்தார்.
உயர் ஜாதி இந்துக்கள் இவ்விஷயத்தில் அக்கறை கொள்ளச் செய்ய பொதுக் கூட்டங்கள் நடத்தி தீவிரமாகப் பிரசாரம் செய்தார். மதுரை மீனாட்சி கோயில் அறங்காவலர்கள் மற்றும் நிர்வாக அதிகாரி ஆகியோரைக் கலந்து ஆலோசித்து அவர்களுடைய ஒத்துழைப்பையும் உறுதி செய்து கொண்டார். 1939-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8-ஆம் நாள் நான்கு ஹரிஜன சகோதரர்கள் மற்றும் அந்நாளில் கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வந்த நாடார்கள் சிலருடன் பக்தி விசுவாசத்தோடு மீனாட்சி அம்மன் ஆலயத்தில் பிரவேசித்து அன்னையின் அளவிலா அருளைப் பெற்றார். தமிழக ஆலய வழிபாட்டு வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடங்கியது.
அய்யரின் துணிச்சலான இச் செயலைப் பாராட்டிய அண்ணல் காந்தியடிகள் 22-7-1939 ஹரிஜன இதழில் பின்வருமாறு எழுதினார்:
“இவ்வளவு விரைவில் ஆலயப் பிரவேசம் நடைபெறும் என நான் எதிர்பார்க்கவில்லை. தீண்டாமையை எதிர்த்து நடைபெற்று வரும் பிரசாரத்தில் இது ஒரு முக்கியமான நிகழ்ச்சியாகும். திருவாங்கூர் சமஸ்தானத்தில் ஆலயப் பிரவேசம் நிகழ்ந்ததும் ஒரு பெரிய முயற்சியே. ஆனால் அங்கு அது மகாராஜாவின் விருப்பத்தைப் பொருத்து நடந்துள்ளது. மதுரையில் நடைபெற்ற ஆலயப் பிரவேசமோ பொதுமக்கள் கருத்தின் விளைவாக நிகழ்ந்த ஒன்றாகும். இவ்விஷயத்தில் பொதுமக்கள் கருத்தை உருவாக்க அயராது பாடுபட்ட வைத்தியநாத அய்யர் மற்றும் அவரது சக ஊழியர்கள் பாராட்டுக்குரியவர்கள்.’
ஆலயப் பிரவேசத்திற்குப் பின் சிலர் ஏற்படுத்திய தடங்கல்கள் காரணமாக அன்றாட ஆலய வழிபாடு நடைபெறுவதில் சில சிக்கல்கள் தோன்றின. இவற்றைத் தீர்த்து அன்றாட வழிபாடு சுமுகமாக நடைபெற அய்யர் அயராது பாடுபட வேண்டி இருந்தது. ஆலயப் பிரவேசம் செல்லாது என அறிவிக்கக் கோரி சிலர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். ஆனால் அன்றைய முதல்வராக விளங்கிய ராஜாஜி விரைந்து செயல்பட்டு ஆலயப் பிரவேசத்தை முறைப்படுத்தும் வகையில் ஓர் அவசரச் சட்டத்தை ஆளுநர் மூலம் பிறப்பிக்க வழிவகுத்தார். இதன் காரணமாக வழக்கு தள்ளுபடி ஆனது. பின்னர் இந்த அவசரச் சட்டம் முறையான சட்டமாக சட்டசபையில் நிறைவேறியது.
வைத்தியநாத அய்யர் துணிவுடன் செய்த ஆலயப் பிரவேசமே பின்னர் சட்டமாக உருவெடுத்து ஹரிஜனங்கள் ஆண்டவனின் சன்னதிக்குத் தங்கு தடையின்றி செல்ல வழிவகுத்தது.
1939-ம் ஆண்டில் இரண்டாவது உலகப் போர் மூண்டது. இந்தியாவின் விருப்பத்திற்கு எதிராகப் போரில் இந்தியாவை ஈடுபடுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ஆங்காங்கு காங்கிரஸ் அமைச்சரவைகள் ஒட்டுமொத்தமாக அக்டோபர் மாதத்தில் ராஜிநாமா செய்தன. அய்யர் அன்று மட்டும் ஆலயப் பிரவேசத்தைத் துணிவுடன் செய்திராவிடில் ஹரிஜனங்கள், அனைவருடனும் சரிசமமாக ஆலயத்திற்குள் நுழைந்து ஆண்டவனை வழிபடுவது என்பது பல ஆண்டுகள் தள்ளியே நடந்திருக்கும். ஏனெனில் 1939க்கு பின்னர் பொதுமக்கள் கருத்தின் மூலம் உருவான அரசு மீண்டும் 1946-ம் ஆண்டுதான் பதவியேற்றது.
ஹரிஜன ஆலயப் பிரவேசம் நிகழ்ந்தால்தான் ஆலயங்களுக்குள் வழிபாடு செய்யச் செல்வது என்பதில் காந்தியடிகள் உறுதியாக இருந்தார். தாமும் மதுரைக்கு வந்து மீனாட்சி அம்மனை வழிபட எண்ணிணார். எனினும் இரண்டாம் உலகப் போர், “வெள்ளையனே வெளியேறு இயக்கம்’ போன்றவைகளால் அந்த எண்ணம் தள்ளிப்போயிற்று. 1946-ஆம் ஆண்டு சென்னையில் தக்கர் பாபா வித்யாலயா புதிய வளாகத்திற்கு அடிக்கல் நாட்ட வந்தபோது, இதற்காகவே மதுரைக்குச் சென்று மீனாட்சி அம்மன் ஆலயத்தில் வழிபாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூலை 8-ஆம் நாள் இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியின் முக்கியமான நாளாகும். இந்நாளில் அமரர் வைத்தியநாத அய்யருக்கும் அவருக்கு உறுதுணையாக விளங்கி இப்பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட அனைவருக்கும் சிரம் தாழ்த்தி கரம் குவித்து அஞ்சலி செய்வோம்!
(கட்டுரையாளர்: கௌரவ செயலர், தக்கர் பாபா வித்யாலயா, சென்னை.)
———————————————————————————————————
மீனாட்சி அம்மன் கோயிலில்- 68 ஆண்டுகளுக்கு முன் தீண்டாமையை அகற்றிய அரிஜன ஆலயப் பிரவேசம்
மதுரை, ஜூலை 8: ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுதலைக்குப் போராடும் நேரத்தில் நமது நாட்டில் இருந்த சமூக அவலமான தீண்டாமையை எதிர்த்துப் போரிடும் உன்னதப் பணியில் முத்தாய்ப்பாக நடத்தப்பட்டதுதான் அரிஜன ஆலயப் பிரவேசம்.
காந்தியடிகளின் அறிவுரையை ஏற்று செயல்படுத்துவதில் மதுரையில் அவரின் மறுபதிப்பாகத் திகழ்ந்தவர் வைத்தியநாத ஐயர். இளம் வயது முதல் சாதிப் பாகுபாடுகளை வெறுத்தவர்.
கோயில்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழையக் கூடாது என்ற சமூகக் கொடுமையைப் போக்க அவரது தலைமையில் 8.7.1939-ம் தேதி காலையில் மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் அரிஜன ஆலயப் பிரவேசம் நடக்கும் என அவர் அறிவித்தார்.
இதற்கு ஒருசாரார் எதிர்ப்புத் தெரிவித்தனர். இருப்பினும் எதிர்ப்பாளர்களின் கிளர்ச்சியை முறியடிப்போம், ஆலயப் பிரவேசத்தை வரவேற்கிறோம் என பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அறிக்கை வெளியிட்டார். இது எதிர்ப்பாளர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து திட்டமிட்டபடி பூஜை பொருள்களுடன் அரிஜன சேவா சங்கத் தலைவர் ஏ.வைத்தியநாத ஐயர் தலைமையில் சிலர் மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றனர். அங்கு கோயிலின் அறங்காவலர்களில் ஒருவரான ஆர்.எஸ்.நாயுடு அவர்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்றார்.
முதலில் பிள்ளையாரை வழிபட்டுவிட்டு, பின்னர் மீனாட்சி அம்மன் சன்னதி சென்று வழிபட்டனர். இதையடுத்து கோயிலிலிருந்து வெளியே வந்து அரிஜன ஆலயப் பிரவேசம் நடந்தது என அறிவித்தனர்.
இந்த நிலையில், சட்டத்தை மீறி ஆலயப் பிரவேசம் செய்ததாக சிலர் வழக்குத் தொடர்ந்தனர். ஆனால், அப்போது முதல்வராக இருந்த ராஜாஜி, ஆளுநர் மூலம் ஓர் அவசரச் சட்டத்தை முன்தேதியிட்டு பிறப்பிக்கச் செய்து ஆலயப் பிரவேசத்தை சட்டப்படி செல்லத்தக்கதாக்கினார். இதனால் ஆலயப் பிரவேசம் தொடர்பான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆலயப் பிரவேசம் நடைபெற்றது. ஆலயப் பிரவேசம் நடந்து ஞாயிற்றுக்கிழமையோடு (ஜூலை 8) 68 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், வரலாறும் மறக்கவில்லை. மக்களும் மறக்கவில்லை.
periasamy said
I need vaidyantha Iyer’s Photo to publiish in our magazine
Thanjavooraan said
Sir, I am also in need of a photo of Madurai A.Vaidyanatha Iyer to publish it in my blog “Tamilnadufreedomfighters-thanjavooraan.blogspot.com” which can be seen in my “privarsh.blogspot.com. Kindly send me one. It is essential now to probagate the services rendered by the above Gandhiyan for the cause of downtrodden and how he suffered during the period of temple entry. It is great his own son in law has written the above article. Thanks a lot.