Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Facts: How Hong Kong has and hasn’t changed – Progress Report under China

Posted by Snapjudge மேல் ஜூலை 3, 2007

டிராகன் புகுந்த நாடு!

எம். மணிகண்டன்

பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்த ஹாங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இதையொட்டி ஹாங்காங்கில் நடந்த வண்ணமயமான நிகழ்ச்சிகளில், பிரிட்டன் மற்றும் சீனாவைச் சேர்ந்த விஐபிகள் கலந்து கொண்டு பொருளாதாரம், அரசியல், கலாசாரம் உள்ளிட்ட எல்லா அம்சங்களையும் விரிவாகப் பேசினர், ஒன்றைத் தவிர. அந்த ஒன்று, ஜனநாயகம். ஹாங்காங் மக்கள் கேட்கும் முழுமையான “மக்கள் ஆட்சி’.

1997-ல் ஹாங்காங்கின் இறையாண்மையை சீனாவின் கையில் ஒப்படைத்தபோது, அடிப்படை அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. முழுமையான மக்கள் ஆட்சி படிப்படியாக ஏற்படுத்தப்படும் என்பதே அதில் கூறப்பட்டிருக்கும் முக்கிய அம்சம்.

ஹாங்காங்கின் பாதுகாப்பு, அயல்நாட்டு விவகாரம் தவிர வேறு எந்தப் பிரச்னையிலும் சீனா தலையிடக் கூடாது என்ற அடிப்படையில்தான் பிரிட்டிஷ் அரசு ஆட்சியை ஒப்படைத்தது. ஹாங்காங்கின் கலாசாரம், நாகரிகம், பொருளாதார அமைப்பு உள்ளிட்ட அடையாளங்கள் அழிக்கப்படக் கூடாது என்பதே இந்த உடன்பாட்டுக்கு முக்கியக் காரணம்.

ஆனால் இந்த எல்லையைக் கடந்து ஹாங்காங்கின் உள்விவகாரங்களில் சீனா மூக்கை நுழைக்கிறது என்பதுதான் மக்களாட்சிக்கு ஆதரவானவர்கள் கூறும் குற்றச்சாட்டு. எடுத்துக்காட்டாக அடிப்படை அரசமைப்புச் சட்டப்படி, ஹாங்காங் அரசின் செயல் தலைவர் (பிரதமர்) மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால் சீனா நியமிக்கும் ஹாங்காங்கைச் சேர்ந்த 800 பேர் கொண்ட தேர்தல் செயற்குழுதான் செயல் தலைவரைத் தேர்ந்தெடுத்து வருகிறது.

அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவர் யாருக்கு ஆதரவாகச் செயல்படுவார் என்பதைக் கண்டுபிடிக்க உளவுத்துறையின் உதவியை நாட வேண்டியதில்லை. இது தவிர ஹாங்காங்கின் 60 உறுப்பினர் சட்டப்பேரவையில் 30 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மட்டுமே மக்களிடம் உள்ளது. மீதி 30 பேருக்கு மறைமுக வாக்கெடுப்பு. இப்படிப் பல்வேறு வழிகளிலும் ஹாங்காங் மீதான பிடியை சீனா இறுக்கியிருக்கிறது.

“ஒரு நாடு, இரு அமைப்பு’ என்ற கொள்கையின் அடிப்படையில்தான் சீனா-ஹாங்காங் இடையேயான உறவுப்பாலம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இரு அமைப்புகளும் அடிப்படையிலேயே வெவ்வேறானவை. ஒன்று பொதுவுடைமைக் கொள்கைகளைக் கொண்டது. மற்றொன்று முதலாளித்துவ தத்துவத்தை செயல்படுத்தி வருவது. “மக்காவோ’ பகுதியைப் போல ஹாங்காங்குக்கும் சிறப்பு நிர்வாகப் பகுதி என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இவையனைத்தும் எழுத்தில் மட்டும்தான் இருக்கிறது என்பதுதான் இப்போதைய பிரச்னை.

உலகின் மிகச்சிறந்த விமான நிலையம், பொருளாதாரச் சுதந்திரத்தில் முதலிடம், முதல்தர சரக்குக் கப்பல் தளம் என்ற பல்வேறு சிறப்புகளைக் கொண்டது ஹாங்காங். சீனாவின் தற்போதைய படுவேகமான பொருளாதார வளர்ச்சிக்கு சோதனைக் களமாகப் பயன்பட்டது ஹாங்காங்தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

சீனாவின் ஷென்சென் நகரம் 20 ஆண்டுகளுக்கு முன்பு சில ஆயிரம் பேர் வசித்த குக்கிராமமாக இருந்தது. தற்போது அங்கு மக்கள்தொகை 1 கோடியே 30 லட்சம். பல்வேறு வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என ஹாங்காங் தொழிலதிபர்களின் முதலீடுகளால் இன்று அந் நகரத்தின் அபார வளர்ச்சி பிரமிக்கத்தக்கது. ஹாங்காங் மீதான பிடியைத் தளர்த்த சீனா யோசிப்பதற்கு இவைதான் முக்கியக் காரணங்கள்.

சீனாவின் கட்டுப்பாட்டுக்கு வந்த 10 ஆண்டுகளில் ஹாங்காங் சில சமரசங்களைச் செய்து கொள்ள வேண்டியதாகி விட்டது. ஹாங்காங் பகுதிக்குப் போட்டியாக ஷாங்காய் நகரை சீனா வளர்த்து வருகிறது.

பல்வேறு புதிய நிறுவனங்களை ஷாங்காய் நகருக்குக் கொண்டுபோய், கிட்டத்தட்ட சீனாவின் வர்த்தகத் தலைநகராகவே அதை மாற்றிவிட்டது.

ஹாங்காங்கை விட சீனாவில் தயாரிப்புச் செலவு குறைவு என்பதால் ஹாங்காங் நிறுவனங்கள்கூட தங்கள் கடைகளை சீன நகரங்களில் பரப்பியிருக்கின்றன. பாதி நிறுவனங்கள் சிங்கப்பூரை நோக்கிப் படையெடுத்து வருகின்றன.

இதனால் ஹாங்காங்கின் சிறு தொழில் அதிபர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தாய்நாட்டுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதால் ஹாங்காங் மக்கள் இதுபோன்ற செயல்களை நேரடியாகக் குறைகூற முடியாது என்றாலும், தங்கள் பகுதி புறக்கணிக்கப்படுவதை எப்போதும் சகித்துக் கொள்ள மாட்டார்கள்.

இவை ஒருபுறம் இருக்க, சீனாவுடன் இணைந்திருப்பதால் ஹாங்காங் பகுதிக்கும் சில நன்மைகள் இருக்கத்தான் செய்கின்றன. 2003-ல் ஹாங்காங்கில் பொருளாதார மந்தம் ஏற்பட்டபோது, சீனாவின் உதவி இல்லாமல் போயிருந்தால் ஹாங்காங் மீண்டு வந்திருக்க முடியாது. சீனாவின் சரக்குகளைக் கையாளுவதால் ஹாங்காங் துறைமுகம் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

இது தவிர, 1997-க்கு முந்தைய கணக்கை ஒப்பிட்டால் சுற்றுலாப் பயணிகளின் வருகை பல மடங்காகி இருக்கிறது. சீனாவிடம் இருந்து பிரிக்க முடியாத அங்கமாக ஹாங்காங் மாறிவிட்டது என்பதை இவை உணர்த்துகின்றன.

சீனாவின் எரிச்சல்களுள் ஒன்றாகக் கருதப்படும் தைவான், சீனாவுடன் சேர்வதற்குத் தயக்கம் காட்டுவதற்குக் கூறப்படும் காரணங்களுள் ஒன்று முழுமையான மக்களாட்சி மறுக்கப்படும் என்பதுதான். எனினும், முன்புபோல் அல்லாமல் மக்களாட்சிக்கு ஆதரவான போராட்டங்களை சீனா சகித்துக் கொண்டிருப்பதே மிகப்பெரிய மாற்றம்தான்.

பொருளாதாரத்தில் ஹாங்காங்கை சோதனைக் களமாகப் பயன்படுத்தி நாடு முழுவதும் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்திய சீனா, ஹாங்காங்கில் முழுமையான மக்களாட்சியைக் கொண்டுவந்து, அதையும் நடைமுறைப்படுத்திப் பார்க்கலாமே. செய்வீர்களா தோழர்களே?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: