Raman Raja – Rain… Rain Go away! (Dinamani Kathir)
Posted by Snapjudge மேல் ஜூன் 29, 2007
நெட்டில் சுட்டதடா…: மழையைத் திருடிய மனிதர்கள்!
நடிகர் கமல்ஹாசன் நல்ல கவிஞரும்கூட என்பது அவருடைய ரசிகர் வட்டத்திற்குள் மட்டும் தெரிந்த விஷயம். அவருடைய கவிதைகளில் நான் ரசித்த ஒன்று இது:
பெய்யெனப் பெய்யுமா மழை?
மழைக்குமெனில், உன் தாயிடம் சொல்;
நாடு நனையட்டும்.
திருவள்ளுவர் காலத்தில் மழையை ஆணையிடுவதற்குப் பத்தினிப் பெண்களே போதுமானதாக இருந்தார்கள். கிரேக்கர்கள் மழை வேண்டுமென்றால் ஜீயஸ் கடவுளுக்கு லஞ்சம் கொடுத்துப் பார்த்தார்கள். பிறகு அமிர்தவர்ஷிணி ராகம், கழுதைக்குக் கல்யாணம் என்று பல உத்திகள் கண்டுபிடிக்கப்பட்டும் ஒன்றும் பலனில்லை. ஆனால் தற்போதைய விஞ்ஞானத்தின்படி, சில வேதிப் பொருட்களை மேகத்தில் செலுத்திச் செயற்கையாக மழை பெய்விக்க முடியும். செயற்கை மழை என்றால் செயற்கையாக மேகத்தை உற்பத்தி செய்வது அல்ல. (அவ்வளவு தண்ணீரைக் காய்ச்சவல்ல அடுப்பு கிடையாது!) இருக்கும் மேகத்தை, நம்ம ஊருக்கு நேர் மேலே வரும்போது கப்பென்று பிடித்துக் கொண்டு கையிலிருப்பதைக் கொடுத்துவிட்டுப் போ என்று சொல்ல முடியும். cloud seeding மேக விதைப்பு முறைகளை ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக முயற்சி செய்து வருகிறார்கள். விமானத்தில் பறந்து போய் மேகத்தின் அருகில் வெள்ளி அயோடைடு குச்சிகளைக் கொளுத்தி தீபாராதனை காட்டுவார்கள்; நீராவி குவிந்து மழைத் துளியாக மாறிக் கீழே வரும். சென்ற ஆண்டு சீனாவில் பயங்கரமாகப் புழுதிப் புயல் அடித்து நகரங்கள் மூச்சுத் திணறிக் கொண்டிருந்தன. கீழே இருந்தே ராக்கெட் மூலம் சிகரெட் சைஸ் வெள்ளி அயோடைடு குச்சிகளை விண்ணில் செலுத்தி மழையைக் கொண்டு வந்து பெய்ஜிங் நகரத்தையே சுத்தமாக அலம்பிவிட்டார்கள்.
சீனாவின் வட பகுதிகளில் பஞ்சம் போக்கவும், காட்டுத் தீயை அணைக்கவும் தேவைப்பட்ட போதெல்லாம் மழை பெய்விக்க ஓர் அரசாங்க டிபார்ட்மெண்ட்டே இயங்குகிறது. சில சமயம் வெறும் உப்பு, சில சமயம் உலர்ந்த பனி இப்படி எதையாவது மேகத்தில் தூவி மழைபெய்ய வைக்கிறார்கள். (உலர் பனி என்பது கார்பன் டை ஆக்ûஸடை அமுக்கி சுருக்கப்பட்ட பனிப் பொடி. அதை மேகத்தின் மேல் தூவினால் மேகத்துக்கு உச்சி குளிர்ந்துவிடும்.!)
ஆனால் இதெல்லாம் உண்மையிலேயே வேலை செய்கிறதா என்பதில் இரண்டு கருத்துக்கள் இருக்கின்றன. சிலர் செயற்கையை நம்ப மறுத்து, “”இயற்கையாக மழை பெய்யும் போதெல்லாம் அதிகாரிகள், தங்கள் முயற்சியால்தான் பெய்தது என்று வருண பகவானின் பி.ஏ. மாதிரி அறிக்கை விட்டுவிடுகிறார்கள். வடக்கு சீனாவில் விவசாயத்துக்குக் கன்னா பின்னாவென்று தண்ணீரை உபயோகிப்பதால் ஆறுகள் வறண்டு கோபி பாலைவனம் வேகமாகப் பரவி கொண்டிருக்கிறது. அதை மறைக்கத்தான் செயற்கை மழை என்று பிலிம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள்.
இயற்கையுடன் விளையாட ஆரம்பித்தால் அது என்ன மாதிரியெல்லாம் திருப்பம் எடுக்கும் என்பதுதான் யாருக்குமே தெரியாத புதிர். 1952 -ம் ஆண்டு நம்ம ஆகஸ்ட் 15-ம் தேதி பிரிட்டனில் உள்ள எக்ஸ்மூர் நதியில் கடும் மழை காரணமாக வெள்ளம். குறுகிய பள்ளத்தாக்கின் வழியே ஒன்பது கோடி டன் தண்ணீர் சீறிப் பாய்ந்து ஓடியது. பாறாங்கற்களையெல்லாம் அடித்துப் புரட்டிக் கொண்டு வந்த வெள்ளத்தின் வழியில் மாட்டிக் கொண்டது, டெவான் என்ற சிற்றூர். நிமிட நேரத்தில் வீடுகள் கடைகள் பாலங்கள் எல்லாம் இடிந்து விழ, முப்பத்தைந்து பேர் பலியானார்கள். “”கடவுளின் வினோத விளையாட்டுகளில் இதுவும் ஒன்று. ஆமென்” என்று அவசர அவசரமாகக் கேûஸ மூடி விட்டது அரசாங்கம்.
இதற்கு ஐம்பது ஆண்டுகள் கழித்து பி.பி.சி. ரேடியோவிடம் சில ரகசிய ஆவணங்கள் கிடைத்தன. அப்போது முற்றிலும் வேறு கதை விரிந்தது. வருடா வருடம் பெய்வதைப் போல 250 மடங்கு மழை திடீரென்று அன்று பெய்ததற்குக் காரணம், ராயல் விமானப்படை செய்த ஒரு சிறு திருவிளையாடல். ஆபரேஷன் க்யுமுலஸ் என்று பெயர் வைக்கப்பட்ட அந்த செயற்கை மழைப் பரிசோதனையில் பங்கு கொண்ட ஒரு விமானி சொன்னார்: “”மேகக் கூட்டத்துக்கு மேலே குறுக்கும் நெடுக்குமாகப் பறந்து உலர்ந்த பனியைத் தூவினோம். கொஞ்ச நேரம் கழித்து மேகத்துக்குக் கீழே வந்து பார்த்தால் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டிக் கொண்டிருக்கிறது! எங்கள் தலைமையகத்திற்குத் திரும்பி உற்சாகமாக வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்தோம். அப்போதுதான் ரேடியோவில் வெள்ளம், உயிர்ச் சேதம் பற்றிய நியூஸ் சொன்னார்கள். உடனே அத்தனை பேரும் கப்சிப் என்று கற்சிலை மாதிரி ஆகிவிட்டோம்….”
பருவ நிலையைச் சீண்டி விளையாடுவதில் அமெரிக்க ராணுவத்துக்கு என்றுமே ஆர்வம் உண்டு. “”உலகத்தின் தட்பவெப்ப நிலை என்பது காட்டுக்குதிரை மாதிரி கட்டுக்கடங்காததோடு, எல்லாருக்கும் பொதுச்சொத்தாக வேறு இருக்கிறது. அதை முழுவதும் நம் கண்ட்ரோலில் கொண்டு வந்துவிட்டுத்தான் மறுவேலை” என்று கோடிக்கணக்கில் செலவழித்தார்கள். அலாஸ்கா மாநிலத்தில் ஹார்ப் ( HAARP ) என்று மாபெரும் ரேடியோ ஆன்டெனா வயல் ஒன்று அமைத்தார்கள். சக்தி வாய்ந்த ரேடியோ அலைகளை அனுப்பி வானத்தில் இருக்கும் அயனோஸ்பியர் என்ற மின்சாரப் போர்வையை மெல்லச் சூடாக்கி, என்ன ஆகிறது என்று பார்க்கும் ஆராய்ச்சி இது. மைக்ரோவேவ் அடுப்பில் நெருப்பில்லாமல் உருளைக்கிழங்கு வேக வைப்பது போலத்தான்; ஆனால் அவர்கள் சமைத்தது, வானத்தை! அந்தச் சூட்டில் அயனோஸ்பியர் போர்வையை ஒரு மாபெரும் பபிள் கம் மாதிரி உப்பிக் கொண்டு டன் கணக்கில் காற்றை உள்ளிழுக்கும். இந்த ஆயுதத்தை வைத்துக்கொண்டு எதிரி நாட்டின் ஏவுகணைகளையும் விமானங்களையும் அப்படியே உறிஞ்சித் துப்பிவிடலாம்; விண்ணையே மின்சார விரிப்பினால் மூடி, எதிரியின் சாட்டிலைட் செய்தித் தொடர்புகளைத் துண்டிக்கலாம் என்றெல்லாம் பேசிக்கொண்டார்கள். பிறகு ஹார்ப்புக்கு என்ன ஆயிற்று என்பதை அறிய, இன்னும் ஐம்பது வருடம் காத்திருப்போமாக.
இருபதாம் நூற்றாண்டின் நடுவில் அமெரிக்காவின் கிழக்குக் கரையை அடுத்தடுத்துப் பல புயல்கள் தாக்கிப் பலத்த சேதம். “”விஞ்ஞானிகள் எல்லாம் தண்டச் சம்பளம் வாங்கிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறீர்களே, இந்தப் புயல் பயலை அடக்க ஏதாவது செய்யக்கூடாதா?” என்று எரிச்சல்பட்டார் ஜனாதிபதி ஐசன்ஹோவர். அப்படித்தான் ஆரம்பித்தது அமெரிக்காவின் புயல் பரிசோதனைகள். விஞ்ஞானி லாங்ம்யூர் என்பவர் தைரியமாகப் புயலின் கண்ணில் புகுந்து புறப்பட்டு உலர் ஐûஸத் தூவினார். புயலில் உள்ள தண்ணீரையெல்லாம் வடிய வைத்துவிட்டால் அதன் வீரியம் குறைந்துவிடும் என்று நினைத்தார். ஆனால் கடலில் மையம் கொண்டிருந்த புயல், ஒரு டைவ் அடித்துத் திசைமாறி ஜியார்ஜியாவைப் போய்த் தாக்கியது! பக்கத்து வீட்டுக் கண்ணாடியைப் பந்தடித்து உடைத்த சிறுவன்போல, வீட்டுக்கு ஓடிப் போய்ப் போர்த்திப்படுத்துவிட்டார் லாங்ம்ப்யூர்.
ப்ராஜெக்ட் புயல் வெஞ்சினம் ( storm fury ) என்று அறுபதுகளில் ஆரம்பித்து, ஓர் இருபது வருடம் புயல்களுடன் மல்லாடினார்கள் அமெரிக்கர்கள். ஆனால் இவர்கள் செய்யும் ஆராய்ச்சிகளுக்கு ஏதாவது பலன் இருக்கிறதா, அல்லது தானாகவேதான் புயல் பலவீனமடைந்துவிட்டதா என்பதைக் கடைசி வரை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. சில தடவை புயலடைத்தது; சில சமயம் பிசுபிசுத்தது. கடைசியில் இதெல்லாம் கதைக்குதவாது என்று ஆர்வம் இழந்துவிட்டார்கள். ஆனால் சீனா, ரஷ்யா, இஸ்ரேல் போன்ற நாடுகள் மட்டும் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். சீனாவில் விவசாயிகள் ஆடிப் பட்டம் தேடி விதைத்துவிட்டு, தண்ணீருக்கு விமான எதிர்ப்பு பீரங்கிகளை நாடுகிறார்கள். அவற்றில் கெமிக்கல் குண்டுகளை நிரப்பி, மேகங்களை அடித்துக் கீழே வீழ்த்த முடியுமா என்று முயற்சிக்கிறார்கள். இதில், “”எங்க ஊருக்கு வர இருந்த மழையை உங்க ஊரிலேயே தடுத்துத் திருடி விட்டீர்களே” என்று ஒரு பேட்டைக்கும் மற்றொரு பேட்டைக்கும் சண்டை நடக்கிறது. ஒரு மாநிலத்திற்கும் மற்றொரு மாநிலத்திற்கும் சண்டை நடக்கிறது. (வேறு எங்கேயோ கேட்ட மாதிரி இல்லை?)
மழையைக் கொண்டு வருவது ஒரு புறமிருக்க, கிரிக்கெட் மாட்ச்சுக்கு ஐநூறு ரூபாய் தந்து டிக்கெட் வாங்கியிருக்கும் நாட்களில் மழையை வராமல் தடுக்கவும் வழிகள் யோசித்திருக்கிறார்கள். ரஷ்யாவில் விளையாட்டுப் போட்டிகள், வி.ஐ.பி பொதுக்கூட்டங்களின் போது மழையை முளையிலேயே கிள்ளுவதற்கு ஏற்பாடுகள் இருக்கின்றன. 2008-ல் சீனாவில் ஒலிம்பிக்ஸ் நடக்கப்போகிறது. மழை பெய்து ஆட்டத்தைக் கலைத்து விடக்கூடாதே என்பதற்காக இப்போதே ஓர் அரசாங்க இலாகா அமைத்து ஆள் படைகளுக்கெல்லாம் சம்பளம் கொடுத்து உட்கார்த்தி வைத்திருக்கிறார்கள். ஆனாலும், என்னதான் மனிதன் முயன்றாலும், “”நமக்கு மேலே இயற்கைன்னு ஒண்ணு இருக்கில்லே?” என்றுதான் சொல்கிறார்கள் அந்த அதிகாரிகள்.
ஆர்.கே. லட்சுமணனின் புகழ் பெற்ற கார்ட்டூன் ஒன்று; பார்த்தவர்கள் யாரும் மறந்திருக்க முடியாது. மழை நிறைந்த காலை நேரத்தில் பஸ் ஸ்டாப்பில் ஏழெட்டு பேர் குடை, ரெயின் கோட்டுடன் நிற்கிறார்கள். ஒரே ஒருவர் மட்டும் குடையில்லாமல் சொட்டச் சொட்ட நனைந்து கொண்டு நிற்கிறார்.
“”அட, ஆமாம் நான் வானிலை இலாகாவிலேதான் வேலை செய்யறேன். எப்படிக் கண்டுபிடிச்சீங்க?”
————————————————————————————————————————————————
மக்களும் மழைநீரும்!
கி. சிவசுப்பிரமணியன், அறிவியல் ஆய்வாளர்
சூரியனால் வெளிப்படுத்தப்படும் வெப்பம் சுமார் 6,000 டிகிரி சென்டிகிரேட். இதில் ஒரு சிறு பகுதியே பூமிக்கு கிடைக்கிறது.
இந்த வெப்பநிலையே கடல்நீரை ஓரளவு ஆவியாக்கி மேகங்கள் மூலம் நமக்கு மழையாகக் கிடைக்க உதவுகிறது. இந்த வெப்பநிலையில் மாற்றம் ஏற்படும்பொழுது பருவகால மாற்றம் ஏற்படுகிறது. எனினும் எந்த ஆண்டிலும் மழையே இல்லாமல் அறவே பொய்த்துப் போவது இல்லை. இதுவே இயற்கை.
தமிழகம் தவிர இந்தியா முழுமையும் தென்மேற்குப் பருவகாலத்தில் ஏறத்தாழ 80 சதவிகித மழை கிடைக்கிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் வடகிழக்குப் பருவகாலத்தில் அதிக அளவு மழை கிடைக்கிறது. இது இயற்கையின் நியதி.
தமிழகத்தின் சராசரி மழையளவு ஏறத்தாழ 960 மி.மீ. இதில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான மழை இரு முக்கிய பருவ காலங்களான தென்மேற்கு (332 மி.மீ) மற்றும் வடகிழக்கு (465 மி.மீ) பருவகாற்றினால் கிடைக்கிறது.
வடகிழக்குப் பருவமழை (அக்டோபர் – டிசம்பர்) இந்த ஆண்டு தமிழகத்தில் அக்டோபர் இறுதி வாரத்தில் தொடங்கியது. ஆண்டின் மொத்த மழையில் பாதியளவு இம்மூன்று மாத காலத்திலேயே பெய்துவிடுகிறது. மேலும் தொடர்ந்து பெய்து வரும் இப்பருவ மழையின்போதுதான் நிலத்தடி நீர்மட்டம் கணிசமான அளவு அதிகரிக்கிறது.
எனவே, இக்குறுகிய காலத்தில் எந்த அளவு முடியுமோ அந்த அளவுக்குக் கிடைக்கின்ற ஒவ்வொரு மழைத்துளியையும் மிகச்சிறந்த முறையில் நிலத்திலும் (குளம், குட்டை, ஏரி போன்றவை) மற்றும் நிலத்திற்கு கீழும் (கசிவுநீர்க் குட்டைகள், மழைநீர் அறுவடை, கிணறுகள் போன்றவை) சேமிக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை.
“மகேசனை நம்பலாம் ஆனால் மழையை நம்ப முடியாது’. இது கிராமப்புற மக்களின் கூற்று. நகர்ப்புறங்களில் மழை குறைந்தாலும் பாதிப்புகள் அதிகம் இல்லை. ஆனால் விவசாயத்தையே நம்பியுள்ள கிராமங்களுக்கு மழையே உயிர் மூச்சு. இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை சென்னைக்கு மிக அதிக அளவு மழையை அளித்துள்ளது. ஆனால், வடகிழக்குப் பருவமழை அந்த அளவுக்கு சிறப்பாகப் பெய்யவில்லை.
எனினும், அடைமழைபோல் அவ்வப்போது தூறலுடன் பெய்த தொடர் சிறுமழை நிலத்தடிநீர் மேம்பாட்டிற்கு மிகவும் உகந்ததாகும்.
பெய்கின்ற சிறுதூறல் மழையில் பெரும்பகுதியை பூமி நிதானமாக உள்வாங்கி மண்ணுக்கு அடியில் எங்கெல்லாம் துவாரங்கள் உள்ளதோ அங்கெல்லாம் நீரைப்புகுத்தி நிலத்தடி நீர்மட்டம் மேம்பட அடிப்படையாக அமைய வழிவகுத்தது இந்த சிறுதூறல் மழையே. இக்கருத்தின் வெளிப்பாடே “சிறுதுளி பெருவெள்ளம்’ என்பதாகும்.
உதாரணமாக, சென்னையில் அக்டோபர் மாதத்தின் சராசரி மழையளவு 270 மி.மீ. இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 15 நாள்களில் 257 மி.மீ. மழை பெய்தது. ஆனால் ஒரே நாளில் மட்டும் (அக்டோபர் 28) 140 மி.மீ மழை பெய்துள்ளது. எனவே மீதமுள்ள இந்த ஒருமாதத்தில் பெய்கின்ற மழைநீரைச் சிறப்பாகச் சேமிக்க வேண்டியது அனைவரின் கடமையாகும்.
தமிழகத்தின் பெருவாரியான மாவட்டங்களில் அமைந்துள்ள மழைநீர் சேமிப்பு அமைப்புகளான ஏரிகள் மூலம் ஓரளவுக்கு மேல் பெய்கின்ற பெருமழைநீரைத் தேக்கினால் அது மழையற்ற கோடைகாலத்திற்கு பெரிதும் உதவும்.
எக்காரணத்தைக் கொண்டும் ஏரிகளை எவரும் ஆக்கிரமிக்க அனுமதிக்கக் கூடாது. அவை எதிர்காலத்தின் நீர் ஆதாரங்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.
நகரங்களில் வீடுகளுக்கு மழைநீர் சேகரிப்பு எவ்வளவு கட்டாயமோ அவ்வளவு கட்டாயம் கிராமங்களில் மழைநீர் சேகரிப்பதும் ஆகும். எனவே கிராமப்புறங்களில் உள்ள ஏரிகளையும், குளங்களையும் மராமத்து செய்து அவற்றின் முழு கொள்ளளவுக்கு தயார் செய்வது அரசு மற்றும் அனைத்து மக்களின் இன்றியமையாத கடமையாகும். ஆனால் இவைகளின் முக்கியத்துவம் உணரப்பட்டாலும், செயல்பாடுகள் மிகவும் குறைவே. இதுவே ஒட்டுமொத்த நீர்ப்பற்றாக்குறைக்கு அடிப்படைக் காரணமாகும்.
ஆண்டுதோறும் கிடைக்கின்ற மழை நம் தேவைக்கும் அதிகமாகவே கிடைக்கிறது. ஆனால் அதை உரியமுறையில் சேமித்துவைக்க நாம் தவறிவிடுகிறோம் என்பதே உண்மையாகும்.
“காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்’ என்ற பழமொழிக்கு ஏற்ப கிடைக்கின்ற மழைநீரை உரிய முறையில் சேகரிக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.
பருவகாலங்களில், மிகக் குறுகிய நாள்களில் அளவுக்கு அதிகமாக பெருமழை பெய்து, பேரளவு வெள்ளம் வீணாகக் கடலில் கலக்கிறது. இப்படி அதிகமாகப் பெய்யும் மழைநீரை முடிந்தவரையில் சேமித்து, அதை வறட்சி மற்றும் பற்றாக்குறைக் காலங்களில் பயன்படுத்திக்கொள்ளும் முறையே நீர் மேலாண்மையின் அடிப்படையாகும்.
இக்கருத்து விவசாயத்திற்கு மட்டுமின்றி குடிநீர் சேமிப்பிற்கும் பொருந்துவதாகும். இம்மழைநீரைப் பயன்படுத்திக்கொள்ள மழைநீர் தேங்கும் இடங்களில் சிறிய குளம், குட்டைகளை அமைக்க அரசும், மக்களும் முயற்சிக்க வேண்டும். இவற்றையே கசிவுநீர்க் குட்டைகள் என்கிறோம்.
இக்குட்டைகளுக்கு மழைநீர் வரத்தொடங்கியதும் நிலத்தால் அது உறிஞ்சப்படுகிறது. எங்கெல்லாம் நீர் பூமியில் வேகமாக உறிஞ்சப்படுகிறதோ அங்கெல்லாம் நிலத்தடி நீர் வளம் அதிகமாக உள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு அதன் உவர்நீர்த் தன்மையும் மாறி நன்னீர் பெறத் துணைபுரிகிறது. இக்கருத்துகளின் அடிப்படையில் மழைநீர் சேமிப்பின் அவசியத்தை மக்களும், அரசும் முழுமையாக உணர்ந்து ஆக்கபூர்வ வழியில் செயல்பட வேண்டும்.
ஆண்டுதோறும் நமது தேவைக்கு அதிகமாகவே மழைநீர் கிடைக்கிறது. ஆனால் அதை நாம் சரிவர பயன்படுத்திக் கொள்வது இல்லை. உதாரணமாக, ஒரு கிரவுண்டு (2400 சதுர அடி) நிலத்தில் 1 மி.மீ. மழை பெய்தால் அது 223 லிட்டர் நீருக்குச் சமம்.
சென்னையில் ஆண்டுதோறும் சராசரியாக 1300 மி.மீ. மழை பெய்கிறது. இந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரை 677 மி.மீ. மழையும் அக்டோபர் முதல் நவம்பர் வரை 354 மி.மீ. மழையும் பெய்தது. டிசம்பர் மாதம் 150 மி.மீ. மழை பெய்தது.
எனவே எதிர்காலத்தில் ஒவ்வொரு தனிமனிதரும் தத்தம் வீடுகள் மற்றும் நிலங்களில் இயன்ற அளவு மழைநீரைச் சேமித்து பூமிக்குள் செலுத்த வேண்டியது முக்கிய கடமையாகும். மேலும் பொது இடங்களில் கிடைக்கும் பேரளவு மழைநீரைச் சேமிக்க அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆண்டுதோறும் தவறாமல் இத்தகைய செயல்பாடுகளில் அனைவரும் தீவிரமாக ஈடுபட்டால் நமது நாட்டில் தண்ணீர்ப் பஞ்சத்துக்கே இடமிருக்காது.
மறுமொழியொன்றை இடுங்கள்