Mooligai Corner: Herbs & Naturotherapy – Poison Killer
Posted by Snapjudge மேல் ஜூன் 29, 2007
மூலிகை மூலை: கக்குவான் இருமல் குணமாக…
எதிர் அடுக்குகளில் முட்டை வடிவ இலைகளைக் கொண்ட சிறிய பூங்கொத்துக்களை உடைய வேலிகளில் படரும் சுற்றுக்கொடி இனம் நஞ்சறுப்பான். பஞ்சுடன் கூடிய முட்டை வடிவ விதைகளைக் கொண்டு இருக்கும். வேர், இலை மருத்துவக் குணம் உடையது. வாந்தியை ஏற்படுத்தும், வியர்வையை அதிகமாக்கும், கோழையை அகற்றும் குணம்கொண்டது. தமிழகமெங்கும் எல்லா மண்வளத்திலும் வேலிகளில் தானாகவே வளரக்கூடியது.
வேறுபெயர்கள் : கொடிப்பாலை, கறிப்பாலை, நஞ்சுமுறிச்சான் கொடி, கொண்ணி.
ஆங்கிலப்பெயர்: Tylophorqosthmatice; W&A; Asciepiadaceae
மருத்துவ குணங்கள் : நஞ்சறுப்பான் இலையை நிழலில் உலர்த்திக் காயவைத்து இடித்துப் பொடியாக்கி அரை கிராம் எடுத்து வெந்நீரில் 3 வேளைக்கு சாப்பிட வியர்வை பெருகும். சளியைப் போக்கும். சீதக்கழிச்சல், நீர்த்தக்கழிச்சல் குணமாகும்.
நஞ்சறுப்பான் இலைச்சூரணம் 150 மில்லியளவு எடுத்து தேனில் கலந்து இரண்டு வேளை கொடுத்துவர குழந்தைகளுக்குக் காணும் கக்குவான் இருமல் குணமாகும்.
நஞ்சறுப்பான் இலை, நொச்சி, தைல இலை வகைக்கு கைப்பிடியளவு எடுத்து 2 லிட்டர் நீரில் போட்டுக் கொதிக்க வைத்து ஆவி பிடித்தால் தலைக்கனம், தலைவலி, உடல்கனம், இருமல், சளி, இளைப்பு குணமாகும்.
நஞ்சறுப்பான் இலையை அரைத்து எலுமிச்சம்பழம் அளவு சாப்பிடக்கொடுத்து, கடிவாயிலும் வைத்துக்கட்ட வாந்தியாகி எந்தவிதமான நஞ்சும் முறியும் (மயக்க நிலையில் இருந்தால் நஞ்சறுப்பான் வேர்ப்பொடியை கொடுக்கலாம்.)
நஞ்சறுப்பான் சமூலத்தை நிழலில் காயவைத்து இடித்துப் பொடியாக்கி அதே அளவு மிளகுப்பொடி கலந்து 5 கிராமாக 2 வேளை ஒரு டம்ளர் மோரில் கலந்து குடித்துவர பாதரசம், ரசக்கற்பூரம், சவ்வீரம் போன்ற பாசாணங்களின் வீறு தணியும். உப்பில்லாத மோர் உணவு சாப்பிட வேண்டும். இதே பொடியை அரை கிராம் அளவிற்கு 3 வேளையாகத் தொடர்ந்து சாப்பிட்டுவர மேக வாய்வுப் பிடிப்புகள் குணமாகும்.
நஞ்சறுப்பான் பூண்டை கைப்பிடியளவு எடுத்து சிதைத்து அரைலிட்டர் நல்லெண்ணெயில் கலந்து காய்ச்சி வடிகட்டி தலைமுழுகிவர மண்டைக்குத்தல் குணமாகும்.
கற்பூரவள்ளி
இதன் இலைகள் சொரசொரப்பாக இருக்கும். இதன் இலைகளை ஒடித்தாலோ அல்லது கிள்ளி எடுத்தாலோ நல்ல தைல வாசனை வரும். இது 2 அடிவரை வளரக்கூடியது. வேர்கள் அதிக ஆழம் செல்லாமல் கொத்து வேராக இருக்கும். இலையே மருத்துவக் குணம் உடையது. தமிழகமெங்கும் தானாகவே வளர்கின்றது.
வேறுபெயர்கள்: ஓம்வள்ளி
மருத்துவ குணங்கள் : கற்பூரவள்ளி இலையை அடையாகச் செய்து சாப்பிட்டு வர செரிமாணக் கோளாறுகள் நீங்கும்.
கற்பூரவள்ளி இலையை மென்று தின்று வர மூச்சுத் திணறல் போகும். (நாக்கில் கொஞ்சம் சுறுசுறுப்பு ஏற்பட்டு லேசான வெளிர் காரம் இருக்கும். இதனால் எந்தத் தீமையும் இல்லை.)
கற்பூரவள்ளி இலை, முசுமுசுக்கை, தூதுவளை வகைக்கு ஒரு கைப்பிடியளவு எடுத்து நல்லெண்ணெய் அல்லது பசும் நெய்விட்டு வதக்கி பின்னர் அரைத்து வைத்துக்கொண்டு அமுக்கிரா, சுக்கு, மிளகு, சேர்த்து சமஅளவாக எடுத்துப் பொடிச்செய்து, ஒரு கடாயில் மாவுப் பொடிக்குத் தகுந்தவாறு நெய் ஊற்றிக் காய்ச்ச வேண்டும். நெய் காய்ந்தவுடன் அதில் பொடியை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு கிளறிக் கொண்டே வரும்போது விழுதையும் சேர்த்து அத்துடன் சிறிது பனங்கற்கண்டையும் கலந்து கிளறிக்கொண்டு இறக்கி வைத்து நெல்லிக்காய் அளவு 2 வேளை சாப்பிட்டுவர இழுப்பு சளி, இருமல் குணமாகும்.
கற்பூரவள்ளி இலையைப் பறித்து சாறு பிழிந்து சங்களவு எடுத்து அத்துடன் கோரோசனை சிறிது இழைத்துப்போட குழந்தைகளுக்குக் காணும் மாந்தம் செரியாமை, காய்ச்சல் குணமாகும்.
கற்பூரவள்ளியிலைச் சாறு 100 மில்லியளவு எடுத்து சிறிது கற்கண்டை பொடி செய்து கலந்து குடித்து வர தொண்டைக் கமறல் நீங்கும்
மறுமொழியொன்றை இடுங்கள்