WTO, G8, EU, NATO, US Interests vs Developing Countries Financial Development – Focus on Agriculture
Posted by Snapjudge மேல் ஜூன் 28, 2007
வளரும் நாடுகளின் பொருளாதாரம் சிதைவதா?
உ.ரா வரதராசன்
உலகமயப் பொருளாதாரத்தை வழிநடத்தும் சர்வதேச மும்மூர்த்திகளில் ஒன்றான உலக வர்த்தக (டபிள்யூடிஓ)அமைப்பு, சர்வதேச வர்த்தகம் தொடர்பான விஷயங்களில் வளரும் நாடுகளின் மீது செலுத்தி வரும் பொருளாதார நிர்பந்தங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
உலக நாடுகளுக்கிடையேயான ஏற்றுமதி-இறக்குமதி (சர்வதேச) வர்த்தகத்திற்கான விதிமுறைகளை வகுத்து வழிநடத்தும் டபிள்யூடிஓ, அதன் இன்றைய ஸ்தாபன வடிவத்தைப் பெற்றது 1995-ம் ஆண்டில்தான். 150 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ள டபிள்யூடிஓவின் கொள்கை முடிவுகளை எடுக்கும் உயர் அமைப்பு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் டபிள்யூடிஓ அமைச்சர்கள் மட்ட உச்சி மாநாடுதான்.
டபிள்யூடிஓவின் அமைச்சரவை மட்ட நான்காவது உச்சி மாநாடு 2001 நவம்பரில் கத்தார் நாட்டில் தோஹா நகரில் நடைபெற்றது. விவசாயம், தொழில் மற்றும் சேவைப் பணித்துறைகள் உள்ளிட்ட ஒரு நீண்ட பட்டியலில் இடம் பெற்ற பல்வேறு விஷயங்களின் மீது ஒரு புதிய சுற்றுப்பேச்சு வார்த்தையைத் தொடங்க தோஹாவில் ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்தப்புதிய சுற்றுப்பேச்சுவார்த்தைக்கு தோஹா வளர்ச்சித் திட்டம் என்று பெயரிடப்பட்டது. இந்த சுற்றுப் பேச்சுவார்த்தைகள் முற்றுப்பெற்று, 2005 ஜனவரிக்குள் உடன்பாடு எட்டப்படவேண்டும் என்பது தோஹாவில் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு. இன்னும் நீண்டு கொண்டே போகிறது.
தோஹா சுற்றுப் பேச்சுவார்த்தையை முடிவுக்குக் கொண்டுவர மேற்கொள்ளப்படும் பகீரத முயற்சிகளின் ஒரு பகுதியாக, டபிள்யூடிஓ உறுப்பு நாடுகள் சிலவற்றை இணைத்து நடைபெறும் “துணை’ மாநாடுகள் பலவும் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் பங்கு கொள்ளும் நாடுகளின் எண்ணிக்கையை வைத்து இந்தத் துணை மாநாட்டுக் குழுக்களுக்கு ஜி-4,ஜி-6,ஜி-20, ஜி-33 என்றெல்லாம் பெயரிடப்பட்டன.
இவற்றில் ஒன்றான ஜி-4 குழு நாடுகளான அமெரிக்கா ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பு, பிரேசில், இந்தியா ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கிடையே, ஜெர்மனியில் பாட்ஸ்தாம் நகரில் ஒரு துணை மாநாடு அண்மையில் நடந்து முடிந்திருக்கிறது. இந்தப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக அறிவிப்பு வெளியாகியது. விவசாயப் பொருள்களின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான பிரச்னைகளில் யுஎஸ்ஸýம் ஐரோப்பிய யூனியனும் ஒரு நிலைப்பாட்டை எடுக்க, இந்தியாவும் பிரேசிலும் அதற்கு நேர் எதிரான நிலைப்பாட்டை எடுத்ததுதான் இந்தப் பேச்சுவார்த்தை முறிவுக்குக் காரணம்.
பாட்ஸ்தாம் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுவிட்டு, இந்தியா திரும்பிய நமது வர்த்தகத்துறை அமைச்சர் கமல்நாத் வளர்ச்சியடைந்த நாடுகள் (குறிப்பாக யுஎஸ், ஐரோப்பிய யூனியன் ) மீது இரண்டு குற்றச்சாட்டுகளை சுமத்தினார். ஒன்று, அவை தத்தம் நாடுகளின் பணக்கார விவசாயிகளுக்கு வழங்கிவரும் அதீதமான மானியங்களை ஒரு நியாயமான வரம்புக்குகூடக் குறைத்துக்கொள்ள மறுத்துப் பிடிவாதம் பிடிக்கின்றன என்பதாகும்.
இரண்டாவது குற்றச்சாட்டு வளர்ச்சியடைந்த நாடுகள், வளரும் நாடுகளின் ஒற்றுமையைக் குலைப்பதற்காகப் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கடைப்பிடிக்கின்றன என்பதாகும்.
ஜி-4 குழுவில் சேர்ந்து இந்தியாவும் பிரேசிலும் யுஎஸ் மற்றும் ஐரோப்பிய யூனியனோடு தனித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதை இதர வளரும் நாடுகள் சந்தேகக் கண்ணோடு பார்க்கின்றன. ஜி-6 என்று இன்னொரு குழுவில் இந்த நான்கு நாடுகளோடு, ஆஸ்திரேலியாவும் ஜப்பானும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தும் மற்றொரு ஏற்பாட்டையும் இதர வளரும் நாடுகள் குறைகூறி வருகின்றன. இந்தப் பின்னணியில் “ஜி-4 செத்துவிட்டது’ என்று பாட்ஸ்தாம் பேச்சுவார்த்தை முடிவில் கமல்நாத் அறிவித்தது ஒரு விதத்தில் நன்மையே! “ஜி-4′ செத்துவிட்ட பின்னர், “ஜி-6’க்கு எப்படி உயிரூட்ட முடியும் என்று ஆஸ்திரேலியா கவலை தெரிவித்துள்ளது! எனினும், வளரும் நாடுகளின் ஒற்றுமையைக் கட்டிக்காப்பதில் இந்தியாவுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், வளர்ச்சியடைந்த நாடுகளோடு சேர்ந்து துணை மாநாடுகள் நடத்துவதற்கான “ஜி-4′, “ஜி-6′ குழுக்களுக்கு மீண்டும் உயிரூட்டும் முயற்சிக்கு மத்திய அரசு துணை போகக் கூடாது.
பாட்ஸ்தாம் பேச்சுவார்த்தையில் இந்தியாவும் பிரேசிலும் சொந்த நாட்டின் விவசாயிகள் நலன்களை விட்டுக்கொடுக்க முடியாது என்று நிலை எடுத்தது,. இரு நாடுகளின் விவசாயிகளுக்கு சாதகமானதுதான் என்பதை மறுப்பதற்கில்லை.
ஆனால், கமல்நாத்தின் பேச்சும், பேட்டியும் பாட்ஸ்தாம் பேச்சுவார்த்தை விவசாய மானியங்களைப் பற்றியது மட்டுமே என்ற தோற்றத்தை ஏற்படுத்த முற்படுவது பாதி உண்மை மட்டுமே! தோஹா வளர்ச்சித் திட்டம் என்று வருணிக்கப்படுகிற டபிள்யூடிஓவின் இப்போதைய சுற்றுப் பேச்சுவார்த்தைகளில், விவசாயம் மட்டுமன்றி, தொழில் மற்றும் சேவைப் பணிகள் துறைகளும் பிரதானமான இடம் பெற்றுள்ளன என்று ஏற்கெனவே குறிப்பிட்டோம். இதில் வளர்ச்சியடைந்த வல்லரசு நாடுகளுக்கு மிகுந்த அக்கறையுள்ள அம்சம், விவசாயம் அல்லாத மற்ற வர்த்தகத்திற்கு வளரும் நாடுகளின் சந்தையில் நுழைவதற்கான முயற்சியான “நாமா’ (Non Agricultural Market Access) என்பதாகும். விவசாயம் அல்லாத இதர தொழில்துறைகளின் உற்பத்தி சரக்குகளுக்கு, வளரும் நாடுகள் தங்கள் சந்தையை அகலத் திறந்துவிட வேண்டும். இறக்குமதிகள் மீதான சுங்கத் தீர்வைகளை கணிசமாகக் குறைக்க வேண்டும் என்பன போன்ற பல கோரிக்கைகளை வளர்ச்சியடைந்த வல்லரசு நாடுகள் “நாமா’ தொடர்பாக அழுத்தமாக வலியுறுத்தி வருகின்றன.
இந்த “நாமா’ பேச்சுவார்த்தையில், வளரும் நாடுகளின் வரிசையில் முன்னணியில் உள்ள இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் ஒன்று சேர்ந்து “நாமா-11′ என்றொரு குழுவை அமைத்து, வளர்ச்சியடைந்த நாடுகளுடன் உடன்பாடு காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. வளர்ச்சியடைந்த நாடுகள் விவசாயத்திற்கான மானியங்களைக் குறைக்கும் பட்சத்தில், “நாமா’ பிரச்னையில் ஒரு சமரசத்திற்கு இணங்கி வர இந்த “நாமா-11′ நாடுகள் குழு தயார் என்று ஏற்கெனவே சமிக்ஞை காட்டியுள்ளன என்பது ஒரு கவலைக்குரிய விஷயமாகும்.
பாட்ஸ்தாம் பேச்சுவார்த்தையில், இந்த “நாமா’ பிரச்னையை மையமாக வைத்து ஒரு பேரம் நடத்தப்பட்டது என்பதும், அதிலும் யுஎஸ், ஐரோப்பிய யூனியனுக்கு திருப்திகரமான ஒரு முடிவு வரவில்லை என்பதும், இந்தப் பேச்சுவார்த்தை தோல்விக்குப் பின்னணியாக இருந்தது.
வளர்ச்சியைடைந்த நாடுகளில் கணிசமான மானியங்களைப் பெறும் விவசாயிகள், தங்கள் விளைபொருள்களை வளரும் நாடுகளுக்கு கொண்டுவந்து, விற்பனை செய்யும்போது, அவர்களோடு உள்நாட்டு விவசாயிகள் போட்டிபோட்டு வியாபாரம் செய்யத் திணறுகிறார்கள். இதனால் வளரும் நாடுகளின் விவசாயம் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. விவசாயத்திற்கான இடுபொருள்களின் விலை உயர்வு, விளைபொருள்களுக்குக் கட்டுபடியான விலை கிடைக்காதது ஆகியவை வளரும் நாட்டு விவசாயிகள் சந்தித்து வரும் மிகப்பெரிய சவால்.
இந்தப் பின்னணியில் “நாமா’ பேச்சுவார்த்தையின் விளைவாக, வளர்ச்சியடைந்த நாடுகளின் தொழில்துறை உற்பத்திப் பொருள்கள் வளரும் நாடுகளின் சந்தையை ஆக்கிரமிக்க அனுமதித்தால், அது மிகப்பெரிய தொழில்சிதைவுக்கு வழிவகுத்துவிடும். எனவே, டபிள்யூடிஓ பேச்சுவார்த்தைகளில் மத்திய அரசு, விவசாயிகளின் நலன்களையும் பாதுகாப்பது என்ற நிலைப்பாட்டோடு நின்றுவிடாமல், நாட்டின் தொழில்களையும், வேலைவாய்ப்புகளையும் பாதுகாக்கும் திசையில் “நாமா’ கோரிக்கைகளையும் உறுதியாக எதிர்க்க வேண்டியது அவசியம். பாட்ஸ்தாம் பேச்சுவார்த்தையில் “நாமா’ சம்பந்தமாக பேசப்பட்டது என்ன என்பதைப் பற்றி கமல்நாத் மெüனம் சாதிப்பது ஒரு மிகப்பெரிய அபாயத்தைத் திரையிட்டு மறைக்கும் முயற்சியோ என்று எண்ணத் தோன்றுகிறது.
பாட்ஸ்தாம் பேச்சு தோல்வியின் விளைவாக, தோஹா வளர்ச்சித் திட்டப் பேச்சுவார்த்தையின் எதிர்காலம் கேள்விக் குறியாக மாறியிருக்கிறது. தோஹா சுற்றில் “ஏதாவதொரு’ உடன்பாடு “எப்படியாவது’ எட்டப்படுவதன் பாதகங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், எந்த உடன்பாடும் ஏற்படாமல் இருப்பதேகூட வளரும் நாடுகளுக்கு நன்மையாக அமையும் என்பது தெளிவு. உலக வர்த்தக அமைப்பு வளரும் நாடுகளின் பொருளாதாரத்தை சிதைப்பதற்கோ, மக்களின் வாழ்வாதாரத்தைக் குலைப்பதற்கோ அனுமதிக்கக் கூடாது என்ற எச்சரிக்கையோடு, மத்திய அரசு செயல்படவேண்டும் என்பதே நமது விருப்பம்.
மறுமொழியொன்றை இடுங்கள்