MBBS, BDS merit list released – Details, Statistics, Admission results
Posted by Snapjudge மேல் ஜூன் 28, 2007
எம்.பி.பி.எஸ். பொதுப் பிரிவு “கட்-ஆப் மார்க்’ 197: மாவட்டங்களைச் சேர்ந்த 7 மாணவர்கள் 200-க்கு 200
சென்னை, ஜூன் 28 : தமிழக மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பில் (2007-08) மாணவர்கள் சேருவதற்கு
‘கட்-ஆஃப் மார்க்’ விவரம்:
- பொதுப் பிரிவு மாணவர்களுக்கான “கட்-ஆஃப் மார்க்’ 197-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் – 194.50;
- மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் – 191.75;
- தாழ்த்தப்பட்ட வகுப்பினர் – 187.25;
- பழங்குடி வகுப்பினர் – 179.
மாவட்டங்களுக்கே சிறப்பிடம்:
ராசிபுரம், நாமக்கல், ஓசூர், கோவை, மார்த்தாண்டம் (கன்னியாகுமரி), பொள்ளாச்சியைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கான கூட்டு மதிப்பெண் 200-க்கு 200 வாங்கி முதல் ஏழு சிறப்பிடங்களைப் பெற்றுள்ளனர். இவர்கள் ஏழு பேரும் எம்.பி.பி.எஸ். ரேங்க்கை நிர்ணயம் செய்யும் இயற்பியல்-வேதியியல்-உயிரியல் ஆகிய மூன்று பாடங்களிலும் 200-க்கு 200 பெற்றவர்கள்.
14 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான ரேங்க் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் புதன்கிழமை வெளியிட்டுக் கூறியதாவது:-
1,552 எம்.பி.பி.எஸ். இடங்கள்:
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 14 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,398 எம்.பி.பி.எஸ். இடங்கள் மற்றும் மேலே சொன்ன மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 154 எம்.பி.பி.எஸ். இடங்கள் என மொத்தம் 1,552 இடங்களுக்கு ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னை பழைய மகாபலிபுரம் சாலை படூரில் உள்ள செட்டிநாடு மருத்துவக் கல்லூரி வழக்குத் தொடர்ந்துள்ளதால், அந்தக் கல்லூரியில் உள்ள 98 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் இந்த ரேங்க் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
பி.டி.எஸ். (பல் மருத்துவப் படிப்பு):
சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 85 பி.டி.எஸ். இடங்கள் மற்றும் 8 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு 326 பி.டி.எஸ். இடங்களுக்கும் சேர்த்து ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ரேங்க் பட்டியலை www.tnhealth.org என்ற இணையதளத்திலும் பார்க்கலாம்”” என்றார் அமைச்சர் ராமச்சந்திரன்.
———————————————————————————————–
2004-ல் பிளஸ் 2; 2007-ல் எம்.பி.பி.எஸ்.: பொள்ளாச்சி மாணவர் சாதனை
பொள்ளாச்சி, ஜூன் 28: நுழைவுத் தேர்வு ரத்து காரணமாக, தான் கனவு கண்டபடி மூன்று ஆண்டுகள் கழித்து எம்.பி.பி.எஸ். படிப்பில் சிறப்பிடம் பெற்று நுழைந்துள்ளார் பொள்ளாச்சி மாணவர் ஜி.கே. அஸ்வின்குமார்.
பிளஸ் 2 முடித்த பிறகு பல் மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைத்தும் அதில் சேராமல் 3 ஆண்டுகள் காத்திருந்தார் இவர்.
சென்னையில் புதன்கிழமை வெளியிடப்பட்ட எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியலில் 200-க்கு 200 கூட்டு மதிப்பெண் பெற்று 7-வது சிறப்பிடத்தைப் பெற்றுள்ளார்.
பொள்ளாச்சி ஜோதி நகரைச் சேர்ந்தவர் டாக்டர் கோபாலகிருஷ்ணன். பெத்தநாயக்கனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணிபுரிகிறார். அவரது மகன் ஜி.கே.அஸ்வின்குமார். கடந்த 2003-04-ல் பொள்ளாச்சியில் உள்ள பி.வி.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 முடித்தார்.
அப்போது அவர் பெற்ற மொத்த மதிப்பெண்கள் 1169.
சம்ஸ்கிருதம் 196, ஆங்கிலம் 183, கணிதம் 190, இயற்பியல் 200, வேதியியல் 200, உயிரியல் 200. ஆக, மருத்துவ படிப்புக்கான கூட்டு மதிப்பெண்ணாக 200-ஐ வைத்திருந்தார்.
இதில் கடந்த 2 முறை நுழைவுத் தேர்வு எழுதியதில் ஒருமுறை பல் மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைத்தது.
ஆனால் அஸ்வின்குமார் அதில் சேரவில்லை. ஒரு முறை நுழைவுத் தேர்வு எழுதவில்லை.
இந்த ஆண்டு நுழைவுத் தேர்வு ரத்தாகி பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டது.
இதில் அஸ்வின்குமார் தமிழக அளவில் 7-வது ரேங்க் பெற்றுள்ளார். மருத்துவக் கல்வியில் முன்னோடியாக விளங்கும் சென்னை மருத்துவக் கல்லூரியை கவுன்சலிங்கில் அவர் தேர்வு செய்யும் நிலையில் இடம் கிடைக்கும்.
மருத்துவப் படிப்பு முடித்து இதய அறுவைச் சிகிச்சையில் தனித்துவம் பெற்ற மருத்துவராவதுதான் தனது எதிர்காலத்திட்டம் என்று அஸ்வின்குமார் தெரிவித்தார்.
வயது வரம்பு கிடையாது:
நுழைவுத் தேர்வு ரத்து, எம்.பி.பி.எஸ். படிப்புக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு கிடையாது என்பதால் அஸ்வின்குமார் போன்று கடந்த ஆண்டுகளில் பிளஸ் 2 தேர்வில் முக்கிய பாடங்களில் அதிக கூட்டு மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பலர் இந்த ஆண்டு பலன் அடைந்துள்ளனர்.
இத்தகைய மாணவர்கள் நுழைவுத் தேர்வு மதிப்பெண் அதிகமாக எடுக்காததால் கடந்த ஆண்டுகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர முடியவில்லை.
எம்.பி.பி.எஸ்.-ஐப் போன்று பி.இ. படிப்புக்கு விண்ணப்பிக்கவும் அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. எனவே நுழைவுத் தேர்வு ரத்து காரணமாக கடந்த ஆண்டுகளில் பிளஸ் 2 தேர்வில் முக்கிய பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களில் பலர் பி.இ. ரேங்க் பட்டியலில் இடம்பெற வாய்ப்பு உண்டு எனக் கல்வியாளர்கள் தெரிவித்தனர்.
———————————————————————————————–
எம்பிபிஎஸ் ரேங்க் பட்டியல்: பயன் தராத ரேண்டம் எண்
சென்னை, ஜூன் 28: எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவோருக்கு கம்ப்யூட்டர் மூலம் அளிக்கப்பட்ட சிறப்பு எண் (ரேண்டம் நம்பர்) எந்தப் பயனையும் அளிக்கவில்லை.
நுழைவுத் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டதால், மாணவர் அட்மிஷனுக்கு புதிய நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. அனைத்துப் பாடங்களிலும் சமமான மதிப்பெண்ணை ஒன்றுக்கும் மேற்பட்டோர் பெற்றிருந்தால், அவர்களில் யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்பது பிறந்த தேதி அடிப்படையில் தீர்மானிக்கப்படும். அதிலும் சமமாக இருந்தால், கம்ப்யூட்டர் சிறப்பு எண் (ரேண்டம் நம்பர்) கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
இதற்காக, விண்ணப்பித்தோருக்கு சில வாரங்களுக்கு முன் கம்ப்யூட்டர் மூலம் சிறப்பு எண் தரப்பட்டது. இவர்களில் யாருடைய எண் பின்னால் வருகிறதோ அவருக்கு முன்னுரிமை அளிப்பது என்றும் அரசு அறிவித்திருந்தது.
“”இரு மாணவர்கள் மட்டுமே சமமான மதிப்பெண்ணைப் பெற்றிந்தனர். எனினும், அவர்கள் இருவரும் அதிகமான மதிப்பெண் பெற்றிருந்ததால், அரசுக் கல்லூரியில் அவர்களுக்குத் தாராளமாக இடங்கள் கிடைத்துள்ளன. இதனால் ரேண்டம் எண் அடிப்படையில் அவர்களை மதிப்பிடத் தேவையே ஏற்படவில்லை” என்று மருத்துவக் கல்வி வட்டாரம் தெரிவித்தது.
மாநிலம் முழுவதும் 14 அரசுக் கல்லூரிகளிலும், 3 தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும் மொத்தம் 1,552 இடங்கள் உள்ளன.
———————————————————————————————–
எம்.பி.பி.எஸ். : ஒரு மார்க் வித்தியாசத்தில் 74 பேர்
சென்னை, ஜூன் 28: எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கான ரேங்க் பட்டியலில் கூட்டு மதிப்பெண் 200-க்கும் 199-க்கும் இடையே 74 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர பொதுப் பிரிவு கட்-ஆஃப் மதிப்பெண் 197-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூட்டு மதிப்பெண்ணில் ஒவ்வொரு 0.25 மதிப்பெண்ணுக்கும் இடையே ரேங்க் பட்டியலில் மாணவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.
மருத்துவப் படிப்பில் சேர
- 200-க்கு 200 கூட்டு மதிப்பெண்ணை மாவட்டங்களைச் சேர்ந்த 7 மாணவர்கள் வாங்கியுள்ளனர்;
- இதற்கு அடுத்தபடியாக 199.75 கட்-ஆஃப் மார்க்கை 12 மாணவர்கள் வாங்கியுள்ளனர்;
- 199.50 கட்-ஆஃப் மார்க்கை மொத்தம் 17 மாணவர்கள் வாங்கியுள்ளனர்;
- 199.25 கட்-ஆஃப் மார்க்கை மொத்தம் 13 மாணவர்கள் வாங்கியுள்ளனர்;
- 199 கட்-ஆஃப் மார்க்கை மொத்தம் 25 மாணவர்கள் வாங்கியுள்ளனர்.
- ஆக, கட்-ஆஃப் மார்க் 200-க்கும் 199-க்கும் இடையில் ஒரு மார்க் வித்தியாசத்தில் 74 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
கட்-ஆஃப் மார்க் 199-க்கும் 198-க்கும் இடையே மட்டும் 114 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். மாநில அளவில் முதலிடம் பெற்ற சென்னை கோபாலபுரம் டிஏவி பள்ளி மாணவி எஸ். ரம்யாவின் மருத்துவப் படிப்புக்கான கூட்டு மதிப்பெண் 198.25. எனவே அவர் எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியலில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குப் பிறகு இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.பி.பி.எஸ். படிப்பில் பொதுப் பிரிவு கட்-ஆஃப் மதிப்பெண் 197 என்பதால், கூட்டு மதிப்பெண் 196.5, 196, 195 என வாங்கியுள்ள பொதுப் பிரிவு மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இடம் கிடைக்குமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
———————————————————————————————–
எம்.பி.பி.எஸ். : முதல் 7 ரேங்க் பெற்றவர்கள்
சென்னை, ஜூன் 28: எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியலில் நாமக்கல், கோயம்புத்தூர், கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த ஏழு மாணவர்கள் 200-க்கு 200 கூட்டு மதிப்பெண் பெற்று சிறப்பிடங்களைப் பெற்றுள்ளனர்.
ஒரு சென்னை மாணவர்கூட 200-க்கு 200 மதிப்பெண் பெற்று சிறப்பிடத்தைப் பெறவில்லை.
ரேங்க் வாரியாக சிறப்பிடம் பெற்ற மாவட்டங்களைச் சேர்ந்த ஏழு மாணவர்கள், அவர்கள் படித்த பள்ளி குறித்த விவரம்:
1. பி. பிரவீண்குமார், எஸ்ஆர்வி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ராசிபுரம்;
2. ஆர். நித்யானந்தன், குறிஞ்சி மேல்நிலைப் பள்ளி, நாமக்கல்;
3. எம். கார்த்திகேயன், மகரிஷி வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளி, ஓசூர்;
4. எச். மீனா, அவிலா கான்வென்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, வெங்கிடாபுரம், கோவை;
5. சி. ஜெரீன் சேகர், குட் ஷெபர்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மார்த்தாண்டம், கன்னியாகுமரி;
6. எஸ். தாசீன் நிலோஃபர், எஸ்ஆர்வி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ராசிபுரம்;
7. ஜி.கே. அஸ்வின் குமார் (படம்), பி.வி.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பொள்ளாச்சி.
———————————————————————————————–
மறுமொழியொன்றை இடுங்கள்