Global Warming – Alternate Perspectives due to Farming Shortage Crisis
Posted by Snapjudge மேல் ஜூன் 28, 2007
உயிர் எரிசக்தி மாயை-ஓர் அபாயம்!
ஆர்.எஸ்.நாராயணன்
உயிர் எரிசக்தி அதாவது தாவரங்கள் மூலம் பெறப்படும் எரிசக்தி, இன்று நிலவும் கச்சா எண்ணெய் எரிபொருள் நெருக்கடிக்குரிய சரியான தீர்வாகவும் பூமி வெப்பமடைதலைத் தணிக்கவல்லது என்றும் ஒரு தவறான எண்ணம் தலைதூக்கியுள்ளது.
புவி வெப்பமடைதலுக்கு முக்கிய காரணமே வல்லரசு நாடுகளின் வரம்பற்ற எரிசக்திப் பயன்பாடு. இதனால்தான் நச்சுப்புகைகளின் பசுமையக விளைவு ஏற்பட்டு ஓசோன் மண்டலம் ஓட்டையாகிறது. வல்லரசுகளான வடக்கு நாடுகளுடன் ஒப்பிடும்போது வளரும் நாடுகளின் எரிசக்திப் பயன்பாடு 10 சதத்திற்கும் குறைவுதான்.
வல்லரசுகள் தங்களின் எரிசக்திப் பயன்பாட்டின் அளவைக் குறைத்துக் கொள்வதற்கு முன்வராமல் இருக்கவே “”தாவர எரிசக்தி- உயிர் எரிசக்தி” என்ற மாயையைத் தோற்றுவித்து சுகம் பெறுகின்றன. வளரும் நாடுகளோ இந்த உயிர் எரிசக்தியை ஏற்றுமதிக்குரிய சந்தைப்பொருளாக மதித்து ஆர்வம் காட்டிவருகின்றன.
உயிர் எரிபொருள் எவை? இன்று அதிகபட்சம் உயிர் எரிசக்தியாக பயோ எத்தனால் பயன்படுகிறது. பின்னர் தாவர எண்ணெய் மூலம் பெறப்படும் பயோ டீசல். உணவுப் பொருள்களான பல்வேறு புஞ்சைத் தானியங்களின் மாவைப் புளிக்கவைத்தும், சர்க்கரைச்சோளம் என்ற பயிரின் தண்டைப் பிழிந்து சாறெடுத்தும் கரும்புச் சாற்றிலிருந்தும் பயோ எத்தனால் எடுக்கப்பட்டு அது பெட்ரோலில் கலந்து பயன்படுத்தப்படுகிறது.
உணவாகப் பயன்படக்கூடிய மக்காச் சோளமும் எத்தனாலாகிறது. சோயா மொச்சை, கடுகு, எண்ணெய்ப்பனை போன்ற எண்ணெய் வித்துப் பயிர்களும் பயோ டீசலுக்குப் பயனாகிறது. பசிபிக் தீவுகளில் தேங்காய் எண்ணெய், ஆப்பிரிக்க நாடுகளில் எண்ணெய் காட்டாமணக்கும் அடக்கம்.
தாவர எண்ணெய்களை எரிபொருளாகப் பயன்படுத்துவது புதிய விஷயமல்ல. ஆமணக்கு எண்ணெயின் பெயரே விளக்கு எண்ணெய்தான். மன்னராட்சிக் காலத்தில் இலுப்பை மர வளர்ப்புக்கு தேவதானம் (கோயில் மானியம்) வழங்கப்பட்டதைச் சோழர்காலத்துச் செப்போடுகள் கூறும்.
தீவட்டி, தெருவிளக்கு, கோயில் தீபம் எல்லாவற்றுக்கும் பயன் தர இலுப்பை மரங்கள் இருந்தன. ஏழைகளுக்கும் பழங்குடிகளுக்கும் வாழ்வளித்தன. இன்றோ இலுப்பை மரமே அரிதாகிவிட்டது.
கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. இதற்கு மாற்றாகத் தாவர எண்ணெய்களைப் பயன்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை. இதன்மூலம் ஏழை விவசாயிகளுககும் பழங்குடி மக்களுக்கும் வருமானம் கிடைக்கும். ஆனால், இந்த அடிப்படையில் மாற்று எரிசக்தி திட்டம் அணுகப்படவில்லை. கச்சா எண்ணெய் எரிபொருள்களை மிக அதிகமாகப் பயன்படுத்தும் வடக்கு நாடுகள் அற்பவிலை கொடுத்து உயிர் எரிபொருள்களை ஏழை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து கொண்டு தங்களுடைய நுகர்வுத் திட்டத்தில் எந்த மாற்றத்தையும் செய்யத் தயாராக இல்லை. அதேசமயம், ஏழைநாடுகளில் உள்ள பணக்காரர்கள் உலக வர்த்தகத்தில் உயிர் எரிபொருள் அங்காடியில் தங்கள் பங்கை வளர்த்துக்கொள்ளும் போட்டியில் இறங்கிவிட்டனர்.
இந்தப் போட்டா போட்டியின் விளைவுகள் அபாயகரமானவை. ஒரு மாயவலை பின்னப்படுகிறது. “” உயிரி எரிபொருள்கள் சுற்றுச்சூழலின் காவலர்கள்” என்றும் இவை பசுமையக (எழ்ங்ங்ய் ஏர்ன்ள்ங்) விளைவுகளான நச்சுப் புகைகளைக் கணிசமாகக் குறைக்கும்” என்றும் பிரசாரம் செய்யப்படுகிறது. இந்த மாற்று உயிர் எரிபொருள் திட்டமே வடக்கு நாடுகளின் சதித்திட்டம் என்பதை ஏழை நாடுகள் எள்ளளவும் உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை.
இதனால் நிகழப்போகும் அபாயங்கள் எவை?
சர்வதேச உயிர் எரிபொருள் அங்காடியில் பலியாகும் உணவுப் பயிர்களில் முக்கியமானவை மரவள்ளிக்கிழங்கு, சோயா மொச்சை, மக்காச்சோளம், மணிலாப் பயிறு, கரும்பு, எண்ணெய்ப் பனை, ரேப்சீட் என்ற கடுகுவகை போன்றவை. ஆகவே உயிர் எரிபொருள் அங்காடி வலுப்பெற்றால், உணவுப் பயிர்களின் வழங்கல் பாதிப்புறலாம். முன்பு கவனிக்கப்படாமல் இருந்த எண்ணெய் காட்டாமணக்கு, புங்கன் இன்று கவனத்தை ஈர்த்துள்ளன. ஆனால், வேம்பு, இலுப்பை, சால் உரிய கவனம் பெறவில்லை.
உயிர் எரிபொருள் உற்பத்தியில் வல்லரசுகளின் கவனம் திரும்பிவிட்டதால் விவசாய நிலம், தண்ணீர் நெருக்கடி வலுப்பெறும். இப்போது மொத்த விவசாய நிலத்தில் சுமார் 30 சதம் உயிர் எரிபொருள் உற்பத்திக்கு என்று திட்டமிடப்படுகிறது. இந்தியாவில் காட்டாமணக்கு ஜூரம் தலைக்கேறி விட்டது. தமிழ்நாட்டில் வாழை, நெல், பயிரிட்ட இடங்களில் காட்டாமணக்கு நட வங்கி உதவி, மானியம் கிட்டுகிறது. காட்டாமணக்கு புஞ்சைப் பயிர் அல்ல . வாழை, கரும்புக்குப் பாயும் நீரைவிட அதிகம் பாய்ச்சினால்தான் நிறைய விதைகள் கிட்டி நஷ்டத்தைத் தவிர்க்கலாம்.
ஆப்பிரிக்க மக்களுக்கு மக்காச்சோளம் முக்கிய உணவு. அடுத்து மரவள்ளிக்கிழங்கு மாவு. இன்று மக்காச்சோளத்தின் சர்வதேச விலை உயர்ந்துவிட்டது. உயிரி எரிபொருள் பயனுக்கு என்றே ஆப்பிரிக்கச் சோளம் அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளுக்கு டாலர், யூரோ நோட்டுகளைப்பெற ஏற்றுமதி தொடங்கிவிட்டது. இதனால் உள்ளூரில் மக்காச்சோள விலை உயரும்போது மக்களின் உணவுப் பிரச்னைமட்டுமல்ல; மாடு, கோழிகளின் உணவுப் பிரச்னையும் ஏற்படும். மக்காச்சோளம் மாவு கால்நடைகளின் திட உணவும் கூட. கோழிகளுக்கும் மக்காச்சோளம் பிரதான உணவு.
எண்ணெய்ப்பனை அதிகம் விளையும் மலேசியாவும் இந்தோனேசியாவும் இணைந்து தங்களின் பாமாயில் உற்பத்தியில் 40 சதவீதத்தை பயோடீசலுக்குப் பயன்படுத்த முடிவு செய்துள்ளன. அதாவது, அமெரிக்க- ஐரோப்பிய ஏற்றுமதியால் பாமாயில் விலை உயர்ந்தால் முதல் பாதிப்பு இந்தியாவுக்கே.
ஏற்கெனவே சர்க்கரை விலை உயர்ந்துவருகிறது. உலகிலேயே கரும்புச் சர்க்கரை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் இந்தியாவில் சர்க்கரை மலிவாக விறகப்படவில்லை. இந்தியாவுக்கு இணையாக கரும்பு உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் பிரேசிலில் சுமார் 50 சதம் எத்தனால் உற்பத்திக்குச் செல்கிறது. கூடிய விரைவில் இந்தியாவும் பிரேசிலைப் பின்பற்றக்கூடிய வாய்ப்பு உள்ளது. பயோடீசலை விட பயோ பெட்ரோலிய எத்தனாலின் பயன்பாடு நடைமுறை சாத்தியமானது. எத்தனாலுக்குக் கரும்புச்சாறு அல்லது மாவுப்பொருள் புளித்த காடி போதும். இவை உணவு அல்லவா? மொலசஸ் என்ற சர்க்கரைப் பாகுக் கழிவும் கால்நடை உணவுக்குப் பயனாகிறது.
முக்கிய உணவுப்பொருள்களை பயோ பெட்ரோலாக மாற்றும் தொழில் வளர்ந்து வரும் சூழ்நிலையில், வருங்காலத்தில் உணவுப்பஞ்சம் ஏற்படும் என்பதுதானஅ நிதர்சன உண்மை. விளைபொருள் விலைகள் கட்டுப்படியாகாமல் நிலத்தை விற்றுக்கடனை அடைக்கும் விவசாயிகள் ஒரு கட்டத்தில் தொழிலைக் கைவிட வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்படுகிறார்கள். அடிமட்டத்து மக்கள் ரொட்டித்துண்டுக்கு அலையும் பைரவர்களாவார்கள்.
மேலைநாடுகள் விவசாயத்துக்கு மானியம் வழங்க அவரவர் நாட்டு விவசாயிகளையும் விவசாயத்தையும் காப்பாற்றுவதுடன், உணவு உற்பத்தியில் தன்னிறைவும் ஏற்றுமதிக்கான உபரி உற்பத்தியும் இருக்கும்படி பார்த்துக்கொள்கின்றன. இந்தியா போன்ற நாடுகள் உணவுப் பற்றாக்குறை நாடுகளாகும்போது அந்த மேலை நாடுகளை எதிர்பார்த்து வாழ வேண்டிய அபாயம் ஏற்படும்.
அடுத்த 50 வருடத்தில் நமது உணவுத்தேவை 75 சதவீதம் உயரும். உணவு உற்பத்தியைப் பாதிக்காத அளவில் உயிர் எரிபொருள் உற்பத்தியை உயர்த்துவதுதான காலத்தின் கட்டாயம். இதை முறையாக திட்டமிட்டு நமது அரசு செய்யத் தவறினால் அடுத்த வேளைச் சோறுக்கு அந்நிய நாட்டுக் கப்பலை எதிர்நோக்கும் அவல நிலைக்குத் தள்ளப்படுவோம்.
———————————————————————————————
பசுமை இல்ல வாயுக்கள்: புகாருக்கு இந்தியா பதில்
நியூயார்க், ஆக. 3: காற்று மண்டலத்தை மாசுபடுத்தும் பசுமை இல்ல வாயுக்களை அதிகம் வெளியிடும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்ற வளர்ந்த நாடுகளின் குற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளது.
பசுமை இல்ல வாயுக்களால் (கார்பன் டை ஆக்ûஸடு, நைட்ரஸ் ஆக்ûஸடு, மீத்தேன்) தட்பவெப்ப நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து விவாதிக்க ஐக்கிய நாட்டு பொதுசபையின் சிறப்புக் கூட்டம் வியாழக்கிழமை கூட்டப்பட்டது. அதில் பங்கேற்ற ஐநாவுக்கான இந்தியத் தூதர் நிருபமா சென், இந்தியா மீதான வளர்ந்த நாடுகளின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தார்.
ஐநா சபையில் மேலும் அவர் பேசியது:
தற்போது காற்றுமண்டலத்தில் நிலைகொண்டுள்ள பசுமை இல்ல வாயுக்களும், அதனால் தட்பவெப்பநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றமும் கடந்த ஓர் நூற்றாண்டில் வளர்ந்த நாடுகளால் உமிழப்பட்ட பசுமை இல்ல வாயுக்களின் விளைவே ஆகும்.
மறுக்கவில்லை:
அதேவேளை, பசுமை இல்ல வாயுக்களை இந்தியா வெளியிடவே இல்லை என்று கூறவில்லை. பசுமை இல்ல வாயுக்களை அதிகமாக உமிழும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதைத்தான் மறுக்கிறோம். இந்தியாவில் 17 சதவீத மக்கள்தான் பசுமை இல்ல வாயுக்கள் உருவாவதற்கு காரணமாக உள்ளனர்.
காற்று மண்டலத்தில் நிலைகொண்டுள்ள பசுமை இல்ல வாயுக்களின் மொத்த அளவில் 4 சதவீதத்திற்குதான் இந்தியா பொறுப்பாகும். இந்த அளவையும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்துள்ளது. இதனால் தொழிற்சாலைகள் அதிகரித்து அதற்குத் தேவையான எரிபொருள் அளவும் அதிகரித்துள்ளது.
இருப்பினும், இவற்றில் இருந்து வெளியேறும் கழிவுகளால் காற்று மண்டலம் மாசுபடக்கூடாது என்பதில் இந்தியா கவனமாக உள்ளது. இந்தியாவில் பெட்ரோலியம், டீசல் உள்ளிட்ட மரபுசார் எரிபொருள்கள்தான் அதிகம் பயன்பாட்டில் உள்ளன.
இந்த எரிபொருள்கள் எரிந்து கழிவாக வெளியேறும் போது காற்று மண்டலத்தை சீர்கெடுப்பவையாக உள்ளன. இதனால் இவற்றிற்கு மாற்று எரிபொருள்களை கண்டுபிடிப்பதிலும் இந்தியா தீவிரம் காட்டி வருகிறது.
வளர்ந்த நாடுகள் முன்னிலை:
பசுமை இல்ல வாயுக்களை வெளியிடுவதில் வளர்ந்த நாடுகள்தான் முன்னிலை வகிக்கின்றன. இந்த விஷயத்தில் வளர்ந்த நாடுகளோடு வளரும் நாடுகளை எந்தவிதத்திலும் ஒப்புமைபடுத்தக் கூடாது என்பதை எங்கள் நாட்டு பிரதமர் மன்மோகன் சிங் ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளார்.
இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண அறிவியல் ரீதியான அணுகுமுறையை கையாள்வது அவசியம். பசுமை இல்ல வாயுக்களின் அறிகுறிகள் என்ன என்பதை விவாதிப்பதை விட்டு, அது உருவாவதற்கு காரணம் என்ன என்றும், அதை தடுப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும்.
இந்த பிரச்னைக்குத் தீர்வு காணும் ஒரு வழியாக வளர்ந்த நாடுகள் தங்களது தொழில்நுட்பத்தை வளரும் நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்றார் நிருபமா சென். ஐநா சபையின் சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பாகிஸ்தான் சுற்றுச்சூழல் அமைச்சர் முக்டூம் பைசல் ஹாயத், பசுமை இல்ல வாயுக்களை கட்டுப்படுத்தும் பொறுப்பு “கியோடோ புரோட்டோகால்’ ஒப்பந்தத்தின் படி வளர்ந்த நாடுகளுக்கு உண்டு என்றார்.
Sathia said
தெளிவான கருத்து. இதல்லாம் யோசித்தால் கவலை வருகிறது. ஆனால் பணமா அடுத்த் தலைமுறையான்னு கேள்வி கேட்டா எல்லாரும் பணம்தான்னு முடிவுபண்ணிவிடகிறார்கள் போல.
Arunagiri: Quotable quotes - Alternates on Global Warming « Snap Judgment said
[…] Global Warming – Alternate Perspectives due to Farming Shortage Crisis :: உயிர் எரிசக்தி மாயை-ஓர் அபாயம்! – ஆர்.எஸ்.நாராயணன் […]