Election Festivals – The Price of Democracy
Posted by Snapjudge மேல் ஜூன் 19, 2007
தேர்தல் திருவிழாக்கள்
இந்தியாவில் தேர்தல் என்பது திருவிழாபோல. எப்படி திருவிழாவுக்குப் பணம் கணக்குவழக்கில்லாமல் செலவழிக்கப்படுமோ, எப்படி திருவிழாவை முன்னிட்டு ஒருசிலர் பெரிய அளவில் லாபம் சம்பாதிப்பார்களோ, எப்படி திருவிழாவை முன்னிட்டு ஊரெல்லாம் அலங்கரிக்கப்படுமோ அப்படித்தான் தேர்தலும்.
திருவிழாவில் கடவுள் பெயரால் எல்லா ஆர்ப்பாட்டங்களும் நடக்கும். திருவிழா முடிந்தால் கடவுளை மறந்து விடுவார்கள் லாபம் சம்பாதித்த வியாபாரிகள். அதேபோலத்தான் தேர்தலின்போது, வாக்காளர்களை முன்னிறுத்தி செய்யப்படும் பிரசாரங்கள் ஒருசிலருக்கு வருமானத்தையும் யாராவது ஒருவருக்குப் பதவியையும் கொடுப்பதுடன் முடிந்துவிடும். அதன் பிறகு வாக்காளருக்கும் வேட்பாளருக்கும் உள்ள உறவு அடுத்த தேர்தலின்போதுதான்.
மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் களைகட்டத் தொடங்கிவிட்டது. விழாக்கோலம் பூண்டிருக்கிறது மதுரை மாநகர் என்று பத்திரிகைகள் வர்ணிக்கின்றன. தொகுதியில் பணமழை பெய்கிறது என்று கேள்வி. வாக்காளர்களுக்குப் பண விநியோகம் செய்வதாகத் திமுகவும் அதிமுகவும் பரஸ்பரம் ஒருவரைப் பற்றி மற்றவர் குற்றம்சாட்டுகிறார்கள். இருவருக்குமே இந்த விஷயத்தில் சமபங்கு இருக்கும் போலிருக்கிறது.
1952-ல் நடந்த முதல் தேர்தலுக்கான செலவு வெறும் பத்தரைக் கோடி ரூபாய்தான்.
கடந்த 2004 நாடாளுமன்றத் தேர்தலுக்கான செலவு எவ்வளவு தெரியுமா?
1,300 கோடி ரூபாய்.
அதுவும், கடந்த இருபது ஆண்டுகளில் தேர்தலுக்கான செலவு பத்து மடங்கு அதிகரித்திருப்பதாகத் தேர்தல் கமிஷனின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த 1,300 கோடி ரூபாய் என்பது அரசின் நிர்வாகச் செலவு. இது அல்லாமல், வேட்பாளர்கள், கட்சிகள் மற்றும் கட்சி அனுதாபிகள் செலவழிக்கும் தொகையைக் கூட்டிப் பார்த்தால் பல்லாயிரம் கோடி ரூபாய் புழக்கத்தில் விடப்பட்டிருக்கும். அரசியல்வாதிகள் சேர்த்து வைத்திருக்கும் கறுப்புப் பணம் தேர்தலை முன்னிட்டு மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது என்கிற வகையில் வேண்டுமானால் சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்.
தேர்தல் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும்; சிக்கனமாகத் தேர்தலை நடத்த வேண்டும்; பணமில்லாத, பொதுநல சேவையில் அக்கறையுள்ள வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் போட்டியிட்டு வெற்றி பெறும் சூழ்நிலை ஏற்பட வேண்டும் – இதுபோன்ற கோரிக்கைகளைக் குறிவைத்து பத்திரிகைத் தலையங்கங்களும் கருத்தரங்குகளும் குரலெழுப்பியதன் விளைவாக, நல்ல பல மாற்றங்களைத் தேர்தல் கமிஷன் நடைமுறைப்படுத்தியிருக்கிறது.
வேட்பாளர்களைப் பற்றிய விவரங்கள் வாக்காளர்களுக்குத் தெரிய வேண்டும் என்கிற நீதிமன்றத் தீர்ப்பு, தேர்தல் கமிஷனுக்குக் கிடைத்த வஜ்ராயுதம். அதை முனைமழுங்கச் செய்யும் முயற்சிகள் பயனற்றுப் போயின என்றுதான் சொல்ல வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் என்றால் 25 லட்சம் ரூபாயும், சட்டமன்றத் தேர்தல் என்றால் 10 லட்சம் ரூபாயும்தான் ஒரு தனிப்பட்ட வேட்பாளர் செலவு செய்யலாம் என்கிற வரன்முறையையும் தேர்தல் கமிஷன் விதித்திருக்கிறது.
பத்து லட்சம்தான் செலவு செய்யலாம் என்கிற விதிமுறைப்படி நடந்தால் எந்தவொரு வேட்பாளரும் பஞ்சாயத்துத் தேர்தலில்கூட போட்டிபோட முடியாது என்பதுதான் யதார்த்த நிலைமை. எந்தவித சமூகசேவையும் செய்யாத, தொகுதிக்கே அறிமுகமில்லாத நபர்களை எல்லாம் தலைமைக்கு விசுவாசிகள் என்கிற ஒரே காரணத்துக்காக அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களாக அறிமுகப்படுத்தும்போது, அவர்களை வாக்காளர்களுக்கு அறிமுகப்படுத்த இந்த 10 லட்ச ரூபாய் எப்படி போதுமானதாக இருக்கும்?
வெளிப்படையான செலவுகள் செய்தால்தானே தேர்தல் கமிஷனின் வரன்முறையை மீறியதாக அமையும். நேராக வாக்காளர்களிடம் பேரம் பேசிவிட்டால்? கறுப்புப் பணத்தைப் புழக்கத்தில்விட வாய்ப்புக் கிடைக்கிறது என்பது “போனஸ்’ நன்மை. இதன் வெளிப்பாடுதான் மதுரை மேற்குத் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் காணப்படுவதாகச் சொல்லும் “பணமழை’. பணபலமற்றவர்கள் தேர்தலில் நிற்க வழியே இல்லையா? இல்லை. அப்படியொரு சூழ்நிலையை உருவாக்க நமது அரசியல்வாதிகளுக்கு மனமில்லையா?
1,300 கோடி ரூபாய் செலவழித்து ஜனநாயகத்தைக் காப்பாற்றுகிறோம். சந்தோஷம்! முறையான ஜனநாயகமாகச் செயல்படுகிறோமா? சந்தேகம்!!
மறுமொழியொன்றை இடுங்கள்