Education: Master of Arts in Dance (Interview & Introduction)
Posted by Snapjudge மேல் ஜூன் 19, 2007
கல்வி: எம்.ஏ.நாட்டியா!
அஞ்சலி
தமிழகத்தில் நாட்டியக் கலைக்குப் பட்ட மேற்படிப்பு பயிற்றுவிக்கும் ஒரே கல்லூரி என்ற சிறப்பு அடையாறு ஜானகி- எம்.ஜி.ஆர். கலை அறிவியல் கல்லூரிக்கு மட்டுமே உண்டு. எம்.ஏ. நாட்டியா என்ற அந்த ஐந்தாண்டு படிப்பின் துறைத்தலைவராக இருப்பவர் ராஜஸ்ரீ வாசுதேவன். அவரைச் சந்தித்தோம்.
“”இந்த நாட்டியப் படிப்பில் நடனம், இசை, நாடகம் மற்றும் யோகா முக்கியப் பாடங்களாகப் போதிக்கப்படுகின்றன. வரலாறு, தத்துவம், இலக்கியம் ஆகியவை துணைப்பாடங்களாக உள்ளன. உதாரணத்துக்கு சிலப்பதிகாரத்தில் நாட்டியம், இசை பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ள பகுதிகளை இலக்கியப் பாடங்களாக வைத்திருக்கிறோம். அதே போல தொல்காப்பியத்தில் பொருளதிகாரம் கற்பிக்கிறோம். அதில் மெய்ப்பாடு பகுதி நவரசங்களையும் சொல்வதாக இருக்கிறது. வரலாறை எடுத்துக் கொண்டால் சோழ, சேர, பாண்டிய, பல்லவ, விஜயநகர கலைநுட்பங்களைச் சொல்லித் தருகிறோம். தத்துவப் பிரிவில் சைவ சித்தாந்தம், வேதகாலம் ஆகியவற்றில் மிளிரும் கலாபூர்வமான தத்துவக் கோட்பாடுகளைக் கற்பிக்கிறோம். நாட்டிய நாடகங்கள் குறித்த வகுப்புகளும் இருப்பதால் சிறந்த நடிகர்களின் வீடியோ கிளிப்பிங்க்ஸ் காட்சியின் மூலமாகவும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
அனிதாரத்னம் போன்றோர் அவர்கள் நடத்தும் நாட்டிய நிகழ்ச்சிகளுக்கு அழைப்பார்கள். அது எங்கள் மாணவிகளுக்குச் சிறந்த நேரடி பயிற்சி அனுபவம். இம் மாதிரி நாட்டிய நிகழ்ச்சிகளுக்குச் சென்றுவரும் மாணவர்கள் நிகழ்ச்சியைப் பற்றிய விமர்சனம் எழுதித் தரவேண்டும். அது மாணவர்களின் இன்டர்னல் மதிப்பெண் பட்டியலில் சேர்க்கப்படும்.
நாட்டுப்புறக் கலைகளுக்கும் இதில் முக்கியத்துவம் தரப்படுகிறது. தப்பாட்டம் போன்ற கலைகளும் பயிற்றுவிக்கிறோம்.
எம்.ஏ. படிப்பில் நிகழ்ச்சியை நடத்த தேவையான அரங்க ஏற்பாடுகள், லைட்ஸ், ஆடியோ பற்றியும் பாடங்கள் உள்ளன. இப்போதே எங்கள் கல்லூரி மாணவிகளுக்கு டி.வி., ரேடியோ நிகழ்ச்சிகளில் பங்கு பெற அழைப்புகள் வருவது எங்களுக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம். இக் கலைத்துறைப் படிப்புக்கு வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. வெளிநாட்டில் பல கல்லூரிகள் எங்கள் மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கவும் தயாராக இருக்கின்றன” என்கிறார் ராஜஸ்ரீ.
இப் படிப்புக்குச் சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஒப்புதல் வாங்கி நடைமுறைப்படுத்தியவர் லதா ராஜேந்திரன். எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளியின் முதல்வராகவும் இக் கல்லூரியின் தாளாளராகவும் செயல்பட்டுவரும் அவரிடம் மேலும் விவரங்களுக்காக அணுகினோம்.
* நாட்டியத்துக்காக இப்படி ஒரு பட்ட மேற்படிப்பை தொடங்க வேண்டும் என்ற எண்ணம் எப்படித் தோன்றியது?
நான் பத்மாசுப்ரமணியத்தின் நாட்டிய மாணவி. கலாஷேத்ராவில் டிப்ளமோ பயிற்சி நடப்பதுபோல் பட்டப்படிப்பை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டோம். இதை ஐந்தாண்டு இன்டகரேட்டட் பட்ட மேற்படிப்பாக நடத்துவதற்கான முன்வடிவை பத்மாசுப்ரமணியம் உள்ளிட்ட நாட்டியக் கலைஞர்களிடம் விவாதித்தோம். சென்னை பல்கலைக் கழகத்தின் இசைத்துறை தலைவர் ப்ரமிளா குருமூர்த்தியின் ஆலோசனையின் பேரில் சிலபûஸ செழுமைப்படுத்தினோம். இப்படியாக இந்த நாட்டியப் படிப்பு முழுவடிவம் பெற்றது.
* சிலபஸ் தயாரானவிதம் எப்படி?
சென்னை பல்கலைக் கழகத்தின் போர்ட் ஆஃப் ஸ்டடீஸ் மூலம் நாட்டியத் துறையைச் சேர்ந்தவர்கள், நாடகம் வரலாறு, தத்துவவியல், தமிழ்த்துறை, சமஸ்கிருதத்துறை அறிஞர்கள் இந்தக் குழுவில் இடம்பெற்றனர். ஐந்தாண்டு படிப்பாக இருந்தாலும் மூன்றாண்டு படிப்புக்குப் பிறகு பி.ஏ. இளங்கலையோடும் நிறுத்திக் கொள்ளலாம். ஆனால் வேறு துறையில் பி.ஏ. முடித்தவர்கள் நாட்டியாவில் முதுநிலை (எம்.ஏ.) தொடர முடியாது.
* எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளியில் படிப்பவர்களுக்கு ஜானகி- எம்.ஜி.ஆர். கல்லூரியில் வாய்ப்பளிக்கிறீர்களா?
கண்டிப்பாக. எங்கள் பள்ளி மட்டுமன்றி மற்ற வாய் பேச
முடியாத, காது கேளாத மாணவர்களுக்கும் வாய்ப்பு தருகிறோம். நாட்டியப் படிப்பில் அவர்கள் பயில்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. மற்ற துறைகளில் பயில்கிறார்கள். சென்ற ஆண்டில் மட்டும் இது போன்றவர்கள் 15 பேர் கல்லூரியில் சேர்ந்தனர்.
* உங்களுக்கும் மறைந்த எம்.ஜி.ஆருக்கும் என்ன உறவு?
என் கணவர் ராஜேந்திரன், ஜானகி அம்மாளின் தம்பி.
மறுமொழியொன்றை இடுங்கள்