Foreign Instituitional Investors – Lucrative opportunities in Emerging Indian markets & sectors
Posted by Snapjudge மேல் ஜூன் 13, 2007
முதலீடுகளுக்கு காத்திருக்கும் தொழில்கள்
எஸ். கோபாலகிருஷ்ணன்
சமீபகாலத்தில், பங்குச்சந்தை ஏறினாலும் இறங்கினாலும் எஃப்.ஐ.ஐ.கள்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.
இவர்கள் யார்? “ஃபாரின் இன்ஸ்டிட்யூஷனல் இன்வெஸ்ட்டார்ஸ்’ என்பதன் சுருக்கம்தான் ஊஐஐ. அதாவது அன்னிய முதலீட்டு நிறுவனங்கள்.
இந்த நிறுவன முதலீட்டாளர்கள் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தங்கள் நாட்டில் உள்ளவர்களிடமிருந்து பணம் திரட்டி, அதை எந்த நாட்டில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று தேடித் திரிபவர்கள்.
அந்தவகையில், இந்திய பங்குச் சந்தையில் கணிசமான தொகையை முதலீடு செய்திருக்கிறார்கள். இவர்கள் பங்குகளை வாங்கினால், விலை ஏறுகிறது. விற்றால் விலை குறைகிறது.
இந்த வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் முதன்முதலாக 1994-ல் தான் இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டன. அது முதல் 2005-ம் ஆண்டு இறுதிக்குள் ஒரு லட்சத்து, எழுபது ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை இந்தியாவில் கொண்டு வந்து கொட்டியிருக்கின்றன. இந்த பங்குகளின் சந்தை மதிப்பு மேலும் அதிகம் என்று சொல்லத் தேவையில்லை.
மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பெரிய 500 இந்திய நிறுவனங்களில் அன்னிய நாட்டைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனங்கள் வைத்திருக்கும் பங்குகளின் சந்தை மதிப்பு இரண்டு லட்சத்து எழுபதாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
இது மும்பை பங்குச் சந்தையின் பெரிய 500 நிறுவனப் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பில் 35 சதவீதம். அதாவது, மூன்றில் ஒரு பங்குக்கு மேல் எஃப்.ஐ.ஐ.களிடம் உள்ளது!
ஜனவரி 2007 வரையிலான கணக்குப்படி, 1059 அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன. எனினும், எச்.எஸ்.பி.சி. மார்கன் ஸ்டான்லி, மெரில் விஞ்ச், கோல்ட்மென் சாக்ஸ், சிட்டி வங்கி போன்றவை தான் முதலீடு செய்வதில் முன்னணியில் உள்ளன. உலகநாடுகள் என்று பார்த்தால், அமெரிக்கா முதலிடத்திலும், பிரிட்டன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.
இந்நிறுவனங்கள் ஏன் இந்தியாவைத் தேடி வருகின்றன? மேலை நாடுகளின் பொருளாதாரம் ஏற்கெனவே நன்கு வளர்ந்துவிட்டது. அதனால், அங்கு முதலீடு செய்யும் பணம், மேலும் பெரிய வளர்ச்சி காண முடியாது. அதேசமயம் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அந்த வாய்ப்பு உள்ளது. எனவே இங்கு வந்து கடை விரிக்கின்றன.
அவர்கள் முதலீடு செய்வது பங்குச் சந்தையில்தான். ஆகஸ்ட் 2005-ல் பங்குச் சந்தை குறியீடு எண் (சென்செக்ஸ்) 7816 ஆக இருந்தது. டிசம்பர் 2005-ல் 9020 புள்ளிகளாக உயர்ந்தது. இது 17 சதவீத வளர்ச்சி. மே 2006-ல் 12 ஆயிரம் என்னும் மகத்தான உயரத்தை எட்டியது. இப்போது – அதாவது ஓர் ஆண்டில் – 14,500க்குப் பக்கத்தில் மேலும் கீழும் நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த வெற்றிக்கதை தொடர்ந்தால் அந்நிறுவனங்கள் இங்கு நிலைகொண்டிருக்கும். தொடராதபட்சத்தில், “”அற்ற குளத்து அருநீர் பறவை” போல் பறந்து போய்விடும். ஆக, இந்த முதலீடுகளால், நம் நாட்டு தொழில்களுக்குக் கிடைத்தது என்ன? எத்தனை ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைத்தது?
இது ஒருபுறம் இருக்க, இன்னொருபுறம், வேறு ஒரு தளத்தில் அன்னிய நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இந்தியாவில் ஏராளமான அன்னிய நேரடி முதலீடுகள் செய்கிறார்கள். சுருக்கமாக எஃப்.டி.ஐ. என்கிறோம். பல்வேறு தொழில் துறைகளில் நேரடியாக முதலீடு செய்கிறார்கள். இவர்கள் கதை என்ன?
அடுத்த 30 அல்லது 40 ஆண்டுகளில், ஆதஐஇ எனப்படும் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் உலக அளவில் மிகப்பெரிய நாடுகளாக வளர்ந்து விடும் என்று பொருளாதார நிபுணர்கள் ஆய்வு செய்துள்ளனர். அதன் அடிப்படையில், அன்னிய நேரடி முதலீடுகள் இந்தியாவின் பல்வேறு தொழில்களுக்கு வரத் தொடங்கியுள்ளன.
அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு சில நியதிகளையும், உச்ச வரம்புகளையும் விதித்துள்ளது. உதாரணமாக வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்களில் அதிகபட்சம் இவ்வளவு சதவீதம்தான் முதலீடு செய்யலாம் என்று உள்ளது. சில துறைகளில் அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுவதில்லை.
கடந்த 16 ஆண்டுகளாக, அதாவது பொருளாதார சீர்திருத்தம் அறிமுகமானது முதல், அன்னிய நேரடி முதலீடு வரத் தொடங்கியுள்ளது. நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில், எந்தத் தொழிலில் முதலீடு வந்தால் நமது தொழில் வளம் பெறுமோ, நமக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிட்டுமோ அந்தத் துறைகளில் அன்னிய முதலீடுகள் கணிசமான அளவில் வருவதில்லை.
மாறாக, எந்தத் துறைகளில் முதலீடு செய்தால், உள்நாட்டில் விற்பனை அல்லது வெளிநாட்டுக்கு ஏற்றுமதி பெருகி உடனடி லாபம் காண முடியுமோ அந்தத் துறைகளில்தான் அன்னிய நேரடி முதலீடு வருகிறது.
உதாரணமாக, மோட்டார் வாகனத் தொழில், தகவல் தொழில் நுட்பம், தொலைத்தொடர்பு ஆகியவை. 1991 முதல் 2007 மார்ச் வரை இந்தியா பெற்றுள்ள அன்னிய நேரடி முதலீடு 55 பில்லியன் டாலர். (ஒரு பில்லியன் என்பது 100 கோடி). இதில் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 15 பில்லியன் டாலர் இந்தியாவுக்குள் எப்.டி.ஐ. ஆக வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மட்டுமல்ல, பெருமிதம் கொள்ளத்தக்கதும்கூட.
ஆனால், கவலையளிப்பது என்னவெனில், இந்தியாவின் பாரம்பரியத் தொழில்களில் ஒன்றான தோல் பதனிடுதல் மற்றும் உற்பத்தித் தொழிலுக்கு இத்தனை ஆண்டுகளில் கிடைத்த அன்னிய நேரடி முதலீடு வெறும் ஆறு கோடி டாலர்தான். இது ஒட்டுமொத்த அன்னிய நேரடி முதலீட்டில் 0.12 சதவீதம்தான். இந்த தோல் தொழிலை நம்பி 20 லட்சம் குடும்பங்கள் வாழ்கின்றன.
இந்தியாவின் இன்னொரு முக்கியமான பாரம்பரியத் தொழில் ஜவுளி. எட்டு கோடியே 50 லட்சம் தொழிலாளர்கள் இத் தொழிலை நம்பி உள்ளனர். விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிகபட்ச வேலைவாய்ப்பு வழங்கும் தொழில் ஜவுளியே. இந்த மாபெரும் தொழில் ஈர்த்த அன்னிய நேரடி முதலீடு 57 கோடியே 50 லட்சம் டாலர்தான். அதாவது மொத்த அன்னிய நேரடி முதலீட்டில் 1.22 சதவீதமே.
சரி, அப்படியானால் இதுவரை வந்துள்ள அன்னிய முதலீடுகள் எங்கே போகின்றன? மின்சாரக் கருவிகள் சார்ந்த தொழிலுக்கு 800 கோடி 27 லட்சம் டாலர்கள். அதாவது மொத்த முதலீட்டில் 15 சதவீதம்.
அடுத்து, தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட சேவைத்துறைக்கு 700 கோடி, 84 லட்சம் டாலர் (14 சதவீதம்); மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது தொலைத்தொடர்பு 3 கோடி, 89 லட்சம் டாலர். (7.12 சதவீதம்).
ஆக, தொழில் நுட்பத்துறையில் முன்னணியில் உள்ள துறைகளுக்கு மட்டுமே அன்னிய நேரடி முதலீடு கணிசமாகக் கிடைத்துள்ளது. சீனாவும், தைவானும் வேலைவாய்ப்புகளை வாரி வழங்கும் துறைகளான ஜவுளி போன்றவற்றில் அதிக முதலீட்டின் மூலம் குறைந்த விலையில் உற்பத்தி செய்து, சந்தையில் போட்டியிட்டு இந்தியாவை ஓரம் கட்ட முடிகிறது.
இன்னொருபக்கம், வங்கதேசம் தங்கள் நாட்டில் ஊழியர்களுக்கான ஊதியம் மிகக் குறைவு என்று பறைசாற்றி, இதே ஜவுளி மற்றும் தோல்துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டைத் திரட்டியுள்ளது.
இந்நிலையில் கோட்டா முறை ஒழிந்த பின்னரும் ஜவுளி ஏற்றுமதியில் இந்தியா தனது நியாயமான பங்கைப் பெற இயலவில்லை. இந்தியாவின் இதர துறைகளின் ஏற்றுமதியுடன் ஒப்பிடும்போது ஜவுளித்துறை ஏற்றுமதி குறைவே.
தற்போது ஜவுளித்துறையில் கிடைக்கும் உள்நாட்டு முதலீடுகள் கூட “சிறப்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி’ என்னும் மத்திய அரசின் திட்டத்தின் வாயிலாகவே என்றால் மிகை ஆகாது.
இந்நிலையில், நடப்பாண்டில் அன்னிய நேரடி முதலீட்டைத் திரட்டுவதற்கான இலக்கு 30 பில்லியன் டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், இலக்கை கடந்த ஆண்டைப்போல் இரண்டு மடங்காக உயர்த்தினால் மட்டும் போதாது.
கணிசமான அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய ஜவுளி மற்றும் தோல் தொழில்களில் கூடுதல் அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்க்க சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் அதிகபட்ச முனைப்பு காட்டி, முதலீடுகளுக்காக காத்திருக்கும் – தற்போது புறக்கணிக்கப்பட்டுள்ள – இத் துறைகளுக்கு புத்துயிர் அளிப்பது அவசியம் மட்டுமல்ல; அவசரமும்கூட.
(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது
மேலாளர்.)
This entry was posted on ஜூன் 13, 2007 இல் 10:31 பிப and is filed under Analysis, Auto, Backgrounders, Bonds, Brazil, BRIC, BSE, Bus, Cars, China, Defaltion, Deflation, Diversify, ECE, Economy, EEE, Electrical, Electronics, Emerging, Employment, Exchanges, Exports, FDI, FEMA, FERA, FII, Finance, Funds, GDP, Globalization, Growth, Imports, Index, Industry, Inflation, InfoTech, Instrumentation, investments, job, Leather, Luxury, Manufacturing, markets, Metro, MNC, Model, Motors, NIFTY, NSE, Op-Ed, Opportunities, Options, Outsourcing, pension, Primers, Recession, Retirement, revenue, Risk, Russia, sectors, service, Shares, Stagflation, Stats, Stocks, Taiwan, Tech, Technology, Telecom, Textiles, Trucks. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, அல்லது trackback from your own site.
மறுமொழியொன்றை இடுங்கள்