Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

TTD vs Himalaya Sampadha Samratchana Samithi

Posted by Snapjudge மேல் ஜூன் 12, 2007

திருப்பதி தேவஸ்தான நிலத்துக்கு ஆபத்து!

ஹைதராபாத், ஜூன் 13: திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமாக ரிஷிகேசத்தில் உள்ள நிலங்களைக் கைப்பற்ற நில ஆக்கிரமிப்பாளர்களும், “”ரியல்-எஸ்டேட் மாஃபியா”க்களும் களத்தில் இறங்கியுள்ளனர்.

70 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிலங்களைக் காப்பாற்ற, இவற்றுக்கு வேலி அமைப்பது என்ற முடிவை தேவஸ்தானம் எடுத்திருக்கிறது.

ஆஸ்ரம வரலாறு:

ஸ்வாமி சச்சிதானந்த சரஸ்வதி என்பவர் ஆந்திர ஆஸ்ரமத்தை 1942-ம் ஆண்டு ரிஷிகேசத்தில் தொடங்கினார். 25 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த ஆஸ்ரமத்தை திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் பொறுப்பில் ஒப்படைத்தார். சமீபத்தில் அந்த இடங்கள் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் பெயரில் மாற்றப்பட்டன.

இந் நிலையில், ஆந்திர ஆஸ்ரமத்தில் உள்ள நிலங்களையும் கட்டடங்களையும் மேம்படுத்தியும் புதிதாக வணிக வளாகங்கள் கட்டி வாடகைக்கு விடப்போவதாகவும் உள்ளூரைச் சேர்ந்த சில நிறுவனங்கள் சமீபகாலமாக விளம்பரப்படுத்த ஆரம்பித்தன.

தேவஸ்தானத்துக்கு நிதிச்சுமை இல்லாமல் நன்கொடைகளைத் திரட்டி இப் பணிகளைச் செய்யப்போவதாகவும் அவை கூற ஆரம்பித்தன. இப்போது இந்த நிலங்களுக்கும் கட்டடங்களுக்கும் பொறுப்பாளராக உதவி செயல் அதிகாரி ஒருவர் தேவஸ்தானத்தால் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

சமிதியின் விஷமம்:

ரிஷிகேசத்தை மையமாகக் கொண்டு செயல்படும், “”இமாலய சம்பாத சம்ரட்சண சமிதி” என்ற அமைப்பு திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு நிதிச்சுமை ஏற்படாமல் 200 கடைகளை அந்த ஆஸ்ரமத்தில் கட்டித்தர விரும்புவதாக 2004 செப்டம்பரில் தெரிவித்தது.

வியப்பைத் தரும் வகையில், திருமலை-திருப்பதி தேவஸ்தான நிர்வாகக்குழுவில் முன்னர் பணியாற்றிய உறுப்பினர் ஒருவர் அந்த யோசனையைப் பரிசீலிக்கலாம் என்று தேவஸ்தானத்துக்குப் பரிந்துரை செய்தார்.

தேவஸ்தானத்திடமிருந்து ஒப்புதல் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைக்கூட அவர் அந்த சமிதியுடன் செய்துகொண்டார்.

ஊழல் வாடை:

திருமலை-திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரியான ஏ.பி.வி.என். சர்மா இதில் ஏதோ ஊழல் வாடை தெரிகிறதே என்று சந்தேகப்பட்டார். இணை நிர்வாக அதிகாரி அந்தஸ்தில் உள்ள உயர் அதிகாரியை ரிஷிகேசத்துக்கு உடனே சென்று விசாரித்து நேரில் வந்து அறிக்கை தருமாறு பணித்தார். அவரும் அவ்விதமே விசாரணை நடத்திவிட்டு வந்து அறிக்கை தந்தார்.

“இமாலய சம்பாத சம்ரட்சண சமிதி’ என்ற அமைப்புக்கு நிதி ஆதாரம் ஏதும் கிடையாது; தேவஸ்தான அதிகாரிகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு அதை வெளியில் காட்டி நிதி வசூலிக்க திட்டமிட்டிருப்பதைக் கண்டுபிடித்தார். இதனால் தேவஸ்தானத்துக்குக் கெட்ட பெயர் வரும் என்பதையும் உணர்ந்து கொண்டார். தேவஸ்தானம் வசம் உள்ள நிலங்களைச் சுற்றி உடனே வேலி அமைக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார்.

இதற்காக ஒப்பந்தப்புள்ளிகளைக் கோர தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அத்துடன் ஆஸ்ரமத்துக்குப் பின்னால் உள்ள காலி இடத்தில் தேவஸ்தான ஊழியர்களுக்குக் குடியிருப்பு வீடுகளைக் கட்டித்தரவும் உத்தேசித்திருக்கிறது.

இந்த நிலங்களை தேவஸ்தானத்தின் செலவிலேயே மேம்படுத்துவதா அல்லது பொது ஏலம் மூலம் நிலங்களை விற்றுவிடுவதா என்ற முடிவை தேவஸ்தானம் பிறகு மேற்கொள்ளும்.

வரவு எட்டணா, செலவு பத்தணா?

ரிஷிகேசத்தில் உள்ள ஆந்திர ஆஸ்ரமத்தின் ஆண்டு வரவு ரூ.5.73 லட்சம்தான். ஆனால் செலவு ரூ.52.32 லட்சம்! எனவே இதன் வருவாயைப் பெருக்கும் வழிகளை யோசிக்குமாறு தேவஸ்தான நிர்வாக அதிகாரிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான போர்டு பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: