Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Health Education – Teaching about adulthood, sex & biology to Students

Posted by Snapjudge மேல் ஜூன் 12, 2007

அலசல்: பட்டாம்பூச்சிகளின் மேல் கல்லை வைக்கலாமா?

ரவிக்குமார்

பாரம்பரியத்திலும் கலாசாரப் பெருமையிலும் ஊறிய இந்தியாவில் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 5.7 மில்லியன் என அலறுகிறது ஒரு புள்ளிவிவரம்.

பெண் மற்றும் குழந்தைகளின் நலனுக்கான இந்திய அமைப்பு இந்தியாவில் 53 சதவிதம் குழந்தைகள் பால் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாகிறார்கள் என்ற அறிவிப்பை கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடுகிறது.

இரண்டு மாதங்களுக்கு முன்னால் இந்தியாவையே கலக்கியது ஒரு மல்ட்டி மீடியா மெசேஜ் (எம்.எம்.எஸ்). எட்டாவது படிக்கும் மாணவன் அவனுடைய சக மாணவியிடம் நடத்தியிருக்கும் பால் ரீதியான குறும்புகளை அவனே செல்போனில் படம் எடுத்த காட்சிகள்தான் அவை.

மேற்சொன்ன கொடுமைகளிலிருந்து எதிர்கால இந்தியாவின் இளைய தலைமுறையைக் காப்பாற்றுவதற்கு என்ன வழி? என்று யோசித்த அரசாங்கம், இந்த ஆண்டு முதல் யுனிசெஃப் அமைப்பால் வடிவமைக்கப்பட்ட (ஏ.இ.பி.) வளர்இளம் பருவத்தினருக்கான கல்வித் திட்டத்தை பள்ளிகளில் அறிமுகப்படுத்தவுள்ளது. கர்நாடகா, மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்தத் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்தக் கல்வித் திட்டத்தில் இருக்கும் சாதக, பாதக விஷயங்களைப் பற்றி சிலரிடம் கேட்டோம்.

தமிழகம் முழுவதும் இருக்கும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளிடம், பால் ரீதியான விழிப்புணர்வை வழங்கி வரும் சென்னையைச் சேர்ந்த “துளிர்’ அமைப்பின் இயக்குனர் வித்யா ரெட்டி, “”வளர் இளம் பருவத்தினருக்கான கல்வித் திட்டத்தை அவர்களிடம் ஆலோசிக்காமல் வடிவமைக்கக் கூடாது. இன்னொரு விஷயம், இந்தக் கல்வித் திட்டத்தை குழந்தைகளின் பெற்றோர், கல்வியாளர்கள், தன்னார்வத் தொண்டர்கள், உளவியல் அறிஞர்கள் கொண்ட குழுவின் ஒப்புதலோடு ஏற்படுத்தியிருக்க வேண்டும். இந்தக் கல்வித் திட்டத்தைச் சாதாரணமாக மற்ற வகுப்புகளை எடுக்கும் ஆசிரியர்களைக் கொண்டு நடத்தக் கூடாது. அப்படிச் செய்தால் அது பத்தோடு, பதினோராவது வகுப்பாக முடிந்துவிடும்.” என்றார்.

“”நமக்கென்று ஒரு கலாசாரப் பின்னணி இருக்கிறது. அதன் அஸ்திவாரத்தையே ஆடவைக்கும் பல வேலைகளில் ஒன்றாகத்தான் இதையும் பார்க்கிறேன். வளர் இளம் பருவத்தினருக்கான இந்தக் கல்வித் திட்டத்தை பெற்றோர்களின் வழிகாட்டுதலோடுதான் கொண்டு வரவேண்டும். இல்லையென்றால் விபரீதமாகத்தான் போய் முடியும். முதலில் பெரியவர்களுக்கே பால் ரீதியான கல்வியில் பெரியதாகத் தெளிவு இல்லாதபோது, குழந்தைகளுக்கு அது மோசமான விளைவுகளைத்தான் ஏற்படுத்தும்” என்றார் சுயம் அறக்கட்டளையின் தாளாளரான உமா.

“”இருபது வருடங்களுக்கு முன்பெல்லாம் தொலைக்காட்சிப் பெட்டி ஒருசில வீடுகளில் தான் இருக்கும். இன்றைக்கு நிலைமை அப்படியில்லை. குடிதண்ணீருக்காக மக்கள் கஷ்டப்படும் கிராமங்களில் கூட வீட்டுக்கு வீடு பெரும்பாலும் டிவி இருக்கிறது. கூடவே கேபிள் கனெக்ஷனும். நாளுக்கு நாள் மீடியாவில் விதவிதமான திரைப்பாடல்கள் எந்தவிதமான சென்சாரும் இல்லாமல் அரைகுறை ஆடைகளுடன் அப்படியே ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. இதுபோதாததற்கு செல்போன், இன்டர்நெட்… என்று எத்தனையோ தகவல் தொடர்புச் சாதனங்கள். அதைப் பயன்படுத்தி எந்த மாதிரியான தகவல்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள் என்று நான் சொல்லத் தேவையில்லை. மீடியா இன்றைக்கு எல்லாவற்றையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. பத்து, இருபது வருடங்களுக்கு முன்பு நாம் பார்த்த சிறுவர்களின் அறிவுத் திறனுக்கும் தற்போதுள்ள சிறுவர்களின் அறிவுத் திறனுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. அவர்கள் படிக்கும் முறை, மிகவும் தாராளமாக அவர்களிடம் புழங்கும் செல்போன்கள் எல்லாமே அடுத்தகட்டத்துக்கு அவர்களை மிக அவசரமாகத் தூண்டுபவையாக இருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில் அவர்களுக்கு வளர் இளம் பருவத்தினருக்கான பால்ரீதியான விழிப்புணர்வுக் கல்வி அவசியம் என்றுதான் நினைக்கிறேன். இந்த பருவத்தின் வாயிலில் இருப்பவர்களுக்குத்தான் நிறைய குழப்பங்கள் இருக்கும். பால் ரீதியான அவர்களின் குழப்பங்களுக்குச் சரியான விளக்கங்களை அவர்களுக்கு பெற்றோர்களும் விளக்குவதற்கு முன்வரமாட்டார்கள். பருவ வயதை அடையும் பெண்ணுக்கு உடலில் ஏற்படும் மாறுபாடுகளை “இது இயல்பான ஒன்றுதான்’ என்று பெண்ணுக்கு எடுத்துச் சொல்வதற்கு யோசிக்கும் பெற்றோர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? பெண்களுக்கு இப்படி என்றால், ஆண் பிள்ளைகளுக்கும் உடலில் இயல்பான மாற்றங்கள் நடக்கும். இந்தச் சமயத்தில் பெற்றோர்களின் அனுசரனை இல்லாதபோது,

அவர்களுக்கு கேட்காமலேயே கிடைப்பது சக நண்பர்களிடம் கிடைக்கும் ஆலோசனைகள்தான். அவை பெரும்பாலும் தவறான அறிவுரைகளாகவே இருக்கும். முதலில் அவர்களின் உடலை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். நல்லவிதமான தொடுதல் என்பவை எது, கெட்டவிதமான தொடுதல் என்பவை எவை என்ற புரிதல்கள் எல்லாம்,இந்த வயதில் இருக்கும் குழந்தைகளுக்கு நிச்சயம் அறிவுறுத்தப்படவேண்டும். கலாசாரம், பாரம்பரியம் என்றெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு இந்த விஷயத்தை அணுகாமல், அடுத்த தலைமுறைக்கு இன்றைய சமூகத்தில் இருக்கும் ஆபத்துகளை எதார்த்தமான முறையில் நாம் சந்திக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறோம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.” என்றார் உளவியல்பூர்வமான ஆலோசனைகளை கிராமத்தில் இருக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கு அளித்துவரும் சி.ஆர். செலின்.

“”ஸ்டேட்-போர்டு, மெட்ரிகுலேஷன் போர்ட் என எல்லா வகையான கல்வி அமைப்பிலும் வளர் இளம் பருவத்தினருக்கான கல்வியை வழங்குவதில் தவறில்லை. இதனால் எண்ணற்ற கிராமப்புற மாணவர்களுக்கு பெரிதும் பயன் விளையும். பொதுவாக மேல்தட்டு மக்கள் பெருவாரியாகப் படிக்கும் பள்ளிகளில், வளர் இளம் பருவத்தில் இருக்கும் மாணவர்களுக்கு “கவுன்சலிங்’ கொடுப்பதற்கென்றே தனியாக வசதி செய்திருப்பார்கள். வளர் இளம் பருவத்தினருக்கான கல்வியை தகுந்த அறிதலுடன் அறிவியல் பூர்வமான புரிதல்களுடன் கற்றுக்கொடுப்பதற்கு ஆசிரியர்கள் ஆத்மார்த்தமான பங்களிப்பை அளிக்கவேண்டும். அதேநேரத்தில் எல்லா பள்ளிகளிலும் நிச்சயமாக “புகார் பெட்டி’ வைக்கப்படவேண்டும். அவை மாவட்ட கல்வி அதிகாரியின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும். கல்வித் துறையில் ஜனநாயகத்தின் வெளிப்பாடாகவே இதை வலியுறுத்துகிறோம்.” என்றார் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் செல்வா.

“”பட்டாம்பூச்சியின் மேல் கல்லை வைப்பது போன்ற செயல்தான் இது. நாகரிகத்தில் நம்மை விட முன்னேறிய நிலையில் இருக்கும் மகாராஷ்டிரம் மாநிலத்திலேயே இந்தச் செக்ஸ் கல்விக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கர்நாடகம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் எதிர்ப்பு இருக்கிறது. இந்தியா போன்ற நாடுகளுக்கு, அன்னிய நாடுகளின் இத்தகைய கல்வி முறைகள் தேவையே இல்லை. நம் வீடுகளிலேயே நாம் காலம்காலமாக கடைப்பிடிக்கும் ஒழுக்கமுறைகள் அப்படியேதான் இருக்கின்றன. இத்தகைய செக்ஸ் எஜுகேஷன்களால் தேவையில்லாத சந்தேகங்கள்தான் மாணவர்களிடேயே ஏற்படும். அப்படி பால் ரீதியான சந்தேகத்தை செக்ஸ் எஜுகேஷன் தெளிவுபடுத்துவதாகவே இருக்கட்டும். ஆறாவது முதல் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இது தேவையில்லாத தெளிவுதானே? குழந்தைகள் பால் ரீதியான கொடுமைகளுக்கு ஆளாகும் கொடுமையைக் காரணம் காட்டி செக்ஸ் எஜுகேஷனை ஆதரிக்க முடியாது. வெளிநாடுகளில் கூட இத்தகைய செக்ஸ் எஜுகேஷன் எதிர்மறையான விளைவுகளையே அளித்திருக்கிறது. இந்த கல்வித் திட்டத்துக்குப் பின், முறைகேடான பால் உறவுக்குப் பின் காலை வேளையில் கர்ப்பத் தடைக்காக தயாரிக்கப்பட்ட மாத்திரைகளின் விற்பனையும், அதையும் தாண்டி இளம் குழந்தைத் தாய்மார்களின் எண்ணிக்கையும்தான் செக்ஸ் எஜுகேஷனால் வெளிநாட்டிற்கு கிடைத்த பரிசு என்பது “ரெட் அலர்ட்’ என்னும் புத்தகத்தில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது.

மருத்துவ மாணவர்களுக்கே பதினெட்டு வயது ஆனவுடன்தான் அனாடமி வகுப்புகள் நடக்கின்றன. ஆறாம் வகுப்பிலேயே இதைத் தெரிந்து கொள்ளட்டும் என்பது எப்படிச் சரியாக இருக்கும்?” என்றார் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர் டாக்டர் தமிழிசை செüந்தரராசன்.

“”அடலசன்ட் எஜுகேஷன் புரோக்ராம் என்பது செக்ஸ் எஜுகேஷன் அல்ல என்பதை சி.பி.எஸ்.இ.-யின் அதிகாரப்பூர்வமான இணையத்தளத்திலேயே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இன்னமும் இதற்கான பாடத்திட்டங்கள் வரையறுக்கப்படவில்லை. இந்த ஆண்டே பள்ளிகளில் இந்தத் திட்டத்தை தொடங்குவார்களா என்றும் தெரியாது. அதற்குள் இவ்வளவு எதிர்ப்புகள்.” என்றார் டி.ஏ.வி. பள்ளியின் முதல்வரான டாக்டர் சதீஷ்.

– எந்தத் திட்டமாக இருந்தாலும் அதில் சாதகமான விஷயங்களும் பாதகமான விஷயங்களும் நிச்சயம் இருக்கும். அதிலிருக்கும் குறைகளைப் போக்கிவிட்டால் எல்லாத் திட்டங்களும் செயல்படுத்தப்படும் திட்டங்கள்தான்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: