Avoid the Identity Crisis for the Alternate Front – Support APJ Abdul Kalam
Posted by Snapjudge மேல் ஜூன் 9, 2007
யாரை ஆதரிக்”கலாம்’?
மூன்றாவது அணி என்று சொன்னாலே மூன்றாவதாக வரும் அணி என்று கேலி பேசும் அளவுக்கு அதன் நம்பகத்தன்மை குறைந்துவிட்டிருக்கிறது. 1989 மற்றும் 1996-ல் அமைந்த மூன்றாவது அணியின் தலைமையிலான ஆட்சிகள் அற்பாயுசுடன் முடிந்ததன் விளைவுதான் இந்த நம்பிக்கை இன்மைக்குக் காரணம்.
ஒருபுறம் காங்கிரஸ். மறுபுறம் பாரதிய ஜனதா கட்சி. இரண்டுமே தேசிய கட்சிகள் என்பது மட்டுமல்லாமல், பொருளாதாரக் கொள்கைகளைப் பொருத்தவரை அதிக மாற்றம் இல்லாத தன்மை. அதுமட்டுமல்ல, இந்தியாவின் பெருவாரியான மாநிலங்களில் இந்த இரண்டு கட்சிகளுக்குமே செல்வாக்குச் சரிவு ஏற்பட்டிருப்பதுடன், கட்சியின் அடிப்படை அமைப்புகளும் பலமாக இல்லாத நிலைமை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தனிப்பட்ட பலத்துடன் மத்தியில் ஆட்சி அமைக்க இந்த இரண்டு கட்சிகளாலும் முடியாது என்கிற நிலைமை.
மூன்றாவது அணி அமைவதற்கான சரியான சந்தர்ப்பம் இதுவாகத்தான் இருக்கும். அதுவும் இரண்டு பெரிய அரசியல் சக்திகளும் ஒரே மாதிரியான பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்றும்போது அதற்கு மாற்றாக ஒரு சக்தி இருப்பது என்பது காலத்தின் கட்டாயம். அதுவும், பொருளாதார சீர்திருத்தம், உலகமயமாக்கல், தாராளமயம் என்கிற பெயர்களில் விவசாயம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, அடித்தட்டு மக்களின் பிரச்னைகள் முக்கியம் இழக்கின்ற நிலை ஏற்படும்போது, மாற்றுப் பொருளாதாரக் கொள்கையுடைய மூன்றாவது அணியின் வளர்ச்சி உறுதி செய்யப்படும் வாய்ப்பு அதிகம்.
இவ்வளவு இருந்தும் மூன்றாவது அணி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாததன் காரணம் என்ன? முதலாவதாக, இந்த மூன்றாவது அணியில் பங்கு பெறும் சக்திகள் அனைத்துமே மாநிலக் கட்சிகள் என்பதால் அந்தந்த மாநிலங்களில் மட்டுமே செல்வாக்கு உடைய சக்திகளாக இருக்கின்றன. இந்த மாநிலக் கட்சிகளின் எந்தவொரு தலைவருக்கும் தேசிய அளவில் செல்வாக்கு இல்லை என்பது மூன்றாவது அணியின் மிகப் பெரிய பலவீனம்.
இந்த மூன்றாவது அணியில் பங்குபெறும் கட்சிகளைப் பொருத்தவரை அடிப்படையில் காங்கிரஸ் எதிர்ப்பு என்பது அவற்றின் ஆதாரமாக இருப்பது இன்னொரு பலவீனம். தெலுங்கு தேசம், இந்திய தேசிய லோக்தளம், அசாம் கண பரிஷத் ஆகிய கட்சிகளைப் பொருத்தவரை பாரதிய ஜனதாவைவிட காங்கிரஸ்தான் பிரதான எதிர்க்கட்சி. அடுத்த நாடாளுமன்றத்தில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைப்பதில் இந்தக் கட்சிகளுக்கு எந்தவிதப் பிரச்னையும் இருக்காது என்பதுதான் யதார்த்த நிலைமை.
மூன்றாவது அணிக்கு எப்போதுமே இடதுசாரிக் கட்சிகளின் ரகசிய ஆதரவு உண்டு என்பது தெரிந்த விஷயம். மூன்றாவது அணி என்கிற பெயரில் ஏற்படும் பிராந்தியக் கட்சிகளின் கூட்டணியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் இந்தக் கட்சிகளின் ஆதரவுடன் பாரதிய ஜனதா ஆட்சி அமைக்காமல் பார்த்துக் கொள்வது என்பது இடதுசாரிக் கட்சிகளின் நோக்கமாக இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இடதுசாரி சிந்தனையிலான பொருளாதாரக் கொள்கையும் பாரதிய ஜனதாவுடன் கைகோர்த்துக் கொள்ள வேண்டிய அரசியல் நிர்பந்தமும் இந்த மூன்றாவது அணிக்கு இருப்பதுதான், இந்த அணியின் நம்பகத்தன்மைக்குச் சவாலாக இருக்கும் விஷயம்.
காங்கிரசுடன் கைகோர்த்துக் கொள்ளவும் முடியாமல், பாரதிய ஜனதாவுடன் உறவாடவும் முடியாமல் இருக்கும் இந்த மூன்றாவது அணி தன்னை முன்னிறுத்த, அடையாளம் காட்டிக்கொள்ள இப்போது ஒரு நல்ல வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
கருத்துக் கணிப்புகள் மற்றும் பத்திரிகைச் செய்திகள் மூலம் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு மக்களின் ஏகோபித்த ஆதரவு இருப்பது தெரிகிறது. அப்துல் கலாமே குடியரசுத் தலைவராகத் தொடர்வதற்குத் தனது ஆதரவை அறிவிப்பதன் மூலம், ஒரு மிகப்பெரிய அரசியல் திருப்பத்தை இந்த மூன்றாவது அணியால் ஏற்படுத்த முடியும். அதன் விளைவாக, மூன்றாவது அணி தன்னை ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக நிலைநிறுத்தும் சாத்தியமும் உண்டு.
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஏற்பட இருக்கும் அரசியல் மாற்றங்கள், மூன்றாவது அணிக்குச் சாதகமாக அமைய வேண்டுமானால், அந்த அணி குடியரசுத் தலைவர் தேர்தலில் யாரை ஆதரிக்கிறது என்பதைப் பொருத்துதான் அமையும். இந்த வாய்ப்பைத் தவறவிட்டால், மூன்றாவது அணி வழக்கம்போல மூன்றாவதாக வரும் அணியாகத்தான் தொடரும்!
—————————————————————————-
இழந்த பெருமையை மீட்க மூன்றாவது அணி!
நீரஜா செüத்ரி
உங்களது பிஎஸ்என்எல் செல்பேசியில் நாளைய பஞ்சாங்க குறிப்புகளை இன்றே பெற தினம் ஒரு ரூபாய் மட்டுமே!
எட்டு பிராந்தியக் கட்சிகள் சேர்ந்து ஹைதராபாதில் அமைத்துள்ள புதிய அணியை, “”அரசியல் வாழ்விழந்தவர்களின் கூட்டணி” என்று கிண்டலாகச் சிலர் அழைக்கின்றனர்.
ஒரு அணியைப் போன்ற “”மாயத் தோற்றம்”தான் இது என்று பாரதிய ஜனதா வர்ணித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியும் இதை “அணியாகவே’ கருதவில்லை.
தேர்தலில் தோற்ற முன்னாள் முதல்வர்கள் கூட்டு சேர்ந்து, இழந்த பெருமையை மீட்கவும், மீண்டும் ஆட்சிக்கு வரவும், மக்கள் மனதில் மீண்டும் இடம்பிடிக்கவும் மேற்கொண்டுள்ள அரசியல் உத்திதான் இது என்பதில் எவருக்குமே சந்தேகம் இல்லை. ஆனால், இந்த அணி சேர்ந்துள்ள நேரம்தான் முக்கியமானது.
நாட்டின் குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் யார் என்பதை இறுதி செய்யும் நேரத்தில் இந்த அணி உருவாகியிருக்கிறது. இந்த அணியைச் சேர்ந்த கட்சிகளிடம் மொத்த வாக்குகளில் 9 சதவீதம் இருக்கிறது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி (காங்கிரஸ் தலைமை), தேசிய ஜனநாயக கூட்டணி (பாரதிய ஜனதா தலைமை) ஆகிய இரு அணிகளிலிருந்தும் விலகி, தனி வழியில் செல்ல புதிய அணி ஏற்பட்டிருக்கிறது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக நிற்க பைரோன் சிங் ஷெகாவத் முடிவெடுத்தால் இந்த மூன்றாவது அணி அவரை ஆதரிக்கக்கூடும். இத் தேர்தலில் ஷெகாவத் வெற்றி பெற்றால் அது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முடிவுக்கு ஆரம்பமாக இருக்கும்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு மாயாவதியின் ஆதரவு இருக்கிறது. எனவே அவர்கள் நிறுத்தும் வேட்பாளர், ஷெகாவத் சுயேச்சையாகப் போட்டியிட்டால்கூட அவரைவிட ஒரு லட்சம் வாக்குகள் அதிகம் பெறுவது நிச்சயம்.
அதாவது, ஷெகாவத்தை தேசிய ஜனநாயக கூட்டணியும் சமாஜவாதி, தெலுங்கு தேசம், அஇஅதிமுக, அசாம் கண பரிஷத் போன்ற கட்சிகள் ஆதரித்தாலும் கூட காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரால் வெற்றி பெற முடியும்.
ஷெகாவத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் கூட்டணியிலிருந்தோ இடதுசாரி அணியிலிருந்தோ நிறையப் பேர் வாக்களித்தால்தான் அவரால் வெல்ல முடியும். அப்படி வாக்களித்து 50 ஆயிரம் வாக்குகள் அவருக்குக் கிடைத்தால்தான் வெற்றி கிட்டும். அதற்கு இப்போது வாய்ப்பு இல்லை.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருப்பது அதன் வேட்பாளருக்கு சாதகமான அம்சம். இப்போது நாடாளுமன்றத்துக்கு பொதுத் தேர்தல் நடத்தும்படியான சூழ்நிலை வரக்கூடாது என்றே முலாயம் விரும்புவார்.
உத்தரப்பிரதேசத்தில் அவருக்குக் கிடைத்த பெரும் தோல்வியிலிருந்து மீண்டு எழ அவருக்குச் சிறிது அவகாசம் தேவை. உத்தரப்பிரதேச தேர்தல் முடிவால் மக்களவையின் ஆயுள் கெட்டிப்பட்டுவிட்டது. எனவே எந்த அணியிலும் சேராத அணிகள் ஷெகாவத் பக்கம் சாய்வதற்கு வாய்ப்பே இல்லை.
தெலுங்கு தேசம், அதிமுக போன்றவை தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒரு காலத்தில் இடம் பெற்றவை என்றாலும் இப்போது அவரவர் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற இடதுசாரி கட்சிகளின் ஆதரவு தேவை என்று உணர்ந்துள்ளன. எனவே இடதுசாரி கட்சிகளின் ஆலோசனையைக் கேட்கத் தயாராக உள்ளன.
மூன்றாவது அணியை உருவாக்க வேண்டும் என்று ஓராண்டுக்கு முன்பே யோசனை கூறிய ஜெயலலிதாவையே அணியின் தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ளனர். ஜெயலலிதா தங்கள் அணியில் இருக்க வேண்டும் என்று சந்திரபாபு நாயுடுவும் முலாயமும் விரும்புகின்றனர்.
திமுகவில் ஏற்பட்டுள்ள சலசலப்பால் அடுத்த பொதுத்தேர்தலில் தமக்கு ஆதரவு அதிகரிக்கும் என்று ஜெயலலிதா நம்புகிறார். அடுத்த முதல்வர் என்பதைவிட அடுத்த பிரதமர் என்ற பேச்சு தனக்கு அதிக செல்வாக்கை ஏற்படுத்தும் என்பது அவருக்குத் தெரிந்ததுதான்.
சோனியா காந்தியை மற்ற அரசியல் தலைவர்கள் தாக்குவதைவிட ஜெயலலிதா தாக்கிப் பேசினால் அது வித்தியாசமாக பார்க்கப்படமாட்டாது. ஜெயலலிதாவும் அப்படிப் பேசத் தயங்காதவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அணி இடதுசாரி கட்சிகளுடன் கூட்டை விரும்புகிறது; ஆனால் இடதுசாரி முன்னணி, அரசியல் அதிகாரத்துக்காக அல்லாமல் மக்கள் பிரச்னைகளுக்காக ஒன்றுசேர்ந்து போராடும் அரசியல் அணிதான் முக்கியம் என்று கருத்து தெரிவித்திருக்கிறது.
சாமான்ய மக்களை வாட்டிவதைக்கும் மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளையும், அணுசக்தி ஒத்துழைப்பு தொடர்பாக அமெரிக்காவுடன் செய்து கொண்டுள்ள உடன்பாட்டையும் தங்கள் அணி எதிர்ப்பதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது இடதுசாரிகளின் அரசியல் நிலைப்பாட்டுக்கு இயைந்ததாக இருக்கிறது.
அரசியல் வரலாற்றைப் பார்த்தால், மூன்றாவது அணியில் உள்ள கட்சிகள் காங்கிரஸ் எதிர்ப்பையே முக்கிய கொள்கையாகக் கொண்டவை. 30 சதவீதம் முதல் சதவீதம் வரையிலான வாக்காளர்களின் ஆதரவை மட்டுமே கொண்ட காங்கிரஸ் கட்சியால், பிற எதிர்க்கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட்டு வந்ததால் எளிதில் வெற்றி பெற முடிந்தது.
1967-ல் சில வட இந்திய மாநிலங்களில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி (சம்யுக்த விதாயக் தளம்) வெற்றிபெற்று முதல் முறையாக காங்கிரஸ் அல்லாத அரசை ஏற்படுத்த முடிந்தது.
நெருக்கடி நிலை பிரகடனத்துக்குப் பிறகு ஸ்தாபன காங்கிரஸ், ஜனசங்கம், சோஷலிஸ்ட் கட்சிகள், பாரதிய லோக தளம் போன்ற கட்சிகள் 1977-ல் இணைந்து ஜனதா என்ற பெயரில் புதிய கட்சி உருவானது. அதன் தலைமையில் ஏற்பட்ட கூட்டணி, ஆட்சியைப் பிடித்தது.
1989-ல் காங்கிரஸ் எதிர்ப்பு கட்சிகளின் ஆதரவுடன் வி.பி.சிங் பிரதமரானார். அவரை பாரதிய ஜனதாவும் இடதுசாரி கட்சிகளும் வெளியிலிருந்து ஆதரித்தன. பிறகு 1996-ல் தேவெ கெüட தலைமையில் ஐக்கிய முன்னணி ஆட்சி ஏற்பட்டது.
இதே காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு தேய ஆரம்பித்தது, பாரதிய ஜனதா வளர ஆரம்பித்தது. பிறகு வாஜ்பாயின் தலைமையில் பாரதிய ஜனதா ஏற்படுத்திய கூட்டணி, ஆட்சிக்கு வர முடிந்தது.
இப்போது காங்கிரஸ், பாரதிய ஜனதா இரண்டுமே செல்வாக்கை இழந்து வருகின்றன. 2009 மக்களவைத் தேர்தலின்போது மாநிலக் கட்சிகள்தான் எல்லா மாநிலங்களிலும் செல்வாக்குடன் திகழும்.
எனவே ஆட்சியமைக்கும் உரிமை அவற்றுக்கே கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. தேர்தலுக்கு முன்னால் இடதுசாரி கட்சிகளுடனும், தேர்தலுக்குப் பிறகு பெரும்பான்மை வலு கிடைக்காவிட்டால் தேசிய ஜனநாயக கூட்டணியுடனும் இந்த அணி அரசியல் உறவு கொள்ளக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது.
இப்போதைக்கு காங்கிரஸ், பாரதிய ஜனதா இரண்டையும் பிடிக்காதவர்களுக்கு “”ஒரு மாற்று” இருக்கிறது!
மறுமொழியொன்றை இடுங்கள்