Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

V Muthiah – State of Cooperative societies – Backgrounder, Elections, Law amendments

Posted by Snapjudge மேல் ஜூன் 8, 2007

தேவை மாதிரி கூட்டுறவு சட்டம்

வி. முத்தையா

இந்தியாவில் சுமார் 6 லட்சம் கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 23 கோடி உறுப்பினர்கள் அங்கம் வகித்து வருகின்றனர் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

உலகிலேயே மிகப்பெரிய சமூக, பொருளாதார இயக்கமாக கூட்டுறவு இயக்கம் விளங்கி வருகிறது. பொருளாதார வளர்ச்சியில் குறிப்பாக வேளாண் கடன், இடுபொருள், உரம், மீன்வளம், பால்வளம், சர்க்கரை, வேளாண் விளைபொருள்கள் கொள்முதல் மற்றும் விற்பனை ஆகிய பல துறைகளின் வளர்ச்சிக்கு கூட்டுறவு சங்கங்கள் பெரும் பங்காற்றி வருகின்றன.

தமிழகத்தில் விவசாயிகளுக்குக் கடன் வழங்குவது, பொது விநியோகத் திட்டத்தைச் செயல்படுத்துவது ஆகியவற்றில் கூட்டுறவு சங்கங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு.

தமிழகத்தில் 1.9 கோடி குடும்ப அட்டைதாரர்களில் 1.7 கோடி அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் கூட்டுறவு சங்கங்கள் நடத்தும் 27 ஆயிரம் நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

தமிழக அரசு பொதுநலநோக்கத்துடன் அறிவித்துவரும் மக்கள் நலத் திட்டங்களை சமூக அக்கறையோடும் செம்மையாகவும் செயல்படுத்துவதில் கூட்டுறவு சங்கங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.

அரசின் திட்டங்களை, அரசுக்கு அதிகமான நிதி இழப்பு ஏற்படாத வகையில் இவை செயல்படுத்தி வருகின்றன. அதேசமயம் தனக்கு இழப்பை ஏற்படுத்திக் கொண்டு அரசின் பிரதிநிதியாக நுகர்வோருக்கு சேவை செய்து வரும் இந்தக் கூட்டுறவுகளுக்குப் பதிலாக வேறு மாற்று முறை எதுவும் நிச்சயம் அரசுக்குக் கிடைக்க முடியாது.

இக் கூட்டுறவு சங்கங்கள் அரசின் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்துகின்றன என்பது அகில இந்திய அளவில் பாராட்டப்படக் கூடிய விஷயமாகும்.

தமிழகத்தில் மக்கள் இயக்கமாக வளர்ந்த கூட்டுறவு இயக்கம் அரசியல்வாதிகளுக்கு வெஞ்சாமரம் வீசும் சில சுயநல அதிகாரிகளின் கைப்பிடியில் சிக்கி சீரழிந்து வந்தது. அரசியல் குறுக்கீடுகள், தலையீடுகள் காரணமாக கூட்டுறவு அமைப்புகள் ஜனநாயகப் பண்பை இழந்துவிட்டன.

பல கோடி மதிப்புள்ள சொத்துகளை தன்னகத்தே கொண்டு சிறப்பாகச் செயல்பட்ட பல கூட்டுறவு சங்கங்கள் பல கோடி ரூபாய் நஷ்டத்தில் தள்ளப்பட்டு தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. பணியாளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு, மறுக்கப்பட்டு செயல் இழந்த நிலையில் அழிவின் விளிம்பிற்கு சென்று கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் கூட்டுறவு அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரும் ஏற்றுக்கொள்ளும் நல்ல செய்தியாகும். கடந்த 1999-ல் நடைபெற்ற தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை என்கிற புகார் எழுந்ததையும் கருத்தில்கொண்டு தற்போதைய தேர்தல் முறையில் மாற்றம் செய்யவேண்டியது மிக அவசியமாகும்.

அகில இந்திய கூட்டுறவுத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் கூட்டுறவு சங்கங்களுக்கு தன்னாட்சியைக் கொண்டு வருவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதைச் செய்வோம் என பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்தார்.

தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் நிர்வாகம் செய்யும்போது அரசின் தேவையற்ற தலையீட்டைத் தடுக்க சட்டப்பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும். தேவையானால் அரசியலமைப்புச் சட்ட உத்தரவாத்திற்காக மத்திய அரசிடம் முறையிட வேண்டும்.

மேலும் கூட்டுறவு சங்கங்களில் தன்னாட்சியை உறுதிப்படுத்த பிரகாஷ் குழுவினால் 1991-ல் உருவாக்கப்பட்ட “மாதிரி கூட்டுறவு சட்டம்’ தமிழகத்தில் உடனடியாக சட்டமாக்கப்பட வேண்டும். மாதிரி கூட்டுறவு சட்டத்தில் பல நல்ல அம்சங்கள் உள்ளன. இவை கூட்டுறவு அமைப்புகள் ஜனநாயகபூர்வமாக செயல்படுவதை உறுதிபடுத்துவதாக இருக்கும்.

கூட்டுறவு சங்கங்களில் பதிவாளரின் அதிகாரம் கட்டுப்படுத்தப்படுகிறது. இது ஒரு ஒழுங்குமுறைச் சட்டம் என்பதைவிட இயக்குவிக்கும் சட்டமாக இருக்கும். தணிக்கை அறிக்கை அங்கத்தினர்களுக்கு வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி அனுமதியின்றி சங்கத்தைக் கலைக்க பதிலாளருக்கு அதிகாரம் கிடையாது.

மேலாண்மை, சட்டம், வங்கியியல், கணக்கியியல், விவசாயம், பொருளாதாரம் ஆகியவற்றில் சிறப்பான புலமை பெற்றவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகளில் மூன்று பேர் இடம்பெற்றிருக்க வேண்டும்.

கூட்டுறவு சங்கங்கள் அரசின் நிறுவனம் அல்ல என்பதை மாதிரி கூட்டுறவு சட்டம் தெளிவுபடுத்துகிறது. நிர்வாகிகள் மீது பொறுப்பு சுமத்தப்படுகிறது. கூட்டுறவு நிறுவனம் அங்கத்தினர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும். அவர்கள் தேர்வு செய்யும் நபர்கள் பொறுப்பு ஏற்பவர்களாகவும், பதில் சொல்ல கடமைப்பட்டவர்களாகவும், அதிகாரம் படைத்தவர்களாகவும் இருப்பார்கள்.

சுயநல அரசியல் போக்கு வளர்ந்துவிட்ட இக் காலகட்டத்தில் கூட்டுறவு அமைப்புகளைப் பாதுகாக்க “மாதிரி கூட்டுறவு சட்டத்தை’ அவசியம் சட்டமாக்க வேண்டும்.

கூட்டுறவு அமைப்புகளுக்குத் தேர்தல் நடைபெற இருப்பதை வரவேற்கும் அதேநேரத்தில் “மாதிரி கூட்டுறவு சட்டத்தை’ சட்டமாக்க தமிழக அரசு முன்வர வேண்டும். அப்போதுதான் பரந்து, விரிந்த கட்டமைப்புடன் இயங்கி அங்கத்தினர்களுக்கும், பொதுமக்களுக்கும் பயன்படும் அமைப்பாக கூட்டுறவு அமைப்புகள் செயல்பட இயலும்.

(கட்டுரையாளர்: பொருளாளர், ஏ.ஐ.டி.யு.சி. கூட்டுறவு தொழிலாளர் கூட்டமைப்பு)

——————————————————————————————–

கூட்டுறவே நாட்டுயர்வு!

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

இந்தியாவின் வளர்ச்சிக்கு, கூட்டுறவுத் துறை ஒரு முக்கிய காரணியாகத் திகழ்கின்றது. ஆனால் தமிழகத்தில் நடந்த கூட்டுறவுத் தேர்தல்களில் ஆளும் திமுகவின் அத்துமீறல்களால் முறையாகத் தேர்தல் நடக்கவில்லை என அதன் தோழமைக் கட்சிகள் தீவிரமாக எதிர்த்துப் போராடின. ஏற்கெனவே அதிமுகவும் மதிமுகவும் இந்தத் தேர்தலைப் புறக்கணித்தன. முதல்வர் அனைத்துக் கூட்டுறவுத் தேர்தல்களையும் ரத்து செய்வதாக அறிவித்தார். இதுவே அந்தத் தேர்தலில் தில்லுமுல்லு நடந்ததற்கான ஆதாரமாகிவிட்டது. திரும்பவும் எப்போது தேர்தல் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

மாவீரன் திப்புசுல்தான் காலத்தில் கூட்டுறவு முறையில் பண்டக சாலைகள் அமைக்கப்பட்டன. இதன் மூலம் பொருள்கள் நியாய விலையில் மக்களுக்கு வழங்கப்பட்டன. கூட்டுறவு அமைப்புக்கு தன்னுடைய குடிமக்களையே உறுப்பினர்களாக்கி அவர்களே முன்னின்று நடத்தும் கூட்டுறவு முறையைக் கொண்டு வந்தார் திப்புசுல்தான்.

இந்திய விடுதலைக்கு முன்பே – 1904-ம் ஆண்டில் இப்போதைய திருவள்ளுவர் மாவட்டத்தில் திரூர் என்ற கிராமத்தில் கூட்டுறவுச் சங்கம் இந்தியாவிலேயே முதன்முதலில் தொடங்கப்பட்டது. சர்.டி. ராஜகோபாலாச்சாரியார் என்ற அதிகாரி இச்சங்கத்தின் முதல் பதிவாளராகப் பொறுப்பேற்றார். தமிழகத்தில் கூட்டுறவு அமைப்பை உருவாக்கக் காரணமாக இருந்தவர் கூட்டுறவுத் தந்தை என்று அழைக்கப்படும் டி.ஏ. ராமலிங்கம் செட்டியார் ஆவார்.

ஏழைகள் தன்னந்தனியாகத் தங்களின் நலனுக்காக காரியத்தைச் செய்ய இயலாது. அவர்கள் கூட்டுமுயற்சியாகச் செய்தால்தான் வெற்றிபெற முடியும். எனவே, கூட்டுறவு என்ற உறவுமுறை வேண்டும் என அவர் வலியுறுத்தினார். ஊர்கூடி தேர் இழுத்தால் தேர் நகரும். சிறு உளியால்தான் சிற்பங்கள் செதுக்கப்படுகின்றன. சிறுதுளிதான் பெரு வெள்ளம். இதன் அடிப்படையில்தான் கூட்டுறவு இயக்கம் பிறந்தது. இங்கிலாந்தில் முதன் முதலாக 1844-ல் ராக்டேல் என்ற பகுதியில் 28 நெசவாளர்கள் சேர்ந்து 28 பவுண்ட் மூலதனத்தில் கூட்டுறவு நுகர்வோர் அமைப்பை உருவாக்கினர்.

இன்றைக்கு கூட்டுறவு அமைப்பு சகல துறைகளிலும் இயங்கி வருகிறது. விவசாயிகள், நெசவாளர்கள், பால் உற்பத்தியாளர்கள், ஆடு வளர்ப்போர், கரும்பு உற்பத்தியாளர்கள், வீட்டுவசதி, கதர் கிராமத் தொழில், தொழிலாளர்கள், மீனவர்கள், மகளிர் என – அனைத்துத் தரப்பினரும் தங்களுடைய நலன், பாதுகாப்பு கருதி தங்களுக்குத் தாங்களே கூட்டுறவு அமைப்புகளை உருவாக்கி வருகின்றனர். நேருவின் கலப்புப் பொருளாதாரத்தில் கூட்டுறவு இயக்கம் முக்கிய அங்கமாகத் திகழ்ந்தது.

நாடு விடுதலை பெற்றபின், கூட்டுறவுச் சங்கங்கள், அடிப்படையில் கிராமப்புற விவசாயிகளின் நலனை மனதில்கொண்டு ஒவ்வொரு கிராமத்திலும் உருவாக்கப்பட்டன. வேளாண் தொழிலுக்கு நீண்டகால, குறுகியகாலக் கடன்கள் வழங்கப்பட்டன. கூட்டுறவுத்துறை விவசாயிகளுக்கு உற்ற தோழனாக விளங்கியது.

1904-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த கூட்டுறவுச் சட்டம் 1961, 1963, 1983 என, பல காலகட்டங்களில் முக்கியத் திருத்தங்களைப் பெற்று இச்சட்டம் நடைமுறையில் உள்ளது. தமிழகத்தில் இந்த அமைப்பு செம்மையாகச் செயல்பட பலர் காரணமாகத் திகழ்ந்தனர்.

தூத்துக்குடியில் தொழிற்சங்கத்தைத் தொடங்கிய வ.உ. சிதம்பரனார், கூட்டுறவு முறையில் அந்த அமைப்பை நடத்தினார். முன்னாள் முதல்வர் ராஜபாளையம் பி.எஸ். குமாரசாமி ராஜா, நெல்லை மேடை தளவாய் குமாரசாமி முதலியார், ஈரோடு ஏ.கே. சென்னியப்ப கவுண்டர், சென்னிமலை எம்.பி. நாச்சிமுத்து, சென்னை டாக்டர் நடேசன், மதுராந்தகம் வி.கே. ராமசாமி முதலியார், வேலூர் பி.எஸ். ராஜகோபால நாயுடு, தஞ்சை நாடிமுத்து பிள்ளை, வேலூர் பக்தவத்சல நாயுடு, மணலி ராமகிருஷ்ண முதலியார், பொள்ளாச்சி மகாலிங்கம் என பலர் கூட்டுறவு இயக்கம் சிறப்பாக இயங்க 1950களில் அரும்பாடுபட்டனர்.

மீனவர் நலனில் அக்கறை கொண்ட சிங்காரவேலர், தொழிலாளர்களின் நலனுக்காகப் போராடிய கம்யூனிஸ்ட் தலைவர்கள் பி. ராமமூர்த்தி, அனந்தநம்பியார், எம். கல்யாணசுந்தரம் போன்றோர் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள் வளர பெரும்பணியாற்றினர்.

கூட்டுறவுச் சட்டப்படி, சங்கத்தின் தலைவராக ஒருவர் இரண்டு முறைதான் பொறுப்பு வகிக்க முடியும் என்ற நிலை மாற்றப்பட்டது. 1983-ம் ஆண்டு சட்டம், கூட்டுறவுச் சங்கம் சுயஅதிகாரத்துடன் செயல்பட வழிவகுத்தது. 1988-ல் திருத்தப்பட்ட இச் சட்டம், செயல்படாத சங்கங்களை மாநில அரசு கலைக்கும் உரிமையை அளித்தது. கூட்டுறவு அமைப்புகள் ஆரம்ப காலங்களில் செயல்பட்ட மாதிரி தற்பொழுது இல்லை.

சுயநல விரும்பிகளின் பொறுப்புக்கு வந்தன. “”கூட்டுறவு அமைப்புகளுக்கு முழு சுயாட்சி அளிப்பதற்கான திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவரத் தயாராக உள்ளது” என்று கூட்டுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் உறுதி அளித்துள்ளார்.

இந்த அமைப்புகளுக்கு, பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தன்னாட்சி போன்ற உரிமைகளை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும். கலைக்கப்படும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு காலந்தாழ்த்தாமல் தேர்தல்களை நடத்த வேண்டும்.

தமிழகத்தில் உள்ள சுமார் 30 ஆயிரம் கூட்டுறவு அமைப்புகள் திறம்படச் செயல்பட்டால் பொருளாதாரம், மக்களின் நலன், ஜனநாயகம் தழைக்கும். அரசியல் தலையீடு இல்லாமல் உறுப்பினர்களுடைய விருப்பத்தின்பேரில் கூட்டுறவு இயக்கங்கள் செயல்பட வேண்டும்.

கூட்டுறவு இயக்கம் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் அமைப்பு மட்டுமல்ல; கூட்டுறவு அமைப்புகளின் செயல்பாடுகள் ஜனநாயகத்திற்கு பல பாடங்களைப் போதிக்கும் போதிமரமுமாகும்.

கூட்டுறவின் வெற்றி, உறுப்பினர்களின் நாணயத்தைப் பொருத்து அமைகிறது; அது சங்கங்களின் எண்ணிக்கையைப் பொருத்ததல்ல என்றார் காந்தியடிகள். கூட்டுறவு அமைப்புகளின் ஊழல், அதிகார முறைகேடுகள், திட்டமிட்டு நடைபெறுகின்றன. இம்மாதிரியான சீர்கேடுகளைக் களையும்வண்ணம் கூட்டுறவு அமைப்புகள் செயல்பட, அரசு மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பினரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

அக்காலத்தில், கூட்டுறவுத் துறையில் பொறுப்பேற்ற நிர்வாகிகள், தங்கள் பணிகளை மேற்கொள்ளும்போது தங்களுடைய சொந்தப் பணத்தையே பயன்படுத்தினர். ஈரோடு எஸ்.கே. சென்னியப்ப கவுண்டர் ஒன்றுபட்ட கோவை மாவட்ட கூட்டுறவு வங்கியின் தலைவராக இருந்தார்.

காந்தியவாதியான அவர், ஈரோட்டிலிருந்து கோவைக்குச் சென்று கூட்டுறவுப் பணிகளை ஆற்றும்பொழுது, தம்முடைய சொந்தப் பணத்தைக் கொடுத்து, எளிமையான உணவை வாங்கிவரச் சொல்வார். கூட்டுறவுத் துறை வாகனங்களில் தன் குடும்பத்தாரை ஏற்ற மாட்டார். இவரைப்போன்று, மேடைதளவாய் குமாரசாமி முதலியாரும், தமது உறவினர் ஒருவர், சட்டத்திற்குப் புறம்பாக உதவி கேட்டு வந்தபோது, அலுவலகத்தை விட்டு வெளியே செல்லுமாறு கண்டிப்புடன் கூறிவிட்டார். ஆனால் இன்றைக்குப் பொறுப்பில் உள்ளவர்கள், கூட்டுறவு அமைப்பின் கணக்கிலேயே தமக்கு மட்டுமல்லாமல், தம்முடைய பரிவாரங்களுக்கும் ஆடம்பரச் செலவுகளுக்காக மக்களின் பணத்தை வாரி இறைக்கின்ற காட்சிகளைப் பார்க்கிறோம்.

இப்போது, கூட்டுறவுத் துறையை அனைத்து வசதிகளையும் அள்ளித்தரும் காமதேனுவாகக் கருதும் நிலை ஏற்பட்டுள்ளது. சிறுகச் சிறுகச் சேர்த்து அமைக்கப்பட்ட அமைப்புகள், ஒழுங்கற்ற நிர்வாகிகள் பொறுப்பேற்பதால், சீரழிந்து வருகின்றன. எளியோர், வறியோர் எல்லோரும் சேர்ந்து சிரமப்பட்டு அமைத்த கூட்டுறவு முறையின் கண்ணியத்தைக் காக்க அனைவரும் உறுதி எடுத்துக் கொள்வோம்.

(கட்டுரையாளர்: வழக்கறிஞர்)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: