Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Press Freedom, Corruption of the Justice system, Media Exposure – Sting Operations

Posted by Snapjudge மேல் ஜூன் 7, 2007

“உண்மை’யைக் காட்டறீங்களா, கூடவே கூடாது!

டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன்

சில நாள்களுக்கு முன்பு “”பி.எம்.டபிள்யு.” வழக்கு என்ற கொலை வழக்கு தொடர்பாக, அரசுத்தரப்பு வழக்கறிஞரும், பிரதிவாதியின் தரப்பும் சந்தித்துப் பேசி வழக்கைச் சீர்குலைக்க நடத்திய பேரம் பற்றிய ரகசிய காட்சிகளை “”என்.டி.டி.வி.” படம் பிடித்து நேயர்களுக்கு நேரடியாகப் போட்டுக் காட்டியது.

பணம் கொடுத்தால் அரசு வழக்கறிஞர், குற்றம் சாட்டப்பட்டவரைத் தப்ப விடுவார் என்பதை அப்பட்டமாக சுட்டிக்காட்டும் காட்சி அது. அதே நாளில் பத்திரிகையில் மற்றொரு செய்தி கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது. அது, தனியார் தொலைக்காட்சிகளும், பண்பலை வானொலிகளும் கடைப்பிடிக்க வேண்டிய செய்தி ஒளி-ஒலிபரப்பு தொடர்பான நடத்தை நெறிகளைப் பற்றியது.

அந்த நடத்தை நெறிகள் என்னவென்ற விவரம் என்னிடம் கிடையாது; ஆனால் பத்திரிகைகளில் பிரசுரமானவற்றைப் படித்தபோது, நம்பமுடியாத, வியப்பை ஊட்டுகிற, அடக்குமுறையான கட்டுப்பாடுகள் பல இருப்பதை உணர முடிந்தது.

அதில் முதலாவது, “”நட்பு நாடுகளை விமர்சிக்கக்கூடாது” என்பது. பாகிஸ்தானைக்கூட இப்போது நட்பு நாடு என்றே வகைப்படுத்திவிட்டோம். தென்னாப்பிரிக்காவும் இஸ்ரேலும் நமக்கு வேண்டாத நாடுகளாக இருந்த காலம் மலையேறிவிட்டது. அப்படி என்றால், நாம் எந்த நாட்டையுமே விமர்சனம் செய்யக்கூடாது.

அதாவது, “”இராக்கை எத்தனை அடாவடியாக ஊடுருவினீர்கள் என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷைப் பாராட்ட வேண்டும்; எங்கள் நாட்டு என்ஜினீயர்களுக்கும் டாக்டர்களுக்கும் “”எச் 1 பி” விசா தர மறுக்கும் உங்களுடைய பண்பாடுதான் என்னே என்று வியக்க வேண்டும்.

சுருக்கமாகச் சொன்னால் இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டையும் நாம் விமர்சிக்கக் கூடாது; இதைவிட கேலிக்குரியவர்களாக நாம் ஆக முடியுமா?

நீதித்துறையின் நேர்மையைச் சந்தேகிக்கவோ, விமர்சிக்கவோ கூடாது என்று நடத்தை நெறி கூறுகிறது. 2006-வது ஆண்டில் இந்தியாவின் கீழ் நீதிமன்றங்களில் ரூ.2,630 கோடி லஞ்சமாகக் கைமாறியது என்று “”டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்” என்ற அமைப்பு வெளியிட்ட தகவலை பத்திரிகைகள் பிரசுரிக்கலாம்; ஆனால் வானொலியோ தொலைக்காட்சியோ பயன்படுத்தக்கூடாது.

(இந்த ரூ.2,630 கோடி என்பதே குறைவு, உண்மையில் இதைப்போல பல மடங்கு லஞ்சமாகக் கைமாறுகிறது என்பதே என் கருத்து!)

வழக்குகளில் சாதகமான தீர்ப்புப் பெற லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது, வழக்கு முடிய நீண்ட காலம் காத்திருக்க நேர்கிறது என்ற தகவல்களால் நீதித்துறையையே சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கும் அம்சம் அதிகரித்து வருகிறது.

இதைப் பத்திரிகைகள் பிரசுரிக்கலாம்; ஆனால் வானொலி, தொலைக்காட்சிகளில் வரக்கூடாது என்பது எவ்வளவு கேலிக்கூத்தாக இருக்கிறது. பத்திரிகைகளை ஒரு மாதிரியாகவும் வானொலி, தொலைக்காட்சிகளை வேறு மாதிரியாகவும் நடத்துவது அரசியல் சட்டத்தின் 14-வது பிரிவு அளிக்கும் சுதந்திரத்துக்கே முரணாக அமைந்துவிடும்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் அல்லவா என்று கேட்டால் சரி, “”இனி பத்திரிகைகளும் பிரசுரிக்கக்கூடாது என்று கூறி விடுகிறோம்” என்ற பதில் கிடைக்கலாம்.

எவருடைய அந்தரங்க விஷயங்களிலும் தலையிட்டு, அவதூறு கற்பிக்கக்கூடாது என்பது அடுத்த கட்டுப்பாடு. இதைக் கூற இந்த கட்டுப்பாடு அவசியமே இல்லை, இது ஏற்கெனவே சட்டமே கொடுத்துள்ள அதிகாரம். அவதூறாகப் பேசினாலோ எழுதினாலோ நடவடிக்கை எடுக்க சட்டம் இடம் தருகிறது. எது அந்தரங்க வாழ்க்கை, எது பொது வாழ்க்கை என்று பிரித்துப் பார்ப்பது எப்படி?

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் லஞ்சம் வாங்குவதை படம் பிடித்தால், “”அவர் ஏதோ சொந்தச் செலவுக்காக முயற்சி எடுத்து சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்” என்று கண்டும் காணாமல் விட்டுவிட வேண்டுமா?

அரசுத் தரப்பு வழக்கறிஞரும் குற்றஞ்சாட்டப்பட்டவரின் வழக்கறிஞரும் ரகசியமாகச் சந்தித்து, குற்றஞ்சாட்டப்பட்டவரைத் தப்பிக்கச் செய்ய ஏதாவது திட்டம் தீட்டினால், வழக்கறிஞர்களுக்கும் சாட்சிக்கும் இடையிலான தனிப்பட்ட விவகாரம் அது என்று கண்ணை மூடிக்கொண்டு அப்பால் போய்விட வேண்டுமா? தனிப்பட்ட வாழ்க்கையையும் லஞ்ச, ஊழல் நடவடிக்கைகளையும் பிரிக்கும் கோடு எது?

“”உள்ளதை உள்ளபடியே காட்டும் கேமரா” என்று தொலைக்காட்சிகளில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. வீதியிலும் பொது இடங்களிலும் அப்பாவிகள், தங்களை ஒரு கேமரா கண்காணிக்கிறது என்று தெரியாமல், பித்துக்குளித்தனமாக நடப்பதைப் படம் பிடித்து ஒளிபரப்புகின்றனரே அதுவல்லவோ, தனிப்பட்ட வாழ்க்கையில் குறுக்கிடும் சம்பவம்! அதை அனுமதித்துவிட்டு மற்றதைத் தடுப்பது எதற்காக? லஞ்சம், ஊழல்களை யாரும் அம்பலப்படுத்திவிடாமல் தடுப்பதற்காகவா?

லஞ்சமும் ஊழலும்தான் அன்றாட வேலைகள் என்றாகிவிட்ட நாட்டில், இந்த நாட்டை ஆள்கிறவர்கள் எப்படிப்பட்ட சுயநலவாதிகள், மோசடிப் பேர்வழிகள் என்பதை மக்களுக்கு அவ்வப்போது நினைவூட்ட, ஊழலை அம்பலப்படுத்தும் இத்தகைய நிகழ்ச்சிகள்தான் உதவுகின்றன.

ஊழல்பேர்வழிகள் தயக்கமின்றிக் கொள்ளையடிக்கவா இந்த கட்டுப்பாடுகள்? அரசின் நடத்தை நெறிகளின் நோக்கமோ அல்லது விளைவோ இதுவாக இருந்தால் அது மிகவும் துயரகரமானது.

நடத்தை நெறியின் மற்றொரு அம்சம் சுவாரஸ்யமானது. தேசியத் தலைவர்கள் அல்லது மாநிலத் தலைவர்களின் உடலமைப்பு பற்றிய காட்சிகளை ஒளிபரப்புவதில் எச்சரிக்கை தேவை என்கிறது.

அதாவது இந்திரா காந்திக்கு முடி நரைத்துவிட்டதையோ, வாஜ்பாய் பேசும்போது திடீரென சில விநாடிகளுக்குத் தொடர்ந்து மெüனமாக இருப்பதையோ காட்டக்கூடாது!

இப்படிப்பட்ட தேசியத் தலைவர்களை இஷ்டப்படி கேலிச்சித்திரமாக வரைந்துதள்ளும் சுதந்திரம் பத்திரிகைகளுக்கு உண்டு, தொலைக்காட்சிகளுக்குக் கிடையாது என்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது.

தாமதப்பட்ட நீதி என்பது மறுக்கப்பட்ட நீதி என்பது முதுமொழி. ஒவ்வொரு கட்டத்திலும் வழக்கு வாய்தா வாங்குவதே நமது நீதிமன்ற நடைமுறைகளின் தனிச்சிறப்பு. ஜெயலலிதா, லாலு பிரசாத் மீது ஏகப்பட்ட வழக்குகள் இருந்தாலும் அவர்கள் தலைவர்களாக நீடிக்கவும் ஆட்சி செய்யவும் சட்டபூர்வ தடை ஏதும் இல்லை.

இந்த வழக்குகள் ஆண்டுக்கணக்கில் நடக்கும், அவர்கள் உண்மையிலேயே நிரபராதிகள்தானா அல்லது குற்றம் செய்தவர்களா என்பதைத் தெரிவிக்காமலே அவர்களைத் தொடர்ந்து ஆளவிடுவது சரியா? அவர்கள் நல்லவர்கள் என்றோ குற்றவாளிகள் என்றோ நான் கூறவில்லை; ஆனால், அப்படிப்பட்டவர்களின் உண்மையான நிலைமை என்ன என்பது மக்களுக்குச் சந்தேகம் இல்லாமல் தெரிய வேண்டாமா?

அவதூறாகவோ, உள்நோக்கத்துடனோ பேசினால், எழுதினால் தண்டிக்க சட்டங்கள் உள்ளன. ஆனால், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் வழக்குத் தொடுக்க முன்வருவதில்லை. நீதிமன்ற நடைமுறையால் வழக்கு தாமதம் ஆவது முக்கிய காரணம்.

இந்நிலையில் தொலைக்காட்சிகளிலும் வானொலிகளிலும் இச்செய்திகள் இடம் பெறுவதைத் தடுப்பதென்பது, பொது மக்களின் கண்களுக்குத் தெரியாமலேயே பல முறைகேடுகள் நடந்து முடிக்கச் சாதகமாக போடும் புகைத் திரையாகவே மாறிவிடும். முறைகேடுகள் வெளியே தெரியக்கூடாது, அவற்றை எதிர்த்து யாரும் வழக்கு போட்டுவிடக்கூடாது என்பது அரசின் நோக்கமாக இருக்காது என்றே நம்புகிறேன்.

அரசு தனது புதிய நடத்தை நெறிகளை வானொலி, தொலைக்காட்சி நிர்வாகிகள் மீது திணிக்க முற்பட்டால், ஒரு கட்டத்துக்கு மேல் அவர்களால் அந்த நெருக்குதல்களை எதிர்க்க முடியாமல் பணிந்து போகக்கூடிய நிலைமை ஏற்பட்டுவிடும். வானொலி, தொலைக்காட்சி நடத்தவும் விரிவுபடுத்தவும் மத்திய அரசின் தயவு அவர்களுக்குத் தேவை.

வானொலி, தொலைக்காட்சிக்கான புதிய கட்டுப்பாடுகள் என்பவை அரசுக்கும் தனியார் ஒளி, ஒலிபரப்புக்காரர்களுக்கும் இடையிலே மட்டும் உள்ள ஒரு விவகாரம் அல்லவே? இதில் மக்களுக்கும் முக்கியப் பங்கு உண்டு. ஒலிபரப்பாவது அனைத்தும் மக்களுக்காகவே. மக்களின் நலன்தான் முக்கியமானது; நடத்தை நெறி என்ற பெயரில் தகவல் பெற மக்களுக்கு உள்ள உரிமையை எந்த வகையிலும் தடுக்கக் கூடாது.

ஜனநாயக நாட்டில் எந்தவொரு அமைப்பும் மக்களின் ஆய்வுக்கு அப்பாற்பட்டது அல்ல.

நாட்டின் முக்கிய நபர்கள் மீதும் அமைப்புகள் மீதும் தொலைக்காட்சி கேமராக்களின் வெளிச்சம் தடையின்றிப் பாயட்டும். அது நீதித்துறையாக இருந்தாலும், சட்டம் இயற்றும் அதிகாரம் படைத்த சட்டமன்ற, நாடாளுமன்ற அமைப்புகளாக இருந்தாலும், அரசின் பொது நிர்வாகமாக இருந்தாலும் -அது எதுவாக இருந்தாலும் மக்களின் பார்வைக்கும் விமர்சனத்துக்கும் அப்பாற்பட்டதல்ல என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.

(கட்டுரையாளர்: முன்னாள் மத்திய அமைச்சரவைச் செயலர்.)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: