Rajasthan CM – Gujjars talks: Quota’s macabre face in Rajasthan Gujjar ire and police brutality
Posted by Snapjudge மேல் ஜூன் 4, 2007
குர்ஜார் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மீனா சமூகத்தினர் எதிர்ப்பு
ஜெய்ப்பூர், மே 30: பழங்குடியினர் பட்டியலில் குர்ஜார் சமூகத்தினரைச் சேர்த்தால் போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்று மீனா சமூகத்தினர் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
‘ராஜஸ்தானில் மீனா சமூகத்தினர் மட்டுமே பழங்குடியினர் பட்டியலில் உள்ளனர். அதில் பிற பிரிவினரைச் சேர்ப்பதை ஏற்க முடியாது. அவ்வாறு சேர்ப்பதைத் தடுக்க எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிக தியாகங்களைச் செய்ய தயாராக உள்ளனர்’ என்று ராஷ்ட்ரீய மீனா மகாசபை தலைவர் பன்வர் லால் மீனா கூறினார்.
குர்ஜார் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் வசுந்தரா ராஜே அரசு சேர்த்தால் அவர் மீண்டும் பதவிக்கு வர முடியாது என்றும் அவர் கூறினார்.
தௌசா, பண்டி மாவட்டங்களில் நடந்த தீவைப்பு சம்பவங்களுக்கு மீனா சமூகத்தைச் சேர்ந்த காவல்துறையினரே காரணம் என்று கூறப்படுவது குறித்து கேட்டபோது, “இது ஆதாரமற்ற, முட்டாள்தனமான குற்றச்சாட்டு” என்றார்.
———————————————————————————————-
07.06.07 ஹாட் டாபிக்
குமுதம் ரிப்போர்ட்டர்
நேற்று நந்திகிராம்
இன்று ராஜஸ்தான்
தொடரும் துப்பாக்கிச்சூடு கலாசாரம்
இருள் விலகி கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த நேரம் அது. சரக்கு லாரிகளும், ஏர் பஸ்களும் சீரான இடைவெளியில் ராஜஸ்தான் மாநிலம் தௌசாவின் _ ஜெய்ப்பூர் _ ஆக்ரா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தன. அத்தனை அதிகாலையில் அந்த நெடுஞ்சாலையில் திடீரென பொதுமக்கள் குழும ஆரம்பித்தனர். பேருந்தில் சென்றவர்கள் எல்லாம் ஒன்றும் புரியாமல் யோசித்தபடியே சென்று கொண்டிருந்தனர். அதிகாலை ஐந்து மணிக்கு வெறும் நான்காயிரம் பேர்தான் கூடியிருந்தனர். அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் பொதுமக்களின் எண்ணிக்கை நான்கு மடங்காக உயர்ந்தது.
விஷயம் கேள்விப்பட்ட காவல்துறை, சம்பவ இடத்துக்கு விரைந்தது. என்ன ஏது என்று விசாரித்ததில் அவர்கள் எல்லாம் குஜ்ஜார் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும் தங்கள் இனத்தை, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபடவே குழுமியிருப்பதாகவும் தெரிய வந்தது. அவ்வளவுதான். அடுத்த அரை மணி நேரத்தில் தடியடி. கண்ணீர்ப் புகை. துப்பாக்கிச்சூடு. கலவரம். ரத்தத் தெறிப்பு. எல்லாம் வரிசைக்கிரமமாக நடந்தது. இரண்டு காவலர்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக பதினான்கு உயிர்கள் காவு வாங்கப்பட்டன.
நந்திகிராமத்தில் நடந்ததற்குக் கொஞ்சமும் சளைக்காமல் நடந்துள்ள இந்தச் சம்பவம் வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு மிகப்பெரிய தலைவலியாக உருவெடுத்துள்ளது. துணை ராணுவப்படை எல்லாம் குவிக்கப்பட்டுள்ளது. பதற்றம் கொஞ்சமும் குறையாமல் இருக்கிறது. ராஜஸ்தானின் முக்கிய மாவட்டங்களான டோங்க், ஜெய்ப்பூர், தௌசா, புண்டி, சவாய் மதோபூர், கரௌலி ஆகியவற்றில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவத்தின் பின்னணி என்ன? யார் இந்த குஜ்ஜார் மக்கள்? அவர்களுடைய பின்னணி என்ன?
குஜ்ஜார் என்பது கிழக்கு ராஜஸ்தானில் அதிக அளவில் வசிக்கும் மக்களின் இனப்பெயர். குர்ஜார் என்றும் சொல்வார்கள். இவர்கள் இந்தியாவில் மட்டுமல்ல, ஒசாமா பின்லேடன் புகழ் ஆப்கானிஸ்தானிலும் இருக்கிறார்கள். பர்வேஸ் முஷாரப் இருக்கும் பாகிஸ்தானிலும் இருக்கிறார்கள். இந்த இனத்தில் சுமார் ஐநூறு உட்பிரிவுகளும் இருக்கின்றன. ஆரம்பத்தில் குஜ்ஜார் இனத்தில் இந்துக்கள் மட்டும்தான் இருந்தனர். பின்னர், அராபிய முஸ்லிம்கள் இந்த இனத்தால் கவரப்பட்டு, அந்த இனத்தோடு உறவுகளை ஏற்படுத்திக் கொண்டனர். அதன்பிறகு, தங்கள் பெயரோடு குஜ்ஜார் என்பதையும் சிலர் இணைத்துக் கொண்டனர். உதாரணம் குஜ்ரன் வாலா, குஜார் கான். இதனால் இந்தியாவில் இந்த இனம் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிந்தது. இந்து குஜ்ஜார்கள், முஸ்லிம் குஜ்ஜார்கள். இவை எல்லாமே எட்டாம் நூற்றாண்டில் இருந்து பதினொன்றாம் நூற்றாண்டு வரை நடந்த சங்கதிகள்.
இந்தியாவில் மட்டும் இந்த இன மக்களின் எண்ணிக்கை மூன்று கோடியைத் தாண்டும். இவர்கள் அனைவருக்கும் பொதுவான மொழி கோஜ்ரி. ஆனால், தாங்கள் வசிக்கும் இடத்தில் என்ன மொழி புழக்கத்தில் இருக்கிறதோ, அதைப் பழகிக் கொண்டனர். சர்தார் வல்லபபாய் படேல், இந்தர் குமார் குஜ்ரால், ஃபக்ருதீன் அலி அகமது, ராஜேஷ் பைலட் ஆகிய அரசியல் ஜாம்பவான்கள், பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் போன்றோர் இந்த இனத்தவர்கள்தாம். இந்த இன மக்களின் முக்கியத் தொழில் விவசாயம், மாடு வளர்ப்பு, பால் விற்பனை.
கிழக்கு ராஜஸ்தானில் மிகப்பெரிய வாக்கு வங்கியைக் கொண்டுள்ள இவர்கள் அனைவருமே காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள். கண்ணை மூடிக் கொண்டு கை சின்னத்துக்கு வாக்களிப்பவர்கள். ராஜஸ்தானில் குஜ்ஜாரைப் போலவே மேலும் இரண்டு இனங்கள் இருக்கின்றன. ஜாட் மற்றும் மீனா. இவர்களில் ஜாட் இனத்தை 1999_ல் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தனர்.
ஏற்கெனவே தங்கள் இனம் அரசு வேலைவாய்ப்புகளில் புறக்கணிக்கப்படுகிறது, ஜாட் இன மக்களே உயர்பதவிகளுக்கு நியமிக்கப்படுகிறார்கள் என்று மனம்புழுங்கிக் கொண்டிருந்த குஜ்ஜார் மக்களை, இந்த அறிவிப்பு சிந்திக்க வைத்தது. ‘இனிமேல் வேலைவாய்ப்பு விவகாரங்களில் ஜாட் இனத்தவரோடு போட்டி போட வேண்டியிருக்கும். இது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதற்குச் சமம். ஆகவே, எங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்துவிடுங்கள்’ என்று போராட ஆரம்பித்தனர்.
இந்தச் சமயத்தில்தான் ராஜஸ்தான் மாநில சட்டமன்றத் தேர்தல் வந்தது. அப்போது குஜ்ஜார் இனத்தைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க தான் உதவுவதாக வசுந்தரா வாக்குறுதி அளிக்கவே, அதுநாள்வரை காங்கிரஸை ஆதரித்த அவர்கள் தாமரைக்குக் கை நீட்டினர். ஆட்சிக்கு வந்தார் வசுந்தரா ராஜே. அவ்வளவுதான். அத்தோடு எல்லாவற்றையும் மறந்துவிட்டு தனது பணிகளில் பிஸியாகிவிட்டார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த குஜ்ஜார்கள் போராட்டத்தில் குதித்தனர். விளைவு.. இப்போது பன்னிரண்டு உயிர்கள் பலிவாங்கப்பட்டிருக்கின்றன. நூற்றுக்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்தத் தாக்குதல் குறித்து குஜ்ஜார் சங்கர்ஷ் சமிதியின் தலைவர் பைய்ஸ்லா, “எங்கள் மக்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு நிகரானது’’ என்று கொதித்துள்ளார்.
“சாலை மறியலில் ஈடுபடுவது நமது போராட்ட முறைகளுள் ஒன்று. இதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தி மரண தண்டனை கொடுத்திருக்கிறது பா.ஜ.க. அரசு. இதற்குத் தகுந்த பதிலை அவர்கள் சொல்லியாக வேண்டும்’’ என்று ஆவேசப்பட்டிருக்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சின் பைலட். இவரும் குஜ்ஜார் இனத்தைச் சேர்ந்தவர்தான்.
“நான் எந்த வாக்குறுதியையும் அவர்களுக்குக் கொடுக்கவில்லை. இது முழுக்க முழுக்க மத்திய அரசு சட்டத் திருத்தம் செய்து, சரிசெய்யவேண்டிய விஷயம். இருந்தாலும் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நான்கு அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்துள்ளேன். இதுகுறித்து ஒரு முடிவெடுக்க குறைந்தது 15 நாட்களாவது அவகாசம் தேவை. அதுவரை பொறுமை காப்பது அவசியம்’’ என்று கூறியுள்ளார் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா.
ஆனால், இதுகுறித்து மத்திய அரசுக்குப் பரிந்துரைக் கடிதம் அனுப்பாதவரை போராட்டம் நிறுத்தப்படாது என்று கூறியிருக்கின்றனர் குஜ்ஜார் அமைப்பினர்.
‘இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாணும் விதமாக குஜ்ஜார் இனத்தை, பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தால் நாங்கள் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது’ என்று திடீரென போர்க்கொடி உயர்த்தியிருக்கின்றனர் ராஜஸ்தானின் மீனா இன மக்கள். இவர்கள்தாம் ராஜஸ்தானில் இருக்கும் ஒரே பழங்குடியின மக்கள். ஆக, ஒரு பிரச்னையின் தீர்வு அடுத்த பிரச்னைக்கான ஆரம்பமாக இருக்கக்கூடாது. ஆகவே, மிகவும் எச்சரிக்கையாக முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது ராஜஸ்தான் அரசு! ஸீ
– ஆர். முத்துக்குமார்
—————————————————————————-
அன்னியப்பட்ட ஆட்சியாளர்கள்!
நீரஜா சௌத்ரி – தமிழில்: சாரி
ராஜஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜர் என்ற சமூகத்தவர் தங்களையும் பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரி, வன்செயல்களுடன் மேற்கொண்ட கிளர்ச்சி உச்ச கட்டத்தை அடைந்திருப்பதைப் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பார்த்து வருகிறோம்.
ஆண்டுக்கு 9.5% பொருளாதார வளர்ச்சியை எட்டிவரும் நாட்டில், 21-வது நூற்றாண்டில் கால்பதித்துள்ள நிலையில் நடைபெறக்கூடிய சம்பவங்கள் அல்ல இவை. ஆனால் அப்படிப்பட்ட சம்பவங்கள்தான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறன.
அரசு வேலை வாய்ப்புக்காகத்தான் குஜ்ஜர்கள் திடீரென்று இப்படியொரு வன்முறைக் கிளர்ச்சியில் இறங்கினார்கள் என்பது நம்பும்படியாக இல்லை. அரசுப் பணியிலும் அரசுத் துறைகளிலும் மட்டும் அல்லாது தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு அவசியம் என்று வலியுறுத்திவரும் நேரம் இது.
இட ஒதுக்கீட்டுக்காக இப்படி வன்முறையில் இறங்க வேண்டிய அவசியம் குஜ்ஜர்களுக்குக் கிடையாது. அப்படியானால் வன்செயல்கள் ஏன் நிகழ்ந்தன, அவர்களுடைய உண்மையான நோக்கம்தான் என்ன?
மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி, பிற்பட்ட வகுப்பினருக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்குவது என்று வி.பி. சிங் தலைமையிலான அரசு எடுத்த முடிவையடுத்து காங்கிரஸ், பாரதீய ஜனதா போன்ற கட்சிகள் பின்னாலிருந்து தூண்டிவிட்டு, இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கிளர்ச்சிகள் நடந்தன.
ஆனால் பிறகு தேர்தலில் வெற்றிபெற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வாக்குகளும் அவசியம் என்பதால் காங்கிரஸ், பாரதீய ஜனதா உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே இட ஒதுக்கீட்டு கொள்கையை ஏற்று, அமல்படுத்த ஆரம்பித்தன.
ராஜஸ்தானில் ஜாட் சமூகத்தவருக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற அந்தஸ்தை வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுதான் அளித்தது.
இட ஒதுக்கீட்டுக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று முதலில் தீர்மானித்த வி.பி. சிங்கால் கூட அமல்படுத்த முடியாத காரியம் அது. ஜாட் சமூகத்தவருக்கு இட ஒதுக்கீட்டுச் சலுகையை அளித்திருந்தால் தேவிலாலின் ஆதரவு வி.பி. சிங்குக்குத் தொடர்ந்திருக்கும், மத்திய ஆட்சியும் பிழைத்திருக்கும். வட இந்திய அரசியல் வரலாறுகூட மாறியிருக்கும்.
வாக்கு வங்கிகள் மூலமே அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படுவதால், இட ஒதுக்கீடு என்பதை இனி எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று புரிகிறது. நேற்று ஜாட் சமூகத்தவர் போராடிப் பெற்றனர். இன்று குஜ்ஜர்கள் போராடுகின்றனர். நாளை மற்றொரு சமூகம் போராடத் தொடங்கலாம்.
குஜ்ஜர்கள் சமீபகாலமாக மிகவும் கொந்தளிப்பாக இருக்கின்றனர் என்பது உண்மையே. ராஜஸ்தான் மாநில மக்கள் தொகையில் 5% ஆக இருக்கும் குஜ்ஜர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக கருதப்படுகின்றனர்.
ஜாதீய அடுக்கில் மேலே உள்ள ஜாட்டுகளுக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற அந்தஸ்து தரப்பட்டதும், இட ஒதுக்கீட்டின்கீழ் வரும் பதவிகளையும் இடங்களையும் அவர்கள் ஆக்கிரமிக்க ஆரம்பித்துவிட்டனர். எனவேதான் குஜ்ஜர்கள் இப்போது பழங்குடி அந்தஸ்து கேட்டுப் போராடுகின்றனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும் இமாசலத்திலும் குஜ்ஜர்கள் பழங்குடி சமூகத்தவராகவே பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ஆனால் ராஜஸ்தான் மக்கள் தொகையில் 10% ஆக இருக்கும் “”மீனா” வகுப்பினர், குஜ்ஜர்களுக்கு பழங்குடி அந்தஸ்து தரப்படுவதைக் கடுமையாக எதிர்க்கின்றனர். அப்படித் தந்தால் தங்களுக்குரிய இடம் குறைந்துவிடும் என்பதுதான் அவர்களுடைய அச்சம்.
தெüசா மாவட்டத்தில் மீனா-குஜ்ஜர் இடையிலான மோதலில் 8 பேர் இறந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் இவ்விரு சமூகத்தவரும் அருகருகில் வசிக்கின்றனர். இருவரும் க்ஷத்திரியர்கள். எனவே மோதல் தீவிரமானால் அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும்.
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு முன்னால், குஜ்ஜர்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்தவர் வசுந்தரா ராஜ சிந்தியா என்பது உண்மை. ஆட்சிக்கு வந்த பிறகு அதன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த விஷயம் குறித்துப் பரிசீலிக்க 18 மாதங்களுக்கு முன்னால் ஒரு கமிட்டியை நியமித்தார். அதைப்பற்றி அதிகாரபூர்வமான அறிவிப்புகூட வெளியிடப்படவில்லை. அந்தக் கமிட்டியில் இருக்கிறோம் என்பதே சில உறுப்பினர்களுக்குத் தெரியாது!
வாக்குறுதிகளைத் தருவதும் ஆட்சிக்கு வந்தபிறகு அதை மறப்பதும் ஆட்சியாளர்களுக்குக் கைவந்த கலை. ஆனால் சில அரசியல்வாதிகள், இப்படிப்பட்ட நிலைமை தோன்றியவுடனேயே சுதாரித்துக் கொண்டு, நிலைமை முற்றாமல் ஏதாவது செய்துவிடுவார்கள். ஆனால் வசுந்தராவோ அகந்தையின் உச்சத்தில் இருக்கிறார். அவரை கட்சித் தொண்டர்கள்கூட எளிதில் பார்க்க முடிவதில்லை.
தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயகத்தில் அனுமதித்துள்ளபடி கிளர்ச்சி செய்தனர் குஜ்ஜர்கள். ஆட்சியாளர்கள் சொல்லாமல் போலீஸôர் அடித்து நொறுக்கமாட்டார்கள். போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இறந்த சிலருடைய மார்பிலே குண்டுகள் பாய்ந்துள்ளன. வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்துவதாக இருந்தால்கூட காலில்தான் சுட்டிருக்க வேண்டும்.
இச் சம்பவம் நடந்த 48 மணி நேரத்துக்குப் பிறகுகூட, “”கிளர்ச்சிக்காரர்களுக்கு தக்க பாடம் புகட்டுவோம்” என்று முதல்வர் பேசியிருப்பது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதைப் போல இருந்தது. பிறகு பாரதீய ஜனதாவின் தேசியத் தலைவர்கள் தில்லியிலிருந்து அளித்த நெருக்குதல் காரணமாக, குஜ்ஜர் சமூகத் தலைவர்களுடன் பேச குழுவை நியமித்தார். பிறகு வழக்கமாக அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகளை எடுத்தார்.
இட ஒதுக்கீட்டின்படி ஒதுக்கிய இடங்கள் முழுவதையும் ஜாட் சமூகத்தவரே கைப்பற்றிவிடாமல் தடுக்க, பிகார் பாணியில் “”இணைப்பு 1”, “”இணைப்பு 2” என்று ஜாட்டுகளுக்கும் குஜ்ஜர்களுக்கும் தனித்தனியாக இட ஒதுக்கீட்டுச் சலுகைகளை அளித்திருக்கலாம். ஆனால் குஜ்ஜர்களும் இந்த இட ஒதுக்கீட்டை வேலைக்காக மட்டும் கேட்கவில்லை.
இப்போது ராஜஸ்தான் சட்டப்பேரவையில் பழங்குடிகளுக்கென்று 31 தனித் தொகுதிகள் உள்ளன. அவற்றை மீனாக்கள் பெற முடிகிறது. பாரதீய ஜனதா, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளிலுமே சேர்த்து மொத்தம் 7 குஜ்ஜர்கள்தான் வெற்றிபெற முடிந்தது. இதனால் அரசியல்ரீதியாக அதிகாரம் செலுத்தும் இடத்தில் குஜ்ஜர்கள் இல்லை. இதற்காகத்தான் அவர்கள் தீவிரமான போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இந்திய சமுதாயத்திலே புதிய மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அரசியல் கட்சி வாரியாக மக்கள் இப்போது அணி திரள்வதில்லை. அவரவர் சமூகத்தின் பின்னணியில்தான் அணியாக உருவெடுத்து வருகின்றனர்.
கலிங்க நகர், சிங்கூர், நந்திகிராமம், தெüசா ஆகிய இடங்களில் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சி உணர்த்துவது இதுதான். புதிய பொருளாதார வளர்ச்சியின் பலன் மக்களுக்குக் கிடைக்கவில்லை.
சமுதாயரீதியாக ஒடுக்கப்பட்ட ஒரே சமூகமான மக்கள் தங்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்திக்கொண்டு உரிமைகளுக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் போராட ஆரம்பித்துள்ளனர்.
இதை உணரமுடியாத அளவுக்கு ஆட்சியாளர்கள் மக்களிடமிருந்து மிகவும் அன்னியப்பட்டு நிற்கின்றனர். இது நம்நாட்டு ஜனநாயக முறைக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
bsubra said
ராஜஸ்தான் அரசுக்கு “புதிய’ நெருக்கடி
ஜெய்பூர், ஜூன் 4: ராஜஸ்தான் மாநிலத்தில் மீனா இனத்தைச் சேர்ந்த 2 காபினெட் அமைச்சர்கள் உள்ளிட்ட 31 அமைச்சர்கள் பதவி விலகி விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.
குஜ்ஜர் இனத்தவரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியிலில் இருந்து பழங்குடியினர் பட்டியலுக்குச் சேர்க்க மாநில அரசு பரிந்துரை செய்யும் முயற்சிக்கு எதிராக அவர்கள் இவ்வாறு அறிவித்துள்ளனர்.
மேலும் மாநில நிவாரணப் பணித் துறை அமைச்சர் கிரோரி லால் மீனா, நிதி அமைச்சர் வீரேந்திர மீனா ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த முடிவை அறிவித்தனர்.
“குஜ்ஜர் இனத்தவரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை மாநில அரசு அளித்தால் நாங்கள் அனைவரும் ராஜிநாமா செய்து விடுவோம்’ என்றார் வீரேந்திர மீனா.
முன்னதாக, அவர்கள் இருவரும் மாநில விவகாரங்களை கவனிக்கும் பாஜக தலைவர் கோபிநாத் முன்டோவுடன் தனியாக ஆலோசனை நடத்தினர். அப்போது, மாநில பாஜக தலைவர் மகேசா சர்மா உடனிருந்தார்.
ராஜ்நாத் சிங்குடன் குஜ்ஜர் அமைச்சர் சந்திப்பு: இதனிடையே, இப் பிரச்னையில் முதல்வர் வசுந்தரா ராஜே உரிய நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து குஜ்ஜர் இனத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் லாலு ராம், பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கை தில்லியில் சந்தித்தார். அவருடன் 6 எம்எல்ஏக்களும் சென்றனர்.
தில்லியில் இன்று “பந்த்’: இதனிடையே தங்களது கோரிக்கைக்கு வலுச் சேர்க்கும் வகையில், தில்லியில் திங்கள்கிழமை முழு அடைப்புக்கு குஜ்ஜர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
மேலும், தில்லியில் முக்கிய சாலைகளில் மறியல் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.
மேலும் 3 மாவட்டங்களில் தேசிய பாதுகாப்புச் சட்டம் : இதனிடையே, மேலும் 3 மாவட்டங்களில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை மாநில அரசு ஞாயிற்றுக்கிழமை இரவு அமல்படுத்தியது.
ஏற்கெனவே, மாநிலத்தில் 11 மாவட்டங்களில் இந்த சட்டம் அமலில் உள்ளது. இந்நிலையில் பாலி, ஆல்வார், சுரு ஆகிய 3 மாவட்டங்களில் இச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
bsubra said
புலனாய்வு
பி. ராமன்
கூடுதல் செயலாளர் (ஓய்வு) ,
கேபினெட் செகரெட்டேரியட்
“குஜ்ஜார்’ போராட்டம்:
நக்ஸலைட்டுகளின் பிடியில் போகுமா?
அண்டை மாநிலமான குஜராத் ,மதக்கலவரம் மற்றும் என்கௌண்டர் பிரச்சினைகள் காரணமாக தலைப்புச் செய்தியில் அடிபட்டு வருகிறது. நாட்டின் தலைநகர் என்ற நிலையில் அடுத்துள்ள புது டெல்லியும் தொடர்ந்து மீடியாக்களில் இடம் பெற்று வருகிறது.
“குருமத்’ராம் ரஹீம் சிங் தலைமையிலான பிரிவினர் காரணமாக சீக்கியர் பிரச்சினை, பஞ்சாப் மாநிலத்தில் பதற்றத்தை தோற்றுவித்துள்ளது. சில மாதங்களுக்கு முன் “சிறப்பு பொருளாதார மண்டலங்கள்’ எனப்படும் தனியார் தொழிற்பேட்டை விவகாரத்தில் ஹரியானா மாநிலத்தில் போராட்டம் வெடித்தது. மற்றொரு எல்லை மாநிலமான ஜம்மு காஷ்மீரைப் பற்றி கேட்கவே வேண்டாம்.
இந்த பின்னணியில், ராஜஸ்தான் மாநிலத்தில் வெடித்துள்ள குஜ்ஜார் இன மக்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது வரை 27பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இப்படி பல மாநிலங்களில் கிளம்பியுள்ள பிரச்சினைகள் தேசத்திற்கும், தேசியத்திற்கும் தொடர்ந்து விடப்படும் அறைகூவலின் அடுத்த அத்தியாயமாக மாறி வருகிறது.
என்னதான் நடக்கிறது ராஜஸ்தானில்?
பிற்படுத்தப்பட்டோர் இனப் பட்டியலில் தற்போது இடம் பெற்றுள்ள குஜ்ஜார் இன மக்கள், தங்களை பழங்குடி இனமாக அறிவிக்க வேண்டும் என்று அவ்வப்போது போராடி வருகிறார்கள். நிலம், வேலைவாய்ப்பு, வளர்ச்சி முயற்சி களுக்கான வங்கிக் கடன் ஆகிய பல்வேறு தலைப்பு களின் கீழ், பழங்குடி இனம் அதிக சலுகைகளைப் பெற்று வருகின்றன என்று குஜ்ஜார் இனத்தினர் எண்ணியதே இதற்குக் காரணமாகும்.
பல ஆண்டுகளாக நடந்து வரும் இந்தப் போராட்டம் அவ்வப்போது வன்முறையாக மாறுவதும், அதனால் தொடரும் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் குஜ்ஜார் இன மக்கள் சிலர் மரணம் அடைவதும் வழக்கமான நிகழ்ச்சி. கடந்த 2003ம் ஆண்டும் இத்தகைய பிரச்சினை ஏற்பட்டது. கடந்த வாரம் நடந்த போராட்டத்தின் விளைவாக இதுவரை சுமார் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
விவசாயத்தையே பெரிதும் நம்பி வாழும் குஜ்ஜார் இன மக்கள், நாட்டின் பல பகுதிகளிலும் வாழும் விவசாயிகள் போலவே பல்வேறு பிரச்சினைகளையும் சந்தித்து வருகின்றனர். அதே சமயம் கல்வியறிவு இன்மையால் விவசாயம் அல்லாத பிற வேலைவாய்ப்புகளும் இல்லாமல் கடந்த பல ஆண்டுகளாகவே இந்த இன மக்கள் அவதிப்பட்டு வந்துள்ளனர்.
அவர்களைச் சுற்றிலும் ஏற்பட்டு வரும் சமூக- பொருளாதார மாறுதல்களும், அதனால் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமையும் கூட அவர்களுக்கு தொடர்ந்து மன உளைச்சலையே அளித்து வந்துள்ளது.
குஜ்ஜார் இனத்தவரைப் போன்று, ராஜஸ்தான், உத்திர பிரதேசம், பீஹார், ஹரியானா போன்ற மாநிலங்களில் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின் தங்கி இருந்த மற்றொரு சமூகம், “ஜாட்’ இனத்தவர்.
ஆனால், 1970ல் துவங்கி, முன்னாள் பிரதமர் சரண்சிங், “ஜாட்’ இனத்தவரின் தலைவராக வட இந்திய அரசியலில் ஏற்றுக் கொள்ளப்பட்டதிலிருந்தே, அவர் சார்ந்திருந்த உத்திர பிரதேசம் மற்றும் அண்டை மாநிலமான ராஜஸ்தான் ஆகியவற்றில், அந்த இனத்தவர் அரசியலில் எழுச்சி பெற்றனர். சமூக, பொருளாதார முன்னேற்றமும் ஏற்பட்டது.
இன்றைய சூழ்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில், பிற்படுத்தப்பட்டோருக்கான வேலைவாய்ப்பு உட்பட்ட பல்வேறு சலுகைகளிலும் பெரும் பகுதி, “ஜாட்’ இனத்தவர்களுக்கே பயன் அளிப்பதாக குஜ்ஜார் இனத்தவர்கள் கருதுகின்றனர்.
இதே போல் பழங்குடி இனத்தவர் பட்டியலில் இடம் பெற்றுள்ள “மீனா’ இனத்தவர்களோ, கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் கிடைக்கும் சலுகைகள் மூலம், சமூக- பொருளாதார அந்தஸ்தில் முன்னேறியுள்ளனர். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளாகியுள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள குஜ்ஜார் இனத்தவர்களின் தலைவராக, மறைந்த காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் பைலட், உருப் பெற்று வந்தார். கடந்த வாரம் நடைபெற்றது போன்ற “குஜ்ஜார்’ இன மகா சபா பேரணிகளிலும் அவர் முன்னிலை வகித்து வந்தார்.
ஆனால், சாலை விபத்து ஒன்றில் அவர் எதிர்பாராத மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, குஜ்ஜார் இன மக்கள் தாங்கள் மீண்டும் “அரசியல் அனாதைகளாக ஆக்கப்பட்டு விட்டோமோ?’ என்று எண்ணத் துவங்கினர். தங்களது இனத்திற்கு “பழங்குடி இனம்’ என்ற அரசு அங்கீகாரம் கிடைக்காமல் போய் விடுமோ என்ற கவலையும் அவர்களிடையே அதிகரித்துள்ளது.
மாநில அரசைப் பொறுத்தவரையில், தங்களது நீண்டநாள் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக உறுதியளித்து, பதவியில் அமர்ந்துள்ள பாரதீய ஜனதா கட்சியும், பெண் முதல்வர் வசுந்தர ராஜே சிந்தியாவும் தங்களை ஏமாற்றுவதாகவே குஜ்ஜார் சமூகத்தினர் எண்ணுகிறார்கள். அதன் வெளிப்பாடே, கடந்த சில வருடங்களாக குஜ்ஜார் மகாசபாவின் மாநாடுகள், வன்முறையில் முடிந்துள்ளன.
இதற்கிடையில், குஜ்ஜார் பேரணியினர் மீது ராஜஸ்தான் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதை, பல்வேறு கட்சிகளும் அரசியல் ரீதியாகவே அணுகியுள்ளனர். மத்தியில் ஆளும், காங்கிரஸ் கட்சி- ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு குலைந்து விடுவது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க முயன்று வருகிறது.
மேற்கு வங்கத்தில் சிங்கூர் மற்றும் நந்தி கிராம் ஆகிய பகுதிகளில், மக்கள் எதிர்ப்பையும், போராட்டத்தையும் சந்தித்த ஆளும் இடது சாரி கட்சிகள், “குஜ்ஜார் பிரச்சினையை’ பாரதீய ஜனதாவிற்கு பதிலடி கொடுக்க தங்களுக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பாகவே கருதுகின்றன. ராஜஸ்தானை ஆளும் பாரதீய ஜனதா கட்சியோ, உத்திர பிரதேச சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்குப் பின் நிலைகுலைந்துள்ள தொண்டர்கள் மற்றும் தலைவர்களின் மன எழுச்சியை சரி செய்யவே இன்னும் தயாராகவில்லை.
இந்த நிலையில், தலைவலியோடு சேர்ந்து திருகுவலியும், “குஜ்ஜார்’ போராட்டம் என்ற அளவில் அந்த கட்சியைப் பிடித்து ஆட்டுகிறது.
ராஜஸ்தானில் வாழும் குஜ்ஜார் இன மக்களைப் பொறுத்தவரை, அவர்களது கோரிக்கைகளில் நியாயம் இருக்கிறது. அவர்களது கோரிக்கை ஏற்கப்பட்டால், அடுத்துள்ள மாநிலங்களில் உள்ள குஜ்ஜார் இனத்தவரும் அதே சலுகையை கோருவார்கள் என்று எதிர்பார்க்க இடம் உள்ளது.
அதேசமயம், தற்போதைய போராட்டம், குஜ்ஜார் இனத்தவர் பரவலாக வாழும் அண்டை மாநிலங்களிலும் பரவும் அபாயமும் உள்ளது. இது குறித்து, அந்தந்த மாநில அரசுகளை மத்திய அரசு எச்சரித்துள்ளதே இதற்கு ஆதாரமாக இருக்கிறது.
ராஜஸ்தான் மாநில குஜ்ஜார் இனத்தவர் போராட்டத்தைப் பொறுத்தவரை, அவர்களது அமைப்பிற்கு எந்த அரசியல் கட்சியோ, பெரிய அரசியல் தலைவர்களோ தலைமை ஏற்கவில்லை. இந்திய ராணுவத்திற்கு அதிக அளவில் போர் வீரர்களை அனுப்பும் குஜ்ஜார் இனத்திற்கு, முன்னாள் ராணுவ “கர்னலான’ கிரேஸி சிங் தற்போது தலைமை ஏற்றுள்ளார்.
அவரோடு வேறு பல முன்னாள் படை வீரர்களும் போராட்டத்தில் பங்கு பெற்றுள்ளனர். குஜ்ஜார் இன மக்களின் போராட்டத்தை, ராஜஸ்தான் மாநிலத்தில் புதிதாக முளைத்து வரும் நக்சலைட் தீவிரவாத இயக்கங்கள் கைப்பற்ற அல்லது பயன் படுத்தும் வாய்ப்புகள் நிரம்ப உள்ளன. ஜார்கண்ட் மாநிலத்தில் தனி மாநில போராட்டம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அதே இயக்கத்தின், “கைவிடப் பட்ட’ தொண்டர்களை “மூளை சலவை’ செய்தே, நக்சலைட் தீவிரவாத இயக்கங்கள் வளர்த்துள்ளன.
அதேபோன்று, இந்தியாவின் மேற்கு பகுதிகளில் கம்யூனிச சித்தாந்தமே அறியப்படாத “”ராஜஸ்தான் மாநிலத்தில், தற்போதைய சூழ்நிலையை பயன்படுத்தி,நக்சலைட் தீவிரவாதிகள் பரவ முற்படுவார்களா?” என்பதே தற்போதைய கேள்வி.
பி. ராமன்
கூடுதல் செயலாளர் (ஓய்வு) ,
கேபினெட் செகரெட்டேரியட்
bsubra said
ஊன்றுகோல் நிரந்தரத் தீர்வல்ல!
பழங்குடியினர் பட்டியலில் தங்களது ஜாதியும் சேர்க்கப்பட வேண்டும் என்கிற குஜ்ஜர் இனத்தவரின் போராட்டம் தேசிய அளவில் விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயம்.
உலகமே முன்னேறத் துடிக்கும் காலம் இது. வருமானம், வாழ்க்கைத் தரம் உயர்கிறது; கல்வி அறிவு வளர்கிறது; தனி மனிதப் பார்வை விசாலப்படுகிறது; எழுத்தறிவில்லாத கிராம விவசாயியின் மகன் சிலிக்கான் பள்ளத்தாக்கில் கம்ப்யூட்டர் பொறியாளராகப் பணியாற்றும் அளவுக்கு இந்தியாவின் வளர்ச்சி எல்லாவகையிலும் பிரமிப்பூட்டுகிறது. ஆனால், ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் பின்னோக்கி நடைபோட எல்லோருமே விழைகிறார்கள் என்றால் அது இந்த இட ஒதுக்கீட்டுப் பிரச்னையில் மட்டும்தான்.
உயர்ந்த ஜாதி என்று எந்தவித சலுகையும் இதுவரை இல்லாமல் இருந்த பிராமணர்கள் உள்பட இடஒதுக்கீடு கிடைத்தால் நல்லது என்று கருதும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. பொருளாதார அடிப்படையில் முற்பட்ட ஜாதியினருக்கு இடஒதுக்கீடு என்று உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி வரை பேசுவதைக் கேட்கும்போது, இடஒதுக்கீடு என்பது அரசியல்வாதிகள் பொதுமக்களை ஏமாற்றி அவர்களது வாக்குகளை அபகரிக்கப் பயன்படுத்தும் அஸ்திரம் மட்டும்தானோ என்கிற ஐயம்தான் எழுகிறது.
அரசியல் நிர்ணயசபை விவாதங்களைப் படிக்கும்போது, அன்றைய சட்ட அமைச்சராக இருந்து நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஒவ்வொரு ஷரத்தையும் முன்மொழிந்து விவாதத்திற்குப் பிறகு அதற்குச் சட்டவடிவம் தந்த டாக்டர் அம்பேத்கர், இடஒதுக்கீடு விஷயத்தில் தெரிவித்த அபிப்பிராயத்தை நினைவுபடுத்துவது அவசியம். “”இடஒதுக்கீடு என்பது ஊன்றுகோல் போன்றது. அதுவே காலவரையின்றி தொடர்ந்தால் இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு என்பது கானல் நீராகி விடும். சமுதாயத்தின் எல்லா பிரிவினரும் அவரவர் காலில் அவரவர் பலத்தில் நிற்கப் பழக வேண்டும். அதிகபட்சம் பத்து ஆண்டுகளுக்கு மேல் இடஒதுக்கீடு இருக்கலாகாது. அப்படி இருந்தால் அதை வருங்கால அரசியல்வாதிகள் நிரந்தரமாக்கி விடுவார்கள்” என்பதுதான் அவரது பேச்சின் சாராம்சம்.
டாக்டர் அம்பேத்கரின் தீர்க்கதரிசனம் பலித்துவிட்டது. அறுபது ஆண்டுகளாகத் தாழ்த்தப்பட்டவர்களுக்காக இடஒதுக்கீடு தொடர்கிறது. இனியும் அந்தச் சமுதாயக் கொடுமை மறைந்தபாடில்லை. அதுமட்டுமல்ல, தாழ்த்தப்பட்டவர்களில் ஒரு சிலர் மட்டுமே அந்தச் சலுகைகளை மீண்டும் மீண்டும் அனுபவித்து வருகின்றனர்.
பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடும் சரி. சுதந்திரத்திற்கு முன்பு உயர்ஜாதியினராக இருந்த பலர் தங்களைப் பிற்படுத்தப்பட்டவர்களாக மாற்றிக்கொண்டு சலுகைகளை அனுபவிப்பது தான் இப்போது, “”மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள்” என்கிற பிரிவைத் தோற்றுவித்திருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளாக , “”உங்களைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கிறோம்” என்று கூறி வாக்கு வங்கி அரசியலில் எல்லா கட்சிகளுமே ஈடுபட்டதன் விளைவு, இப்போது இடஒதுக்கீடு என்கிற ஊன்றுகோலில்லாமல் யாருமே நடக்க முடியாத நிலைமை.
அரசியல் நிர்ணயசபை விவாதத்தின்போது டாக்டர் அம்பேத்கர் விடுத்த எச்சரிக்கை எந்த அளவுக்கு தீர்க்கதரிசனமானது என்பதை சமீபத்திய இடஒதுக்கீடு சர்ச்சைகள் தெளிவாக்குகின்றன. கடந்த தேர்தலின்போது, குஜ்ஜர் இனத்தவரைப் பழங்குடியினராக அறிவிப்பதாக ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா அறிவித்ததன் விளைவுதான் சமீபத்திய குஜ்ஜர் கலவரம். உயர்கல்வி நிறுவனங்களில் ஒதுக்கீடு என்கிற மத்திய அரசின் அறிவிப்பின் எதிரொலிதான் மருத்துவக் கல்லூரி மாணவர் போராட்டம்.
இப்படி இடஒதுக்கீட்டுப் போராட்டங்கள் தொடர்வது ஆரோக்கியமான முன்னேற்றத்துக்கு வழிகோலுமா என்பதுதான் கேள்வி. சமுதாயத்தில் எந்தவொரு பிரிவினரும் பின்தங்கி இருப்பதோ, கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடையாமல் இருப்பதோ வருங்கால இந்தியாவிற்கு நல்லதல்ல. அதேசமயம், இடஒதுக்கீடு என்கிற பெயரில் திறமையானவர்கள் பாதிக்கப்படுவதோ, பயனடைந்தவர்கள் மட்டும் மீண்டும் மீண்டும் இடஒதுக்கீட்டின் பயனை அனுபவிப்பதோ ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வழிகோலாது.
இடஒதுக்கீடு இனியும் தொடர வேண்டுமா? அப்படி தொடர்வதானால் எத்தகைய மாற்றங்களுடன் தொடர வேண்டும்? இடஒதுக்கீட்டின் பெயரால் அரசியல் நடத்துவது சரிதானா? – இதுபோன்ற கேள்விகள் தேசிய விவாதமாக்கப்பட்டு, தெளிவான தீர்வு காணப்பட வேண்டும்.
டாக்டர் அம்பேத்கர் சொன்னதுபோல, ஊன்றுகோல்கள் நிரந்தரத் தீர்வாக முடியாது!