Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Paul Wolfowitz – World Bank, Girlfriend, Shaha Riza, Compensation

Posted by Snapjudge மேல் மே 31, 2007

நெட்டில் சுட்டதடா…: பெரிய பதவிக்கு வேட்டு வைத்த சின்னப் பதவி!

பல வருடங்களுக்கு முன்பு ஒரு பொதுத்துறை நிறுவனத்திலிருந்து இண்டர்வியூவுக்கு அழைப்பு வந்திருந்தது. கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸின் முன் பதிவு செய்யப்படாத பெட்டியில், உரித்துப் போட்ட வேர் கடலைத் தோல்களின் நடுவே தரையில் உட்கார்ந்தபடியே டெல்லிக்குப் பயணமானேன். பயணம் நாற்பது மணி நேரம் இருந்தாலும், இண்டர்வியூ என்னவோ நாலே நிமிடத்தில் முடிந்துவிட்டது. ஆச்சரியத்துடன் வெளியே வந்தபோது, அங்கே அட்டெண்டராக இருந்த கோபால் என்ற தமிழர் என் பால் வடியும் முகத்தைப் பார்த்து அனுதாபப்பட்டு ஒரு தகவல் தெரிவித்தார்: ஏற்கனவே அந்த உத்தியோகம் உயர் அதிகாரி ஒருவரின் உறவினருக்குக் கொடுக்கப்பட்டு விட்டதாம்! நான் குமுறிக் கொந்தளித்து ஒரு கல்லை எடுத்துக் கண்ணாடி ஜன்னல் மீது வீசலாமா என்று யோசித்து, பிறகு தைரியம் போதாமல் கனாட் ப்ளேஸில் ஒரு ராஜேஷ் கன்னா படம் பார்த்துவிட்டு ராத்திரியே ரயிலேறிவிட்டேன்.

தான் வகிக்கும் பதவியை உபயோகித்துத் தன்னுடைய உறவினர்களுக்குச் சகாயம் செய்து வைப்பதற்கு ஆங்கிலத்தில் நெபாடிஸம் என்று பெயர். நெஃப்யூ -மருமகன் என்ற வார்த்தையிலிருந்து வந்தது இது. அந்த வார்த்தைக்கு அடி வேர், நபாத் என்ற பழைய சமஸ்கிருதச் சொல். ஒருவேளை, ரிக் வேத காலத்திலேயே நெபாடிஸம் இருந்திருக்கிறதோ?… அமெரிக்காவில் 1933-ம் ஆண்டு டெக்ஸôஸ் மாநிலத்தில் ஒரு சர்வே எடுத்தார்கள். சில அரசுத் துறைகளில் அறுபது சதவிகிதம் வரை ஊழியர்களின் உறவினர்களால் நிரம்பி வழிந்ததைக் கண்டுபிடித்து அதிர்ந்தார்கள். நெபாடிஸ ஒழிப்புக் கமிட்டி என்று ஒன்று போட்டு விசாரணை நடத்தினார்கள். (அந்தக் கமிட்டியில் யார் யாருடைய மருமகப் பிள்ளைகளெல்லாம் இடம் பெற்றார்களோ தெரியவில்லை). பிறகு எல்லா மாநிலங்களும் விதவிதமாக நெபாடிஸ மறுப்புச் சட்டங்கள் இயற்றின. இப்போது பெரிய தனியார் நிறுவனங்களில்கூட வேலைக்குச் சேரும்போதே, “”உங்கள் உற்றார் உறவினர்கள் யாருக்கும் நீங்கள் சுற்றி வளைத்துக் கூட சூபர்வைசராக இருக்க முடியாது; உங்களுக்கு வேண்டியவர்கள் நடத்தும் கடையிலிருந்து ஆபீசுக்கு குண்டூசி கூட வாங்கக் கூடாது” என்றெல்லாம் விதி முறைகள் அச்சடித்துத் தந்து கையெழுத்து வாங்கிக் கொள்கிறார்கள். இருந்தும் நெபாடிஸம் சாவதாகத் தெரியவில்லை. “”என் மகனுக்கு உன்னுடைய டிபார்ட்மெண்டில் வேலை போட்டுக் கொடு; உன் மகனுக்கு என் டிபார்மெண்டில்” என்று பேசி வைத்துக்கொண்டு சுலபத்தில் நிரூபிக்க முடியாத வகையில் ஊழல் செய்கிறார்கள்.

சமீபத்தில் நெபாடிஸக் குற்றச்சாட்டுக்கு ஆளாகிப் பதவியை இழந்தவர், உலக வங்கியின் தலைவராக இருந்த உல்ஃபோவிச் என்பவர். பிரிட்டிஷ் பிரதமர்கள் கூட ரிட்டையர் ஆன பிறகு உலக வங்கியின் இந்த உயர்ந்த பதவிக்குப் போட்டியிடுவது உண்டு. உலகத்தில் எங்கே வேண்டுமானாலும் பெரிய அளவில் போர், பஞ்சம் போன்றவற்றை ஆரம்பித்து வைக்கவும், முடித்து வைக்கவும் சக்தி படைத்த பதவி அது. உல்ஃபோவிச் வங்கியில் வேலை செய்த தன்னுடைய காதலி ரிஸô என்பவருக்குப் பதவி உயர்வு கிடைக்குமாறு பார்த்துக் கொண்டதுடன், ஒரேயடியாகச் சம்பளத்தையும் உயர்த்திக் கொடுத்துவிட்டார். கிட்டத்தட்ட இரண்டு லட்சம் டாலர்; அமெரிக்காவின் மத்திய அமைச்சர்களைவிட அதிகச் சம்பளம்! இந்த ஊழலைக் கண்டு வெகுண்ட சில ஊழியர்கள் மொட்டைக் கடிதாசு எழுதிப் போட்டுவிட்டார்கள். கடும், நெடும் விசாரணை நடந்தது. ஜனாதிபதி புஷ் நேரடியாகத் தலையிட்டுக் காப்பாற்ற முயன்றும் உல்ஃபின் தலை தப்பவில்லை. பொய்ச் சாட்சி சொல்ல மறுத்துத் தன் காலை வாரிய கீழ் மட்ட அதிகாரிகளை வண்டை வண்டையாகத் திட்டிக்கொண்டே வெளியேறினார் உல்ஃபோவிச்.

புனிதப் பீடங்களும் நெபாடிஸத்தின் நெடிய கைகளிலிருந்து தப்பிக்கவில்லை. கத்தோலிக்க போப்பாண்டவர்கள் கல்யாணம் செய்து கொள்வதில்லையாதலால், அவர்களுக்கு நேரடியான வாரிசுகள் இருக்க வாய்ப்பில்லை. எனவே தத்தமது தமக்கை மகன்களைப் பதவிக்குக் கொண்டு வந்து பரம்பரை ஆட்சியை நிலை நாட்டினார்கள். உதாரணமாக போப் கலிக்ஸ்டஸ் என்பவர் தன்னுடைய இரண்டு மருமகன்களைச் சக்தி வாய்ந்த கார்டினல் பதவியில் அமர்த்தி அழகு பார்த்தார். அதில் ஒருவர் பிறகு போப் பதவிக்கு உயர்ந்தார். ஆறாவது அலெக்ஸôண்டர் என்ற அந்த போப், தன்னுடைய ரகசிய சினேகிதியின் தம்பியை ராவோடு ராவாக கார்டினல் ஆக்கினார். அந்தத் தம்பியும் பிறகு போப் ஆகிப் பரம்பரை வழக்கத்தைத் தொடர்ந்தார்: தெருவில் பம்பரம் விட்டுக் கொண்டிருந்த தன்னுடைய பதினாலு, பதினைந்து வயது மருமகன்களை சாக்லெட் தந்து அழைத்து வந்து, சீனியர் பிஷப்பாக ஆக்கினார். கடைசியாக பதினேழாம் நூற்றாண்டு முடிவில் போப் இன்னசென்ட் என்பவர்தான் உறவினர்களுக்கு சர்ச் பதவி கொடுக்கும் வழக்கத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தார்.

அரசியல்வாதிகளின் வாரிசுள், அப்பா மாதிரி முள் பாதையில் நடந்து மலையேறத் தேவையின்றி நேரடியாக ஹெலிகாப்டரில் ஏறி உச்சிக்குப் போய்விடுவது உலகம் முழுவதும் வழக்கம்தான். மலேசியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் என்று நம்மை நாலு புறமும் சூழந்து கொண்டு இதற்கு உதாரணங்கள் உண்டு. உற்றார் உறவினர் தயவில், ஒரு வார்த்தை கூட ஃப்ரெஞ்சு மொழி தெரியாதவர்கள் ஃப்ரான்ஸ் நாட்டுக்குத் தூதராக நியமிக்கப்பட்ட வினோதமும் நடந்திருக்கிறது; தன் கணவருடைய நாற்காலிக்கு நெருக்கடி நேர்ந்தபோது கொல்லைப்புறத்தில் வறட்டி தட்டிக் கொண்டிருந்த மனைவி கையை அலம்பிக் கொண்டு வந்து பதவிக்கு பிரமாணம் எடுத்துக் கொண்ட விசித்திரமும் நடந்திருக்கிறது. அறுபதுகளில் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜான், தலைமை வக்கீல் பதவிக்கு ராபர்ட் என்பவரை நியமித்தது பெரிய சர்ச்சையானது. ஏனெனில் இரண்டு பேரின் குலப் பெயரும் கென்னடி! (தம்பியும் அண்ணன் போல அரசியலில் நுழைந்து தேர்தல்களில் ஜெயித்தார்; அண்ணன் போலவே சுட்டுக் கொல்லப்பட்டார்.)

இப்படி உள்ளிருப்பவரின் உறவினர்கள் குறுக்கு வழியில் நுழைந்துவிடுவதால், தகுதியும் திறமையும் கொண்ட வேறு பலருக்கு வாய்ப்புக் கிடைக்காமல் போய்விடுகிறது என்பதுதான் இதன் பிரச்சினை. ஆனால் எல்லா நம்பிக்கைகளையும் தட்டிக் கேட்கும் அமெரிக்காவில், நெபாடிஸம் நல்லதா, கெட்டதா என்றே ஒரு விவாதம் நடக்கிறது. ஆடம்பெல்லோ என்ற அறிஞர் பல வருடம் ஆராய்ச்சி செய்து பி.எச்.டி லெவலில் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். நெபாடிஸம் என்பது, மனிதன் உள்பட எல்லாப் பிராணிகளின் இயற்கையான இனம் தழைக்கும் உந்துதலால் ஏற்படுவது என்கிறார் அவர். எறும்புக் காலனிகளில் எவ்வளவோ எறும்புகள் பசித்திருக்க, கிடைத்த உணவைத் தன் ரத்த சம்பந்தங்களுக்குக் கொடுப்பதை விஞ்ஞானிகள் கவனித்திருக்கிறார்கள். (ஆயிரம் எறும்புகளில் எந்த எறும்புக்கு எந்த எறும்பு சித்தப்பா என்பதை எப்படித்தான் அடையாளமிட்டுக் கண்காணித்தார்களோ?) தன்னுடைய நேரடி வாரிசுகளுக்கு உணவும் உடையும் கட்சிப் பதவியும் தந்து கவனித்துக் கொள்வது, நல்ல பெற்றோருடைய கடமைதானே என்கிறார் பெல்லோ.

ஜாப்ஸ்டர் போன்ற வேலை வாய்ப்பு தளங்களிலும் இதையேதான் நவீன பகவத் கீதை மாதிரி உபதேசிக்கிறார்கள். “”இந்தக் காலத்தில் வேலை கிடைப்பதே கழுதைக் கொம்பாக இருக்கிறது, இதில் லட்சிய வாதமெல்லாம் பேசிக்கொண்டு “சொந்தக் காலில்தான் நிற்பேன், சிபாரிசு பிடித்து வேலைக்கு அலையமாட்டேன்’ என்ற வறட்டு கெüரவத்தால் வாழ்க்கையை வீணாக்கிவிடாதீர்கள். தகுதி அடிப்படையில் வேலை தானாகக் கனிந்து வந்து விழும் என்று மடியை விரித்துக் கொண்டு காத்திருந்தது, போன தலைமுறை. இப்போதையே டிஜிட்டல் தலைமுறைக்கு அவ்வளவு பொறுமையெல்லாம் கிடையாது. இது சோஷல் நெட்வொர்க்கிங் யுகம்: உங்களுக்கு யாரைத் தெரியும், அவர்களுக்கு யார் யாரையெல்லாம் தெரியும் என்ற இந்த வாலைப் பின்னல்தான் சமுதாயத்தில் நம்மைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது. எனவே உங்கள் அப்பாவோ, மாமாவோ கஷ்டப்பட்டு சேமித்து வைத்திருக்கும் நன் மதிப்பைக் கூச்சமில்லாமல் உபயோகித்துக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறுங்கள். இதற்குக் கூடப் பயன்படவில்லையென்றால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் உழைத்ததுதான் என்ன பயன்?”

ஒரு அலுவலகத்தின் சீனியர் அதிகாரி, அங்கே வேலை செய்யும் வாலிபனிடம் சொன்னாராம்: “”இளைஞனே! நீ போன வருடம் இங்கே கடை நிலை க்ளார்க் வேலையில் சேர்ந்தாய்; மூன்றே மாதத்தில் கடின உழைப்பால் சூபர்வைசராக உயர்ந்தாய். ஆறு மாதம் கழித்து முதுநிலை மானேஜர் மண்டையைப் போட்ட போது, உன் திறமையின் காரணமாக அந்தப் பணியில் உன்னை அமர்த்தினேன். இப்போது உன் புத்திசாலித்தனத்தினால் உப தலைவர் பதவியும் உன்னுடையதாகிவிட்டது. அடுத்தது என்னுடைய நாற்காலிதான் பாக்கி. இப்போது நான் செய்ய வேண்டும்?

“”சீக்கிரமே ரிடையர்மெண்ட் வாங்கிக் கொண்டுவிடுங்கள், டாடி!” என்றான் இளைஞன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: