Ayurvedha Corner – Prof. S Swaminathan : Natural Medicines series – How to avoid swelling in legs
Posted by Snapjudge மேல் மே 31, 2007
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் : “கால்’ வீக்கம் முழு நீக்கம்!
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன், ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை -602 103 (பூந்தமல்லி அருகே)
இருதய வியாதிக்குப் பைபாஸ் சர்ஜரி செய்து கொண்டவர் என் தம்பி. மேலும் சர்க்கரை வியாதிக்கு இன்சுலின் 2 வேளையும் போட்டுக்கொள்கிறார். இரண்டு பாதங்களிலும் அடிக்கடி வீக்கம் ஏற்படுகிறது. நடக்கமுடியவில்லை. வயது 72. விரைவில் குணமடைய வைத்திய ஆலோசனை கூறவும்.
என்.ஆர்.சீனுவாசன், பண்ருட்டி.
கால் பகுதியில் சேரும் நீரின் அம்சங்களை ரத்தம் தன் அணுக்களின் சக்தியால் குழாய்களின் மூலம் எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஏற்படும் செயல்களின் தொய்வு இது போன்ற நீர்த்தேக்கத்தை கால்களில் ஏற்படுத்துகிறது. இருதயப் பகுதியில் ஏற்பட்டுள்ள பலவீனம், இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த செயற்கையான மருந்துகளின் உட்சேர்க்கை போன்றவற்றாலும் திசுக்களின் செயல்பாடுகளின் தொய்விற்கு வழி வகுக்கும்.
தசைகள், வியர்வைக் கோளங்கள், சிறுநீரகம், ரத்தஅணுக்கள், திசுக்கள் போன்ற பகுதிகள் வலுப்பெறும் மருந்துகளால் மட்டுமே உங்கள் தம்பிக்கு கால் வீக்கம் வராமல் பாதுகாக்க முடியும். நெருஞ்சி விதையை 10 கிராம் எடுத்து கால் லிட்டர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்கவிட்டு வடிகட்டிச் சாப்பிட்டால் கால் வீக்கம் வடியும்.
வாழைத் தண்டின் நீரைப் பருக நீர்ச்சுருக்கு, நீர்க்கல்லடைப்பு, சிறுநீரக அழற்சி, எலும்புருக்கி இவற்றில் குணம் கிட்டும். பசளைக் கீரை உணவில் அதிகம் சேர்க்க சிறுநீரை அதிகம் வெளியேறச் செய்யும். மலமிளக்கியாகவும் செயல்படும். பருப்புக் கீரையும் சாப்பிட நல்லது.
பழைய புழுங்கலரிசியை சிறிய அளவில் சாதமாக வடித்து அதில் பயித்தம் பருப்புக் கஞ்சியும், சுக்கு, மிளகு திப்பிலி ஆகியவற்றை வகைக்கு ஒரு கிராம் பொடித்துக் கலந்து, சிறிதளவு இந்துப்பு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட நல்ல உணவாகும். மதிய வேளையில் ஒரு கிளாஸ் (250-300 மிலி) கொள்ளு ரசத்துடன், சிட்டிகை திப்பிலி சூரணத்தைக் கலந்து வெதுவெதுப்பாகக் குடிக்கலாம். புளிப்பில்லாத மோர் அருந்த வீக்கம் வடியும். மதிய உணவாக கோதுமை மாவில் தயாரிக்கப்பட்ட சுக்கா ரொட்டியும் வெந்த காய்களுடன் சாப்பிட நல்லது.
கால் வீங்கியுள்ள பகுதியில் எருக்கு இலை போட்டுக் காய்ச்சிய தண்ணீரை வெதுவெதுப்பாக விடவும். பஞ்சாம்ல தைலம் எனும் ஆயுர்வேத மூலிகைத் தைலத்தை காலை மாலை உணவிற்கு முன்பாக கால்களில் வீக்கம் உள்ள பகுதிகளில் தடவி அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை ஊறி அதன் பின்னர் எருக்கு மூலிகைத் தண்ணீரால் கழுவி விடுவதும் நல்லதே.
முருங்கைப் பட்டையைப் பசு மூத்திரத்துடன் அரைத்து வீக்கம் வந்துள்ள பகுதியில் இரவில் பூச, வீக்கம் வலி குறைந்து விடும்.
தவிர்க்கப்பட வேண்டியவற்றில் புலால் உணவு, உலர்ந்த கறிகாய் எனக் கலக்கப்பட்ட சாதம், வெல்லம் கலந்த நீர், மாவுப் பண்டங்களாகிய இட்லி, தோசை போன்றவை, தயிர், அதிக உப்புக் கலந்த பொருட்கள், வெண்ணெய், நெய், புளிப்பான மதுவகை, எண்ணெய்யில் பொரித்தவை, எளிதில் ஜீரணிக்காததும், பழக்கமில்லாததும், நெஞ்செரிவு உண்டாக்கக்கூடியதுமான உணவு, பகல் தூக்கம், பெண் சேர்க்கை ஆகியவை முக்கியமானவை.
ஆயுர்வேத மருந்துகளில் பலாபுனர்நவாதி கஷாயமும், பிருகத்யாதி கஷாயமும், கோகிலாக்ஷம் எனும் கஷாயமும் சிறந்தவை. வகைக்கு 5 மிலி எடுத்து 60 மிலி சூடானதைத் தண்ணீருடன் கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவும். நல்ல பசியிருந்தால், தசமூலஹரீதகீ லேஹ்யம் ஒரு ஸ்பூன் (5 கிராம்), காலை இரவு -உணவிற்கு ஒரு மணி நேரம் முன்பாக நக்கிச் சாப்பிடவும்.
மறுமொழியொன்றை இடுங்கள்