Chikun Kunya attacks Kerala – 62 ill
Posted by Snapjudge மேல் மே 30, 2007
கேரளத்தில் 62 பேருக்கு சிக்குன் குன்யா
திருவனந்தபுரம், மே 30: கேரள மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்தில் 62 பேர் சிக்குன் குன்யா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையின் 5 உறுப்பினர்கள் குழுவுடன் நடத்திய ஆலோசனைக்கு பின், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் பி.கே. ஸ்ரீமதி இது குறித்து கூறியது:
சிக்குன் குன்யா நோய்க்கு எவரும் பலியாகவில்லை. பதனம்திட்டா மாவட்டம் சித்தூரில் அதிக அளவாக 49 பேர் சிக்குன் குன்யாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இடுக்கி, கோட்டயம், பாலக்காடு, திருச்சூர், ஆலப்புழை மற்றும் கொல்லம் ஆகிய மாவட்டங்களிலும் இந்நோய் தாக்குதல் கண்டறியப்பட்டுள்ளது என்றார் அவர்.
—————————————————————————————————————–
தமிழகத்தில் மீண்டும் சிக்குன் குனியா?
சென்னை, ஜூன். 3: தமிழகத்தில் சிக்குன் குனியா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ரூ. 7 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சனிக்கிழமை தெரிவித்தார்.
இது தொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியது:
கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் சிக்குன் குனியா நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த மாவட்டங்களில் நோய் பாதிப்பு ஏற்பட்டால் மருந்து தட்டுப்பாடு ஏற்படாத வகையில் தேவையான மருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன. சித்த மருந்துகளும் இப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் சிக்குன் குனியா நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதற்காக ரூ. 7 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் ராமச்சந்திரன்.
——————————————————————————-
கேரளாவில் சிக்குன்குனியாவால் சாவு எண்ணிக்கை 70-ஐ தாண்டியது
திருவனந்தபுரம், ஜுன்.12-
கேரள மாநிலத்தில் வேகமாக பரவி வரும் சிக்குன் குனியா வைரஸ் காய்ச்சலால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கோட்டயம், பத்தினம்திட்டை, இடுக்கி, ஆலப்புழை, கொல்லம் ஆகிய மாவட்டங் களில் தான் சிக்குன்குனியா தாக்கம் அதிகமாக உள்ளது.
இம்மாவட்டங்களில் மட்டும் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்ட 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் 10, 319 பேரும், இடுக்கி ஆஸ்பத்திரியில் 3073 பேரும், ஆலப்புழை மாவட்டத்தில் 1515 பேரும் சிகிச்சை பெற்றனர். இதுதவிர தனியார் ஆஸ்பத்திரிகளிலும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிக்குன்குனியாவுக்கு பலி யானோர் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே போகிறது. நேற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குட்டப்பன் (வயது56), அன்னம்மா (59), வேலாயுதன் (67), அய்யப்பன் (60), தோமஸ் (76), லீலா (56), பொன்னன்குட்டி (78) ஆகிய 7 பேர் பலியாகி உள்ளனர்.
இதன் மூலம் சாவு எண்ணிக்கை 70-ஐ தாண்டியது.
சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரி யில் சிகிச்சை பெற்று வந்த திருவனந்தபுரம் வெம்பாயம் பகுதியை சேர்ந்த அனில்குமார் என்பவர் நேற்று முன்தினம் இறந்தார். இவருக்கும் உஷாகுமாரி என்ற மனைவியும், ஆதிரா, அஞ்சு, ஆரியா என்ற 3 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
அனில்குமாரின் உடலை பார்த்து அவரது மனைவி உஷாகுமாரி மற்றும் 3 குழந்தைகளும் கதறி அழுதது நெஞ்சை உறுக்குவதாக இருந்தது. இனிமேல் இந்த 3 குழந்தைகளும் நான் எப்படி காப்பாற்றுவேன் என உஷாகுமாரி கதறி அழுதார்.
சிக்குன்குனியா காய்ச்சலை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் ராணுவ டாக்டர்கள் முகாம் அமைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். கோட்டயம், திருவனந்தபுரம் அம்பூரி உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ராணுவ டாக்டர்கள் அமைத்துள்ள தற்காலிக முகாமில் தினமும் ஆயிரக்கணக் காணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
bsubra said
சிக்குன் குனியா: கேரளத்தில் 7 ஆயிரம் பேர் பாதிப்பு – ராணுவ மருத்துவக் குழு விரைவு
திருவனந்தபுரம், ஜூன் 10: கேரளத்தில் சிக்குன் குனியா நோயால் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அந்த மாநிலத்தில் பல்வேறு வைரஸ் நோய்கள் பரவி வருவதாக கிடைத்த தகவலையடுத்து ராணுவ மருத்துவக் குழு அங்கு விரைந்துள்ளது.
கோட்டயம் மற்றும் பத்தனம்திட்டா மாவட்டத்தில் பல்வேறு வைரஸ் நோயால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தவிர மாநிலம் முழுவதும் சிக்குன் குனியா, டெங்கு மலேரியா, எலி காய்ச்சல் நோயாலும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.
மாநிலத்தில் இதுவரை 30-க்கும் மேற்பட்டவர்கள் இவ்வித வைரஸ் நோய்களால் இறந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், இதை கேரள அரசு மறுத்துள்ளது.
சென்னையில் இருந்து…
கேரளத்தில் ஏற்பட்டுள்ள வைரஸ் நோயை கட்டுப்படுத்தவும், அந்நோய் பரவாமல் தடுக்கவும் உரிய சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள மாநில அரசின் வேண்டுகோளின்பேரில் ராணுவ மருத்துவக் குழு கேரளம் அனுப்பப்பட்டது.
சென்னை மற்றும் செகந்திராபாதில் இருந்து ராணுவ மருத்துவக் குழுக்கள் சனிக்கிழமை திருவனந்தபுரம் சென்றடைந்தன.
குழுவில் மருத்துவ நிபுணர்கள், துணை மருத்துவ பணியாளர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் நோயை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை மேற்கொள்வார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
bsubra said
சிக்குன் குன்யாவை கட்டுப்படுத்த கேரளத்துக்கு ரூ. 4 கோடி: அமைச்சர் அன்புமணி தகவல்
சென்னை, ஜூன் 11:சிக்குன் குன்யாவை கட்டுப்படுத்த கேரள அரசுக்கு ரூ.4 கோடி வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
சிக்குன் குன்யாவால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
கேரளத்தில் உள்ள ஆலப்புழை மாவட்டம் கடந்த ஆண்டு சிக்குன் குன்யா காய்ச்சலால் பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு அதைச் சுற்றியுள்ள மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நோய் குறித்து சோதனை செய்வதற்காக நாடு முழுவதும் 14 சோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கெனவே, சிக்குன் குன்யா தடுப்பு மருந்துகள் கேரளத்திலுள்ள கிராம சுகாதாரக் குழுக்களிடம் விநியோகிக்கப்பட்டுள்ளன.
சிக்குன் குன்யா மேலும் பரவாமல் தடுப்பது குறித்து ஆய்வு செய்ய தேசிய வைரஸ் ஆய்வு நிறுவனம், இந்திய மருத்துவர்கள் சங்கத்திலிருந்து நிபுணர் குழு கேரளம் விரைந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறையின் தலைமை இயக்குநர் ஆர்.கே. ஸ்ரீவத்ஸவா ஞாயிற்றுக்கிழமை காலை பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டுள்ளார்.
கொசுக்களை ஒழிப்பதற்காக அப்பகுதிகளில் வீடுகள்தோறும் கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களில் கொசுக்களை ஒழிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக அரசை அறிவுறுத்தியுள்ளோம். இக் காய்ச்சலை கட்டுப்படுத்த கேரள அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்.
உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை: இந்தியாவில் சர்க்கரை நோய், இதய நோய், புற்றுநோய் உள்ளிட்ட நோய்களால் அதிகம் பேர் பாதிக்கப்படக் கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
அடுத்த 15 ஆண்டுகளுக்குள் சராசரி ஆயுள் காலம் மேலும் 15 ஆண்டுகள் அதிகரிக்கும் சூழலில் இந் நோய்களால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் கூடும். குறிப்பாக சர்க்கரை நோய், கண்புரை நோய்களால் கண்பார்வையிழப்போர் எண்ணிக்கை உயரும்.
மத்திய அரசே அம்மை நோய்க்கான முத்தடுப்பூசியைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளது’ என்றார் அன்புமணி.
சென்னையிலுள்ள ராஜன் கண் மருத்துவமனையில் கண் சிகிச்சைக் கருவிகளின் இயக்கத்தை அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்தார்.
bsubra said
மைசூர் பகுதியில் சிக்குன் குன்யா நோயால் 1000 பேர் பாதிப்பு
மைசூர், ஜூன் 13: மைசூர் புறநகர்ப் பகுதியில் ஒரே கிராமத்தில் 1000 பேர் சிக்குன்குன்யா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கர்நாடக மாநிலம் மைசூர் புறநகர் பகுதியில் உள்ளது பெலவந்தா கிராமம். இக்கிராமத்தில் 7000 பேர் வசித்து வருகிறார்கள். இவர்களில் சுமார் 1000 பேருக்கு காய்ச்சல், உடல் வலி ஏற்பட்டுள்ளது. இவர்களை சிக்குன்குன்யா காய்ச்சல் தாக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதையடுத்து இக் கிராமத்துக்கு விரைந்த மருத்துவக்குழு அனைவருக்கும் சிகிச்சை அளித்து வருகிறது. மேலும் 150 பேரிடம் ரத்தம் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக பெங்களூருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இக் கிராமத்தில் உள்ள குடிநீர்த் தொட்டிக்கு மாதத்தில் இருமுறையே தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் இந்த தண்ணீர் தொட்டியில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இந்த தண்ணீர் தொட்டியை சுத்தப்படுத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டன என்று இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்த மைசூர் மாவட்ட ஆட்சியர் செல்வகுமார் கூறியதாவது:
மைசூரில் சிக்குன்குன்யா நோய் பரவியுள்ளதாக கூறப்படும் பெலவந்தா கிராமத்துக்கு மருத்துவக்குழு, தேவையான மருந்துகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்நோய் மற்ற கிராமங்களுக்குப் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
bsubra said
சிக்குன்குனியா, ஆந்த்ராக்ஸ் -அம்மை நோயின் பிடியில் கேரளா: சாவு எண்ணிக்கை 100-ஐ தாண்டியது
திருவனந்தபுரம், ஜுன்.14-
கேரளாவில் சாதாரண வைரஸ் காய்ச்சலில் தொடங்கிய காய்ச்சல் சிக்குன் குனியா, டெங்கு காய்ச்சல், ஆந்த்ராக்ஸ் என தொடர்ந்து இன்று அம்மை நோயில் போய் நிற்கிறது. சிக்குன்குனியாவால் உயிரிழப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் கேரளாவில் கால்நடைகளை தாக்கும் ஆந்த்ராக்ஸ் நோயும் பரவி வருகிறது.
இந்தநிலையில் அம்மை நோயும் அங்கு பரவத் தொடங்கி உள்ளது. அம்மை நோய் தாக்கிய ஒருவர் பாலக்காட்டில் பலியாகி உள்ளார். அவரது பெயர் அப்துல்காதர் (வயது 65). பாலக்காடு மாவட்டம் இலவஞ்சேரியைச் சேர்ந்தவர். அம்மை நோய் தாக்கிய இவர் உடல் முழுவதும் கொப்புளங் களுடன் கொல்லங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து பாலக்காடு மாவட்டத்தில் அம்மை நோய் தடுப்பு நடவடிக் கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது.
இதற்கிடையே சிக்குன் குனியாவால் பலியானோர் எண்ணிக்கை 100-ஐ தாண்டி உள்ளது. நேற்று மட்டும் கேரளாவில் 14 பேர் இறந்துள்ளனர். கோட்டயத்தில் 8 பேரும், ஆலப்புழையில் 2 பேரும், பத்தனம்திட்டை, கொல்லம், எர்ணாகுளம், வயநாடு ஆகிய இடங்களில் தலா ஒருவரும் பலியாகி உள்ளனர்.
நேற்று ஒரேநாளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு வந்து சென்றோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 408. இவர்களில் 130 பேருக்கு சிக்குன் குனியா தாக்கி இருப்பது தெரியவந்துள்ளது. கோட்டயம் மருத்துவக்கல்லூரியில் 125 பேருக்கு சிக்குன்குனியா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.