DMK Government’s One year Completion – Analysis of woes & achievements: Election, Politics, manifesto
Posted by Snapjudge மேல் மே 28, 2007
சாதனைகளும் வேதனைகளும்
தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் திமுக அரசு ஒரே ஆண்டில் நிறைவேற்றிவிட்டது என்று முதல்வர் கருணாநிதி சமீபத்தில் பேசி இருப்பது சற்றே வியப்பையும் திகைப்பையும் ஏற்படுத்துகிறது.
கடந்த ஓர் ஆண்டில் எட்டுத் தொழில் நிறுவனங்களுடன் சுமார் 6985 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலைகள் தொடங்கத் தமிழக அரசு ஒப்பந்தம் செய்திருப்பதாக தொழில்துறையின் குறிப்பு தெரிவிக்கிறது. இந்த முதலீட்டின் கணிசமான பகுதி எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆட்டோமொபைல் தொழிலுக்குரியது என்கிறது அந்தக் குறிப்பு. இதன் மூலம் 37,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும் சுமார் 60,000 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்பது அரசின் எதிர்பார்ப்பு.
கடந்த ஓர் ஆண்டில் தமிழகத்தை நோக்கி முதலீட்டாளர்கள் படையெடுத்தார்கள் என்பதில் சந்தேகமில்லை. சொல்லப்போனால், தகவல் தொழில்நுட்பத் தொழில் வளர்ச்சியில் தமிழகம் மிகப்பெரிய சாதனை படைத்திருக்கிறது என்பதையும் ஒத்துக்கொண்டே தீர வேண்டும். இந்த விஷயத்தில் அரசின் பங்கு கணிசமானது என்பதையும் மறுப்பதற்கில்லை.
அதேநேரத்தில், ஆட்சிக்கு வந்த புதிதில் தொழிற்சாலைகளை நிறுவுவதிலும், முதலீடுகளை ஈர்ப்பதிலும் அரசு காட்டிய முனைப்பு இப்போது காணப்படவில்லை. இரண்டு ரூபாய்க்கு அரிசி கொடுக்கிறோம் என்று சொல்லி சந்தோஷப்படும் அரசு, வெளிமார்க்கெட்டில் அரிசி விலை தாறுமாறாக ஏறி இருப்பதைப் பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
இரண்டு ரூபாய் அரிசி என்று விளம்பரப்படுத்தி, முதல் இரண்டு மாதங்களுக்கு முறையாக விநியோகமும் நடந்தது. இப்போது பல ரேஷன் கடைகளில் அரிசி ஸ்டாக் இருப்பதில்லை என்பதுதான் உண்மை. ரேஷன் அரிசி கள்ளமார்க்கெட்டில் விற்கப்படுகிறது என்கிற முணுமுணுப்பு தெருவெல்லாம் கேட்கிறது. ஆனால் அரசின் காதுக்கு மட்டும் கேட்கவில்லை. சராசரி பொதுமக்களின் பார்வையில் ஒரு நல்லரசு என்பது விலைவாசியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அரசு. எம்.ஜி.ஆரின் மிகப்பெரிய சாதனை என்று அவரது ஆதரவாளர்கள் இப்போதும் சொல்வது, அவரது பதிமூன்று வருடகால ஆட்சியில் அரிசி விலை ஏறவே இல்லை என்பதைத்தான்.
ரேஷன் கடைகளுக்கு ஞாயிறு விடுமுறை என்கிற அறிவிப்பு மத்தியதர வகுப்பினருக்கும் அரசு அலுவலர்களுக்கும் பெரிய அளவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது என்பது அரசுக்கு ஏனோ தெரியவில்லை. இந்த அறிவிப்புகள் மூலம் பலர் இரண்டு ரூபாய் அரிசியையும், மற்ற ரேஷன் பொருள்களையும் வாங்க முடியாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம். அது கள்ளச்சந்தையில் ரேஷன் பொருள்கள் விற்கப்பட வழிகோலும் என்று மக்கள் வெளிப்படையாகவே பேசுகிறார்கள்.
அதேபோல, அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுத்தும் எரிச்சலும் ஆத்திரமும் கொஞ்ச நஞ்சமல்ல. கடந்த அதிமுக ஆட்சியில் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து மின்வெட்டு இருக்கவில்லை என்று நினைவுகூறாதவர்கள் குறைவு.
புதிய பஸ்கள் பல அறிமுகப்படுத்தப்படுகின்றன என்பது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். ஆனால் அந்த சொகுசு பஸ்களில் அநியாயக் கட்டணம் என்று மனம் நொந்து சபித்தபடி பிரயாணம் செய்பவர்களே அதிகம். போக்குவரத்துத் துறையின் வருமான அதிகரிப்புக்காகக் குறைந்த கட்டண பஸ் சர்வீஸ்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது மக்களுக்குப் புரியாமல் இல்லை.
சாதனைகளைப் பட்டியலிடுவதிலும், வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்று மார்தட்டிக் கொள்வதிலும், பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டிருக்கின்றன என்று புள்ளிவிவரங்களை அடுக்குவதிலும் ஓர் அரசின் பணி முடிந்துவிடுவதில்லை. சராசரி மனிதனின் அடிப்படைத் தேவைகளையும், உணர்வுகளையும் புரிந்து கொண்ட அரசாகவும் அந்த அரசு செயல்பட வேண்டும்.
அப்படிப் பார்த்தால், ஓர் ஆண்டு சாதனைகளைப் பாராட்டவிடாமல் தடுக்கின்றன சராசரி மனிதன் படும் வேதனைகள்!
மறுமொழியொன்றை இடுங்கள்