Neeraja Choudhry: Manmohan Singh’s Three Year Anniversary – Achievements
Posted by Snapjudge மேல் மே 21, 2007
மன்மோகன் அரசின் மூன்றாண்டு சாதனைகள்!
நீரஜா சௌத்ரி
மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மூன்றாண்டு கால ஆட்சிக்கு நல்ல உதாரணமாக, திமுகவைச் சேர்ந்த வி. ராதிகா செல்வி மத்திய இணை அமைச்சராகப் பதவியேற்ற விதம், சூழ்நிலை ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
அடுத்தடுத்து கிடைத்த தேர்தல் தோல்விகளால் காங்கிரஸ் கட்சி பலவீனம் அடைந்திருப்பதையும், அதனால் இந்தக் கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள தோழமைக் கட்சிகள் நாளுக்குநாள் தங்களுடைய நெருக்குதலை அதிகரித்துக் கொண்டே வருவதையும் சுட்டிக்காட்ட இந்த ஒரு சம்பவமே போதும்.
பிரதமரின் அதிகாரம் குறைந்துகொண்டே வந்து, “”இன்று யார் எப்படி ஆட்டுவித்தாலும் ஆடுகிற நிலைமைக்கு” வந்து விட்டதையும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைமை மாறி எது நடந்தாலும் “”சகித்துக் கொள்வது” என்கிற பரிபக்குவ நிலையை அவர் எய்திவிட்டதையுமே இது உணர்த்துகிறது.
மத்திய அமைச்சரவையிலிருந்து விலகிய தயாநிதி மாறனுக்குப் பதிலாக, திமுக சார்பில் அமைச்சரவையில் இடம்பெறப் போகிறவர் யார், அவருடைய இலாகா எது, பதவியேற்பு நாள் என்றைக்கு என்பதையெல்லாம் தீர்மானம் செய்யும் அதிகாரம் பிரதமருக்கு இல்லை!
ராதிகா செல்விதான் அடுத்து இணை அமைச்சராகப் பதவி ஏற்பார், உள்துறை அமைச்சகம்தான் அவருக்கு வழங்கப்படும், பதவியேற்பு இந்தத் தேதியில் நடைபெறும் என்பதெல்லாம் முதலில் சென்னையில்தான் அறிவிக்கப்படுகிறது, தில்லியில் அல்ல!
மத்திய அரசில் தங்கள் கட்சி சார்பில் இடம்பெறப் போவது யார் என்று பிராந்தியக் கட்சிகளின் தலைவர்கள் தீர்மானிப்பது இது முதல்முறையல்ல. 1996-ல் எச்.டி. தேவ கெüடா பிரதமரானதிலிருந்தே இதுதான் நடைமுறையாக இருக்கிறது. அவரது அரசையே, “”முதலமைச்சர்களின் அரசு” என்று கேலியாகக் குறிப்பிடுவார்கள்.
கூட்டணி அரசில் தோழமைக் கட்சிகள் முக்கியமான இலாகாக்களைக் கேட்டு வாங்குவதும் இது முதல்முறையல்ல. ஆதரிக்கும் கட்சியின் வலுவுக்கு ஏற்ப இதில் “”தீவிரமான பேரமே” நடைபெறுவது வழக்கம்.
இவை எல்லாவற்றையும்விட முக்கியம் என்னவென்றால், மத்திய திட்டக்குழு கூட்டத்துக்குத் தலைமை தாங்கிக் கொண்டிருந்த பிரதமர், தமிழக முதலமைச்சரிடமிருந்து இரண்டு கடிதங்களைக் கொண்டுவந்த தூதரை (மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி) வரவேற்க கூட்டத்தின் பாதியிலேயே எழுந்து வெளியே வருகிறார்.
குடியரசுத் தலைவரோ, சோனியா காந்தியோ பிரதமருடன் பேச விரும்பினால்கூட, அது முன்கூட்டியே அவருக்குத் தெரிவிக்கப்பட்டு நேரம் ஒதுக்கப்படுகிறது. பிரதமர் அப்படி நேரம் ஒதுக்கிச் சந்திக்கும்வரை காத்திருக்க முடியாத அந்தத் தூதர் உடனே சந்திக்க வேண்டும் என்று ஆலாய்ப் பறக்கிறார்; சிறிது நேரம் கழித்து சந்திக்கிறேனே என்று பிரதமரால் அவரிடம் சொல்ல முடியவில்லை!
மே 22-ம் தேதியுடன் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதைக் கொண்டாட பெரிய விழா எடுப்பதற்கான அறிகுறி ஏதும் தெரியவில்லை; கடந்த ஆண்டைப் போல ஆட்சியின் சாதனைகளைப் பட்டியலிடும் அறிக்கையையும் காணவில்லை.
சாதகமான அம்சம் எதுவென்றால், கடந்த மூன்று ஆண்டுகளாகவே நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் அதிகரித்துக் கொண்டே வந்து இப்போது 9% ஆகியிருக்கிறது. அன்னியச் செலாவணி கையிருப்பு மிக அதிகமாக இருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் தர யாரும் தீவிரமாக முயற்சிக்காவிட்டாலும், முக்கியமான விஷயங்களில் முடிவு எடுப்பதற்கு முன்பு இந்தியாவிடமும் ஆலோசனை கலக்கின்றனர்.
நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாகவே அங்கும் இங்கும் வன்செயல்கள் நிகழ்கின்றன. ஹைதராபாத் நகரின் மெக்கா மசூதியில் குண்டு வெடிப்பு நிகழ்ந்திருப்பது சமீபத்திய நிகழ்வாகும். பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் சீக்கியர்களுக்கும் தேரா பாபா ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல்கள் நடப்பது கவலைதரும் அம்சமாகும். காலிஸ்தான் கிளர்ச்சி கால வன்முறைச் சம்பவங்கள் நினைவைவிட்டு நீங்காததால், இந்த மோதல் எங்கே பெரிதாகிவிடுமோ என்று நடுநிலையாளர்கள் அஞ்சுகின்றனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு மட்டுமே வழக்கமாக இருந்த பயங்கரவாதிகளின் தாக்குதல் இப்போது பரவலாக எல்லா மாநிலங்களிலும் தலைகாட்ட ஆரம்பித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தலைமையில் மத்தியில் கூட்டணி அரசு ஆட்சி செய்வது இதுவே முதல் முறை. 2004-ல் தொடங்கப்பட்ட இந்த கூட்டணி அரசு ஏற்பாட்டில், அரசியல் அதிகாரம் தனியாகவும் (சோனியா), ஆட்சி நிர்வாகம் (மன்மோகன்) தனியாகவும் பிரிக்கப்பட்டது. தெலங்கானா ராஷ்டிர சமிதி, சமாஜவாதி கட்சி ஆகியவை அரசை ஆதரிப்பதில்லை என்று முடிவு செய்து விலகிய போதிலும் கவிழாத அளவுக்கு “”நிலையான அரசாக” ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இருக்கிறது.
இந்த ஆட்சியில் பாதகமான அம்சங்களும் இருக்கின்றன; ஆளும் கூட்டணியில் உள்ளவர்களுக்கு இது கலக்கத்தையே அளித்துவருகிறது. விலைவாசி உயர்ந்துகொண்டே இருக்கிறது; கடன் சுமையால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும் தொடர்கிறது. பணக்காரர்களைப் பாதுகாக்கத்தான் காங்கிரஸ் கட்சி என்ற எண்ணம் மக்களிடையே ஆழமாக வேரூன்றி வருகிறது.
பொதுத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து தோற்றுக்கொண்டே வருகிறது; சமீபத்திய தோல்வி உத்தரப்பிரதேசத்தில். பஞ்சாப், உத்தரகண்ட், மும்பை-தில்லி மாநகரமன்றத் தேர்தல்கள் இதற்கு முந்தையவை. இதே ரீதியில் போய்க்கொண்டிருந்தால் 2009 மக்களவை பொதுத் தேர்தலில் அது இரட்டை இலக்கத்தில்தான் எம்.பி.க்களைப் பெற முடியும்.
பொருளாதாரம் வளர்ந்திருக்கிறது ஆனால் அது மக்களுக்குப் பயன்படவில்லை என்று காங்கிரஸ்காரர்களே இப்போது ஒப்புக்கொள்கிறார்கள். 60% மக்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கும் வேளாண்மைத்துறை 2% வளர்ச்சியைத்தான் பெற்றுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையோ (ஐ.டி.) குதிரைப் பாய்ச்சலில் ஓடிக்கொண்டிருக்கிறது. அடித்தளக் கட்டமைப்புகள் மிக மோசமாக இருக்கும் பின்தங்கிய பகுதிகளும், உள்நாட்டுப் பகுதிகளும் தொடர்ந்து வறுமையில் ஆழ்ந்துகிடக்கின்றன.
சீனா, ஜப்பானைவிட அதிக அளவில் புதுக் கோடீஸ்வரர்கள் உருவாகும் நாடாக இந்தியா மாறி வருகிறது; அதே வேளையில் மக்கள் தொகையில் மிகப் பெரும்பான்மையினர் பரம ஏழைகளாக வறுமையில் வாடுகின்றனர்.
பணக்காரர்களுக்கு சாதகமான கட்சி என்ற தோற்றத்தை விலக்க, அனைவருக்கும் கல்வி திட்டம், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், தேசிய ஊரக சுகாதார திட்டம், நகர்ப்புற மீட்சித்திட்டம் போன்றவற்றை அமல்செய்ய ஆரம்பித்தும் எதிர்பார்த்த “”அரசியல் விளைவை” அந்தத் திட்டங்களால் ஏற்படுத்த முடியவில்லை.
முஸ்லிம்களின் ஆதரவைத் திரும்பப்பெற, சச்சார் கமிட்டியின் பரிந்துரைகளைப் பெற்று அதை பகிரங்கப்படுத்துவது, ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடங்களை ஒதுக்குவது போன்ற அதன் “”அரசியல் முடிவுகளும்” எதிர்பார்த்த பலன்களைத் தரவில்லை. இட ஒதுக்கீட்டு முடிவால் அதற்குக் கிடைத்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வாக்குகளைவிட, காங்கிரஸ் கட்சி இழந்த முற்பட்ட வகுப்பினரின் வாக்குகள்தான் அதிகம் என்பதையே உத்தரப்பிரதேச தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.
முஸ்லிம்களும் காங்கிரஸ் கட்சியின் முடிவுகளால் மகிழ்ச்சி அடைந்தாற்போலத் தெரியவில்லை. ஈரான் விவகாரத்திலும், சதாம் ஹுசைனை இராக்கில் தூக்கில் போட்ட விவகாரத்திலும் காங்கிரஸ் கட்சி நடந்துகொண்ட விதம் அவர்களை நோகவைத்தது. சமத்துவம், சம நீதி என்பவை கட்சிக்கும் அரசுக்கும் இப்போது பெரிய சவாலாகத் திகழ்கின்றன. கூட்டணியிலேயே பெரியது காங்கிரஸ் கட்சிதான் என்பதால், எந்தத் தோல்விக்கும் அதன் தலையில் பழியைப் போடுவது தோழமைக் கட்சிகளுக்கு மிக எளிதாக இருக்கிறது. எல்லாம் விபரீதமாகிவருகிறது என்று காங்கிரஸýக்குத் தெரிகிறது, ஆனால் அதை எப்படி தடுத்து நிறுத்துவது என்றுதான் தெரியவில்லை.
===================================================
மன்மோகன் அரசின் சாதனைகள்-2
நீரஜா சௌத்ரி
உயர்ந்துவரும் விலைவாசியைக் கட்டுப்படுத்துங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைப்பதில் வேகம் வேண்டாம், அரசுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க வேண்டாம் என்றெல்லாம் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதினார்.
திறமைசாலிகளான மத்திய அமைச்சர்கள் “”அரசியல்” விளைவுகளைக் கருதி நடவடிக்கைகளை எடுக்கத் தயங்குவதால் நிலைமை மோசமாக இருக்கிறது. நிதி அமைச்சகத்தை நிர்வகிப்பதில் திறமைசாலியான ப. சிதம்பரம் விலைவாசி உயர்வுக்காகக் கண்டிக்கப்படுகிறார். தேர்தலில் காங்கிரஸ் தோற்பதற்கு விலைவாசி உயர்வும் ஒரு காரணமாக இருக்கிறது.
பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வர ஆரம்பித்த உடனேயே கட்சித்தலைவர்கள், “”தோல்விக்குக் காரணம் விலைவாசி உயர்வுதான்” என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள். சோனியா காந்தியின் ஒப்புதல் இல்லாமல் அம்பிகா சோனியும் ஜெயந்தி நடராஜனும் இப்படிப் பேசியிருக்க வழியில்லை.
“”விலை ஏன் உயருகிறது என்று இனிமேல் விளக்கம் அளித்துக்கொண்டிருக்க முடியாது, நீங்கள் வேண்டுமானால் அந்த வேலையைச் செய்யுங்கள்” என்று விவசாய அமைச்சர் சரத் பவாரிடம், நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினாராம். வேளாண் விளைபொருள்களுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்ற பேச்சு வந்தபோது, அவர் இப்படிக் கூறினாராம்.
திறமையான நிர்வாகி என்றாலும், கோதுமை இறக்குமதி குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்காமல், சந்தையில் விலை அதிகரித்த பிறகு எடுத்ததற்காக பவாரையும் கட்சியினர் கண்டித்தனர். வெற்றிகரமான வர்த்தக அமைச்சராகக் கருதப்பட்ட கமல்நாத், சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு நந்திகிராமம் போன்ற ஊர்களில் கிடைத்த “”வரவேற்பினால்” சிக்கலில் ஆழ்ந்திருக்கிறார்.
வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணப் முகர்ஜி எந்த நாட்டையும் சாராமல் நடுநிலைமையைக் கடைப்பிடிக்க முற்பட்டுள்ளார். அமெரிக்காவுடனான ஆக்கச் செயலுக்கான அணு உடன்பாட்டை அரசு நியாயப்படுத்திவரும் அதே வேளையில் ஈரானுடனான உறவை வலுப்படுத்த அந்த நாட்டுக்குச் சென்றுவந்தார். பிரணப் முகர்ஜி குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டால், மத்திய அரசே கவிழ்ந்துவிடும் என்ற அளவுக்கு அவருடைய ஆதரவாளர்கள் அவருடைய முக்கியத்துவம் குறித்துப் பேசுகின்றனர்.
ரயில்வே துறையில் நிதிநிலைமையை மேம்படுத்திய லாலு பிரசாதின் வெற்றியின் ரகசியம் என்ன என்று அறிய ஹார்வர்டின் மேலாண்மையியல் மாணவர்கள் தில்லிக்கு வருகின்றனர். திறமையான அதிகாரிகளை ஊக்குவித்து, அவர்களைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்ததே லாலுவின் வெற்றி ரகசியமாகும். சுற்றுலா, கலாசாரத்துறை அமைச்சர் அம்பிகா சோனி, விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் பிரஃபுல் படேல், அறிவியல், தொழில்நுட்பத்துறை அமைச்சர் கபில் சிபல், (பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்தபோது) மணி சங்கர ஐயர் ஆகியோர் கடந்த ஆண்டு சிறப்பாகச் செயல்பட்ட அமைச்சர்களாகப் பாராட்டப்படுகின்றனர்.
உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி அமைப்பு ரீதியாக வலுவாக இல்லாததே, பேரவைத் தேர்தலில் தோல்விக்குக் காரணம் என்று சோனியா காந்தி பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருக்கிறார். 2004-05-ல் மேல் சாதியினரும் முஸ்லிம்களும் ஆதரித்த நிலையிலும்கூட கட்சியை வலுப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை காங்கிரஸ் கோட்டைவிட்டது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏ.ஐ.சி.சி.) திருத்தியமைக்கப்படவில்லை. கட்சியின் பொதுச் செயலாளர்களாக இருந்த 3 பேர் அமைச்சர்களானதால் காலியான அந்தப்பதவிகள் இன்றுவரை நிரப்பப்படவில்லை. பல மாநிலங்களில் பிரதேச காங்கிரஸ் கமிட்டிகள் திருத்தியமைக்கப்படவில்லை.
வேட்பாளர்களை மாயாவதி, தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னதாகவே முடிவு செய்கிறார். தில்லி மாநகராட்சி தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்யவே இன்னமும் இரண்டே நாள்கள்தான் இருக்கின்றன என்ற நிலையில்தான் வேட்பாளர்களையே காங்கிரஸ் கட்சி தேர்வு செய்தது.
சோனியா காந்திக்கு மக்களுடனான தொடர்பு குறைந்துகொண்டே வருகிறது. ஒரு பிரச்னை குறித்தோ, தீர்மானம் குறித்தோ தீவிரமாக விவாதித்து முடிவெடுக்கும் போக்கு கட்சியில் குறைந்து வருகிறது.
இரு கூட்டணிகளை மையமாகக் கொண்டுதான் தேசிய அரசியல் என்ற நிலைமை ஏற்பட்டிருந்தாலும் தேசியக் கட்சிகளுக்குத் தேவையே இல்லை என்கிற நிலைமை குறித்து காங்கிரஸ், பாஜக இரண்டும் கவலைப்பட்டாக வேண்டும். இதனால்தான் இருகட்சி ஆட்சி முறை வேண்டும் என்றார் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்பதைத் தீர்மானிப்பதற்கான முன்முயற்சி, உத்தரப்பிரதேச வெற்றிக்குப் பிறகு மாயாவதியின் கைக்குப் போய்விட்டது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் இரண்டு ஆண்டு காலத்தில் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து எதிர்க்கட்சியினரும் மக்களும் ஒருவித பரிதாபத்துடன் பேசினர். இப்போது அவரை, “”மகாகனம் பொருந்திய அமைச்சரவைச் செயலர்” என்று ஏளனமாகக் கூறுகின்றனர்.
அரசிடமிருந்து எல்லாவிதமான சலுகைகளையும் எதிர்பார்க்கும் “”கையேந்தி முதலாளித்துவம்” கூடாது என்று ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து பிரதமர் மன்மோகன் சாடியிருக்கிறார். ஆட்சி அதிகாரம் தோழமைக் கட்சிகளிடமும் சோனியா காந்தியிடமும்தான் இருக்கிறது என்ற விரக்தியால் வந்த விமர்சனம் அது.
உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் தோற்றதால் மன்மோகன் சிங்குக்கு மறைமுகமாக ஒரு நன்மை ஏற்பட்டிருக்கிறது. இல்லாவிட்டால் ராகுல் காந்தியைப் பிரதமராக்கு, அல்லது அமைச்சராக்கு என்ற கோஷம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எதிரொலித்திருக்கும். சோனியாவும் மன்மோகனும் உத்தரப் பிரதேசத் தேர்தலை முன் நின்று தலைமை வகித்திருந்தால் வெற்றி கிட்டியிருக்கும். என்ன நடக்கிறதோ அதற்கேற்ப செயல்படலாம் என்ற நினைப்பே தோல்விக்குக் காரணம்.
கட்சியின் முன்னாலும் ஆட்சியின் முன்னாலும் உள்ள பிரச்னைகளை தொலைபேசி மூலம் தனித்துப் பேசி விவாதிக்கும் நிலையில் இருவருமே இல்லை.
2004-ல் பிராந்திய கட்சிகளை ஒன்று சேர்த்துக் கூட்டணி அமைத்து, முன்னிலையில் இருந்து பிரசாரம் செய்து வெற்றியை ஈட்டினார் சோனியா. ஆட்சிக்கு வந்த பிறகு பின்னணியில் இருந்து ஆட்சியை வழிநடத்த முற்பட்டார். ஆனால் அதில் முனைப்பும், தீவிர முயற்சியும் இல்லாததால் தொய்வு ஏற்பட்டுவிட்டது. தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க விரும்பினால் காங்கிரஸ் கட்சி தனது தவறுகளை இப்போதாவது திருத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், 2009 இவர்கள் எதிர்பார்ப்பதுபோல அமையாது.
தமிழில்: சாரி
———————————————————————————————–
எல்லா துறையிலும் காங். கூட்டணி அரசுக்கு தோல்வி: பாஜக 66 பக்க கண்டன அறிக்கை
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் 3 ஆண்டுக்கால பதவி நிறைவையொட்டி, பாரதீய ஜனதா தயாரித்த 66 பக்க அறிக்கை தில்லியில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் (இடமிருந்து 3-வது) இதை வெளியிட்டார். ஐ.மு.கூ. ஆட்சியில் சாமான்ய மனிதனுக்கு ஏற்பட்ட துயரங்களைப் பட்டியலிடுகிறது அறிக்கை.
புது தில்லி, மே 23: “”பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தனது 3 ஆண்டுக்கால ஆட்சியில் எல்லா துறைகளிலும் தோற்றுவிட்டது” என்று பாரதீய ஜனதா குற்றம் சாட்டியிருக்கிறது. இது தொடர்பாக 66 பக்க அறிக்கையை கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் தில்லியில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.
“நல்ல பொருளாதார நிர்வாகத்துக்கு அடையாளமே விலைவாசியை கட்டுக்குள் வைத்திருப்பதுதான். அத்தியாவசியப் பண்டங்களின் விலை ஏழைகளும், நடுத்தர மக்களும் நலமாக வாழ முடியாத அளவுக்கு உயர்ந்து கொண்டே வருகிறது. இதை கட்டுப்படுத்த அரசு எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
உள்நாட்டு பாதுகாப்பிலும் கோட்டைவிட்டுவிட்டது அரசு. பயங்கரவாதிகளையும் அவர்களுக்குத் துணை போகிறவர்களையும் கட்டுக்குள் வைக்கத்தான் “”பொடா” சட்டம் கொண்டுவரப்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான இந்த அரசு ஆட்சிக்கு வந்த பிறகு அயோத்தி, பெங்களூர், காசி, தில்லி, மும்பை, மாலேகாம், ஹரியாணாவில் சம்ஜெüதா எக்ஸ்பிரஸ் ரயில், ஜம்மு மற்றும் இப்போது ஹைதராபாத் ஆகிய இடங்களில் பயங்கரவாதிகள் குண்டுவெடிப்புகள் நடத்தியுள்ளனர். இவற்றைத் தடுக்கத்தான் முடியவில்லை என்றாலும், சம்பந்தப்பட்டவர்களை அதன் பிறகு பிடிப்பதிலும் இந்த அரசு கோட்டைவிட்டுவிட்டது.
கோயம்புத்தூர் சிறையில் இருக்கும் அப்துல் நாசர் மதானிக்குச் சலுகை காட்ட வேண்டும் என்று கேரள சட்டப் பேரவையில் “”ஒருமனதாக” தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது; தில்லியில் நாடாளுமன்றத்தின்மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் முக்கியப் பங்கு வகித்தவர் என்று தீர்ப்பு கூறப்பட்ட அப்சல் குருவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டது. சிறுபான்மை மக்களை வாக்கு வங்கியாகக் கருதியே எல்லா முடிவுகளும் எடுக்கப்படுகின்றன.
ஆந்திரம், ஒரிசா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் நக்சல்களை ஒடுக்க முடியவில்லை.
அரிசி, கோதுமை, பருப்புவகைகள், சமையல் எண்ணெய், காய்கறிகள், பெட்ரோல், டீசல், சிமெண்ட், இரும்பு ஆகிய எல்லாவற்றின் விலையும் கடந்த 3 ஆண்டுகளாக விஷம் போல ஏறி வருகின்றன.
நாட்டின் நிதி நிலைமை உபரி என்ற நிலையிலிருந்து பற்றாக்குறை என்ற அளவுக்கு இப்போது சரிந்துவிட்டது.
பாஜக கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது வீடுகட்ட 6% வட்டியில் கடன் தரப்பட்டது. இப்போது அந்த கடனுக்கான வட்டி வீதம் 12% என்று இருமடங்காக உயர்ந்துவிட்டது. இதனால் நடுத்தர மக்கள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.
பாதுகாப்புப் படையினர் மனித உரிமைகளை மீறினால் இந்த அரசால் சகித்துக் கொள்ள முடியாது என்று முழங்கினார் பிரதமர் மன்மோகன் சிங்; பயங்கரவாதிகள் மக்களைத் தாக்கினால் சகித்துக் கொள்வது என்று தீர்மானித்துவிட்டார்களா என்று கேட்க விரும்புகிறோம். பாகிஸ்தானில் இன்னமும் 59 பயங்கரவாதப் பயிற்சி முகாம்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன என்று வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியே கூறியிருக்கிறார். அந்த முகாம்கள் தொடர்பாக பாகிஸ்தானிடம் என்ன பேசினார்கள் என்று தெரிய வேண்டும்.
காஷ்மீரில் சமீபத்தில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் பாகிஸ்தான் ஆதரவு இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் ஆதரவாளர்கள், பாகிஸ்தான் கொடிகளுடன் இந்திய எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிக்கொண்டு சென்றனர். அவர்கள் மீது மத்திய அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே இந்த கூட்டணியின் 3 ஆண்டு ஆட்சிக்கு உரைகல்லாகத் திகழ்கிறது’ என்று ராஜ்நாத் சிங் வெளியிட்ட குற்றச்சாட்டு தெரிவிக்கிறது.
“பிரதமர் பதவியே வேண்டாம் என்று தியாகி போல நடித்த சோனியா காந்திதான் இந்நாட்டின் உண்மையான அதிகாரம் உள்ள பிரதமர் என்பது நாடறிந்த ரகசியம். அப்படிக் கூறியவர் தேசிய ஆலோசனைக் கவுன்சில் தலைவர் என்ற பதவியை காபினெட் அமைச்சர் அந்தஸ்தில் அவசர அவசரமாக ஏற்றார். அதை பிரதமரின் அலுவலகத்துக்கு இணையாக உருவாக்கினார்கள். ஜெயா பச்சனை அரசியல் ரீதியாகப் பழிவாங்க, ஒருவருக்கு இரு பதவியா என்று தேர்தல் கமிஷனிடம் புகார் செய்ய வைத்து, பிறகு அதே அஸ்திரம் தன் மீதும் பாய வருகிறது என்று தெரிந்ததும் முதலில் மக்களவை உறுப்பினர் பதவியையும் பிறகு தேசிய ஆலோசனைக் கவுன்சில் தலைவர் பதவியையும் ராஜிநாமா செய்து தியாக நாடகத்தை முடித்தார்’ என்றும் அந்த அறிக்கை கடுமையாகச் சாடுகிறது.
———————————————————————————————–
07.06.07
குமுதம் ரிப்போர்ட்டர்
சோலை – காங்கிரஸ் ஆட்சி: அலசல்
சென்ற ஆண்டுத் தொடக்கத்தில் மன்மோகன் சிங் அரசு பற்றி ஒரு கருத்துக் கணிப்பு வெளியானது. நாடாளுமன்றத்திற்கு மீண்டும் தேர்தலென்றால், ஐக்கிய முன்னணி 400 இடங்களுக்கு மேல் பெறும். காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டாலும் 300 இடங்களில் வெற்றி பெறும் என்று அந்தக் கணிப்பு தெரிவித்தது.
அதன் பின்னர் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் _ காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டால் முகவரியே காணாமல் போகும் என்பதற்கு உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் சாட்சியாக அமைந்துவிட்டது.
மன்மோகன் சிங் அரசு மூன்றாண்டுகளை முடித்துவிட்ட நிலையில், பிரபல தொலைக்காட்சி நிறுவனம் இப்போது கருத்துக் கணிப்பு நடத்தியது. மன்மோகன் சிங் அரசு மோசம் என்று 47 சதவிகிதம் பேர் தீர்ப்பளித்திருக்கின்றனர். ஏதோ பரவாயில்லை என்று 7 சதவிகிதம் பேர் சொல்லியிருக்கிறார்கள். நல்ல ஆட்சி என்று இரண்டு சதவிகிதம் பேர்தான் தீர்ப்பளித்திருக்கிறார்கள். அவர்கள் தொழில் சாம்ராஜ்ய அதிபதிகளாக இருக்கலாம்.
என்ன காரணம்? இந்த அரசின் சாதனைகள், சாதாரண மக்களை எட்டவில்லை என்று மத்திய அமைச்சர் மணிசங்கர அய்யரே சொல்லிவிட்டார்.
ஐயோ! விலைவாசி உயர்கிறது என்று மூன்று ஆண்டுகளாக இடதுசாரிக் கட்சிகள் குரல் கொடுத்துப் பார்த்தன. தொண்டை வறண்டு புண்ணாகிப் போனதுதான் கை கண்ட பலன். ஆமாம். பணவீக்கம் _ விலைவாசி உயர்வுதான் அரசு மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்படக் காரணம் என்று மன்மோகன் சிங் இப்போது கூறுகிறார்.
விலைவாசியை உயர்த்துவதில்தான் தொழில் அதிபர்கள் போட்டி போடுகிறார்கள் என்று அவர் வேதனை தெரிவித்திருக்கிறார். காலம் கடந்து ஞானம் பிறந்திருக்கிறது.
உணவு தானியங்களைத் தனியார் கொள்முதல் செய்ய அனுமதித்தது _ ஆன்_லைன் யூக பேர வணிகத்தை வளர்த்தது ஆகிய பல காரணங்கள்தான் விலைவாசி உயர்விற்குக் காரணம் என்பது பாமர மக்களுக்கும் புரியும். அவற்றை, திரும்பப் பெறவேண்டும் என்று இந்தியாவே குரல் எழுப்பிவிட்டது. ஆனால், தொழிலதிபர்கள், பெரிய வணிகர்கள், பதுக்கல்காரர்கள், கொள்ளை லாபக்காரர்களுக்கு ஆதரவான இந்த நடைமுறைகளைக் கைவிட இன்றுவரை மன்மோகன் சிங் அரசு மறுக்கிறது.
செயற்கையாக உணவுத் தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறது. இதனைக் காரணம் காட்டி, வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருள்களை இறக்குமதி செய்கிறார்கள். அவற்றின் இறக்குமதி வரிகளைக் குறைக்கிறார்கள். விளைவு என்ன? இந்தியாவில் உற்பத்தியாகும் அதே பொருள்களின் விலை வீழும்; உற்பத்தி பாதிக்கும்.
வளர்ந்து வரும் மேலை நாடுகள் எப்படிச் சாதாரண மக்கள் மீது வரிகளைப் போடுகின்றன என்று தெரிந்து கொள்கிறார்கள். அந்த வரிகள்தான் இங்கு நம்மீது விதிக்கப்படுகின்றன. தொழிலதிபர்கள், பொருளாதார மண்டலவாதிகள், பன்னாட்டு நிதிநிறுவனங்கள், அன்னிய முதலீடுகள் ஆகிய அனைத்திற்கும் வரிச் சலுகைதான்.
ஏழை எளிய மக்கள், நடுத்தர மக்கள், சாமானிய மக்கள் ஆகியோர் சேவை வரியால் கடுமையாகச் சுரண்டப்படுகிறார்கள். அநேகமாக அவர்கள் பயன்படுத்தும் அனைத்துப் பொருள்களுக்கும், சிதம்பரம் அந்த வரியைத் திணித்து விட்டார். அந்த வரி ஆண்டுதோறும் உயர்வதோடு, புதிய துறைகளுக்கும் விரிவுபடுத்தப்படுகின்றது.
மன்மோகன் சிங் பிரதமராகப் பொறுப்பேற்றபோது, ஒரு மூட்டை சிமெண்ட் விலை 140 ரூபாய். இரண்டு மாதங்களுக்கு முன்னர், நிதி அமைச்சர் சிதம்பரம் பட்ஜெட் சமர்ப்பித்தபோது 180 ரூபாய். ‘இதோ… சிமெண்ட் விலை குறையப்போகிறது’ என்றார்கள். இன்றைய சிமெண்ட் விலை மூட்டை 230 ரூபாய். குதியாட்டம் போட்டு உயருகிறது.
குறிப்பிட்ட சில சிமெண்ட் கம்பெனிகளின் பகாசுரக் கோடீசுவரர்கள்தான் சிமெண்ட் விலையை நிர்ணயிக்கிறார்கள். ‘மயிலே மயிலே இறகுபோடு’ என்று அவர்களிடம் மன்மோகன் சிங் கெஞ்சுகிறார் _ சிதம்பரம் கொஞ்சுகிறார். ‘இன்னும் விலையை உயர்த்துவோம். என்ன செய்வீர்கள்?’ என்று அவர்கள் சவால் விடுகிறார்கள். லாபத்தைக் குறைக்க மாட்டோம் என்கிறார்கள்.
சீனாவும் பாகிஸ்தானும் மூட்டை 130 ரூபாய் என்று நமக்கு சிமெண்ட் இறக்குமதி செய்யத் தயாராக இருக்கின்றன. இறக்குமதி செய்வோம் என்றனர். ஆனால், அறிவிப்பு, செயல் வடிவம் பெறவில்லை. இன்னொரு பக்கம் நமது சிமெண்ட் துறை கோடீசுவரர்கள் அதற்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டார்கள்.
சிதம்பரம் பட்ஜெட் சமர்ப்பித்தபோது, ஒரு டன் இரும்புக் கம்பி விலை 26,000 ரூபாய். விலைவாசி தொப்பென்று விழப் போகிறது என்றார்கள். ஆனால், இன்றைக்கு இரண்டே மாதங்களில் 31 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
நாடு தழுவிய அளவில் வலிமையான எதிர்க்கட்சி இல்லாததால், மன்மோகன் சிங் அரசு நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், மக்கள் மவுனப் புரட்சிக்குத் தயாராகிவிட்டார்கள் என்பதனைத்தான் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. என்ன காரணம்?
கடந்த மே தினத்தன்று வெனிசுலா நாட்டின் தலைநகர் காரகாசில் கடல் போல் மக்கள் கூட்டம். அந்த நாட்டின் அதிபர் ஹீகோ சாவோஸ் அற்புதமான சில பிரகடனங்களை வெளியிட்டார்.
அமெரிக்காவின் ஆளுகையில் உள்ள உலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனம் (ஐ.எம்.எஃப்) ஆகிய அமைப்புகளுக்கு இன்று முதல் விடை தருகிறோம் என்றார். இந்த நிதி நிறுவனங்கள் _ ஏழை நாடுகள், வளர்ந்து வரும் நாடுகள் மீது அமெரிக்காவின் வல்லாதிக்கத்தை நிலை நிறுத்துகிற நங்கூரங்கள் என்றார்.
இதேபோல், கடந்த மே தினத்தன்று இன்னொரு தென் அமெரிக்க நாடான பொலிவியாவும் உலக வங்கிக்கு விடை கொடுத்தது.
உலக வங்கிக்கு விடை கொடுக்கும் இன்னொரு நாடு நிகாரகுவா. வளரும் நாடுகளின் வாழ்வைச் சூறையாட அன்னிய முதலீடுகளைத் திணிக்கும் புரோக்கர்தான் உலக வங்கி என்று அந்த நாடு அறிவித்திருக்கிறது.
உலக வங்கியின் வழிகாட்டுதலும் ஆலோசனைகளும்தான் தங்கள் நாடுகள் சீரழிந்ததற்குக் காரணம் என்பதனை இப்போது சின்னஞ்சிறிய நாடுகள்கூட உணர்ந்து வருகின்றன. அவற்றின் விடுதலைக் குரலைக் கேட்கிறோம். ஆனால், இங்கே உலக வங்கிக்கு உடுக்கை அடிக்கும் பூசாரிகளைப் பார்க்கிறோம்.
பன்னாட்டு நிதி நிறுவனங்கள் அனைத்தையும் வெனிசுலா, பொலிவியா, நிகாரகுவா, சிலி ஆகிய நாடுகள் நாட்டுடைமையாக்கிவிட்டன. அந்தப் பன்னாட்டு நிதி நிறுவனங்கள் தங்களுக்கு முடிசூட்ட வரவில்லை; முள்கிரீடம் சூட்ட வந்தவை என்று பொலிவியா அதிபர் மோல்ஸ் அறிவித்திருக்கிறார்.
ஆனால், அன்னிய நிறுவனங்களின் வருகையும் அவற்றின் பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீடும்தான் நாட்டின் வளர்ச்சி என்று இங்கே பட்டியல் போடுகிறார்கள்.
அமெரிக்க ஆதிக்கத்திலிருந்த எண்ணெய், எரிவாயு வயல்களை, சென்ற ஆண்டு பொலிவியா தேசிய மயமாக்கியது. இந்த ஆண்டு வெனிசுலா தேசிய மயமாக்கியது. எண்ணெய் விலை வீழ்கிறது.
தங்கள் நாட்டுத் தண்ணீரையே எடுத்து தங்களுக்கு விற்பனை செய்த இத்தாலிய எடிசன் கம்பெனியை பொலிவியா வழி அனுப்பி வைத்துவிட்டது.
பொலிவியாவின் டெலிபோன் துறை முழுக்க முழுக்க இத்தாலிய நிறுவனத்தின் ஆதிக்கத்தில் இருந்தது. அதில் 50 சதவிகிதப் பங்குகளை அரசு எடுத்துக் கொண்டது. அடுத்து தேசியமயமாக்குகிறது.
ஆமாம். அங்கே சரித்திரச் சக்கரம் முன்னோக்கிச் சுழல்கிறது. இங்கே அந்தச் சக்கரத்தை மன்மோகன் சிங் அரசு பின்னோக்கிச் சுழற்றுகிறது. அதுதான் உலக வங்கி சொல்லிக் கொடுத்த பாடம்.
எண்ணெய் வளத்துறை இங்கே தேச உடைமையாகத்தான் இருந்தது. விரட்டப்பட்ட அன்னியக் கம்பெனிகளும், உள்நாட்டுத் தனியார் நிறுவனங்களும் அந்தத் துறையை இப்போது கபளீகரம் செய்கின்றன.
தொலைத்தொடர்புத் துறையில் 74 சதவிகித அன்னிய முதலீடுகளை அனுமதிக்க நிதியமைச்சர் சிதம்பரம் தயாராகிவிட்டார்.
அநேகமாக இன்னும் இரண்டே ஆண்டுகளில் இந்தியா முழுமையாக விற்பனை செய்யப்பட்டு விடும்.
விழித்துக் கொண்ட தென் அமெரிக்க நாடுகள் துரத்துகின்ற எல்லா அன்னிய நிறுவனங்களுக்கும் இங்கே பட்டுக் கம்பள வரவேற்பு அளிக்கப்படும். இன்னொரு பக்கம், கடந்த மூன்று ஆண்டுகளில் எத்தனை கோடீசுவரர்கள் உருவாகியிருக்கிறார்கள்? என்று ஏடுகள் கணக்கெடுத்து வெளியிடுகின்றன. லட்சாதிபதிகள், கோடீசுவரர்களாகிறார்கள். கோடீசுவரர்கள், மகா கோடீசுவரர்களாகிறார்கள். 34 கோடீசுவரர்கள், மகா கோடீசுவரர்களாகி இருக்கிறார்கள். அவர்களில் பலர் பங்குச் சந்தைச் சூதாட்டங்களில் வளர்ந்து வருபவர்கள்.
பொருளாதாரம், நிர்வாகம், முதலீடுகள் தொடர்பாக உலக வங்கி தரும் யோசனைகள்தான் செயல்படுத்தப் படுகின்றன. அதனால் விலைவாசி உயரும். வேலையில்லாத் திண்டாட்டம் வளரும். சமூக முரண்பாடுகள் விரிவடையும்.
அந்த உலக வங்கிச் சுனாமி சுழன்றடித்து வெளியேறிய நாடுகளுக்கு விடிவு காலம் பிறந்திருக்கிறது. உலக வங்கி, அன்னிய முதலீடுகள் அனைத்தும் ஓடுகின்றன. வெளிச்சம் தெரிகிறது. நெருப்புப் பறவைகள் சிறகடிக்கின்றன. விலைவாசி வீழ்கிறது.
இங்கே அதே அன்னிய முதலீடுகளும் உலக வங்கியும் நமது மயில்களின் கால்களை ஒடித்து சூப்பு வைத்துக் குடிக்கின்றன. விலைவாசி உயருகிறது. வேதனை பெருகுகிறது. நாடு நன்றாகவே இருளில் நடைபோடுகிறது.
—————————————————————————-
துக்ளக் 6.6.2007 இதழில் சோவின் தலையங்கம்
வியந்து பாராட்டுகிறோம்! இது ஒரு சாதனைதான்; மன்மோகன் சிங்கின் அரசு மூன்று ஆண்டுகளைக் கழித்து விட்டது. ‘ மற்ற சாதனைகள் என்ன?’ என்று கேட்டால், அது கொடூரமான கேள்வியாக இருக்கும். யாரைப் பார்த்து என்ன கேள்வி கேட்பது என்று வரைமுறை இருக்க வேண்டாமா? பதினோரு கட்சிகளை வைத்துக் கொண்டு அரசை நடத்தியாக வேண்டும். அதுவும் எப்பேர்ப்பட்ட கட்சிகள்? தி.மு.க. ஒரு உதாரணம் போதுமே?
‘வேண்டிய இலாகாக்கள் கிடைக்கா விட்டால், எதுவுமே வேண்டாம் போ’ என்று அடம் பிடித்து, வேண்டிய இலாகாக்களைப் பெற்றதிலிருந்து, இன்று வரை அவர்கள் மன்மோகன் சிங்கை பிரதமராகவா மதித்திருக்கிறார்கள்? ‘சோனியா காந்தி இருக்க பிரதமர் என்ன பொருட்டு?’ என்ற கழக அணுகுமுறையை, காங்கிரஸ்காரர்களும் கடைபிடித்து வருகிறார்களே! அர்ஜுன்சிங்கைப் பொறுத்த வரையில், பிரதமர் ஒரு தொந்தரவு; அவ்வளவுதான். சில சமயங்களில், அவரிடம் பேச வேண்டியிருக்கும், என்பதைத் தவிர வேறு பிரச்சனை இல்லை.
மற்ற காங்கிரஸ் அமைச்சர்கள், பிரதமரை பார்த்து பரிதாபப்படுகிறார்கள். லாலு பிரஸாத் யாதவ், ‘நானும் ஒரு நாள் பிரதமர் ஆகப்போகிறவன்தானே!’ என்று கூறி, இன்றைய பிரதமரை அவ்வப்போது மட்டம் தட்டுகிறார். இப்படி பார்த்துக்கொண்டே போனால், பிரதமரை பிரதமராக மதிக்கிற அமைச்சர் யாராவது ஓரிருவர் இருக்கிறார்களா என்ற சந்தேகமே வந்துவிடுகிறது. சோனியா காந்தியின் தயவில் பணிபுரிகிறவர், என்கிற முத்திரை பலமாக விழுந்திருக்கிறது. இதெல்லாம் போதாதென்று, இடது சாரிகள் வேறு அவ்வப்போது மிரட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.
சிதம்பரம், அலுவாலியா (திட்டக் கமிஷன்) போன்ற பொருளாதாரம் அறிந்தவர்களை உடன் வைத்துக்கொண்டும் கூட, மன்மோகன் சிங்கினால், முழுமையான பொருளாதார மாற்றங்களைக் கொண்டு வர முடியவில்லை. எதைச் செய்தாலும், இடது சாரிகள் முரண்டு பிடிக்கிறார்கள்; ‘அமெரிக்காவின் அடிமையாகி விடாதே’ என்று பயமுறுத்திக்கொண்டே இருக்கிறார்கள். இதெல்லாம் இவ்விதமாக இருக்க, தீவிரவாதிகள் விஷயத்தில் தாராள மனப்பான்மையைக் காட்ட வேண்டியிருக்கிறது.
அதுதான் உண்மையான மதச்சார்பின்மை என்று இடதுசாரிகளும், சோனியா காந்தியும் கூறுகிறபோது, பாவம் பிரதமர் என்ன செய்வார்? ஊழல் விஷயத்திலோ, கேட்கவே வேண்டாம். அந்தந்தத் துறை, அந்தந்த அமைச்சரின் சாம்ராஜ்யம். ஏற்கனவே கிரிமினல் குற்றச்சாட்டு உடையவர்கள் லாலு பிரஸாத் யாதவ் உட்பட அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறார்கள். ஒரு மந்திரி, கொலைக்குற்றத்திற்காக இப்போது நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்டு, சிறையில் இருக்கிறார். அதற்கு முன்னால் அவர் தலைமறைவாக கொஞ்ச நாட்கள் இருந்தார். அப்போதும் மந்திரிதான்.
தலைமறைவு மந்திரியைக் கொண்ட முதல் மத்திய அரசு என்ற ‘புகழை’ மன்மோகன் சிங் அரசு பெற்று மகிழ்ந்தது. பிரதமர் நினைத்து, ஒரு மந்திரியை நீக்கவோ, வைக்கவோ, இலாகாவை மாற்றவோ முடியாது; அது அந்தந்தக் கூட்டணிக் கட்சியின் இஷ்டம்; சம்பந்தப்பட்டவர் காங்கிரஸ்காரரானால், சோனியாவின் இஷ்டம். ஒரு பொருளாதார சீர்திருத்தத்தை, பொருளாதார நிபுணரான பிரதமரால் செய்துவிட முடியாது; அதற்கு இடதுசாரிகளின் அனுமதி தேவை.
தீவிரவாதிகளை ஒடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க முடியாது; அதற்கு சோனியாவின் ஒப்புதல் அவசியம். கிரிமினல் பேர்வழிகளை கிட்டே சேர்ப்பதில்லை என்ற முடிவைக்கூட, பிரதமரால் எடுக்க முடியாது; அது கூட்டணி தர்மத்திற்கு விரோதம். இந்த நிலையில், ‘மூன்று வருட சாதனை என்ன? என்ற பிரதமரைக் கேட்பது, இதமில்லாதவர்கள் செய்யக் கூடிய வேலை. நாம் அப்படிக் கேட்கவில்லை. மூன்று வருடம் எப்படித்தான் சமாளித்தாரோ என்று நாம் வியப்படைகிறோம். வியந்து, பாராட்டுகிறோம்!.
நன்றி : துக்ளக்
—————————————————————————-
bsubra said
நாட்டின் வளர்ச்சியும் மக்களின் தளர்ச்சியும்
இரா. செழியன்
மன்மோகன் சிங் அமைச்சரவை மூன்று ஆண்டுகளை முடித்துள்ளது.
2004 தேர்தலில் 545 உறுப்பினர்களை உடைய மக்களவையில், காங்கிரஸ் கட்சிக்கு 145 இடங்கள் மட்டுமே கிடைத்தன. தேர்தலுக்குப் பிறகு காங்கிரசுடன் 14 கட்சிகள் சேர்ந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைத்ததும், வெளியிலிருந்து ஆதரவு தர இடதுசாரிக் கட்சிகளும் முன்வந்ததால், காங்கிரஸ் தலைமையில் அமைச்சரவை அமைந்தது.
அணியில் உள்ள கட்சிகள் அடிக்கடி சச்சரவில் தேர்தல்களச் சண்டைகளில் வெளிப்படையாக மோதிக்கொண்டாலும், அமைச்சரவை மூன்றாண்டு காலம் நீடித்திருப்பது பிரதமர் மன்மோகன் சிங்கின் மகத்தான சாதனையாகும்.
1991இல் நிதி அமைச்சராக இருந்த மன்மோகன் சிங் உலகளாவிய சந்தைப் பொருளாதார அமைப்பை இந்தியாவில் தொடங்கினார். காங்கிரஸ் ஆட்சியைத் தொடர்ந்து வந்த தேவெ கௌட, குஜ்ரால், வாஜபேயி அமைச்சரவைகளும் புதிய பொருளாதாரக் கொள்கையை முழுமையாகப் பின்பற்றின. 2004 தேர்தலுக்குப் பிறகு பிரதமராக மன்மோகன் சிங் வந்துவிட்டதால், அவர் தொடங்கி வைத்த சந்தைப் பொருளாதாரத்தின் சாதக – பாதக விளைவுகள் அவர் பொறுப்பாக விளங்குகின்றன.
தற்போது மத்திய அரசின் முக்கிய சாதனையாகக் கூறப்படுவது நாட்டின் மொத்த உற்பத்தி அளவு வளர்ந்துள்ளது என்பதுதான். அது உண்மையே. 1990 வரை ஆண்டுதோறும் 5.6 சதவிகிதத்தில் வளர்ந்து வந்த நாட்டின் உற்பத்தி கடந்த மூன்று ஆண்டுகளில் 8.5%, 9%, 9.2% என வளர்ந்துள்ளது. அதாவது, நாட்டின் மொத்த உற்பத்தி 2003 – 04இல் ரூ. 25 லட்சத்து 49 ஆயிரம் கோடி என இருந்தது. அது 2006 – 07இல் ரூ. 37 லட்சத்து 18 ஆயிரம் கோடி என வளர்ந்துள்ளது. நடப்பு ஆண்டில் இது 10 சதவிகித வளர்ச்சியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் போடப்பட்ட வெளிநாட்டு மூலதனம் 2006 செப்டம்பர் வரை 1 லட்சத்து 82 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.
மேலும், இந்தியாவிற்குள் வந்த வெளிநாட்டுச் செலாவணி 2007 பிப்ரவரி மாதத்தில் 180 பில்லியன் டாலர் – அதாவது 7 லட்சத்து 38 ஆயிரம் கோடி ரூபாய் என்ற மதிப்பில் குவிந்துள்ளது. (ஒரு “பில்லியன்’ என்பது 100 கோடி). இந்தியாவில் நிறுவனங்களை அமைக்க, வியாபாரத்தை நடத்த, பங்குச் சந்தையில் முதலீடுகளைப் போட, வெளிநாட்டவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதை இவை காட்டுகின்றன.
எலக்ட்ரானிக் செய்தித் தொடர்புத் துறையில் இந்தியா முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இந்தியாவில் உள்ள கணினி அமைப்புகளுக்கு அமெரிக்கா போன்ற நாடுகள் தமது தொழில் விவரங்களை அனுப்பி ஆய்வுகளைப் பெறும் “அவுட் சோர்சிங்’ முறையில் உலக அளவில் இந்தியா 45 சதவிகிதப் பங்கைப் பெற்றுள்ளது. இதனால் ஆண்டுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் வருமானம் இந்தியாவுக்குக் கிடைக்கிறது.
பில்லியன் டாலர் சொத்து உள்ளவர்கள், “பில்லியனர்’ என அழைக்கப்படுகின்றனர். அதாவது 4 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து உடைய உலக பில்லியனர் பட்டியலில் 2006-ம் ஆண்டில் இந்தியாவில் 36 சீமான்கள் இருந்தனர். 2007 ஆண்டுப் பட்டியலில் 40 பில்லியனர்கள் என எண்ணிக்கை உயர்ந்தது.
இந்த எண்ணிக்கை ஜப்பான் (24), சீனா (17), பிரான்ஸ் (14), இத்தாலி (14) ஆகிய நாடுகளின் சீமான்களின் எண்ணிக்கையைவிட அதிகமானதாகும். இந்தியாவின் 40 பில்லியனர்களின் மொத்த சொத்து 7 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய். இந்திய அரசின் 91 பொதுத்துறை நிறுவனங்களின் மொத்த மதிப்பு 4 லட்சம் கோடி ரூபாய்க்குக் குறைவானதாகும்.
உலகளாவிய பொருளாதார அமைப்பில் இந்தியாவிற்கு கிடைத்த வளர்ச்சியின் பலன் எந்த அளவு மற்ற துறைகளில் பரவி, சாதாரண மக்களுக்குப் பயன்பட்டது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
இந்தியாவில் மிக முக்கியமாக உள்ள தொழில் விவசாயம். 1951இல் இந்திய மக்கள்தொகையில் 72 சதவிகித மக்கள் விவசாயத்தில் இருந்தனர். நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் விவசாயத்துக்கு 60 சதவிகிதம் கிடைத்தது. 2001 கணக்குப்படி, இந்தியாவில் விவசாயத்தை நம்பி 60 சதவிகித மக்கள் இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்குக் கிடைப்பது நாட்டு வருமானத்தில் 22 சதவிகிதம்தான்.
குடியானவர்களில் நிலமற்றவர்களின் அளவு 1987இல் 35%, 1999 – 45%, 2005 – 55% என அதிகரித்துக்கொண்டே வருகிறது. முன்பு மூன்றில் ஒரு குடியானவர் நிலமற்று இருந்தால், இப்போது குடியானவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் நிலமற்றவர்களாக இருக்கின்றனர்.
விவசாயத்துக்குத் தேவையான நீர்ப்பாசனம், உரம், மற்ற இடு பொருள்கள், போக்குவரத்து, நிதிவசதிகள் போன்றவைகளுக்கு அரசு சரியாக ஏற்பாடு செய்யாத காரணத்தால், இங்கு விவசாய வளர்ச்சி முன்பு இருந்ததைவிட கடந்த பதினைந்து ஆண்டுகளில் பாதி அளவுக்குக் குறைந்துவிட்டது.
வருமானம் போதாமல், கடன் தொல்லை தாங்க முடியாமல், வாழும் வகை அறியாமல், 1993 – 2003 பத்தாண்டுக் காலத்தில் – புதிய பொருளாதாரத் திட்டத்தின் கீழ் – இந்தியாவில் ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
வளர்ச்சி அடைந்த நாடுகளில் விவசாயத் தொழிலில் உள்ளவர்கள் தொகை மிகவும் குறைவானது. மக்கள்தொகையில் விவசாயத்தில் உள்ளவர்கள் இந்தியாவில் 1%, அமெரிக்காவில் 2%, ஜப்பானில் 5% என இருக்கின்றனர். எனவே, வளர்ச்சி அடைந்த நாடுகளின் பொருளாதாரப் போக்கும் திட்டங்களும் இந்திய நிலைமைக்கு ஒத்துவராது.
விவசாயத்துக்கு அடுத்தபடியாக உள்ள தொழில் சில்லறை வியாபாரமாகும். சில்லறை வணிகத்தை நம்பி 4 கோடி மக்கள் இந்தியாவில் இருக்கின்றனர். தற்பொழுது வால்மார்ட் போன்ற பிரமாண்டமான வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்குள் புகுந்து, இந்திய சில்லறை வியாபாரத்தை ஆக்கிரமிக்கும் வகையில் சூப்பர் மார்க்கெட்டுகளை அமைக்க ஆரம்பித்துவிட்டன. சில்லறை வியாபாரத்துக்குக் கல்லறை அமைப்பதில் பன்னாட்டு நிறுவனங்களுடன் இந்திய அரசு ஒத்துழைக்கிறது.
1991இல் புதிய பொருளாதாரத் திட்டத்தை அறிவித்த நிதி அமைச்சர் மன்மோகன் சிங், “”விவசாயம், கல்வி, சுகாதாரம், மின்சாரம், சாலைகள் போன்றவற்றுக்கான அடிப்படைத் தேவைகளை உருவாக்க மட்டுமே வெளிநாட்டு மூலதனத்தை நாம் பெறுவோம். அலங்காரமான சூப்பர் மார்க்கெட் முறை நமக்கு வேண்டாம்” என்று சொன்னார், சில்லறை வியாபாரத்தில் வெளிநாட்டு மூலதனம் வரக்கூடாது என்பதற்கான தடையை நிதி அமைச்சர் ப. சிதம்பரம் 1996இல் விதித்தார்.
2004இல் வெளியிட்ட ஐக்கிய முன்னணியின் குறைந்தபட்ச செயல் திட்டத்தில் அதிகமான வேலை வாய்ப்புகளை உண்டாக்கி, ஒவ்வொரு குடும்பத்துக்கும் பாதுகாப்பான வாழ்க்கை வசதியைத் தர வழி வகுப்போம் என்று வாக்குறுதி தரப்பட்டது.
அத்தகைய வாக்குறுதிகளை, உத்தரவுகளைத் தந்தவர்கள் இப்போது பிரதமராக, நிதி அமைச்சராக இருக்கின்றனர். வேலை வாய்ப்பைத் தருவதற்குப் பதில் சாதாரண பொதுமக்களுக்கு இருக்கும் வேலைகளுக்கு வேட்டுவைக்கும் வேலையை அரசு செய்கிறது.
மன்மோகன் சிங் பிரதமராக இருக்கிறார். ஆனால், முக்கிய பிரச்னைகளில் செயல்படாமல் இருக்கிறார். சாதாரண மக்களைப் பாதிக்கும் திட்டங்களைக் கைவிடுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை தருகிறார். ஆனால் அதை யாரும் கவனிப்பதாகத் தெரியவில்லை.
ஆட்சிப்பொறுப்பேற்று முதலாம் ஆண்டு, இரண்டாவது ஆண்டு முடிந்தபோது அவற்றை உற்சாகத்துடன் கொண்டாடியதைப்போன்று, மூன்றாவது ஆண்டு நிறைவை குதூகலமாகக் கொண்டாடக் காங்கிரஸ் தலைவர்கள் முன்வரவில்லை. காரணம் 2006 – 07 ஆண்டு காங்கிரஸ் கட்சிக்குப் பெருத்த சரிவுகளைத் தந்துவிட்டது.
நடைபெற்ற தேர்தல்களில் ஒன்றன்பின் ஒன்றாக மகத்தான தோல்விகள் தொடர்ந்து வந்தன. கேரளம், மேற்கு வங்கம், பிகார், ஜார்க்கண்ட், பஞ்சாப், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு சரிந்துவிட்டது.
மகாராஷ்டிரம், தில்லி மாநிலங்களில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் காங்கிரசுக்குப் பெருத்த ஏமாற்றம். கடைசியாக, உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் முதலிடத்துக்கு மற்ற கட்சிகள் போட்டியிட்டன. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு நான்காவது இடம் என்பது முதலிலிருந்தே நிச்சயமான ஒன்றாக இருந்தது.
காங்கிரசின் நிலைமை சீர்குலைந்து போவதுபற்றி உள்ளாட்சித் துறை அமைச்சர் மணிசங்கர் அய்யர் ஓர் எச்சரிக்கையை அண்மையில் விடுத்துள்ளார்: “”நாட்டு உற்பத்தியில் கிடைத்த 9.2 சதவிகித வளர்ச்சி பணம் படைத்த மேட்டுக் குடியினருக்குச் சென்றுவிட்டது, சாதாரணமான ஏழைகளுக்கு – “ஆம் ஆத்மி’களுக்கு – சிறிதும் பலன் தரவில்லை. இதில் மாறுதல் செய்யவில்லை என்றால் சாதாரண மக்களின் ஆதரவு காங்கிரசுக்கு இல்லாமல் போய்விடும்.”
“”யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே!” என்பார்கள். அதைப்போல், அமைச்சரின் அபாய மணி ஓசை மத்திய அரசுக்கு வந்துள்ளது.
நாட்டில் நகர – கிராம இணைப்புச் சாலைகள் அமைப்பதற்கு 2 லட்சத்து 68 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி மே 23 ஆம் தேதி தில்லியில் கூடிய மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பேசும்போது ஓர் அதிர்ச்சியைத் தந்தார்: “”சாலைகள் போடும் திட்டங்களில் புற்றுநோய்போல் ஊழல் வளர்ந்துவிட்டது. சாலைகளின் தரம் குறைந்துவிடுவதற்கு முக்கிய காரணம் ஊழல் பெருகியிருப்பதுதான்.”
ஊழல் பற்றி யாருக்காக இந்த அளவு பிரதமர் பேசினார் என்று தெரியவில்லை. அமைச்சர்களும் அரசு அதிகாரிகளும் கலந்துகொண்ட கூட்டத்தில் புற்றுநோய் போன்ற ஊழல் பற்றி பிரதமர் பேசியது குறிப்பிடத்தக்கது.
மே 22 ஆம் தேதி ஆட்சியின் மூன்றாம் ஆண்டு முடிவுற்ற நாள். அதற்கு அடுத்த நாள் பிரதமருக்கு ஏற்பட்ட கவலை, நாட்டுக்கு ஏற்பட்ட வளர்ச்சியைவிட, அந்த வளர்ச்சியின் பலன் மக்களுக்குக் கிடைக்க முடியாதபடி தடுப்பது பரவி இருக்கும் ஊழல் பற்றியதாக இருந்தது.
நாட்டின் வளர்ச்சியின் பலன் சாதாரண மக்களிடம் சேரவில்லை என்றால், மக்களுக்குத் தளர்ச்சி ஏற்படுகிறது. மக்களின் தளர்ச்சியை அமைச்சர்கள் பொருள்படுத்தவில்லை என்றால், மக்களின் தளர்ச்சி வெடித்துக் கிளம்பும் கிளர்ச்சியாக, அடக்க முடியாத எழுச்சியாக அது மாறும். அது மக்களை மறந்த மதோன்மத்த ஆட்சியின் மகத்தான வீழ்ச்சிக்குக் காரணமாகிவிடும்!
(கட்டுரையாளர்: நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்.)