Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Breath with care – Oxygen Supply, Carbon Monoxide poisoning

Posted by Snapjudge மேல் மே 18, 2007

நெட்டில் சுட்டதடா…: சுவாசிக்கும் முன் யோசி!

ராமன் ராஜா

சென்னையில் ஒரு கார் மெக்கானிக் ஷாப். குளிர் சாதனம் பொருத்திய கார் ஒன்று சர்வீசுக்காக வந்து நிற்கிறது. ராத்திரி முதலாளி வீட்டுக்குக் கிளம்பின பிறகு, பட்டறையில் வேலை செய்யும் இரண்டு சிறுவர்கள் தூங்குவதற்கு ஆயத்தம் செய்கிறார்கள். காரில் ஏறிக் கதவைச் சாத்திக் கொண்டு என்ஜினை ஆன் செய்கிறார்கள். கோடையின் புழுக்கத்துக்கு இதமாக ஏ.ஸியை முழு வேகத்தில் திருப்பிக் கொள்கிறார்கள். நாள் முழுவதும் ஸ்பானர் பிடித்த களைப்பில் சுகமாகத் தூக்கத்தில் நழுவுகிறார்கள்…. ஆனால் காலையில் பார்க்கும்போது இருவரின் உயிரற்ற உடல்கள்தான் காரில் இருக்கின்றன. ஒரு காயமில்லை, ரத்தமில்லை, விஷம் சாப்பிட்ட அறிகுறியும் இல்லை. என்னதான் நடந்திருக்கும்?

சில மாதங்களுக்கு முன்னால் -பூனாவில் ஒரு கல்லூரி ஹாஸ்டல். பத்தொன்பது வயது மாணவி அர்ச்சனா, நள்ளிரவில் தனியாகப் படித்துக் கொண்டிருக்கிறார். டிசம்பர் குளிருக்கு எல்லாக் கதவு ஜன்னலும் நன்றாக அடைத்திருக்கிறது. திடீரென்று பவர் கட். மறுநாள் பரீட்சை என்பதால், ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்துக் கொண்டு படிப்பைத் தொடருகிறார் மாணவி. வட இந்தியா பக்கமெல்லாம் கிடைக்கும் வாசனை மெழுவர்த்தி; ஓர் அடி நீளம் இருக்கும். பெரிய சுடர்… சற்று நேரத்தில் அர்ச்சனாவின் கண் சொக்குகிறது. அப்படியே ஒரு பத்து நிமிடம் டேபிளில் சாய்ந்து தூங்கலாம் என்று நினைத்திருக்கலாம். ஆனால் அடுத்த நாள் காலையில் பரீட்சை எழுதுவதற்கு அர்ச்சனா இல்லை. விடுதி வார்டன் கதவை உடைத்துக் கொண்டு போய்ப் பார்த்தபோது கிடைத்த ஒரே சாட்சி, முழுவதும் எரிந்து முடிந்த மெழுகுவர்த்தியின் மிச்சங்கள்தான்.

கத்தியின்றி ரத்தமின்றி ஏற்பட்ட இந்த மூன்று மரணங்களின் மர்மம், போஸ்ட் மார்ட்டத்தில்தான் தெரிய வந்தது. இவர்கள் எல்லோரும் கார்பன் மோனாக்ûஸடு வாயுவை சுவாசித்ததால் இறந்திருக்கிறார்கள். இந்த கார்பன் மோனாக்ûஸடு (சுருக்கமாக கா.மோ.) என்பது கரியும், ஆக்ஸிஜனும் சரிவிகிதத்தில் கலந்தது. எங்கே எது எரிந்தாலும் இந்த வாயு வெளிப்படும். பொருள் எரிவதற்குப் போதுமான காற்று சப்ளை இல்லாவிட்டால் ஏராளமாக கா.மோ வாயுதான் உற்பத்தியாகும். வாகனங்கள், விறகு-கரி அடுப்பு, பர்னர் சரியில்லாத ஸ்டவ், ஜெனரேட்டர் செட்டுகள் எல்லாம் கார்பன் மோனாக்ûஸடைத் துப்பும் எமன்கள்! (சிகரெட் புகைத்தாலும் சுருள் சுருளாக கா.மோ.தான் ஜாக்கிரதை). புகைபோக்கி வைத்துப் பாதுகாப்பாக வெளியே விட்டால் உலகம்தான் குட்டிச்சுவராகுமே தவிர, நமக்கு உடனடி ஆபத்தில்லை. அதுவே மூடின சின்ன அறையில், அல்லது காருக்குள் ஆளைச் சூழ்ந்துகொண்டால் சில நிமிடங்களில் மரணம்தான்.

கார்பன் மோனாக்ûஸடைப் பார்க்க முடியாது. வாசனை எதுவும் இருக்காது என்பதால் கண்டுபிடிப்பது கஷ்டம். ரத்தத்தில் உள்ள ஹிமோக்ளோபினைக் குரங்குப் பிடியாகப் பிடித்துக் கொண்டு மூளையைச் செயலிழக்கச் செய்துவிடுவதால், எழுந்து ஜன்னலைத் திறக்கவேண்டும் என்ற எளிய செயலைக் கூடச் செய்ய முடியாமல் கை கால் ஓய்ந்துவிடும். உலகத்தில் வருடா வருடம் சில நூறு பேர் கார்பன் மோனாக்ûஸடைச் சுவாசித்து இறக்கிறார்கள். மேலை நாடுகளில் கா.மோ சூழ்ந்திருப்பதைக் கண்டுபிடிக்கக் கருவிகள் வைத்திருக்கிறார்கள். அதெல்லாம் கூடத் தேவையில்லை; நமக்கு கார்பன் மோனாக்ûஸடு பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறதா என்பதை அறிவது சுலபம்: காற்று புகுந்து புறப்பட இடமில்லாமல் பெட்டி மாதிரி அடைபட்ட அறையில் இருக்கிறீர்களா? அடுப்பு, கணப்பு, ஜெனரேட்டர் செட் ஏதாவது புகைகிறதா? தலை வலி, மறதி, மனக்குழப்பம், அசதி, வாந்தி என்று சித்த வைத்தியசாலை விளம்பரத்தில் வரும் அறிகுறிகள் ஏதாவது தெரிகிறதா? ஆம் எனில் அனேகமாக நீங்கள் அளவுக்கு மீறி கா.மோ.வை சுவாசித்திருக்கக் கூடும். கதவைத் திறந்து வையுங்கள்; காலாற நடந்து போய் சுத்தமான காற்றை நெஞ்சில் நிரப்பிக் கொண்டு வாருங்கள்; சரியாகிவிடும். கார்பன் மோனாக்ûஸடிலிருந்து தப்பிக்க ஒரே வழி, காற்றோட்டம் ஏற்படுத்துவதுதான். காரில் போனால், எஞ்சினை ஓட விட்டுக் கொண்டு ஒரே இடத்தில் நீண்ட நேரம் நிற்கக்கூடாது.

மூடிய அறைக்குள்தான் இந்த ஆபத்து என்றால், நாகரிக உலகில் ஜன்னலைத் திறந்து வைத்தால் வெளியிலிருந்து வேறுவிதமான பேராபத்து காத்திருக்கிறது! போபால் நகரத்தில் யூனியன் கார்பைட் கம்பெனியிலிருந்து விஷவாயு கசிந்து ஆயிரக்கணக்கானவர்கள் இறந்ததை, இறந்து கொண்டிருப்பதை மறக்க முடியுமா? அந்த மரண இரவில், கதவு ஜன்னல்களை டைட்டாக அடைத்துக்கொண்டு ஏ.ஸி. அறையில் தூங்கியவர்கள் பலர் பிழைத்துக் கொண்டார்கள். தொழிற்சாலைகளின் விஷ வெளிப்பாடுகளால் உடனடியாக மரணம் நேர்ந்தால்தான் தலைப்புச் செய்தியாகிறது; ஆனால் பல ஊர்களில், எந்தப் பேப்பரிலும் பிரசுரமாகாமல் தினம் கொஞ்சம் கொஞ்சமாக ஜனம் செத்துக் கொண்டுதான் இருக்கிறது. அவர்களுடைய அவல ஓலத்தைக் கேட்க முடியாமல் அதிகாரிகள் காதில் சில்லறை நாணயங்கள் அடைத்துக் கொண்டிருக்கிறது போலிருக்கிறது.

கடலூருக்குப் பக்கத்தில் சில கிராமங்கள் இருக்கின்றன. அவற்றின் பக்கம் மாலை வேளைகளில் ஒரு கிலோ மீட்டர் வாக்கிங் போனால் விதவிதமான வாசனைகள் மூக்கைத் துளைக்கும். நெயில் பாலிஷ், கொசுவர்த்திச் சுருள், முட்டைக்கோஸ், அழுகின சப்போட்டாப் பழம், செத்த எலி, என்று பத்தடிக்கு ஒரு நறுமணம். அங்கே இருக்கும் சிப்காட் தொழிற்பேட்டையின் ரசாயன ஆலைகளிலிருந்து வெளியாகும் கெமிக்கல் புகைதான் இத்தனை விதத்தில் நாறுகிறது. இடிப்பாரை இல்லாத ஏமரா அரசாங்கம், 1980 வாக்கில் தொழிலை வளர்க்கிறேன் பேர்வழி என்று கண்ட கெமிக்கல் தொழிற்சாலைகளுக்கும் வரிவிலக்கு, விதி விலக்கு எல்லாம் கொடுத்துப் புகுந்து விளையாடச் சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொண்டுவிட்டது. அவர்கள் அம்மோனியா, அசிடேட் என்று அகர வரிசைப்படி ஆரம்பித்து ஊரிலுள்ள அத்தனை விஷப் பொருள், வேதிப் பொருள்களையும் உற்சாகமாக ஊதித் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். பொழுதன்னிக்கும் இதைச் சுவாசித்துக் கொண்டிருக்கும் உள்ளூர் மக்களுக்குத்தான் பாவம், போக்கிடமே இல்லை. சில சமயம் அவர்கள் இருமல் தாங்க முடியாமல் காறித் துப்புகிற கோழை கூட பஞ்சுமிட்டாய் நிறத்தில் வருகிறது. பயங்கரம்!

நிலக்கரிச் சுரங்கங்களில் வேலை செய்பவர்களுக்கு நிமோகோனியாசிஸ் என்ற வியாதி வரும். கரித் தூசியைச் சுவாசித்து சுவாசித்து, நுரையீரல்கள் முழுவதும் ரயில் இஞ்சினின் பாய்லர் மாதிரி கறுத்துவிடும். சீக்கிரமே வி.ஆர்.எஸ். வாங்கிக் கொண்டு கொடைக்கானல் மாதிரி நிறைய இயற்கைக் காற்று கிடைக்கும் ஊரில் போய் செட்டில் ஆகிவிட்டால் ஓரளவுக்கு உடல் தேற வாய்ப்பு உண்டு. மணல் அள்ளுவது, கல் குவாரி வேலை போன்றவை செய்பவர்களுக்காக இதைவிட அருமையான ஒரு வியாதி இருக்கிறது: ‘நிமோனோ…’ என்று ஆரம்பித்து, இடையில் ஏகப்பட்ட எழுத்துகளை இட்டு நிரப்பி, ‘… கோனியாசிஸ்’ என்று முடியும் 45 எழுத்து வியாதி. இந்த நுரையீரல் நோயின் பெயர்தான் இப்போதைக்கு ஆங்கில அகராதியிலேயே மிக நீளமான வார்த்தை! (பெருமையாகச் சொல்லிக் கொள்ளவாவது உதவும்.)

டோக்கியோ போன்ற பெரு நகரங்களில் டிராபிக் போலீஸ்காரர்கள் நாள் முழுவதும் வாகனப் புகையில் நிற்பதால் அவர்களுக்கு ஆக்ஸிஜன் முகமூடி கொடுத்திருக்கிறார்கள். நம்ம ஊரிலும் இதற்கு சற்றும் குறையாத மாசுதான். தூசுதான். ஆனால் முகத்தில் சும்மா ஒரு கர்சீப் சுற்றிக்கொண்டு காவலர்கள் கடமையாற்றுவதைப் பார்க்கும்போது அனுதாபம் ஏற்படுகிறது. (அடுத்த முறை அந்தப் பத்து ரூபாயைக் கொடுக்க நேரும்போது பல்லைக் கடிக்காமல் கொடுத்தால் என்ன?) மேலை நாடுகளில் ஆக்ஸிஜன் பார்லர்கள் இருக்கின்றன.

இவற்றில் ஒரு கட்டணம் செலுத்தினால் கொஞ்ச நேரம் சுத்தமான காற்றைச் சுவாசித்து விட்டு வரலாம். இப்போது சென்னை உள்படப் பல நகரங்களிலும் வந்துவிட்டது. நாம் சாய்வு நாற்காலியில் ஓய்வாகப் படுத்திருக்க, பின்னணியில் அமைதியான இசை ஒலிக்க, கிராம்பு சந்தனம் என்று மெல்லிய நறுமணம் கலந்த ஆக்ஸிஜன் ஒரு குழாய் வழியே மூக்கில் இறங்க, க்ரெடிட் கார்டு கடன் தொல்லைகளைக் கூட மறந்து மனது அமைதியாகும் அந்த நிலையைத்தான் ஞானிகள் பேரின்பம் என்றார்கள். இதற்காகும் செலவு? அரை மணி மூச்சு விடுவதற்கு இருநூற்றைம்பது ரூபாய் வரை ஆகும்.

கவலைப்படாதீர்கள். இப்போது நாம் குடி தண்ணீரைக் காசு கொடுத்து வாங்குவதில்லையா? அது போல மூச்சுக் காற்றையும் எல்லோரும் விலைக்கு வாங்கித்தான் சுவாசிக்க வேண்டும் என்ற நிலை கூடிய சீக்கிரம் வரும்போது, ஆக்ஸிஜன் விலையும் கணிசமாகக் குறைந்துவிடும்.


கல்கத்தா பொலிஸாருக்கு பிராணவாயு ஊக்குவிப்புக் கருவிகள்

கல்கத்தா போக்குவரத்துப் பொலிஸார்
கல்கத்தா போக்குவரத்துப் பொலிஸார்

இந்திய நகரான கல்கத்தாவில் தெருக்களில் பணிபுரியும் போக்குவரத்துப் பொலிஸார், அங்கு சுற்றாடலில் காணப்படும் மாசுபடிந்த வாயுவின் பாதிப்பைத் தவிர்த்துக் கொள்வதற்காக, அவர்களுக்கு பிராண வாயுவின் மட்டத்தை ஊக்குவிக்கும் சிறப்புக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அந்த நகரப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

8 மணிநேர பணியை முடித்த பிறகு குறைந்தபட்சம் பொலிஸார் 20 நிமிடங்களுக்காவது பிராணவாயுவைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர்களுக்குப் பணிக்கப்பட்டுள்ளதாக, கல்கத்தாவின் போக்குவரத்துப் பொலிஸின் தலைவர் கூறியுள்ளார்.

அந்த நகரவாசிகளில் சுமார் 70 வீதமானவர்கள், ஒருவகையான சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களில் போக்குவரத்துப் பொலிஸாரும் அடங்குகிறார்கள் என்றும் தேசிய புற்றுநோய் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அறிக்கை ஒன்றை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு பதில் -க்கு “Breath with care – Oxygen Supply, Carbon Monoxide poisoning”

 1. bsubra said

  உலக வெம்மையும் செல்வந்த நாடுகளும்

  டி.எம்.விஸ்வநாத்

  உலகில் பணக்கார எட்டு நாடுகளின் தலைவர்கள், ஜெர்மன் தலைநகர் பெர்லின் அருகே உள்ள ஹெய்லிஜென்டேம் நகரில் கூடி, அதிகரித்து வரும் உலக வெம்மை குறித்து “”மிகவும் கவலையோடும், விரிவாகவும்” விவாதித்துள்ளனர்.

  மாநாட்டின் இறுதி நாளில் வெளியாக வேண்டிய தீர்மானம் ஒரு நாள் முன்கூட்டியே வெளியிடப்பட்டுள்ளது.

  இதைவிட அதிர்ச்சி என்னவென்றால் அந்த தீர்மானத்தில், “நாங்கள், பிரேசில், சீனா, இந்தியா, மெக்சிகோ, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்களோடு, உலக வெம்மையால் உலகப் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பெரும் சவாலைப்பற்றி விவாதித்தோம்’ என்றும் “அதற்கு இந்த நாடுகள் ஒப்புக்கொண்டுவிட்டன’ என்ற தொனியிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  இதில் வேடிக்கையான உண்மை, மேற்குறிப்பிட்ட தலைவர்கள் (நமது பிரதமர் மன்மோகன் சிங் உள்பட) பெர்லினில் அமர்ந்து கொண்டு ஒருவரை ஒருவர் ஷேம லாபங்களைப் பற்றியும், வெவ்வேறு பிரச்னைகளைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தார்களே தவிர, தீர்மானம் வெளியாகும்வரை “ஜி எட்டு’ மாநாட்டில் இதுபற்றி விவாதிக்கவே இல்லை.

  இதை இந்திய அதிகாரிகளும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

  நமது பிரதமர் மன்மோகன் சிங் உள்பட ஆறு தலைவர்களை பெர்லினில் அமர வைத்துவிட்டு, ஹெய்லிஜென்டேம் நகரில் இப்படிப்பட்ட ஒரு தீர்மானத்தை வெளியிட்ட கையோடு போட்டோக்களுக்கு போஸ் கொடுத்து அனைவரையும் “”அசத்தியிருக்கிறார்கள்” “ஜி எட்டு’ நாட்டதிபர்கள்.

  நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பூமிப்பந்தின் வெப்பம், பருவநிலை மாற்றங்கள் ஒவ்வொரு நாட்டையும் புரட்டிப்போடத் தொடங்கி நாளாகிவிட்டன. வங்க தேசம் போன்ற நாடுகளில் பருவநிலை மாற்றங்களால் நாளுக்கு நாள் அங்குள்ள மக்கள் வாழ வழியின்றி அகதிகளாக இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர். ஆண்டுக்காண்டு மழை, வெயில், காற்று என எதையெடுத்தாலும் அளவுக்கு மீறி அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் உலக வெம்மை தான் என்பது ஆணித்தரமாகச் சொல்லப்பட்ட அறிவியல் உண்மை.

  அதிகரித்து வரும் பருவநிலை பாதிப்புகளைக் கட்டுப்படுத்த உலக வெம்மை எனப்படும் புவிவெப்பத்தைக் குறைக்காவிட்டால் அதிக வறட்சி காரணமாக 2050-ம் ஆண்டில் சுமார் 20 லட்சம்பேர் குடிக்கத் தண்ணீர் இன்றி செத்து மடிவார்கள் என சுமார் 600-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளின் கூட்டமைப்பான ஐ.பி.சி.சி (இன்டர் கவர்ன்மென்டல் பேனல் ஃபார் கிளைமேட் சேஞ்சஸ்) கடுமையாக எச்சரித்துள்ளது.

  அதிக வெப்பம் காரணமாக பனிமலைகளும் பனிப்பாறைகளும் உருகி அதன் காரணமாக அந்த நீர் கடலில் கலந்து உலகெங்கிலும் கடல் நீர் மட்டம் அதிகரிக்கும் என்றும் அதன் விளைவாக கடலோர நகரங்கல் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளனர். நிலைமை இப்படி இருக்க, உலக மக்களைக் காத்தருள வந்திருக்கிறோம் என்று மார்தட்டிக் கொள்கின்றன பணக்கார நாடுகள்.

  இந்த ஒரே விஷயத்தை வைத்துக்கொண்டுதான் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இன்னமும் ஊரை ஏமாற்றும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

  உலக வெம்மை ஏற்படக் காரணமே, பசுமை இல்ல வாயுக்கள் என்றழைக்கப்படுகிற கார்பன் – டை – ஆக்சைடு, மீத்தேன் போன்ற வாயுக்கள் அதிக அளவில் நம்மைச் சுற்றிலும், அதிலும் புவி வெளியில் பரவிவிட்டதுதான். தொழிற்சாலைகளும், வாகனங்களும்தான் இந்த வாயுக்கள் அதிகமாவதற்குக் காரணம்.

  கடந்த 1973-ம் ஆண்டுக்குப் பிறகு உலகெங்கிலும் தொழிற்சாலைகளும் வாகனங்களும் அதிகரித்ததன் விளைவாக பசுமை இல்ல வாயுக்களும் அதிகரித்தன. உலகில் அதிகரித்துள்ள பசுமை வாயுக்களில் 80 சதவீதம் வாயுக்களை வெளியிட்டு “”பரோபகாரம்” செய்தவர்கள் வேறு யாருமல்ல… இதே “ஜி எட்டு’ மாநாட்டின் “”பெரிய” பணக்கார நாடுகள்தான்.

  அதிலும், உலகின் மொத்த மக்கள்தொகையான 660 கோடியில், வெறும் 30 கோடி மக்கள்தொகையை அதாவது 5 சதவீத மக்கள்தொகையை மட்டுமே கொண்ட அமெரிக்கா, உலகப்பசுமை இல்ல வாயுக்களில் 25 சதவீதத்தை புவி வெளியில் விட்டு “”சாதனை” படைத்திருக்கிறது.

  இதைவிட இன்னும் ஓர் அதிர்ச்சி, “”பருவ நிலை மாற்றம் அல்லது உலக வெம்மையைக் கட்டுப்படுத்த இந்தியாவும், சீனாவும்தான் முக்கியப் பங்காற்ற வேண்டும்” என ஒரு பிரகடனத்தை திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார் அமெரிக்க அதிபர் புஷ்.

  இவர், இந்த இரு நாடுகளையும் இந்த விஷயத்தில் ஏன் குறி வைக்க வேண்டும்? இந்த இரண்டு நாடுகளில்தான் உலகின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் சுமார் 40 சதவீத மக்கள்தொகை உள்ளது (அதாவது கிட்டத்தட்ட 230 கோடிப்பேர்).

  எனவே இவ்வளவு மக்கள்தொகை இருந்தால் இவர்களால்தானே உலக வெம்மை அதிகரிக்கும்? – இதுதான் ஜார்ஜ் புஷ்ஷின் வாதம். எனவே என்னதான் நாங்கள் (ஜி – எட்டு நாடுகள்) 2050க்குள் பசுமை இல்ல வாயுக்களின் உற்பத்தியை 50 சதவீதமாகக் குறைக்க நினைத்தாலும் இந்த மக்கள்தொகை அதிகம் கொண்ட இந்தியாவும் சீனாவும் பங்கேற்கவில்லை என்றால் ஒரு பயனும் இல்லை என்று பஞ்சாயத்து தலைவர்போல சொல்லியிருக்கிறார் புஷ்.

  இது அமெரிக்க அரசுக்குப் புதிதல்ல. ஏனென்றால் இதே பிரச்னைக்காக ஜப்பானின் கியோட்டோவில் இதேபோல கூடி ஓர் ஒப்பந்தத்தை உலக நாடுகள் 2005ம் ஆண்டு உருவாக்கின. அந்த ஒப்பந்தம் அதே ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி அமலுக்கு வந்தது. அப்போதே அமெரிக்கா அதில் கையெழுத்திடவில்லை.

  அமெரிக்காவின் இந்த போக்கு பிற “ஜி எட்டு’ நாட்டதிபர்களுக்கு முகம் சுளிக்க வைத்துள்ளது என்பது என்னவோ உண்மை. இருந்தாலும் ஒரே மேஜையில் அமர்ந்து பேசி இப்போது இறுதியாக கொண்டு வந்த தீர்மானத்தில், வரும் 2050 ஆம் ஆண்டுக்குள் பசுமை இல்ல வாயுக்களை 50 சதவீதம் கட்டுப்படுத்துவோம் என ஓர் ஒப்புக்குச் சப்பாணி தீர்மானத்தை “ஜி எட்டு’ நாடுகள் நிறைவேற்றியுள்ளன. இப்போதும் இதற்கு செவி சாய்க்காத ஜார்ஜ் புஷ், உலக வெம்மை விஷயத்தில் இனிமேலும் வேடிக்கை பார்க்கும் ஒருவராகத்தான் இருக்கப்போகிறார் என்பது தெளிவாகிவிட்டது. தனது தவறை மறைக்கத்தான் இப்போது சீனாவையும் இந்தியாவையும் கைகளில் எடுத்திருக்கிறார் புஷ்.

  சரி ஒரு பேச்சுக்காகவே வைத்துக்கொள்வோம்… உலக வெம்மையைக் கட்டுப்படுத்த இந்த இரு நாடுகளும்தான் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்றால், இந்த இரு நாடுகளிலும் அதிலும் குறிப்பாக இந்தியாவில் இப்போதுதான் தொழில் வளர்ச்சியே கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட்டு வருகிறது.

  எனவே அதிகரிக்கும் தொழிற்சாலைகளால் பசுமை இல்ல வாயுக்கள் அதிகரிக்கின்றன என்றால்… இதுவரை உலகில் உருவான பசுமை இல்ல வாயுக்களுக்கு இந்தியாவோ சீனாவோ மட்டுமே காரணம் அல்ல. அதற்கு காரணம் ஏற்கெனவே தொழில் வளர்ச்சி அடைந்துள்ள அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகள்தான்.

  எனவே உலக வெம்மை பிரச்னையில் முன்னின்று நடவடிக்கை எடுக்க வேண்டிய அத்தனை பொறுப்பும் அமெரிக்காவுக்கு உண்டு. ஆனால், பூனைக்கு யார் மணி கட்டுவது? கியோட்டோ ஒப்பந்தத்தில் முடிவு செய்ததையாவது இதுவரை நிறைவேற்றியுள்ளோமா என்றால் இல்லை.

  சரி, ஹெய்லிஜென்டேம் ஒப்பந்தத்தில் முடிவு செய்ததுபோல வரும் 2050 ஆம் ஆண்டுக்குள் 50 சதவீத பசுமை இல்ல வாயுக்களை இந்த நாடுகள் கட்டுப்படுத்துமா என்றால் அதிலும் அமெரிக்கா இல்லை. அப்படியிருக்க இந்த ஒப்பந்தமும் “ஜி எட்டு’ மாநாடும் ஒரு சடங்கு மாநாடுதான் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

  உலக வெம்மையைக் கட்டுப்படுத்தி பல கோடிப்பேர் பட்டினியாலும், நோய்களாலும், வெள்ளம், சூறாவளியாலும் சாகாமல் பாதுகாக்க “ஜி எட்டு’ உள்ளிட்ட அனைத்து உலக நாடுகளும் எடுக்க வேண்டிய முடிவுகள் விஞ்ஞானிகளும் அறிவியலும் என்ன சொல்கிறதோ அத்தகைய முடிவுகளும், நடவடிக்கைகளும்தான். மாறாக ஜார்ஜ் புஷ் போன்ற உலக அரசியல் வியாபாரிகள் சொல்லும் முடிவை அல்ல. அது நிரந்தரத் தீர்வாகாது.

  ஏனெனில் அறிவியல் தொடர்பான உலக வெம்மைப் பிரச்னைக்கு உலக அரசியல் வியாபாரிகளால் தீர்வு காண முடியாது. அதுவரை ஒவ்வோர் ஒப்பந்தமும் வெறும் காகிதங்களாகவும் ஓரிரு நாள்களுக்கு ஊடகங்களுக்குச் செய்திகளாகவும் மட்டுமே இருக்கும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: