Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Pranabh or Sushil Kumar Shinde or Karan Singh – First Among Equals?

Posted by Snapjudge மேல் மே 14, 2007

மாயாவதியின் மகத்தான வெற்றியால் குடியரசுத் தலைவர் தேர்தலில் புதிய வியூகம் அமைக்கும் இடதுசாரிகள்: பிரணப் முகர்ஜிக்கு வாய்ப்பு கிடைக்கும்?

புதுதில்லி, மே 14: உத்தரப் பிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி பெரும்பலத்துடன் ஆட்சியைப் பிடித்ததை அடுத்து, குடியரசுத் தலைவர் தேர்தலில் புதிய வியூகம் அமைக்க இடதுசாரி கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிகிறது.

இந்நிலையில் எந்த ஒரு கட்சியும் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் பெயரை திட்டவட்டமாக அறிவிக்க முடியாத நிலையில் உள்ளது.

இதற்கிடையே குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக தேர்தல் கமிஷன் எந்த நேரத்திலும் அறிவிக்கை வெளியிடக்கூடிய வாய்ப்பும் உள்ளது.

உ.பி. தேர்தல் முடிவுக்காக காத்திருந்த காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் இப்போது பொது வேட்பாளரை நிறுத்த முயன்றுவருகின்றன.

இடதுசாரிகளைப் பொருத்தவரையில் இரண்டாவது முறையாக கலாமை பதவியில் நீடிக்கச் செய்வதிலும், துணைக் குடியரசுத் தலைவர் பைரோன் சிங் ஷெகாவத்தை வேட்பாளராக நிறுத்தச் செய்வதற்கும் விருப்பமில்லை.

இந்நிலையில், அரசியலிலும் ஆட்சியிலும் நீண்டகால அனுபவம் பெற்றுள்ள வெளியுறவு அமைச்சர் பிரணப் முகர்ஜியை குடியரசுத் தலைவர் வேட்பாளராக காங்கிரஸ் பரிந்துரைக்கும்பட்சத்தில், அதை ஏற்றுக்கொள்ள இடதுசாரிகளுக்கு நெருடல் எதுவும் இருக்காது என்று கூறப்படுகிறது.

இடதுசாரிகளுடனான பேச்சின்போது மத்திய அமைச்சர்கள்

  • பிரணப் முகர்ஜி,
  • சுஷில் குமார் ஷிண்டே,
  • முன்னாள் மத்திய அமைச்சர் கரண் சிங் ஆகியோரின் பெயர்களை பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.

மாயாவதி தற்போது மேல்சாதியினர் ஆதரவையும் பெறுவதில் குறியாக இருப்பதால், குடியரசுத் தலைவர் தேர்தலில் தலித் வேட்பாளரை மட்டும் தான் ஆதரிப்பார் என்று கூற முடியாது.

உ.பி. முதல்வர் மாயாவதியின் ஆதரவில்லாமல் குடியரசுத் தலைவர் தேர்தலை சுமுகமாக நடத்த முடியாது என்பதில் காங்கிரஸ் தெளிவாக இருக்கிறது.

முக்கிய எதிர்க்கட்சியான பாஜக, கலாமை மீண்டும் வேட்பாளராக நிறுத்தலாம் என்று கடந்த ஆண்டு வெளிப்படையாக கூறி வந்தது. ஆனால் இடதுசாரிகள் எதிர்ப்பு காரணமாக மவுனமாக இருந்து வருகிறது.

தற்போதைய நிலையில் இடதுசாரி கட்சிகள் காங்கிரஸýடன் பேரம் செய்துகொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி வேட்பாளரை ஆதரிப்பது எனவும், பதிலுக்கு குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜிக்கு ஆதரவைப் பெறுவது எனவும் இடதுசாரிகள் திட்டமிடக்கூடும்.

—————————————————————————————————–

குடியரசுத் தலைவர் பதவிக்கு வேட்பாளர் யார்?

நீரஜா சௌத்ரி

குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கை வெளியிட ஒரு மாதத்துக்கும் குறைவான அவகாசமே இருக்கும் இந்த நிலையில்கூட, அந்தப் பதவியை அலங்கரிக்கப் போகிறவர் யார் என்பதைத் தேர்வு செய்ய முடியாத அரசியல் குழப்ப நிலைமை காணப்படுவது நமது துரதிருஷ்டம்தான்!

“”கூட்டணி அரசுகள்தான் இனி” என்ற நிலைமை ஏற்பட்டுவிட்டதால், நமது அரசியல் முறைமையிலேயே ஒரு நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுவிட்டது. எந்த முக்கிய முடிவென்றாலும் அதை முதலில் ஆளும் கூட்டணிக் கட்சிகள் ஏற்க முதல் கட்டத்திலும், எதிர்க்கட்சிக் கூட்டணி ஆதரிப்பதற்கு அடுத்த கட்டத்திலும் காய்களை நகர்த்த வேண்டியிருக்கிறது.

முன்பெல்லாம், குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளரைத் தேர்வு செய்யும் பணி -அப்பதவி முடிவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்னதாகவும், குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான வேட்பாளரைத் தேர்வு செய்யும் பணி -6 மாதங்களுக்கு முன்னதாகவும் தொடங்கிவிடும் என்று அனுபவஸ்தர்கள் கூறுகின்றனர்.

1987 ஜூலையில் குடியரசுத் தலைவரான ஆர்.வெங்கட்ராமனுக்கு அவர்தான் அடுத்து அந்தப் பதவிக்கான வேட்பாளர் என்பதை 1986 அக்டோபர் 4-ம் தேதியே தெரிவித்துவிட்டார் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி. பிரதமர் முதலில் எதிர்க்கட்சியினரையும் பிறகு தன் கட்சியினரையும் ஆலோசனை கலந்துவிட்டு கட்சியின் ஆட்சிமன்றக் குழுவில் தெரிவித்து ஒப்புதல் வாங்கியது அந்தக் காலம்.

ஆந்திர முதலமைச்சராகப் பதவி வகித்தபோது தன்னுடைய அரசைக் கலைத்தவர்தான் சங்கர் தயாள் சர்மா என்ற வருத்தம் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவுக்கு இருந்தபோதிலும், குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் அவர்தான் என்பதை குடியரசு துணைத் தலைவர் பதவி வகித்த சர்மாவிடம் முன்கூட்டியே தெரிவித்தார் நரசிம்ம ராவ்.

கே.ஆர். நாராயணன்தான் குடியரசு துணைத் தலைவராகப் போகிறார் என்பதும் அவரிடம் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்தான், “”பதவி கிடைக்கட்டும் அதுவரை எதுவும் நிச்சயம் இல்லை” என்று உள்ளூர அவநம்பிக்கையுடன் இருந்தார்; அதற்குக் காரணமும் உண்டு. 1991-ல் வெளியுறவுத்துறை அமைச்சர் பதவிக்கு கே.ஆர். நாராயணனைத்தான் நரசிம்ம ராவ் தேர்வு செய்திருந்தார். ஆனால் கே. கருணாகரன் அதை விடாப்பிடியாக தடுத்து நிறுத்தினார். கருணாகரன் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த சமயம் பார்த்து, குடியரசு துணைத் தலைவராக கே.ஆர். நாராயணனைத் தேர்வு செய்துவிட்டார் நரசிம்ம ராவ்.

அப்போதெல்லாம் ஒரு கட்சி ஆட்சிதான் நடந்தது; தனது அரசியல் உதவியாளர்கள் தயாரித்த 4 அல்லது 5 பேர் கொண்ட பட்டியலிலிருந்து ஒருவரை குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்வது பிரதமருக்கு எளிதாக இருந்தது. இப்போது அப்படி செய்ய முடியாதே?

இப்போதைய கூட்டணி அரசில் பிரதமரால் மட்டும் எதையும் தீர்மானிக்க முடியாது. ஐக்கிய முற்போக்கு கூட்டணிகூட தீர்மானிக்கும் நிலையில் இல்லை. இந்தக் கூட்டணி அரசை வெளியிலிருந்து ஆதரிக்கும் இடதுசாரிகளின் ஒப்புதலைப் பெற வேண்டும்; அடுத்து மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவையும் பெற வேண்டும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி தேர்வு செய்யும் வேட்பாளரை ஆதரிக்கும் மன நிலையிலேயே மாயாவதி இருக்கிறார் என்பது நிம்மதி தரும் விஷயமாகும்.

குடியரசுத் தலைவர் பதவிக்கு பைரோன் சிங் ஷெகாவத் போட்டியிட்டால், தங்களுடைய கூட்டணியில் இருப்பவர்கள்கூட அணி மாறி வாக்களித்துவிடுவார்களே என்ற கவலை காங்கிரஸ் தலைவர்களுக்கு இருக்கிறது. அவர் எல்லா கட்சியினராலும் விரும்பப்படுகிறவர் என்பது மட்டும் காரணம் அல்ல, அவர் நிறுத்தப்பட்டால் எல்லா கட்சிகளிலும் உள்ள தாக்குர்கள் அவருக்கே வாக்களித்துவிடுவார்கள்.

இதனால்தான்

  • அர்ஜுன் சிங்,
  • பிரணாப் முகர்ஜி,
  • சுசீல்குமார் ஷிண்டே,
  • நாராயண் தத் திவாரி,
  • சிவராஜ் பாட்டீல் என்று பல பேர்கள் அடிபடுகின்றன. இதில் இடம்பெறாத யாராவதுகூட கடைசி நேரத்தில் வேட்பாளராகிவிடலாம் என்றும் பேசப்படுகிறது.

ஷெகாவத்தைச் சமாளிக்கும் அளவுக்கு அரசியல் செல்வாக்கு படைத்தவர் பிரணாப் முகர்ஜி. ஆனால் அவர் குடியரசுத் தலைவர் ஆன பிறகு ஆளும் கூட்டணித்தலைமை விரும்புகிறபடிதான் எப்போதும் நடப்பார் என்று சொல்ல முடியாது. அதுமட்டும் இல்லாமல் ஆளும் கூட்டணியில் 40-க்கும் மேற்பட்ட அமைச்சரவைக் குழுக்களில் இடம் பெறும் அளவுக்கு அவர் முக்கியமான நிர்வாகி. அவருடைய அனுபவமும் வழிகாட்டலும் ஆளும் கூட்டணிக்குத் தொடர்ந்து தேவைப்படுகிறது.

ஷிண்டேவையோ சிவராஜ் பாட்டீலையோ நிறுத்த சோனியா காந்திக்கு விருப்பம் அதிகம். ஆனால் இவ்விருவருக்கும் மாற்றுக் கட்சிகள், அணிகளிலிருந்து வாக்குகள் கிடைப்பது அரிது.

தலித்துகளின் தேசியத் தலைவராக உருவாகிவரும் மாயாவதி, இன்னொரு தலித்தை (ஷிண்டே) தேசத்தலைமைப் பதவியில் அமர்த்துவதை எப்படி வரவேற்பார் என்ற சந்தேகம் இருந்தது. அவரோ காங்கிரஸ் தேர்வு செய்கிறவருக்கு என் ஆதரவு உண்டு என்று குறிப்பால் உணர்த்திவிட்டார். எனது கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்களை ஆலோசனை கலந்துவிட்டு முடிவைத் தெரிவிக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார்.

திமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் யாரை ஆதரிப்பார்கள் என்பது அடுத்து முக்கியமானது. எனவேதான் தயாநிதி மாறனுக்குப் பிறகு மத்திய அமைச்சரவையில் திமுக விரும்பிய மாற்றங்களை உடனுக்குடன் செய்து தந்தனர் சோனியா காந்தியும் மன்மோகன் சிங்கும்.

கட்சிகளுக்குள் உள்ள போட்டிகள், கூட்டணிக்குள் காணப்படும் இழு-பறிகள், இருவேறு கூட்டணிகளின் பலம் ஆகியவை முக்கியத்துவம் பெற்றுவிட்டதால் குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் உள்பட எந்த முக்கிய முடிவையும் எடுப்பது எளிதாக இல்லை. எனவே இந்த முயற்சிகளை வெகு சீக்கிரமாகவே தொடங்கிவிட வேண்டும். இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சி சமீபத்திய அனுபவத்திலிருந்துகூட பாடம் கற்காமல் இருப்பது வியப்பாக இருக்கிறது!

தமிழில்: சாரி.

ஒரு பதில் -க்கு “Pranabh or Sushil Kumar Shinde or Karan Singh – First Among Equals?”

  1. bsubra said

    விபரீத வாதம்

    இந்தியக் குடியரசின் முதல் குடியரசுத் தலைவராக டாக்டர் ராஜேந்திர பிரசாத்தைத் தேர்ந்தெடுப்பது என்று தீர்மானித்தபோது, குடியரசுத் துணைத் தலைவர் யார் என்கிற கேள்வி எழுந்தது. மௌலானா அபுல்கலாம் ஆசாத்தில் தொடங்கி பலரது பெயர்கள் பேசப்பட்டன. ஆனால் அன்றைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு ஒருவிஷயத்தில் பிடிவாதமாக இருந்தார். சமுதாயத்தில் அந்தஸ்தும் கௌரவமும் மரியாதையும் உள்ள அரசியல் சார்பில்லாத ஒருவர்தான் குடியரசுத் துணைத் தலைவராக வேண்டும் என்பதுதான் அது. டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    டாக்டர் ராதாகிருஷ்ணன் 1962-ல் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, குடியரசுத் துணைத் தலைவரானவர் அப்போது அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த டாக்டர் ஜாகீர் ஹுசேன்.

    ஓய்வுபெற்ற அரசியல்வாதிகளின் புகலிடமாக ஆளுநர் மாளிகைகளையும் குடியரசுத் தலைவர் மாளிகையையும் மாற்றும் போக்கு, 1969-ல் ஏற்பட்ட காங்கிரஸ் கட்சியின் பிளவுக்குப் பின்னால்தான் தீவிரமானது.

    ஆளுநர்கள் தங்களை அந்தப் பதவியில் அமர்த்திய அரசியல் கட்சியின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றபடி இயங்கி, ஆளுநர் மாளிகைகளைச் சதி ஆலோசனைக் கூடங்களாக மாற்றும் சம்பவங்களைக் கடந்த ஆண்டுகளில் பலமுறை பார்த்துவிட்டோம். இந்த நோய் சிலபல வேளைகளில் குடியரசுத் தலைவர் மாளிகையையும் தொற்றிக்கொண்டது. உதாரணம் – அவசரநிலை பிரகடனம்!

    அதனால்தான் படித்தவர்களும் தேசநலனில் அக்கறை உள்ளவர்களும் இளைஞர்களும் இப்போதைய குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமே இன்னொரு முறை தொடர வேண்டும் என்று விரும்புகிறார்கள். எந்த ஒரு மாணவரைக் கேட்டாலும் “எங்கள் குடியரசுத் தலைவர்’ என்று மகிழ்ச்சிக் குரல் எழுப்புகிறார்.

    இது இப்படியிருக்க, அரசியல் சார்பில்லாத ஒருவர் குடியரசுத் தலைவராவதை நாங்கள் விரும்பவில்லை என்று இடதுசாரிகள் அறிவித்திருக்கிறார்கள். கம்யூனிஸ்ட்டாக இருந்தால் நலம் என்று சொல்லாமல் சொல்கிறார்கள்.

    கூட்டணி ஆட்சிதான் அடுத்த சில காலத்திற்கு இந்தியாவின் தலையெழுத்து என்பது நிச்சயம். இப்படி நிலையற்ற மத்திய அரசு இருக்கும்போது, ஆட்சிக் கவிழ்ப்பும் அரசியல் பேரங்களும் நிச்சயம் அதிகரிக்கும். அதன் விளைவாக, மக்களுக்கு அரசியல்வாதிகள் மீது வெறுப்பு அதிகரிக்கும். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை குறையும்.

    இப்படியொரு சூழ்நிலையில் அரசியல்சார்புடைய ஒருவர் குடியரசுத் தலைவராக இருப்பது ஆபத்து. அவர் தன்னைத் தேர்ந்தெடுக்க உதவிய கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட மாட்டார் என்பது என்ன நிச்சயம்? அரசியல்வாதியாகத் தனது வாழ்நாளில் பெரும்பகுதியைக் கழித்த ஒருவர், குழப்பமான சூழ்நிலையைப் பயன்படுத்தி சர்வாதிகாரத்துக்கு வழிகோல மாட்டார் என்பது என்ன நிச்சயம்?

    குடியரசுத் தலைவர் பதவி என்பது வெறும் ரப்பர் ஸ்டாம்ப் பதவிதான். உண்மை. ஆனால் குடியரசுத் தலைவர் என்பவர் தேசத்தின் முதல் குடிமகன். அரசியல்வாதிகள் மீதும் அரசியல் கட்சிகள் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்துவரும் வேளையில், முதல் குடிமகனாக இருக்கும் குடியரசுத் தலைவர் அரசியல்வாதியாக இல்லாமல், மரியாதைக்குரிய ஒருவராக இருந்தால் மக்களுக்குக் கொஞ்சநஞ்சமாவது மக்களாட்சித் தத்துவத்தின் மீது மரியாதை தொடரும்.

    குடியரசுத் தலைவராக அப்துல் கலாம்தான் தொடர வேண்டும் என்கிற நிர்பந்தம் எதுவும் இல்லை. ஆனால் அந்தப் பதவியில் அமர இருப்பவர் ஒரு டாக்டர் ராதாகிருஷ்ணன்போல, ஒரு டாக்டர் ஜாகீர் ஹுசேன்போல, ஒரு டாக்டர் அப்துல் கலாம்போல அரசியல் கலப்பில்லாத, ஒட்டுமொத்த இந்தியாவின் மரியாதைக்குப் பாத்திரமானவராக இருத்தல் வேண்டும்.

    அரசியல்வாதிதான் குடியரசுத் தலைவராக வேண்டும் என்கிற இடதுசாரிகள் கோரிக்கை சந்தர்ப்பவாதமாகத் தெரிகிறதே தவிர தேசநலன் கருதியதாகத் தெரியவில்லை. சுயநலம் சார்ந்ததாகத் தெரிகிறது!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: