The increasing cost of Property Appreciation – Practices, Investments, Discrepancies
Posted by Snapjudge மேல் மே 10, 2007
உயரும் நில மதிப்பு
தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அதிகம் வருவதால் நன்மைகள் அதிகம் உள்ளன. நிறைய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கிறது. ஆயிரக்கணக்கில் ஊதியம் கிடைக்கிறது. இருப்பினும் சில இடையூறுகளும் உடன் வருகின்றன.
தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதும் அப் பகுதியில் நிலத்தின் விலை பல மடங்கு உயர்ந்துவிடுவது (அல்லது உயர்த்தப்படுகிறது?) இயல்பான நிகழ்வாகிவிட்டது. சாதாரண தொழிற்சாலை வந்தாலும் நிலத்தின் மதிப்பு உயரும்தான். ஆனால் தகவல் தொழில்நுட்பத் துறை என்றால் நிலத்தின் மதிப்பு பல மடங்காக உயர்ந்து விடுகிறது.
சென்னை, கோவை, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் திடீரென நிலத்தின் விலை பல கோடி ரூபாய்க்கு உயர்ந்துள்ளதற்கு இதுதான் முக்கியக் காரணம்.
இதனால், சென்னை, பெங்களூர், மும்பை போன்ற பெருநகரங்களில் காலிமனைகளை வளைத்துப்போடுவது அல்லது குறைந்த விலைக்கு மிரட்டி வாங்குவது, போலி ஆவணங்கள் தயாரித்தல் ஆகியன அதிகரித்துள்ளன. அரசுக்குச் சொந்தமான கட்டடங்கள், கூட்டுறவுத் துறைக்குச் சொந்தமான இடங்களை விற்கும் நிலையை உருவாக்கி, அதை கூட்டணி அமைத்து ஏலத்தில் எடுக்கும் நிகழ்வுகளும் நடக்கின்றன.
சென்னை நகரில் இதுபோன்ற ரியல் எஸ்டேட் முறைகேடுகள் பற்றிய புகார்கள் ஆயிரத்துக்கும் மேலாக உள்ளன. தமிழகத்தின் பிற நகரங்களிலும் இதேபோன்ற முறைகேடுகள் வேகமாக நடைபெற்று வருவது கவலை அளிப்பதாக உள்ளது.
இதற்குப் பின்புலமாகவும், பலமான ஆதரவாகவும் இருப்பவர்கள் உள்ளூர் அரசியல்வாதிகள்தான். இப்படி வாங்கப்படும் மனை, நிலம் ஆகியவற்றின் “உயர்த்தப்பட்ட’ மதிப்பு இவர்களாலேயே நிர்ணயிக்கப்படுகிறது.
சென்னை, பெங்களூர், மும்பை போன்ற பெருநகரங்களில் இத்தகைய ரியல் எஸ்டேட் முறைகேடுகளை விசாரிக்க காவல்துறையில் தனிப்பிரிவுகள் உள்ளன. என்றாலும், யாரும் தண்டனை பெறவில்லை. இந்த முறைகேடுகளும் கட்டுப்படுத்தப்படவில்லை.
இதில் அரசு பாரபட்சமற்ற நடவடிக்கை மேற்கொண்டால் முறைகேடுகளைத் தடுக்கவும், நிலத்தின் போலியான உயர் மதிப்பீட்டைக் கட்டுப்படுத்தவும் முடியும். இல்லையெனில், நகரின் மையப்பகுதிகளில் வசிக்கும் “எதிர்ப்பு சக்தி’ இல்லாத சாதாரண மக்கள் உயிருக்குப் பயந்து தங்களுக்குக் கொடுக்கப்படும் பணத்தைப் பெற்றுக்கொண்டு வெளியேறும் நிகழ்வுகள் தவிர்க்க முடியாததாக மாறும்.
தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த நிறுவனங்கள் நினைத்தால் இத்தகைய நிலமதிப்பு உயர்வைத் தடுக்க முடியும். இந்நிறுவனங்களைக் காட்டிலும், அதில் பணிபுரியும் தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் மனது வைத்தால் அந்தந்த நகரின் அடிப்படை வாழ்க்கைச் செலவு உயர்வதைத் தடுக்க முடியும்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுவோர் மாதம்தோறும் குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரம் ஊதியம் பெறுகின்றனர். இவர்களது செலவிடும் திறன் சாதாரண மக்களைக் காட்டிலும் மிக அதிகம்.
ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வீட்டுக்கு இரண்டாயிரம் ரூபாய் வாடகை கொடுப்பது அவருக்குச் சிரமமில்லை. ஆனால் அவரை அறியாமலேயே அப்பகுதியின் வாடகையை உயர்த்துகிறார். அவரால் குறைந்தபட்ச தூரத்துக்கு ஆட்டோவில் செல்ல ரூ.30-ஐ வீசிவிட முடியும். அப்பகுதியில் ஆட்டோ கட்டணம் உயர அவர் காரணமாகிறார். அதைவிட மோசமாக. அவரால் ரூ.10 லட்சம் பெறுமானமுள்ள ஒரு குடியிருப்பை ரூ.15 லட்சத்துக்குக் கண்ணை மூடிக்கொண்டு வாங்க முடியும். ஆனால், சம்பளத்தைத் தவிர “வேறு வருமானம்’ எதையும் பார்க்க முடியாத நடுத்தர மக்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் விலை கூடுதல் என்றாலும் அது பெரும் சுமை. சொந்த வீடு எனும் கனவை மண்ணுக்குள் அழுத்துகிற சுமை.
மறுமொழியொன்றை இடுங்கள்