Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Protecting the farmlands for Food Consumption – Environment, Ethanol, Ethics

Posted by Snapjudge மேல் மே 10, 2007

உணவு தானியத்துக்குப் பாதுகாப்பு

மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தபோதிலும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. எனவே அடுத்த 10 அல்லது 20 ஆண்டுகளில் அதிகரிக்கும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் உற்பத்திப் பொருளுக்குக் கட்டுபடியாகாத விலை, உற்பத்திச் செலவு அதிகரிப்பு, வேலைக்குப் போதிய தொழிலாளர்கள் கிடைக்காமை போன்ற காரணங்களால் குறுகிய கால பயிர் அல்லது செலவை ஈடுகட்டும் அளவுக்காவது வருமானம் அளிக்கும் பணப் பயிர்கள் மீது விவசாயிகளின் நாட்டம் அதிகரித்து வருகிறது. பயிர் செய்துவிட்டு காத்திருந்து இயற்கையுடன் போராடி இறுதியில் போட்ட முதலுக்கு ஆதாயம் கிடைக்குமா என்ற நிச்சயமற்ற நிலை காரணமாக வேளாண் துறையில் நுழைய இளைய சமுதாயம் தயக்கம் காட்டுகிறது. இதனால் இப்போது வேளாண்மையில் ஈடுபட்டுள்ளவர்களை நம்பியே எதிர்கால உணவு உற்பத்தி உள்ளது.

இந்த நிலையில் பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக தாவரங்களிலிருந்து எரிபொருள் பெறுவதற்கான திட்டத்தை அமல்படுத்த உலகம் முழுவதும் முழுவீச்சில் இயக்கம் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதன் காரணமாகக் காடுகள் அழிக்கப்படும். சிறு விவசாயிகள் உணவுதானிய சாகுபடியைக் கைவிட்டுவிடுவார்கள். நிலைமையைச் சரியாகக் கையாளவில்லை என்றால் கடும் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும், வறுமை தலைதூக்கும் என்று ஐக்கிய நாடுகள் அவையின் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாமாயில், மக்காச்சோளம், கரும்பு, சோயா, ஆமணக்கு போன்ற பயிர்கள் மீது விவசாயிகளின் கவனம் திரும்பியுள்ளது.

உலக வெப்ப நிலை மாறுதலால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்க எரிபொருளுக்காக இந்தத் தாவரங்கள் பெருமளவு பயிரிடப்பட வேண்டும் என்று பணக்கார நாடுகள் விரும்புகின்றன. அவற்றின் உற்பத்தி கச்சா எண்ணெய் விலையைக் கட்டுக்குள் வைத்திருப்பது மட்டுமன்றி புதிய சந்தையையும் ஏற்படுத்தும். ஏழைகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு நல்ல விலையைப் பெற்றுத் தரும் என்பது அவர்களின் கருத்து. மாற்று எரிபொருள் மூலம் உலக எரிபொருள் தேவையில் 20 ஆண்டுகளில் 25 சதவீதத்தை நிறைவு செய்துவிட முடியும் என்றும் கணித்துள்ளனர்.

கடந்த ஆண்டு அமெரிக்காவில் பயிரான மக்காச் சோளத்தில் பெருமளவு எரிபொருள் தயாரிக்க அனுப்பப்பட்டது. பிரேசில், சீனா ஆகியன 5 கோடி ஏக்கரில் இப் பயிரைச் சாகுபடி செய்கின்றன. 2020க்குள் மொத்த எரிபொருள் உற்பத்தியில் 10 சதவீதம் தாவரங்களிலிருந்து கிடைப்பதாக இருக்க வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் குறிப்பிட்டுள்ளது. இது பெட்ரோல், டீசலுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும்போது வாகனங்களிலிருந்து வெளியேறும் நச்சுப்புகையினால் ஏற்படும் பாதிப்புகள் வெகுவாகக் குறையும்.

மேலும் இதன் காரணமாக பெட்ரோலியப் பொருள்களின் விலை கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். அது ஏழைகளுக்கு உதவிகரமாக இருக்கும் என்று கூறப்பட்டாலும் ஏற்கெனவே சமையல் எண்ணெய்க்காக பாமாயில் உற்பத்திக்கு காடுகள் அழிக்கப்படுவதால் பருவ நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு அது எதிர்பாராத ஆபத்துகளை ஏற்படுத்தும் என்பது சுற்றுச்சூழல் நிபுணர்களின் கருத்தாகும். மேலும் இதனால் வன விலங்குகளுக்கும் ஆபத்து ஏற்படலாம்.

மேலும் எரிபொருளுக்காக காடுகளை அழிக்கும்போது அது மண் அரிப்புக்கும் காரணமாகிவிடும். இது தவிர ஏற்றுமதியை மனதில் கொண்டு மண்வளம் மிக்க நிலங்களே பயிர்ச் சாகுபடிக்குப் பயன்படுத்தப்படும் என்பதால் சாதாரண நிலங்கள் வைத்துள்ள ஏழைகளுக்கு இதனால் பலன் கிடைக்காது என்பது ஒரு தரப்பினரின் வாதம். எனவே, இது நடைமுறைக்கு வந்த பிறகுதான் இதன் விளைவுகளைத் துல்லியமாக மதிப்பிட முடியும்.

—————————————————————————————————–

புவி வெப்பம்: சிக்கல்களும் தீர்வுகளும்

கொ. பாலகிருஷ்ணன்

உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிற பிரச்னைகளில் பூமி வெப்பமடைதல் மிக முக்கியமானதாகும்.

பூமியைச் சுற்றியுள்ள 8 கி.மீ. தொலைவுக்கு கரியமில வாயு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ûஸடு மற்றும் குளோரோ புளோரா கார்பன் போன்ற வாயுக்களின் அடர்த்தி அதிகமாவதால் வாயு மண்டலம் சூடாகியுள்ளது.

இவ்வாயுக்களை பசுமைக் கூடார வாயுக்கள் என்று அழைக்கின்றனர். இவ்வாயுக்கள் வாயுமண்டலத்தில் நிலைகொண்டு சூரியனின் ஒளிக் கதிர்களை உள்வாங்கி வெப்பமடைந்து வாயுமண்டலத்தை சூடாக்குகிறது. இவ்வாறு பூமி வெப்பமடைவதை பசுமைக் கூடார விளைவு என்று அழைக்கிறோம்.

இதனால் எதிர்காலத்தில் பூமியின் பல பகுதிகள் கடலுக்குள் மூழ்கலாம், மழை குறைந்து குடிநீர்ப் பற்றாக்குறை மற்றும் பஞ்சம் பட்டினி ஏற்படலாம்.

பல நோய்கள் உருவாகலாம். மக்கள்தொகை அதிகரிப்பு, காடுகளை அழித்தல், அதிக அளவில் வாகனங்கள், பெட்ரோலியத்தை எரிபொருளாகப் பயன்படுத்துதல், குளிர்சாதன உபகரணங்களைப் பயன்படுத்துதல், வளர்ந்த நாடுகளில் தேவைக்கு அதிகமாக தனிநபர் மின் உபயோகம் மற்றும் வரைமுறை இல்லாத இயற்கை வளங்களை ஆடம்பர வாழ்க்கைக்குப் பயன்படுத்துவது போன்ற காரணங்களால் பசுமைக் கூடார வாயுக்கள் அதிகம் உற்பத்தி செய்யப்படுகின்றன.

பூமியின் வெப்ப அதிகரிப்புக்கு பசுமைக் கூடார வாயுக்களே காரணம். இவ்வாயுக்களின் மூலக்கூறுகள் சூரிய ஒளியின் நீள அலைவரிசை ஒளிக்கற்றைகளை ஈர்த்து தன்னகத்தே உள்வாங்கி வெப்பத்தை நீண்ட நேரம் தேக்கி வைப்பதால் வாயுமண்டலம் வெப்பமாகிறது.

கரியமில வாயு பூமியை வெப்பமாக்குவதில் அதிகப் பங்கு வகிக்கிறது. வாயுமண்டலத்தில் கரியமில வாயு இதே அளவில் உயருமானால் 2100-ஆம் ஆண்டில் 540 – 970 பிபிஎம் ஆக உயர வாய்ப்புள்ளது. கரியமிலவாயு உற்பத்தியில் உலக அளவில் அமெரிக்கா முதலிடத்திலும் இந்தியா ஏழாவது இடத்திலும் உள்ளன. நிலக்கரியை ஆதாரமாகக் கொண்டு செயல்படும் அனல் மின் நிலையங்கள் மூலமாக அதிக அளவு பசுமைக் கூடார வாயுக்கள் வெளியேற்றப்படுகின்றன. குறிப்பாக இதில் கரியமில வாயுவின் அளவு அதிகம்.

மக்கள்தொகைப் பெருக்கம், தொழில் வளர்ச்சி, காடுகளை அழித்தல், அதிக அளவு பெட்ரோலியம் உபயோகித்தல் போன்ற காரணங்களால் இதன் விளைவு அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது.

கரியமில வாயுக்களின் துகள்கள் சூரிய ஒளியின் வெப்பத்தை உட்கொண்டு நீண்ட நேரம் தன்னகத்தே வைத்துக்கொள்ளும் தன்மையுடையது. காற்று மண்டலத்தில் இதன் ஆயுள்காலம், சுமார் 50 – 2000 ஆண்டுகளாகும். இது எளிதில் வெப்பத்தைக் கடத்தாது. எனவே, இவ்வாயுவின் அளவு அதிகரிக்க அதிகரிக்க வெப்பம் உயர்ந்து கொண்டே இருக்கும்.

தற்போது மீத்தேனின் அளவு 1783 பிபிபி – யன்களாக உள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட 37 பிபிபி-யன்கள் அதிகம். காற்று மண்டலத்தில் சுமார் 10 ஆண்டுகள் வரை தங்கி வெப்பத்தை உண்டாக்கக் கூடியது. வெப்பத்தை உண்டாக்குவதில் கரியமில வாயுவைவிட இருமடங்கு சக்தி அதிகம்.

60 சதவீத மீத்தேன் பெட்ரோலியம் மற்றும் நிலக்கரி உபயோகிப்பதாலும் நெல் வயலிலிருந்தும் கால்நடைகளின் கழிவுகளிலிருந்தும் உற்பத்தியாகின்றது. மீதமுள்ள 40 சதவீதம் சதுப்பு நிலம், தண்ணீர் தேங்கி ஈரமான நிலங்களிலும் மற்றும் கரையான்கள் மூலமாகவும் உற்பத்தி செய்கின்றது.

குளோராபுளோரோ கார்பன் என்பது ஒரு சாதாரண ரசாயனப் பொருள். இதில் பல வகை உண்டு. இருப்பினும் இஊஇ 11 மற்றும் இஊஇ 12 ஆகியவை குறிப்பிடத்தக்கவை. குளிர்சாதனம் மற்றும் இதன் சார்புடைய சாதனங்களில் இது பயன்படுத்தப்படுகிறது. காற்று மண்டலத்தில் இதன் ஆயுள்காலம் 65 – 130 ஆண்டுகள். அதாவது காற்று மண்டலத்தில் பல ஆண்டுகள் தங்கி வெப்பத்தை உண்டாக்கக்கூடியது. இது கரியமில வாயுவைவிட 10 ஆயிரம் மடங்கு வெப்பத்தை உருவாக்கும் சக்தி படைத்தது. மேலும் இது ஓசோன் படத்தை அழித்து புற ஊதாக் கதிர்களைப் பூமியில் விழச் செய்து பாதிப்பை உண்டாக்குகின்றது.

நைட்ரஸ் ஆக்ûஸடு காற்று மண்டலத்தில் உள்ள அளவு 318.6 பிபிபி (டடக்ஷ) யன்களாக உள்ளது. இது கடந்த 10 ஆண்டை விட 8 பிபிபி – யன்கள் அதிகம். இது கரியமில வாயுவைக் காட்டிலும் 200 மடங்கு வெப்பத்தை உண்டாக்கும் தன்மையுடையது. வாயுமண்டலத்தில் இதன் ஆயுள்காலம் சுமார் 150 ஆண்டுகள்.

ஓசோன் அளவு சராசரியாக 30 முதல் 50 பிபிஎம் (டடங) வரை இருக்கிறது. வளர்ந்த நாடுகளில் இது 50 – 100 பிபிஎம் வரை இருக்கும். 40 – 70 பிபிஎம் அதிகமாகும்போது பயிர்களில் மகசூல் குறையும்.

பூமியிலிருந்து 8 கிலோமீட்டர் வரை உள்ள வாயுமண்டலப் பகுதிகளில் கடந்த 100 ஆண்டுகளில் 0.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்துள்ளது. கடந்த 1000 ஆண்டுகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் அதிகபட்ச வெப்பம் கடந்த ஆண்டுகளில் அதிகமாக உயர்ந்துள்ளது.

புவி வெப்பம் அதிகரிப்பால் தண்ணீர்ப் பற்றாக்குறையும், அதனால் வேளாண்மை உற்பத்தியில் பாதிப்பும் அதிகமாக இருக்கும். ஏழை நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள் குடிநீர் பற்றாக்குறையால் அவதிப்படலாம்.

புவி வெப்பத்தால் துருவப் பனிப்பாறைகள் 13 ஆயிரம் ச.கிலோமீட்டர் உருகியுள்ளது. 1970-ல் இருந்ததைவிட தற்போது 40 மடங்கு குறைந்துவிட்டது. மேலும், இது 2070-ல் பனிப்பாறைகள் முற்றிலும் உருக வாய்ப்புள்ளன. உலகில் கடல் மட்டம் உயரும்போது வங்கதேசம் மற்றும் மோரிஷஸ் நாடுகளில் அபாயம் ஏற்படலாம், இந்தியா உள்ள 27 நாடுகள் அதிகம் பாதிக்கப்படலாம்.

கடல் மட்டம் உயர்வு சென்ற நூற்றாண்டுகளுக்கு ஒப்பிடும்போது 2 – 6 மடங்கு இந்த நூற்றாண்டில் அதிகரித்துள்ளது. கடல் நீர் உட்புகுவதால் விளைநிலங்கள் பாதிக்கப்படலாம்.

தொடர்ந்து உயரும் கரியமில வாயுவின் அடர்த்தியின் காரணமாக ஒளிச் சேர்க்கையும் பாதிக்கப்படுகிறது. வாயு மண்டலத்தில் கரியமில வாயு அதிகரிக்கும்போது பயிர்களில் இலைத் துளைகள் சிறுத்து வாயுக்களைக் கடத்தும் தன்மை குறைகிறது. இதனால் இலைகளிலிருந்து வெளிவரும் நீராவி குறைகிறது.

மேலும் அளவுக்கு அதிகமாக கரியமில வாயு அதிகரிக்கும்போது இலைத்துளைகள் மூடிக் கொள்ளும். இதனால் இலைகளின் வெப்பம் அதிகமாகி பயிர்களின் நீர்த்தேவையும் அதிகரிக்கிறது.

புவி வெப்பம் 2 – 4 டிகிரி செல்சியஸ் உயரும்போது வெப்பமண்டலப் பயிர்களின் மகசூல் பாதிக்கப்படக்கூடும். பகலில் அதிக வெப்பத்தால் ஒளிச் சுவாசம் அதிகமாகி ஒளிச்சேர்க்கை குறையும். இரவில் இரவுச் சுவாசம் அதிகரித்து பயிர்களின் உலர் எடை அதிகரிக்காது. இதனால் மகசூல் குறையும்.

புவி வெப்பம் அதிகரிப்பதால் நெல் உற்பத்தி பாதிக்கப்படலாம் என பிலிப்பின்ஸில் உள்ள உலக நெல் ஆராய்ச்சி நிலையம் கூறுகிறது. அடுத்த 20 ஆண்டுகளில் புவி வெப்பம் அதிகரிப்பதால் இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டு பல லட்சம் மக்கள் உயிர் இழக்க நேரிடலாம்.

கரியமில வாயுவைக் கிரகிக்க அதிக அளவில் மரங்களை வளர்க்க வேண்டும். மேலும் காடுகளைப் பாதுகாக்க வேண்டும்.

நிலக்கரியிலிருந்து மின்சாரம் தயாரிப்பதைவிட இயற்கை வாயுவிலிருந்து மின்சாரம் தயாரிப்பதால் கரியமில வாயுவின் உற்பத்தியைக் குறைக்க முடியும்.

மரபுசாரா எரிசக்தி உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். காற்றிலிருந்தும் கடலிலிருந்தும் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு ஊக்கப்படுத்த வேண்டும்.

குறைந்த எரிசக்தியில் அதிக தூரம் செல்லக்கூடிய வாகனங்களை உருவாக்க வேண்டும். போக்குவரத்து வாகனங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டும்.

உயிர்எரிசக்திக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும், கரும்பு மற்றும் சர்க்கரைக் கிழங்கு உற்பத்தி செய்வதன் எத்தனாலை மாற்று எரிபொருளாகப் பயன்படுத்தலாம். காட்டாமணக்கிலிருந்து பயோடீசல் தயாரிக்க முன்னுரிமை அளிக்கலாம்.

மீத்தேனை ஆக்ஸிடேசன் மூலம் அளிக்கக்கூடிய வேர்களைக் கொண்ட புதிய நெல் ரகங்களை உருவாக்க வேண்டும்.

மக்கள்தொகைப் பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

வளர்ந்த நாடுகள் தனது ஆடம்பர வாழ்க்கையில் சிறிது தியாகம் செய்து கரியமில வாயு உற்பத்தியைக் குறைத்து ஏழை நாடுகளைப் பாதுகாக்க வேண்டும்.

மரபுவழி இயற்கை வேளாண்மையை ஊக்குவித்து ரசாயன உரங்களைப் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

புவி வெப்பமாவதை முற்றிலும் தடுக்க முடியாது. ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பசுமைக் கூடார வாயுக்களின் உற்பத்தியைக் குறைத்து / இவ்வாயுக்களின் அளவைக் கட்டுப்படுத்தி இவ்வுலகை வருங்காலச் சந்ததியினருக்காகப் பாதுகாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

(கட்டுரையாளர்: பேராசிரியர், வேளாண்மைக் கல்லூரி, மதுரை.)

ஒரு பதில் -க்கு “Protecting the farmlands for Food Consumption – Environment, Ethanol, Ethics”

 1. bsubra said

  புவியை வெப்பமடைய செய்யும் வாயுக்களை கட்டுப்படுத்த ஆஸ்திரேலியா திட்டம்

  புவி வெப்பமடைவதால் ஏற்படும் பாதிப்பினை, தனது பதினோரு வருட ஆட்சி காலத்தின் போது பெரும்பாலும் குறைத்து மதிப்பிட்டே வந்த ஆஸ்திரேலிய பிரதமர் ஜான் ஹோவர்ட், புவியை வெப்பமடைய செய்யும் வாயுக்களை குறைப்பதற்கான திட்டம் ஒன்றை கொண்ட வர திட்டமிட்டுள்ளார்.

  இந்த வாயுக்களை அடுத்தாண்டில் இருந்தே குறைப்பதற்கு ஹோவார்ட் இலக்கு விதித்துள்ளார். இந்தத் திட்டத்தை 2012 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

  ஆஸ்திரேலியா அடுத்த பத்தாண்டில் எடுக்கவிருக்கின்ற மிக முக்கியமான பொருளாதார முடிவு இந்த கரியமில வாயு வர்த்தக திட்டமாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.

  ஆஸ்திரேலியாவின் தேசிய தேர்தல்கள் இந்த ஆண்டின் முடிவில் இடம்பெறவுள்ளது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்புற சுழல் மாற்றம் பெரும் விவாத விடயமாக இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் கடந்த நூறாண்டுகளில் ஏற்படாத கடும் வறட்சி இப்போது நிலவி வருகிறது.

  இவ்வகையான வாயுக்களின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் கியோட்டோ ஒப்பந்தத்தில், பிரதமர் ஜான் ஹோவார்ட் அவர்களுடன் சேர்ந்து கொண்டு கையொப்பமிடாமல் இருந்து வந்த அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், காலநிலை மாற்றத்தை தடுப்பதற்கான புதிய முயற்சியை கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: