Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Ayurvedha Corner – Prof. S Swaminathan : Natural Medicines series – How to avoid vomiting

Posted by Snapjudge மேல் மே 9, 2007

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அதிக உமிழ்நீரும் அவதி!

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

என் வயது 50. வாரம் இருமுறையாவது அதிகம் உமிழ்நீர் சுரக்கிறது. அந்த நேரத்தில் வாந்தி வரும் உணர்வு ஏற்படுகிறது. வாய் மிகவும் கசப்பாக உள்ளது. உடலே சிலிர்க்கின்றது. வாய் புளிக்கிறது. பிறகு வாந்தி செய்தால்தான் கொஞ்சம் சரியானது போன்ற நிலை ஏற்படுகிறது. இப்பிரச்சினை பெரும்பாலும் காலையில் தூங்கி எழுந்தவுடன் இருக்கிறது. இதற்கு நிரந்தரத் தீர்வு என்ன?

கே. பூர்ணசந்திரன், காஞ்சிபுரம்.

வயிற்றில் பித்த ஊரல் உங்களுக்கு அதிகமாக இருப்பதை இந்த அறிகுறிகள் காண்பிக்கின்றன. நீங்கள் சம்பா கோதுமையை லேசாக வறுத்து மிக்ஸியில் அரைத்து அத்துடன் அரைப்பங்கு தூளான சர்க்கரை சேர்த்துத் தலைமாட்டில் வைத்துக் கொள்ளவும். தேவையானால் சிறிது நெய்யும் சேர்க்கலாம். விடியற்காலை 4-5 மணிக்குப் படுக்கையில் இருந்தபடியே இந்தத் தூளில் 2-4 ஸ்பூன் சாப்பிட்டு தண்ணீர் பருகிவிட்டு உடன் படுத்துவிடவும். தூங்கமுடிந்தால் 1/2 -1 மணிநேரம் தூங்கி எழுவதும் நல்லதுதான். 10-15 நாட்கள் இவ்விதம் சாப்பிட நீங்கள் குறிப்பிடும் உபாதைகள் நின்றுவிடும். இதைக் கர்ப்பிணிகள், பித்தப்புண் ஏற்பட்டு வயிற்று வலியுள்ளவர்களும் சாப்பிட நல்லது.

மாவின் துளிர், மாம்பருப்பு, மாவிலையின் நடுநரம்பு இவை கிடைத்த மட்டில், இஞ்சி, நெல் பொறி, கரும்பு, இனிப்பு மாதுளம் பழம் இவற்றைக் கொண்டு கஷாயமிட்டுச் சாப்பிட இந்தப் பித்த வாந்தி உணர்வு நின்று விடும்.

நீங்கள் பட்டினியுடன் இருக்கக்கூடாது. உணவு வேளையில் உணவை எதிர்பார்த்து முன்கூட்டியே சுறுசுறுப்படைந்த ஜீரணத் திரவச் சுரப்பிகள் உணவு வராததால் உபயோகமின்றி இரைப்பையில் அதிகச் சூட்டையும் விறுவிறுப்பையுமளித்துத் தானே அமைதி பெறுகின்றன. ஆனால் இந்த ஜீரணத் திரவ சுரப்பிகள் வெளியிட்டத் திரவங்கள் மென்மையான இரைப்பைச் சுவற்றில் வேக்காளத்தை உண்டாக்குகின்றன. அதனால் பசிவேளையில் உணவு தாமதப்படும் என்ற நிலையிருந்தால் நீங்கள் சர்க்கரை சேர்த்த பழச்சாறு, குளுகோஸ் தண்ணீர், சர்க்கரைத் தண்ணீர், தேங்காய்ப் பால், சர்க்கரை போட்டு இனிக்கும் மோர் போன்றவை குடிக்க மிகவும் நல்லது.

உங்களுக்கு பால், சத்துமா, பாசிப்பயறு கஞ்சி, இனிக்கும் மோர் ஒத்துக் கொள்ளும். பழச்சாறு, சர்க்கரைத் தண்ணீர் குளுகோஸ் தண்ணீர் இவற்றை 4-6 மணிக்கொரு தடவையாவது குறைந்த அளவில் ஏற்பது நல்லது. நெய்யில் வதக்கிய காய்ந்த திராட்சை (பாயசத்தில் சேர்ப்பது) சாப்பிட மிக நல்லது.

வெள்ளரிப் பிஞ்சு சாப்பிட நல்லது. இதைப் பச்சையாக அரிந்து சிறிது மிளகு உப்புத்தூள் தூவி பிற்பகலில் கோடைக்காலங்களில் உண்பது அதிகம் வழக்கத்திலுள்ளது. நல்ல குளிர்ச்சி தரக் கூடியது. துவையல், பச்சடி குழம்பு இவற்றிலும் சேர்த்துச் சாப்பிடலாம்.

சோதனம், சமனம் எனும் இரு சிகிச்சை முறைகளை ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. சோதனம் என்றால் உடல் சுத்தி முறை, கபம் அதிகமானால் வாந்தியும், பித்தம் அதிகமானால் பேதியும், வாதம் அதிகமானால் வஸ்தி எனிமா முறையும், தலைப்பகுதியில் தோஷ சீற்றங்களை அகற்ற நஸ்யம் எனும் எனும் மூக்கில் விடும் மருந்து முறையாலும், ரத்தத்தில் சீற்றமடைந்த தோஷங்களைக் கீறி, கெட்ட ரத்தத்தை வெளியேற்றுவதுமாகும். மூன்று தோஷங்களின் சீற்றம் பெருமளவில் இருந்து, நோயாளியும் பலசாலியாக இருந்தால் இந்தச் சோதனம் எனும் சிகிச்சை முறையே சிறந்தது. சமனம் எனும் சிகிச்சை 7 வகைப்படும். அதனைப் பற்றிய விபரங்கள் இங்கு எழுத இடமில்லை. பொதுவாக தோஷம் குறைந்த அளவில் சீற்றமடைந்து நோயாளியும் பலம் குறைவு உள்ளவராக இருந்தால் சமனம் எனும் சிகிச்சை உதவிடும். உங்களுக்கு உடல் பலம் இருந்தால் பித்தத்தை திரிவிருத் லேஹ்யம் 10-15 கிராம் காலையில் குடித்த லேசான கஞ்சி செரித்த பிறகு, மதிய உணவிற்கு 1 மணி நேரம் முன்பாக நக்கிச் சாப்பிடவும். பேதி ஆவதன் மூலம், குடலில் ஏற்பட்டுள்ள வேண்டாத பித்த நீர் வெளியேறிவிடும். 15 நாட்களுக்கு ஒருமுறை இவ்வாறு செய்யலாம். முதல் மூன்று வாரத்திற்கு திராக்ஷாதி கஷாயம் 15மிலி 60மிலி கொதித்து ஆறிய தண்ணீர் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவும். உடனே காரம், புளி, உப்பு குறைக்கவும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: