ICRTC to launch ‘City Tours’ for Chennai visitors
Posted by Snapjudge மேல் மே 7, 2007
ரயில் பயணிகளின் வசதிக்காக சென்னையில் முக்கிய இடங்களுக்கு “சிட்டி டூர்ஸ்’ உள்ளூர் சுற்றுலா: ஐ.ஆர்.சி.டி.சி. இன்று அறிமுகம்
சென்னை, ஏப். 7ரயில் பயணிகள் சென்னையில் முக்கிய இடங்களுக்குச் சுற்றுலா சென்று வரும் வகையில், “சிட்டி டூர்ஸ்’ என்ற உள்ளூர் சுற்றுலா சேவையை இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) திங்கள்கிழமை முதல் அறிமுகப்படுத்துகிறது.
சென்னைக்கு பல்வேறு இடங்களில் இருந்து வரும் ரயில் பயணிகள் தங்களது ஓய்வு நேரத்தில் உள்ளூர் சுற்றுலா செல்லும் வகையில் இதற்கான பயணத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
- செயின்ட் ஜார்ஜ் கோட்டை,
- எழும்பூர் அரசு அருங்காட்சியகம்,
- அண்ணா,
- எம்.ஜி.ஆர். நினைவிடம்,
- மெரீனா கடற்கரை,
- வள்ளுவர் கோட்டம்,
- திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்,
- மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில்,
- சாந்தோம் தேவாலயம்,
- ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோவில்,
- வண்டலூர் விலங்குகள் காட்சியகம்,
- மகாபலிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு கார், வேனில் சென்று திரும்பும் வகையில் இந்த சுற்றுலா வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த இடங்களுக்கு 6 மணி நேரம் மற்றும் 13 மணி நேரம் பயணம் சென்று திரும்ப சிற்றுண்டி வசதிகளுடன் ஐ.ஆர்.சி.டி.சி. ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இதற்கான கட்டண விவரம் மற்றும் முன்பதிவுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: முகேஷ், பயண ஒருங்கிணைப்பாளர், ஐ.ஆர்.சி.டி.சி, மெக்னிக்கல்ஸ் சாலை, சேத்துப்பட்டு, சென்னை. செல் போன்: 9444040677.
bsubra said
சுத்தமாகவும் சுவையாகவும் உணவு தயாராவதை ஆய்வுமூலம் உறுதிப்படுத்த ரயில்வே முடிவு
புது தில்லி, மே 8: பெரிய ரயில் நிலைய சமையல்கூடங்களிலும், ஜங்ஷன்களில் உள்ள உணவுச் சாலைகளிலும், ஓடும் ரயில்களில் உள்ள உணவகப் பெட்டிகளிலும் சுத்தமாகவும் சுவையாகவும் உணவு தயாராகிறதா என்று அடிக்கடி திடீர் சோதனைகள் மூலம் அறிய ரயில்வே துறை முடிவு செய்திருக்கிறது.
ரயிலில் பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் முன்பதிவு செய்துவிட்டு செல்வோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது. அப்படி பயணம் செய்வோர் சாப்பாட்டுக்கு ரயில் நிலையங்களையும், ரயிலில் இணைக்கப்படும் உணவகப் பெட்டிகளையும் நம்பத் தொடங்கிவிட்டனர். எனவே சுத்தமான நீர், காய்கறி, மளிகை சாமான்கள் ஆகியவற்றைக் கொண்டு சுத்தமான பாத்திரங்களில், சுகாதாரமான வழிமுறைகளில் உணவு வகைகள் தயாரிக்கப்படுவதை உறுதி செய்யவும், ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழைப் பெறவும் ரயில்வே துறை நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டது.
உள்ளூர் உணவு வகைகள்:
ரயில்களில் வட இந்திய, தென்னிந்திய உணவு வகைகளைக் கலந்தே விற்பனை செய்தாலும் ரயில் ஓடும் பிராந்தியத்தின் மக்களின் உணவுப் பழக்கங்களுக்கேற்ப சிற்றுண்டிகளும் இதர தின்பண்டங்களும் விற்கப்படுகின்றன.
குர்குரே எக்ஸ்பிரஸ்:
கோடைக்கால சிறப்பு ரயில்களை, பிரபல உணவு நிறுவனங்களிடம் பணம் பெற்றுக்கொண்டு அவற்றின் பெயராலேயே அழைக்கும் புதிய வர்த்தக நடைமுறை இந்த ஆண்டு சோதனை முறையில் தொடங்கப்பட்டிருக்கிறது. குர்குரே எக்ஸ்பிரஸ் அதைப் போன்றதுதான். அந்த ரயிலின் முன்பதிவு விண்ணப்பம், முன்பதிவு செய்த பயணியர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல், ரயில் பெட்டியைக் குறிப்பிடும் (கோச்) எண் “சிலிப்’, படுக்கை விரிப்பு, தலையணை உறை ஆகியவற்றிலும் அந்தப் பெயரே அச்சிடப்பட்டு விளம்பரப்படுத்தப்படும்.
மேலும் பல நிறுவனங்கள் முன்வந்தால் இந்தப் பெயர் சூட்டல் விரிவுபடுத்தப்படும் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. இவற்றை எல்லாம் ரயில்வே நிறுவனத்தின் ஐ.ஆர்.சி.டி.சி. (இந்திய ரயில்வே உணவக, சுற்றுலா கார்ப்பரேஷன்) என்ற தனிப்பிரிவு மேற்கொண்டு வருகிறது. தெற்கு ரயில்வேயும் ஐ.ஆர்.சி.டி.சி.யும் இணைந்து சுற்றுலாப் பயணிகளுக்காக 6 புதிய மார்க்கங்களில் சிறப்புச் சுற்றுலா ஏற்பாடுகளையும் செய்து தருகின்றன.
அவை வருமாறு:
1.சென்னை-மகாபலிபுரம்-புதுச்சேரி-மதுரை-கொடைக்கானல்- தேக்கடி-கோட்டயம்-திருவனந்தபுரம்-கன்னியாகுமரி (கோல்கத்தாவிலிருந்து புறப்பட்டு 8 பகல், 7 இரவுகள்).
2. சென்னை-மகாபலிபுரம்-புதுச்சேரி-தஞ்சாவூர்-திருச்சி-கொடைக் கானல்-மதுரை-ராமேஸ்வரம்-கன்னியாகுமரி (கோல்கத்தாவிலிருந்து புறப்பட்டு 8 பகல், 7 இரவுகள்).
3.திருவனந்தபுரம்-கோவளம்-மதுரை-கொடைக்கானல்-தேக்கடி -மூனாறு-எர்ணாகுளம் (8 பகல், 7 இரவுகள்).
4.கன்னியாகுமரி-மதுரை-கொடைக்கானல்-மூனாறு-கொச்சி (7 பகல், 6 இரவுகள்).
5.திருவனந்தபுரம்-கோவளம்-குமரகம்-தேக்கடி-மூணாறு-எர்ணா குளம் (பெங்களூரிலிருந்து புறப்பட்டு 5 பகல், 4 இரவுகள்).
6.எர்ணாகுளம்-மூனாறு-குமரகம்-எர்ணாகுளம் (பெங்களூரிலிருந்து 5 பகல், 4 இரவு).