Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

World Intellectual Property Day – Copyright Protections and Impact on Commerce

Posted by Snapjudge மேல் மே 5, 2007

அறிவுசார் பொருளாதார வளர்ச்சி

பி.கே. மனோகரன்

சர்வதேச வர்த்தகத்தில் இன்று அதிக அளவில் பேசப்படுவது அறிவுசார் சொத்துரிமை தொடர்பானதாகும்.

அன்றாட வாழ்விலும் சமூக, பொருளாதார மேம்பாட்டிலும் அறிவுசார் சொத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் ஆண்டுதோறும் “உலக அறிவுசார் சொத்து தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள் “படைப்பாற்றலை ஊக்குவித்தல்’ என்பதாகும்.

அறிவுசார் சொத்து என்பது ஒருவர் தன் மூளையைப் பயன்படுத்தி உருவாக்கும் புதிய, புதுமையான, சமுதாயத்திற்குப் பயன்படுகிற ஒன்றை உருவாக்குவதற்கான படைப்பாற்றல் ஆகும். பொன்னையும் பொருளையும் போல அறிவும் மதிநுட்பமும் ஒருவகையான சொத்தாகக் கருதப்படுகிறது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிலம், உழைப்பு, மூலதனம் ஆகியவற்றை மட்டுமே சார்ந்தது என்ற கருத்து பழங்கதையாகி அறிவுத்திறனே முக்கியக் காரணி என்ற கருத்து உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. அறிவு வளத்தைப் பயன்படுத்தி, பொருள் வளத்தைப் பெருக்கி, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே 21-ம் நூற்றாண்டின் அறிவுசார் பொருளாதாரத்தின் இலக்காகும்.

அறிவு என்பது என்ன? நமது மூளையில் சேகரிக்கப்பட்டு வரும் தகவல் மற்றும் புள்ளி விவரங்களை, அனுபவம் மற்றும் உணர்வுகளின் அடிப்படையில் எப்படிச் சொல்லுதல், எதைத் தெரிந்து கொள்வது, ஏன் தெரிந்து கொள்வது, எப்படித் தெரிந்து கொள்வது போன்றவற்றை உள்ளடக்கிய ஒன்றாகும். கட்டமைப்பு வசதிகள், இயற்கை வளங்கள், மனித ஆற்றல் ஆகியவை அறிவு சார் பொருளாதாரத்தின் மூலம் சிறந்த முறையில் பயன்படுத்தப்படுகிறது.

வேத காலத்திலேயே நமது பாரத தேசம் அறிவுத்திறன் மிக்க வல்லரசாகத் திகழ்ந்தது. இன்றும் கணிதம் இந்தியாவின் நுண்கலை என்றே அழைக்கப்பெறுகிறது.

உலகளவில் அறிவுசார் ஆளுமையில் இந்தியா முதலிடத்தைப் பெற்றுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள நிறுவனங்களின் ஆராய்ச்சி மையங்களில் இந்தியர்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளதில் இருந்தே இதனை அறியலாம். விண்வெளித்துறை, பாதுகாப்பு தொழில் நுட்பம், உயிரிய தொழில்நுட்பம், மென்பொருள் மேம்பாடு மற்றும் மருத்துவம் போன்ற அனைத்துத் துறைகளிலும் இந்தியர்கள் முக்கிய இடம் பெற்றுள்ளனர்.

நாட்டின் ஒரு பகுதி மக்களுக்கு மட்டுமே உதவுவதான வளர்ச்சி உண்மையான அறிவுசார் வளர்ச்சி ஆகாது. சமுதாய ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்து, சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, இயற்கையோடு இயைந்து செல்லும் அறிவுசார் வளர்ச்சியே அழிவுப் பாதையிலிருந்து நம்மைக் காப்பாற்றி ஆக்கப் பாதைக்கு இட்டுச் செல்லும்.

அறிவுசார் சொத்துரிமை பெற ஒரு கண்டுபிடிப்பு புதுமைத் தன்மை, புதினத்தன்மை மற்றும் மூலத்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும். இதனை மேற்கொண்டவரின் அறிவார்ந்த திறமையை அங்கீகரிக்கும் பொருட்டும், அவற்றை வர்த்தக ரீதியில் பயன்படுத்துவதற்காகவும் சட்ட வடிவில் அளிக்கப்படக்கூடிய உரிமைகளே அறிவுசார் சொத்துரிமை எனப்படும்.

அறிவுசார் சொத்துரிமை தொடர்பாக பல சர்வதேச உடன்பாடுகள் உள்ளன. எனினும் “டிரிப்ஸ்’ என்றழைக்கப்படும் “வர்த்தகம் சார்ந்த அறிவுசார் சொத்துரிமை’ இவ்வகை உரிமைகள் அனைத்தையும் உள்ளடக்கிய பலதரப்பு ஒப்பந்தம் ஆகும். இதில் ஏழு அம்சங்கள் உள்ளன.

  • 1. காப்புரிமை,
  • 2. பதிப்புரிமை,
  • 3. வர்த்தக சின்னங்கள்,
  • 4. பூகோள அடையாளங்கள்,
  • 5. தொழிலியல் வடிவமைப்புகள்,
  • 6. மின்னணு ஒருங்கிணைந்த இணைப்புச்சுற்று டிசைன்கள் மற்றும்
  • 7. தொழில் ரகசியங்கள். இவற்றுள் முக்கியமானது காப்புரிமையாகும்.

காப்புரிமை புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்காக வழங்கப்படுவதாகும். காப்புரிமை பெறுவது கட்டாயமல்ல. ஆனால் காப்புரிமை பெற்றால் மட்டுமே சம்பந்தப்பட்ட புதிய தொழில்நுட்பத்தை மற்றவர்கள் பயன்படுத்துவதற்கு எதிராக சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க முடியும். காப்புரிமை கோரி விண்ணப்பிக்க்பபடும் நாளிலிருந்து 20 ஆண்டுகளுக்கு காப்புரிமை அமலில் இருக்கும்.

காப்புரிமை பெறும் விஷயத்தில் இந்தியாவின் நிலை மிகவும் பின்தங்கி உள்ளது. எடுத்துக்காட்டாக

  • வேம்பிலிருந்து தயாரிக்கப்படும் 40 வகை பொருள்களுக்கு அமெரிக்காவும்,
  • மேலும் 50 பொருள்களுக்கு பிற நாடுகளும் காப்புரிமை பெற்றுள்ளன.
  • ஆனால் வேப்ப மரத்தின் தாய்வீடான இந்தியாவில் வெறும் 3 பொருள்களுக்கு மட்டுமே காப்புரிமை பெறப்பட்டுள்ளது.
  • மஞ்சளிலிருந்து தயாரிக்கப்படும் 30 பொருள்களுக்கு அமெரிக்கா காப்புரிமை பெற்றுள்ளது.
  • ஆனால் இந்தியா 8 பொருள்களுக்கு மட்டுமே பெற்றுள்ளது.
  • மேலும் இந்தியாவில் பெருமளவில் விளையும் கடுகு, மிளகு, மாதுளை போன்றவற்றுக்கு அமெரிக்கா காப்புரிமை பெற்றுள்ளது.

இந்தியாவில் ஒரு பொருளுக்கு காப்புரிமை பெற குறைந்தபட்சம் 6 ஆண்டுகள் காத்திருக்க வேண்டி உள்ளது. அமெரிக்காவில் அதிகபட்சம் 2 ஆண்டுகளில் காப்புரிமை தரப்படுகிறது. இந்தியாவில் காப்புரிமை பெற விண்ணப்பித்த 25 ஆயிரம் மனுக்கள் இன்னும் நிலுவையில் உள்ளன. இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே ஆராய்ச்சிப் பணிகளுக்குச் செலவிடப்படுகிறது. அமெரிக்காவில் இது 16 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கோள்களின் பயணத்தைத் துல்லியமாகக் கணக்கிட்டவர்கள் இந்தியர்கள். ராமாயண, மகாபாரத காவியங்களில் கற்பனையானவை என்று சொல்லப்பட்ட பல கூற்றுகளை இன்றைய அறிவியல் உண்மையாக்கி காட்டுகின்றன. அறிவுசார் வளர்ச்சிப் பாதையில் பயணிக்க மற்ற நாடுகளை விட இந்தியாவிற்கே வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆகவேதான் இன்றும்கூட அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தில் பெரும்பாலான விஞ்ஞானத் தொழில் நுட்ப வல்லுநர்கள் இந்தியர்களாக உள்ளனர். அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் பணியாற்றும் இந்திய மருத்துவர்கள் தாயகத்துக்கு திரும்பி விட்டால் அந்நாட்டு மருத்துவக் கட்டமைப்பே கவிழ்ந்து விடும்.

இந்தியா அறிவுத்திறன் மிக்க வல்லரசாக, மக்கள் நலன் பேணும் நல்லரசாகத் திகழ மக்கள் அனைவரும் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும். அறிவுசார் வளர்ச்சி ஒரு நாடு இன்னொரு நாட்டை ஆதிக்கம் செலுத்தும் வகையில் இல்லாமல் எல்லோரும் எல்லாமும் பெற்று இன்புற்று வாழ பாதை அமைக்க வேண்டும்.

அறிவுத்திறன் மிக்க சமுதாயமே ஆரோக்கியமான சமுதாயம். அறிவே ஆற்றல், அறிவே உண்மையான வளர்ச்சிக்கு வழி.

(கட்டுரையாளர்: இணைப் பேராசிரியர், சி.பி.எம். கல்லூரி, கோவை.)

ஒரு பதில் to “World Intellectual Property Day – Copyright Protections and Impact on Commerce”

  1. bsubra said

    சமஸ்கிருத நூல்களுக்கு காப்புரிமை

    புதுதில்லி, ஜூன் 7: யோகாசனம், ஆயுர்வேதம் உள்ளிட்டவை குறித்த ஸ்லோகங்கள் அடங்கிய சமஸ்கிருத நூல்களுக்கு காப்புரிமை பெற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக இந்த நூல்களை 5 வெளிநாட்டு மொழிகளில் மொழிபெயர்க்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    * ஆயுர்வேதம்,
    * யோகாசனம்,
    * யுனானி,
    * சித்த மருத்துவம்,
    * ஹோமியோபதி (ஆயுஷ்)

    போன்ற பாரம்பரிய முறைகளுக்கான அரசுத் துறை இந்தப் பணியில் ஈடுபட்டு வருகிறது. யோகாசனம் குறித்த சமஸ்கிருத ஸ்லோகங்களை ஆங்கிலம், பிரெஞ்சு. ஜெர்மன் உள்ளிட்ட மொழிகளில் மொழி பெயர்ப்பதற்காக மொரார்ஜி தேசாய் தேசிய யோகா பயிற்சி மையம் உள்ளிட்ட அமைப்புகளை இத்துறை அணுகியிருக்கிறது.

    இப்பணிக்காக பிரத்யேக கம்ப்யூட்டர் சாப்ட்வேர் பயன்படுத்தப்படும். யோகாசனம் பற்றி செய்முறை விளக்க விடியோவும் இதில் சேர்க்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    யோகாசனம் உள்ளிட்ட அரிய கலைகளை வியாபார நோக்கில் யாரும் தவறாகப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் வகையில், அவற்றுக்கு காப்புரிமை பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் உள்ள காப்புரிமை அலுவலகங்களுடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: