Don’t drink Carbonated or Vitamin Water – How to survive hot sunny weather
Posted by Snapjudge மேல் மே 1, 2007
ஆரோக்கியம்: கூல்டிரிங்ஸ் குடித்தால் உடம்புக்குக் கெடுதி!
ந.ஜீவா
”என்ன வெயில்…என்ன வெயில்…அப்பா… வெயில் மண்டையைப் பிளக்குதே” என்றபடி நிழல் தேடி ஒதுங்கி, “அதைக் குடிக்க மாட்டோமா? இதைக் குடிக்க மாட்டோமா?’ என்று பரபரக்கிறவர்கள் அதிகம். கூல்டிரிங்ஸ், இளநீர், மோர், லஸ்ஸி என்று திரவ வடிவில் கிடைப்பதையெல்லாம் குடித்துவிட்டு அதன்பின்னும் தாகம் தணியாமல் தவிப்பவர்கள் பலர். “வெயில் இந்தக் கொளுத்து கொளுத்துதே, ரெண்டு மழை பேஞ்சா எவ்வளவோ நல்லா இருக்கும்’ என்று கோடை
மழைக்காகக் கனவு காண்பவர்கள் ஏராளம்.
கொளுத்தும் வெயிலைச் சமாளிக்க என்ன செய்வது? என்று மண்டை காய்ந்து நாம் ஒதுங்கிய இடம் சென்னை செயின்ட் தாமஸ் மருத்துவமனை. அங்கு சிறுநீரகவியல் துறை நிபுணரான டாக்டர் பழனி.ரவிச்சந்திரனைச் சந்தித்து நமது கேள்விகளை அள்ளி வீசினோம். அதற்கு அவர் அளித்த பதிலை இங்கே தருகிறோம்.
டாக்டர் பழனி.ரவிச்சந்திரன் மருத்துவம் எவ்வாறு வணிகமயமாகிவிட்டது என்பதை எளிய முறையில் விளக்கும் “பணநல மருத்துவம்’ என்ற நூலை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
“”மனித உடல் அடிப்படையில் காரத்தன்மை உள்ளது. அமிலத் தன்மை என்பது இதற்கு நேர்எதிரானது. நமது ரத்தத்தில் காரத் தன்மை இருக்கும். அதில் அமிலத் தன்மை அதிகரிக்கக் கூடாது. நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் ஜீரணம் ஆகும் போது ரத்தத்தில் அமிலத் தன்மை அதிகரிக்கும். இந்த அமிலத் தன்மையைக் குறைக்க நமது உடல் மூன்று விதங்களில் செயல்படுகிறது. மூச்சு விடுதலின் மூலமாக ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்தி அமிலத் தன்மையைக் குறைக்கலாம். இதற்கு ஆக்சிஜன் நிறைந்த நல்ல காற்று அவசியம். இரண்டாவதாக சிறுநீரின் மூலம் உடலில் சேர்ந்துள்ள அமிலத்தை வெளியேற்றலாம். மூன்றாவதாக வியர்வை மூலமாக அமிலத் தன்மையைக் குறைக்கலாம்.
நல்ல காற்று இப்போது அரிதான பொருளாகிவிட்டது. வாகனங்கள், தொழிற்சாலை புகைகள், கழிவுகளை எரிப்பது போன்றவற்றால் காற்றில் ஆக்சிஜன் அளவு குறைந்துவிட்டது. நாம் மரங்களை வெட்டிவிட்டு அந்த இடங்களில் வீடுகளைக் கட்டிக்
குடிவந்துவிட்டோம். ஒரு மரம் என்பது ஒரு நுரையீரல் போல. மரங்கள் குறைந்து காற்றிலுள்ள கார்பன் டை ஆக்ஸடை உள்ளிழுத்து ஆக்சிஜனை வெளியிடுவதும் குறைந்து விட்டதால் காற்று கெட்டுப் போய் விட்டது.
அடுத்து சிறுநீரிலும், வியர்வையிலும் அமிலம் வெளியாக வேண்டும் என்றால் நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும். முதலில் எல்லாம் நமது முன்னோர்கள் “சொம்பிலும் லோட்டாவிலும்’ தண்ணீர் குடித்தார்கள். நாம் டம்ளரிலும், அதைவிடச் சிறிய கப்பிலும் தண்ணீர் குடிக்கிறோம்.
வெயில் நேரத்தில் தாகத்தைத் தணித்துக் கொள்ள கூல்டிரிங்ஸ் குடிக்கிறோம். இந்த கூல்டிரிங்ஸில் அமிலத்தன்மை அதிகமாக உள்ளது. உங்கள் பாத்ரூமில் ஒரு பாட்டில் கூல்டிரிங்ûஸக் கொட்டிவிட்டு ஐந்து நிமிடம் கழித்துச் சுத்தம் செய்தால் ஆசிட் ஊற்றிக் கழுவியது போல நன்றாகச் சுத்தமாகிவிடும். இது மிகைப்படுத்திக் கூறப்படுவது அல்ல. எனவே பலரும் குடிப்பதுபோல வெயில் நேரத்தில் கூல்டிரிங்ஸ் குடிப்பதால் தாகம் தணியாது. மேலும் உடலுக்கும் கெடுதி.
மினரல் வாட்டரிலும் அமிலத்தன்மை இருக்கவே செய்கிறது. எனவே தண்ணீரைக் கொதிக்க வைத்து ஆற வைத்து அதில் நமது முன்னோர் செய்தது போல நன்னாரி வேரைப் போட்டு ஊறவைத்து அருந்தலாம். சீரகத் தண்ணீரை அருந்தலாம். புளிப்பில்லாத மோர், இளநீர், பதநீர் போன்றவை வெயில் காலத்திற்கு மிகவும் ஏற்றவை.
அடுத்து எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கேட்பார்கள். அதிகமாகத் தண்ணீர் குடித்தால் சிறுநீரகத்துக்கு அதிக வேலை தருவதாக ஆகாதா? என்று சந்தேகத்தைக் கிளப்புவார்கள். நமது சிறுநீரகங்கள் நாளொன்றுக்கு 30 லிட்டர் தண்ணீர் குடித்தாலும் ப்ராசஸ் பண்ணும் திறன் படைத்தவை. எனவே இதய நோய், சிறுநீரக நோய் போன்ற குறிப்பிடத்தக்க பிரச்சினைகள் இல்லாதவர்கள் அவர்களால் குடிக்க முடிந்தவரை தண்ணீர் குடிக்கலாம். இதனால் எந்தப் பாதிப்பும் இல்லை.
தண்ணீர் குறைவாகக் குடித்தால் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும். இது ரத்தத்தில் அமிலத்தின் அளவு அதிகரித்துவிட்டதைக் காட்டுகிறது.
அமிலத்தன்மை அதிகரித்தால் உடலில் கால்சியம் கரைந்து வெளியேறும். இதனால் கைகால் வலி, முதுகுவலி, உடல் வலி ஏற்படும்.
அமிலம் வெளியேறுவதற்கு இன்னொரு வழி, வியர்வை. உடல் உழைப்பும், உடற்பயிற்சியும் குறைந்துவிட்ட நாளில் வியர்ப்பது குறைவு. இப்போது பல அலுவலகங்களில், வீடுகளில் ஏஸியைப் பயன்படுத்துகிறார்கள். ஏஸி ரூமில் இருக்கும்போது வியர்க்காது. எனவே உடலிலிருந்து அமிலம் வெளியேறுவது குறையும். போதிய தண்ணீர் குடிக்கவில்லையென்றால் உடலில் கொலஸ்ட்ராலின் அளவு
அதிகரிக்கும். பித்தபையில் கல், சிறுநீரகக் கற்கள், உடம்புவலி, முகத்தில் கறுப்பாக ஆதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
நீர்ச்சத்துள்ள பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். நல்ல நிறமுள்ள பழங்கள், காய்கறிகள் உடலுக்கு நல்லது. ஏனெனில் அவற்றில் தாது உப்புகள் அதிகம். மிளகாய் காரத்தன்மை உள்ளதால் உடலுக்கு நல்லது. ஆனால் அதை நேரடியாகச் சாப்பிட முடியாது. மோர் மிளகாய் செய்து சாப்பிடலாம். மாங்காய் புளிப்பு. அமிலத்தன்மை உள்ளது. எனவே மாங்காயை கோடைக்காலத்தில் சாப்பிடக் கூடாது. மாங்காயை அதிலுள்ள புளிப்புப் போகும்படி பதப்படுத்திச் சாப்பிடலாம். ஆனால் மாம்பழத்தைச் சாப்பிடலாம். அதில் வைட்டமின்கள் அதிகம். ஆரஞ்சு, பப்பாளி போன்றவற்றைச் சாப்பிடலாம்.
உடைகளைப் பொறுத்தவரையில் தொளதொளப்பான பருத்தி ஆடைகள் சிறந்தவை. ஜீன்ஸ் அணிந்தால் வியர்வை அதிகமாகி பாக்டீரியாக்கள் வளர வாய்ப்புண்டு.
வெயில் காலத்தில் பூசுவதற்கென்று நிறைய சன்ஸ்கிரீன் லோஷன்கள், கிரீம்கள் என்று விளம்பரம் செய்கிறார்கள். அவற்றில் ஸிங்க் ஆக்ûஸடு, டைட்டானிக் ஆக்ûஸடு போன்றவை உள்ளதா எனப் பார்த்து வாங்கிப் பயன்படுத்தினால் கெடுதியில்லை. மெழுகு உள்ள கிரீம்கள்தாம் அதிகம் விற்கப்படுகின்றன. அவற்றைப் பயன்படுத்தினால் வியர்வை தடைசெய்யப்படும். எனவே மெழுகு உள்ள கிரீம்களைத் தவிர்க்க வேண்டும். சில லோஷன்களில், கிரீம்களில் கற்றாழை சேர்க்கப்படுவதாக விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் அவற்றில் கலக்கப்படும் கற்றாழையின் அளவு 1 சதவீதம்தான். எனவே அவற்றால் பெரிய அளவுக்குப் பயன்கள் இருப்பதாகத் தெரியவில்லை. இதற்குப் பதிலாக நமது முன்னோர்கள் பயன்படுத்திய சந்தனத்தைப் பூசிக் கொள்ளலாம். சந்தனத்தைப் பூசிக் கொண்டு வெளியில் செல்ல முடியாது என்பவர்கள், வெளியில் இருந்து வீட்டுக்கு வந்தவுடன் குளித்துவிட்டு சந்தனத்தைப் பூசிக் கொள்ளலாம்.
மனிதர்கள் ஒரு லட்சம் ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள். எத்தனையோ கோடைக் காலங்களை அவர்கள் பார்த்தவர்கள். ஆனால் அவர்கள் இயற்கையைச் சேதப்படுத்தாமல் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தார்கள். நாம் பின்பற்றுவது மேற்கத்திய வாழ்க்கைமுறை. எல்லாம் வணிகமயமாகிவிட்டதால் லாபத்திற்காக மக்களுக்குத் தீங்குதரும் பலவற்றைத் தயாரித்து நன்றாக விளம்பரம் செய்து விற்கிறார்கள். அதன் கெடுதிகளை அனுபவிப்பது மக்கள்தான்”
மறுமொழியொன்றை இடுங்கள்