Raman Raja – Blasphemy on National Symbols, Flag, Anthem
Posted by Snapjudge மேல் ஏப்ரல் 27, 2007
நெட்டில் சுட்டதடா…: கொடியைக் கிழித்த குமரன்!
ராமன் ராஜா
தொழிலதிபர் நாராயண மூர்த்தியை அடுத்த ஜனாதிபதி பதவிக்கு ஏற்றவர் என்று நேற்றுத்தான் பன்னீர் தெளித்தார்கள்; இன்று அவரையே தேசத் துரோகி என்று வெந்நீர் தெளிக்கிறார்கள். தங்கள் நிறுவன விழாவில் தேசிய கீதத்தை இசைப்பது பற்றி அவர் உச்சரித்த ஒரே ஒரு வார்த்தைதான் எல்லாவற்றையும் தலைகீழாகக் கவிழ்த்துவிட்டது. நெட் முழுவதும் மூர்த்திக்கு ஆதரவாகவும் எதிர்த்தும் மிளகாய் பஜ்ஜி விவாதங்கள் நடக்கின்றன. “”மகாகவி தாகூர் இயற்றிய தேசிய கீதத்தின் மாண்பு என்ன, மகிமைதான் என்ன? அதைக் காதில் கேட்டவுடனே ஒவ்வொரு குடிமகனுக்கும் முடியெல்லாம் சிலிர்க்க வேண்டாமா, சிலிர்க்காத மண்டைகளை மொட்டை அடித்துக் கலர்ப் புள்ளி குத்தவேண்டும்” என்கிற ரீதியில் ஓயாமல் எழுதித் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். நாணாவை நாடு கடத்த வேண்டும் என்றுகூட ஒரு கோரிக்கை எழுந்திருக்கிறது. இதில் கன்னட -அகன்னட சர்ச்சை வேறு. (பாலிடிக்ஸ் விளையாடிவிட்டதோ என்று சந்தேகமாக இருக்கிறதே!) மற்றொரு பக்கம், ஜமைக்காவிற்குப் போன சச்சின் டெண்டுல்கர் மீது ஒரு குற்றச்சாட்டு. மூவண்ணக்கொடியின் நிறத்தில் செய்யப்பட்டிருந்த கேக் ஒன்றைக் கத்தியால் வெட்டினார் என்று வழக்கு போடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே கிரிக்கெட்டில் சப்பை அடி வாங்கியிருக்கிறார்கள்; போதாததற்கு இது வேறு.
தேசியச் சின்னங்கள் -அவற்றின் அவமதிப்பு -அதற்காகக் கடும் தண்டனை என்பது மோசிகீரனார் காலத்திலிருந்தே இருந்து வந்திருக்கிறது. ஏழைப் புலவர் பாவம், வெயிலில் நடந்து வந்த களைப்பில் முரசு வைக்கிற கட்டிலில் படுத்து தூங்கிவிட்டார். வீர முரசுக்கு இப்படி ஓர் அவமதிப்பா என்று கோபித்த மன்னன், உடை வாளை உருவியே விட்டான். நல்ல வேளையாகத் தூங்கினவர் தமிழ்ப் புலவராக இருந்து, மன்னனும் கொஞ்சம் எழுதப் படிக்கத் தெரிந்தவனாக இருந்ததால் கீரனார் கீறப்படாமல் தப்பினார்.
வருடம்: 1862. அமெரிக்காவில் உள் நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்த நேரம். நியூ ஆர்லீன்ஸ் மாநிலம், தனி நாடு போர்க்கொடி தூக்கியிருந்தது. கலகத்தை அடக்குவதற்கு மத்திய அரசு தன்னுடைய ஆள் படை அம்பு எல்லாவற்றையும் அனுப்பியது. ராணுவம் வந்ததும் முதல் வேலையாக முனிசிபாலிட்டி, நாணய சாலை போன்ற அரசாங்கக் கட்டடங்களைக் கைப்பற்றி அவற்றின் உச்சியில் அமெரிக்க தேசியக் கொடியை ஏற்றினார்கள். இதைக் கண்டு பொறுக்காத மக்கள் தெருவில் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அதில் வில்லியம் மம்ஃபோர்ட் என்பவர் உணர்ச்சி வேகத்தில் கட்டடத்தின் மீது ஏறி அமெரிக்கக் கொடியைக் கீழே இறக்கினார். நிமிஷ நேரத்தில் கொடி கூட்டத்தின் கையில் சிக்கிச் சுக்கு நூறாகிவிட்டது. குச்சிதான் பாக்கி! கொடியின் மாண்பைக் குலைத்த குற்றத்துக்காக ராணுவ கோர்ட் ஒரு சட்டு புட்டு விசாரணை நடத்தி, மம்ஃபோர்டை அதே இடத்தில் தூக்கில் போட்டது. ஆனால் பிறகு மக்கள் மம்ஃபோர்ட்டை விடுதலைப் போராட்டத்தின் சின்னம், கொடியைக் கிழித்தெறிந்த குமரன் என்று தியாகிப் பட்டம் கட்டி மலர்வளையம் வைத்தார்கள்.
அறுபதுகளில், வியட்நாமின் உள் நாட்டுச் சண்டையில் வீம்புக்காகத் தலையிட்டு குண்டு மழை பெய்து கொண்டிருந்த அநியாயத்தை எதிர்த்து அமெரிக்காவிலேயே பலர் போராட்டம் நடத்தினார்கள். அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பற்பல தேசியக் கொடிகள் எரிக்கப்பட்டன. அத்தனை பேரும் ஜெயிலுக்குப் போனார்கள். அமெரிக்காவின் பெரும்பாலான மாநிலங்களில் கொடியைச் சேதமாக்கினால் சிறைத் தண்டனை கொடுக்கச் சட்டம் உண்டு.
அப்படியே ஃபாஸ்ட் ஃபார்வர்ட் செய்து 1984-க்கு வருவோம். ஜனாதிபதி ரீகனின் கொள்கைகளை எதிர்த்து டல்லாஸ் நகரில் ஓர் அரசியல் பேரணி. வழக்கமான வீர உரைகள், வசவு உரைகள் எல்லாம் முடிந்ததும் மங்களம் பாடும் விதத்தில் ஓர் அமெரிக்கக் கொடியைக் கொளுத்தினார் ஜோயி ஜான்சன் என்பவர். கையும் கொடியுமாக அவரைப் பிடித்துக் கொண்டு போய் கேஸ் போட்டார்கள். கீழ்க் கோர்ட்டில் ஜான்ஸனுக்கு ஒரு வருடம் சிறை, இரண்டாயிரம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. பிறகு ஜான்சன் வழக்கு ஹை கோர்ட்டுக்கு வந்ததும் ஓர் ஆச்சரியம் நிகழ்ந்தது: தேசியக் கொடியை எரிப்பதும் குடி மக்களின் கருத்து சுதந்திரத்தில் ஒரு பகுதிதான் என்று கூறி அங்கே ஜான்சனை விடுதலை செய்துவிட்டார்கள்!
இதைக் கேட்டு தேச பக்தர்கள் வெகுண்டெழுந்து சுப்ரீம் கோர்ட்டுக்குப் போனார்கள். சுப்ரீம் கோர்ட்டும், இப்படியெல்லாம் அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது என்பது மக்களுடைய பேச்சுரிமையின் ஒரு பகுதிதான் என்று சொல்லிவிட்டது. அமெரிக்க அரசியல் சட்டத்தின் முதலாவது சட்டத் திருத்தம் (ஊண்ழ்ள்ற் ஹம்ங்ய்க்ம்ங்ய்ற்) இதைத்தான் வலியுறுத்துகிறது: இந்தச் சட்ட விதியின் கம்பீரமான எளிமையைக் கவனியுங்கள்: “”பொது மக்களின் பேச்சுரிமையைக் குறைக்கும் எந்தச் சட்டத்தையும் அமெரிக்க நாடாளுமன்றம் இயற்றாது.” அவ்வளவுதான்!
அரசியல்வாதிகளின் -அதாவது அமெரிக்க அரசியல்வாதிகளின் -வழக்கம் என்னவென்றால், சுப்ரீம் கோர்ட் ஏதாவது ஒரு நல்ல காரியம் செய்தால் அதை கான்சல் செய்யும் விதமாக அரசியல் சட்டத்தையே மாற்ற முற்படுவது. அன்று முதல் இன்று வரை அவ்வப்போது கொடி எரிப்புத் தடுப்பு சட்டம் கொண்டு வர அவர்களும் முயன்று கொண்டுதான் இருக்கிறார்கள். அரசியல் நிறைந்த கீழ் சபையில் சட்டம் பாஸôகிவிடுகிறது. அறிவு ஜீவிகள் நிரம்பிய செனட் மேல் சபை ஒத்துக் கொள்ளாததால் இந்த முயற்சியில் காற்று இறங்கிவிடுகிறது. பழமைவாதிகள், புதுமை விரும்பிகள், மிகவும் புதுமைவாதிகள் என்று பல பேர் இதில் தலையிட்டுக் குட்டையைக் குழப்பி மீன்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். நவீன மேற்கத்திய நாகரிகத்தில் தனி மனித சுதந்திரம்தான் கடவுளாக மதிக்கப்படுகிறது. “”ஒரு துணிக் கொடியை விடப் புனிதமானது தனி ஒருவனின் சுதந்திரம். அமெரிக்கக் கொடியே அந்தச் சுதந்திரத்தின் அடையாளச் சின்னம்தான். கொடியை அவமதித்தார் என்ற காரணத்துக்காக ஒரு குடிமகனைச் சிறையில் போட்டால், அந்தக் கொடியே அவமானத்தில் கண்ணீர் வடிக்கும்” என்கிறார்கள் புதுமைவாதிகள். “”அமைதியான முறையில் நடத்தப்படும் பேச்சு, எதிர்ப்பு, எரிப்பு எல்லாம் பிரஷர் குக்கரில் இருக்கும் பாதுகாப்பு வால்வு மாதிரி. அதை அடைத்துவிட்டால் தீவிரவாதம்தான் வெடிக்கும். தேசபக்தி உள்பட எதையும், யார் மீதும் திணிக்காமல் இருப்பதுதான் உண்மையான சுதந்திரம்”என்பது அவர்கள் வாதம்.
1990-ல் சில மாநிலங்களில் வேறு ஒரு விவகாரமான சட்டம் கொண்டு வந்தார்கள்: பப்ளிக்கில் நாலு பேர் சேர்ந்து ஒருவனுக்கு தர்ம அடி போட்டால், சாதாரணமாக அது கிரிமினல் குற்றம். ஆனால் அடிக்கப்பட்டவன் தேசியக் கொடியைக் கொளுத்தியதற்காக மக்கள் உணர்ச்சி வேகத்தில் அவனை அடித்துவிட்டால், வெறும் ஐந்து டாலர் அபராதத்துடன் விட்டுவிடலாம் என்பது இந்தச் சட்டம். “கொடியை எரிக்கிறானா, அடி சாத்து!’ என்று குறிப்பிடப்படும் இந்தச் சட்டத்தை எதிர்த்தும் பலர் கொடியை எரித்தார்கள். அவர்கள் அடி வாங்கினார்களா இல்லையா என்று தகவல் இல்லை.
ஆஸ்திரேலியாவில் சில மாணவர் இயக்கங்கள், கொடியை எரிக்க நினைப்பவர்களுக்கு வசதியாக அட்டை டப்பாவில் டான்டெக்ஸ் பனியன் ஜட்டி விற்பது மாதிரி ஒரு பாக்கெட் தயாரித்திருக்கிறார்கள். ஒரு தேசியக் கொடி, கற்பூர வில்லை, வத்திப் பெட்டி எல்லாம் கொண்ட திடீர் கொடி எரிப்பு கிட்! இந்த மாதிரியெல்லாம் தேசத் துரோகத்தை ரெடிமேடாக டப்பாவில் அடைத்து விற்கக் கூடாது என்று போலீஸ் வந்து பிடுங்கிப் போனார்கள். உடனே ஆஸ்திரேலிய அறிவு ஜீவிகளும் கலைஞர்களும் கூட்டாகச் சேர்ந்து “”இது என்ன காட்டுமிராண்டித்தனமான சென்சார்?” என்று சர்க்காரைக் கண்டித்தார்கள்: “”நான், என் ஊர், என் தாய் நாடு என்பதெல்லாம் ஒரு விதத்தில் ஜாதி மதச் சண்டை மாதிரிதான். குறுகின கண்ணோட்டத்தில் வரும் வியாதிகள். நாட்டுப்பற்று என்பது கொஞ்சம் பெரிய ரேஞ்சில் நடக்கிற ஜாதி வெறி; அவ்வளவுதான். உலகமே ஒரு நாடு, எல்லாரும் ஓர் இனம் என்ற பரந்த பார்வை வர வேண்டுமென்றால் முதலில் நம் அசட்டு தேச பக்தியைத் துடைத்து எறிய வேண்டும்…” என்ன இது, சிந்திக்க வைத்து விட்டார்களே!
இராக்கில் தினம் தினம் யாராவது ஒரு கோஷ்டி அமெரிக்கக் கொடியைக் கொளுத்தி ஆர்ப்பாட்டம் செய்வது அன்றாடச் காட்சி. ஆனால் அரசியலில் தீவிர எதிர்க் கட்சியினர் கூட இராக்கின் தேசியக் கொடியை அவமதிக்கத் துணிய மாட்டார்கள். காரணம், கொடியில் அல்லாவின் புனிதப் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதுதான். (தன் கைப்பட இந்த வாசகங்களைச் சேர்த்துக் கொடியின் டிசைனை மாற்றியவர் சதாம் ஹுசேன்.) இதே மாதிரி காரணத்தால், சவூதி அரேபியாவிலும் கொடியைக் கிழித்தால் கையே இருக்காது!
இப்போது லேட்டஸ்ட்டாகக் கொடி அவமதிப்புக் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருப்பவர் வேறு யாருமல்ல, ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்தான்! ஆஸ்திரியாவுக்குப் போயிருந்த போது அங்கே ஆட்டோகிராப் கேட்டவர்களுக்கெல்லாம், அவர்கள் கையில் வைத்திருந்த சின்னஞ் சிறிய அமெரிக்கக் கொடியின் மீது ஜோராகக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்கிறார். கொடியின் மீது கிறுக்குவதும் சட்டப்படி குற்றம்தான். இதற்கு ஒரு மாதம் வரை சிறைத் தண்டனை கொடுக்க வழி இருக்கிறது. ஆனால் புஷ்ஷுக்கு எப்போதுமே அவ்வளவாக விவரம் பற்றாது என்பதால், இதுவும் அவருடைய தினசரி சொதப்பல்களில் ஒன்று என்று எல்லாரும் மன்னித்துவிட்டார்கள்.
மறுமொழியொன்றை இடுங்கள்