No Smoking – Healthcare advisory & Law
Posted by Snapjudge மேல் ஏப்ரல் 27, 2007
புகைக்கப் புகைக்க…
உலகில் ஆண்டுக்கு 50 லட்சம் பேர் புகையிலை தொடர்பான நோய்களுக்குப் பலியாகின்றனர். புகை பிடிப்பதால் உடலில் ஏறக்குறைய அனைத்துப் பகுதிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டு பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. இந்த நிலையில் “நாட்டில் 40 சதவீத சுகாதாரப் பிரச்சினைகள் புகையிலை மூலமே ஏற்படுகின்றன. அதனால் புகையிலை தடுப்புச் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தவேண்டியது அவசியமாகும்’ என்று சுகாதார அமைச்சர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதற்காக தனி ஆணையம் ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பொது இடங்களில் புகை பிடிப்பது சட்டப்படி குற்றம் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடும் பஸ் நிறுத்தங்கள், உணவுக் கூடங்கள், திரையரங்குகள் ஆகியவற்றில் புகை பிடிப்பது சர்வசாதாரணமாக நடைபெறுகிறது. இவ்வாறு புகை பிடிப்பது அவர்களுக்கு மட்டுமல்ல, அருகில் இருப்பவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். புற்றுநோய், இதய நோய், பக்கவாதம், மூச்சுத் திணறல் ஆகியன புகையிலை காரணமாக ஏற்படும் முக்கிய நோய்கள். இதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று, வடகிழக்கு மாநிலங்களில் புகையிலைப் பொருள்கள் பெருமளவு பயன்படுத்தப்படுவதால் புற்று நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
களைப்பைப் போக்கி உற்சாகம் ஏற்படுத்துவதால் புகை பிடிப்பதாகப் பலரும் கூறுகின்றனர். ஆனால் அறிவியல் ரீதியில் இது நிரூபிக்கப்படவில்லை.
புகைப் பழக்கத்துக்கு உலகில் சுமார் 130 கோடி பேர் அடிமையாகி உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அதுவும் மாணவரிடையே இது பரவலாக வளர்ந்து வருவது மேலும் கவலை அளிப்பதாக உள்ளது. கல்வி நிலையங்களின் வாயில்களிலும், பஸ் நிறுத்தங்களிலும் இவை தாராளமாகக் கிடைப்பதால், கிடைக்கும் நேரத்தில் புகைப்பது அவர்களுக்கு எளிதாகி விட்டது.
இது போதாதென்று தொலைக்காட்சிகளில் புகை பிடிப்பது தொடர்பான விளம்பரங்கள் மறைமுகமாக இடம்பெறுகின்றன. அதுவும் பிரபலங்கள் மூலம் அவை விளம்பரப்படுத்தப்படுவதால் இளைஞர்களை அது எளிதில் தொற்றிக் கொள்கிறது. இத்தகைய விளம்பரங்களைத் தடுக்குமாறு செய்தி, ஒலிபரப்பு அமைச்சகத்துக்குப் பல முறை கடிதம் எழுதியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அமைச்சர் கூறியுள்ளது மக்கள் ஆரோக்கியத்தில் சம்பந்தப்பட்ட துறைக்கு எவ்வளவு அக்கறை உள்ளது என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. புகையிலை தொழில் நிறுவனங்கள் மூலம் அரசுக்கு கோடிக்கணக்கில் வருமானம் வருவதால் இவ்வாறு கண்டும் காணாததுபோல் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்குச் சிகிச்சை அளிக்க கோடிக்கணக்கில் செலவிடவேண்டியுள்ளது என்பதை சம்பந்தப்பட்ட துறையினர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இத்துடன் குட்கா போன்ற புகையிலைப் பொருள்களும் பெருமளவு புழக்கத்தில் உள்ளன. இவற்றின் உறைகள் மீது மண்டை ஓடு, எலும்புக்கூடு எச்சரிக்கையுடன் படங்களை வெளியிட்டு நுகர்வோரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆனால், “குடி குடியைக் கெடுக்கும், குழந்தைகளைப் பட்டினி போடும்’ என்ற வாசகங்கள் மதுக்கடைகளின் முன்னே உள்ளன. இருந்தும் மது விற்பனை மாதத்துக்கு மாதம் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. சிகரெட் பிடிப்பது உடலுக்குத் தீங்கானது என்ற வாசகம் பாக்கெட்டுகளில் கண்ணுக்குத் தெரியாத அளவில் அச்சிடப்பட்டுள்ளது. ஆனால் அதன் காரணமாக விற்பனை குறைந்ததாகத் தெரியவில்லை. எனவே, உற்பத்தி, விற்பனை நிலையிலேயே அவற்றைக் கட்டுப்படுத்தினாலன்றி எதிர்பார்க்கும் பலனை அடைய முடியாது.
மறுமொழியொன்றை இடுங்கள்