Gliese 581c – A New Planet on the Horizon
Posted by Snapjudge மேல் ஏப்ரல் 26, 2007
உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற புதிய கோள் கண்டுபிடிப்பு
வானியல் அறிஞர்களால் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புவியைப் போன்றபுதிய கோள் (இடது). இது சூரிய குடும்பத்துக்கு அருகில் அமைந்துள்ள கிளீஸ்-581 என்ற விண்மீனைச் சுற்றி வருகிறது. இதில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த விளக்கப் படத்தை ஐரோப்பிய தெற்கு வானியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
நியூயார்க், ஏப். 26: உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலை உடையது எனக் கருதப்படும் புதிய கோள் ஒன்றை வானியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆனால் இந்தக் கோள் சூரிய குடும்பத்தைச் சேர்ந்தது அல்ல. வேறொரு விண்மீன் குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.
புவியை போன்ற இந்த கோளில் தற்போது ஏதேனும் உயிரினங்கள் வசித்து வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன என அறிவியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.
புவியைப் போல 5 மடங்கு நிறைகொண்ட இந்த புதிய கோள், சூரிய குடும்பத்தில் இருந்து 20 ஒளி ஆண்டுகள் தொலைவில் (ஒளி 20 ஆண்டுகளில் பயணம் செய்யக் கூடிய தொலைவில்) அமைந்துள்ளது. “துலாம்’ என்ற விண்மீன் கூட்டத்தில் அமைந்துள்ள “கிளீஸ் 581′ விண்மீனை சுற்றி வருகிறது.
சூரிய குடும்பத்துக்கு அருகாமையில் உள்ள இந்த கிளீஸ் 581 விண்மீன், “சிவப்புக் குள்ளன்’ என்ற வகையைச் சேர்ந்ததாகும். மங்கலான சிவப்பு நிற விண்மீன் இது.
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா வானியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஸ்டிபான் உட்ரி குழுவினர் இந்தக் கோளைக் கண்டுபிடித்துள்ளனர். கிளீஸ் விண்மீன் மீது இந்தக் கோள் ஏற்படுத்தும் ஈர்ப்பு விளைவுகளை வைத்து அதைக் கண்டுபிடித்துள்ளனர்.
நெருக்கமான கோள்: கிளீஸ் விண்மீனுக்கு மிக நெருக்கமாக அமைந்துள்ளது இப் புதிய கோள். அதாவது, இரண்டுக்கும் இடையில் உள்ள தூரம், சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் உள்ள தூரத்தில் 14-ல் ஒரு பங்குதான்.
கிளீஸ் “”சிவப்புக் குள்ளன்” வகையைச் சேர்ந்த விண்மீன் என்பதால் சூரியனைவிட குறைவான ஒளியையும், வெப்பத்தையுமே வெளியிடுகிறது. எனவே புதிய கோள் நெருக்கமாக அமைந்திருந்தாலும் கூட வாழத் தகுதியுள்ளதாக இருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர்.
கோளின் வெப்பநிலை: வேற்றுக் குடும்பத்தைச் சேர்ந்த இந்த புவிக்கோளின் வெப்ப நிலை 0 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம். எனவே அங்கு நீர்ம வடிவில் நீரும், உயிரினங்களும் இருக்க வாய்ப்பு உள்ளது.
ஆனால், கோளின் வெப்பநிலை பற்றிய இந்தக் கணிப்புகள் துல்லியமானவை அல்ல என்கிறார் உட்ரியின் கூட்டாளியும், வானியல் அறிஞருமான மைக்கேல் மேயர்.
கூடுதல் விவரங்கள் இல்லாமல் நீர் உள்ளதா இல்லையா என்பது பற்றி அவ்வளவு விரைவாக முடிவுக்கு வரமுடியாது என புதிய கோளைக் கண்டுபிடித்த டாக்டர் உட்ரி குழுவினரும் கூறியுள்ளனர்.
வியாழன் கோளைவிட அதிக நிறைகொண்ட வளிமண்டலம் அமைந்திருந்தால், கோளின் பரப்பு மிக அதிக வெப்பநிலை கொண்டதாக இருக்கும். அந்த நிலையில் நீர்ம வடிவில் நீர் இருக்க முடியாது என்கிறார் மசாசூசெட் தொழில்நுட்பக் கல்வி நிலையத்தைச் சேர்ந்த கோள் அறிஞர் சாரா சீகர்.
இரு நூற்றில் ஒன்று: இந்த பேரண்டத்தில் புவியைப் போலவே உயிரினங்கள் வசிக்கும், அல்லது உயிரினங்கள் வசிப்பதற்கு ஏற்ற கோளை பல ஆண்டுகளாக அறிவியலாளர்கள் தேடி வருகின்றனர். இப்புதிய கோள் அதுவாகக் கூட இருக்கலாம் என்கிறார் மசாசூசெட்ஸில் உள்ள ஹார்வர்டு-ஸ்மித்சோனியன் மையத்தைச் சேர்ந்த வானியல் அறிஞர் டேவிட் சார்போன்.
புதிய கோள், புவியைப் போலவே நிலத் தரை கொண்ட திண்மக்கோள் எனில் நீர்ம நிலையில் உள்ள நீரும், உயிரினங்களும் இருக்க வாய்ப்புண்டு. ஆனால் இந்தக் கோள் வாயு உருண்டையாக இருந்தால் உயிரினங்கள் வாழத் தகுதியற்றதாக இருக்கும். ஆனால் இதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு.
இதைப் பற்றி மேற்கொண்டு முடிவுக்கு வர, கோளைச் சுற்றிலும் வளிமண்டலம் அமைந்துள்ளதா என்பது போன்ற தகவல்கள் தேவை. அதுவரை வேறு எந்த முடிவுக்கும் வருவது கடினமே என்கிறார் டேவிட் சார்போன்.
சூரிய குடும்பத்துக்கு வெளியில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள சுமார் 200 கோள்களில் மிகச்சிறியது இப்புதிய கோள். ஆனால் புவிக்கு நெருக்கமான நிறை (ஙஹள்ள்) கொண்ட கோள் இது என நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
மூன்றாவது கண்டுபிடிப்பு: இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கீளீஸ் 581-ஐ சுற்றி வரும் 2 புதிய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை புவியைப் போல 8 மற்றும் 11 மடங்கு நிறை கொண்டவை. இவற்றைத் தொடர்ந்து மூன்றாவதாக, புவிக்கு நெருக்கமான நிறை கொண்ட இப்புதிய கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புதிய கோளைக் கண்டுபிடித்துள்ள உட்ரி குழுவினர், வானியல் தொடர்பான “ஜர்னல் அஸ்ட்ரானமி அண்ட் அஸ்ட்ரோபிசிக்ஸ்’ பத்திரிகையில் தங்கள் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்துள்ளனர்.
மறுமொழியொன்றை இடுங்கள்