Blessed by a U.S. Official, China Will Buy 4 Nuclear Reactors
Posted by Snapjudge மேல் ஏப்ரல் 25, 2007
ரூ. 33,600 கோடியில் 4 அணு உலைகளை அமெரிக்காவிலிருந்து வாங்குகிறது சீனா
பெய்ஜிங், ஏப். 25: அமெரிக்காவிலிருந்து ரூ. 33,600 கோடி மதிப்பிலான 4 அதிநவீன அணு உலைகளை சீனா வாங்க உள்ளது.
தற்போது சீனாவில் 1970-ம் ஆண்டுகளில் உருவான அணுஉலைகள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றைவிட தொழில் நுட்ப ரீதியிலும் பாதுகாப்பு அம்சங்களிலும், விலை அடிப்படையிலும் அமெரிக்காவிடம் வாங்க உள்ள அணு உலைகள் மேம்பட்டதாக திகழும்.
இதற்காக வெஸ்டிங்ஹவுஸ் எலெக்ட்ரிக் கம்பெனி என்ற நிறுவனத்துடன் சீனா ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
இதன்படி அணுஉலைக்கான சாதனங்கள், இதர தேவைகள், தொழில் நுட்ப உதவி உள்பட எல்லா தொழில்நுட்பங்களையும் ஒப்படைக்க உள்ளது அமெரிக்க நிறுவனம். இதற்கான நடைமுறைகள் அனத்தும் மே மாதத்தில் முடிவடையும். தற்போதைய நிலவரப்படி 2013-ம் ஆண்டுக்குள் 4 அணு உலைகளில் முதலாவது தனது மின் உற்பத்தியை தொடங்கிவிடும் என்று சீனா டெய்லி பத்திரிகை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது.
இதனிடையே, தமது அணு மின் சக்தி திட்டங்களுக்கு உள்நாட்டிலேயே தயாரான சொந்த தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் எரிபொருளை 2020 ம் ஆண்டுக்குள் பயன்படுத்த சீனா தீவிரமாக உள்ளது. தற்போது தனது அணு மின்திட்டங்களுக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்து சமாளித்து வருகிறது சீனா.
சொந்த தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் எரிபொருள் தொழில்நுட்பத்துக்கு சாதகமாக அமெரிக்காவிடம் இருந்து வாங்கப்படும் அணு உலைகள் திகழும்.
இந்த தகவலை ஷாங்காயில் திங்கள்கிழமை நடந்த கருத்தரங்கு ஒன்றில் சீன அணுசக்தி ஆணைய தலைவர் சன் கின் தெரிவித்தார்.
நிலக்கரியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதை வெகுவாக குறைக்கவும் சீனா திட்டமிட்டுள்ளது. நிலக்கரியைப் பயன்படுத்தும் அனல் மின்நிலையங்களால் சுற்றுச்சூழல் வெகுவாக மாசடைகிறது. எனவே, 2020க்குள் அணு மின் நிலையங்கள் மூலம் மின்சாரத்தை கணிசமாக உற்பத்தி செய்யவும் (40 மில்லியன் கிலோ வாட்) அது திட்டமிட்டுள்ளது. 2005ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 5 மடங்காகும்.
சீனாவின் முதல் அணு மின்நிலையம் கிழக்கு கடற்கரையில் உள்ள ஷேஜியாங் மாநிலத்தில் 1991ல் நிறுவப்பட்டது.
மறுமொழியொன்றை இடுங்கள்