Justice System in India – Opinion, Analysis, Statistics
Posted by Snapjudge மேல் ஏப்ரல் 9, 2007
நீதிமன்றப் புறக்கணிப்புகள் நியாயமானவையா?
கோ. நடராஜன்
அரசியலமைப்புச் சட்டப்படி செயல்படும் மக்களாட்சி, சட்டத்தின் ஆட்சியே. சட்ட முறைமைப்படி வாழும் சமூகத்தில் மக்களுக்குச் சட்டத்தின் மூலம் பலவகையான உரிமைகள் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன.
சட்டத்தின் முன் அனைவரும் சமம். மக்களும் நிர்வாகமும் செய்ய வேண்டியவை எவை எவை என்பதை சட்டம் நிர்ணயித்துள்ளது. மக்களின் உரிமைகளை நிலைநாட்டவும், குற்றம் செய்வோரைத் தண்டிக்கவும், சட்ட முறைமையின்படி நின்று நீதியை நிலைநிறுத்திடவும் நீதிமன்றங்கள் செயல்பட வேண்டும்.
ஆனால் நம் நாட்டில் நீதிமன்றங்கள், நீதி வழங்கிடும் பணியில் எவ்வாறு செயல்படுகின்றன? தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதி ஆகும். தீர்ப்புகள் தாமதம் ஆவதால் நீதியைத் தேடி வந்தவர்கள், நீதிமன்றங்கள் தங்களை விட்டால் போதும் என்ற நிலைக்கு ஆளாகிவிடுகின்றனர்.
நீதி வழங்கும் செயல்பாட்டில், நீதிமன்றங்களின் பணி சிறக்க நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், வழக்காளிகள் – அனைவருமே ஒத்துழைக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் நடைமுறையில் நீதிக்கான முயற்சி, “தவளையும் எலியும்’ ஒரு கயிற்றில் கட்டிக் கொண்டு கிணற்றில் விழுந்து தப்பிக்கும் முயற்சியாகவே தொடர்கிறது. காலப் பயன்பாட்டின் அருமை உணராத, தாமதங்களைப் பற்றி கொஞ்சம்கூட அக்கறை எடுக்காத அமைப்பாக நீதிமன்றங்கள் செயல்படுவது, நிறுவன அமைப்புகளின் செயல்பாட்டு முறைக்கு ஏற்பட்ட மிகப் பெரிய தோல்வியாகும்.
ஆண்டின் 365 நாள்களில் 100 சனி, ஞாயிறுகள் (12 சனிக்கிழமைகள் வேலை நாள்கள்) போக மீதமுள்ள 265 நாள்களில் 20-க்கும் மேற்பட்ட விடுமுறை தினங்கள் போக 245 நாள்களில் கீழமை நீதிமன்றங்களில் 60 முதல் 100 நாள்கள் வரை நீதிமன்றப் புறக்கணிப்புகள் செய்யப்படுகின்றன. காவல்துறையினரோடு ஏற்படும் மோதலே 50 சதவீத நீதிமன்றப் புறக்கணிப்புகளுக்குக் காரணமாகின்றன. காவல்துறைக்கோ, வழக்கறிஞர்களுக்கோ எல்லையற்ற அதிகார வரம்புகள் எதுவும் கிடையாது. காக்கிச்சட்டையும், கறுப்புக் கோட்டும் சட்டத்தை மதித்து நடந்து நீதியைக் காப்பதில் முன்னணியில் செயல்பட வேண்டியவர்கள்.
எந்தவொரு பிரச்சினை என்றாலும், நீதிமன்றங்களின் மூலம் தீர்வுகாண முடியும். நேரடிப் போராட்டங்களே கூடாது என்றாலும் போராட்டங்களின் மூலம் மட்டுமே தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்ற வழக்கறிஞர்களின் நிலைப்பாடு, நீதிமன்றங்கள் மீதான நம்பகத்தன்மைக்கு எதிரானதாகவே அமையும். நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டங்களின் பின், முடிவாய் என்ன நடந்தது என்பது சிலசமயம் புதிராகவே உள்ளது.
நீதிமன்றப் புறக்கணிப்புகள் நியாயம்தானா? நீதிமன்றப் புறக்கணிப்பில் பாதிக்கப்பட்ட வழக்காளிகளுக்கு நிவாரணம் என்ன? இதுபோன்ற கேள்விகளுக்கு, நியாயமான எந்தப் பதிலும் இல்லை. காவல்துறையினருடன் கருத்து மோதல் ஏற்பட்டால் காவல்துறை வழக்கறிஞர்கள் – உயர்நிலைக் குழுவிற்கு முறையிட்ட பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது நன்மை பயக்கும். கல்வியும், வளமும் இல்லாத மக்கள் நிறைந்த நம் நாட்டில், ஏற்றத்தாழ்வுகள் வெகுவாய் அதிகரிக்கின்ற சமூக அமைப்பில், விரைவான நீதி வழங்கல் முறையின் மூலமே மக்களாட்சியின் மாண்பினையும், மக்களுக்கான நல்வாழ்வையும் உறுதிப்படுத்த முடியும். “”நிலவுகின்ற சமூக அமைப்பிற்கு ஏற்பவே, நீதிமன்றங்களின் செயல்பாடும், நீதி வழங்கும் முறைமையும் அமையும்” என்ற கருத்தை முன்வைத்தார் லெனின்.
நீதிமன்றப் புறக்கணிப்பு என்பது வழக்கறிஞர்கள் தங்கள் பணிகளைச் செய்யாமல் இருப்பதே. பெரும்பாலான நாள்களில் பெரும்பாலான வழக்குகளில் எந்தவொரு நியாயமான காரணமும் இன்றி வழக்கறிஞர்கள் “வாய்தா’ வாங்கி இழுத்தடிப்பதும், இரு தரப்பு விவாதங்கள் முடிந்தபின்னும், “”விளக்கம் கேட்டல்” என்ற பெயரில் தீர்ப்பைத் தராமல் நீதிபதிகள் மாதக்கணக்கில் இழுத்தடிப்பதும் வேறு வகையிலான நீதிமன்றப் புறக்கணிப்புகள்.
நீதிமன்றப் புறக்கணிப்புகள் எவ்வகையில் வெளிப்பட்டாலும் அவை நியாயமற்றவை. சட்டத்தின் ஆட்சிக்கு எதிரானவை. குற்றவாளிகளுக்கு சாதகமானவை. அடிப்படை அறநெறிகளுக்கும் புறம்பானவை.
நம் நீதிமன்றச் செயல்முறைகளில் பெரும் மாற்றங்கள் வந்தால் தவிர “விரைவான நீதி’ கானல்நீரே. உயர் நீதிமன்றங்களில் “ரிட்’ வழக்குகள் அனுமதிக்கப்பட்ட பின் அவை குறித்த காலத்தில் விசாரிக்கப்படுவதில்லை. இது அரசுத் தரப்புக்கும், எதிர்த்தரப்புக்கும் சாதகமாகும். இந்நிலை மாறிட நிலுவையில் உள்ள வழக்குகள் குறிப்பிட்ட காலக்கெடுவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். கீழமை நீதிமன்றங்களில் உரிமையியல் வழக்குகளில் காலை 10.30 மணி முதல் 12 மணி வரை வழக்குகளை வரிசைப்படி அழைத்து வாய்தா கொடுப்பதில் வீணாகிறது. இதைத் தவிர்க்க நாளொன்றுக்கு சுமார் 50 வழக்குகள் மட்டுமே அழைக்கப்பட வேண்டும்; திருத்தப்பட்ட உரிமையியல் நடைமுறைச் சட்டப்படி கூடுதலான வாய்தாக்களுக்கு கட்டணம் செலுத்த கட்டளையிட வேண்டும்.
நுகர்வோர் குறைதீர் மையம், குடும்பநல நீதிமன்றம், காசோலை செல்லுபடியாகாத வழக்குகள் – இவற்றை ஓர் ஆண்டுக்குள் முடித்தாக வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
“காவல் நிலையத்திற்குள்ளும், நீதிமன்றத்தின் படிக்கட்டிலும் காலடி வைக்காதவரே நல்ல மக்கள்’ என்ற கருத்து நிலை உள்ளது. அவ்வளவு தூரம் இவ்விரு நிறுவனங்களும் மக்களுடன் நட்புணர்வுடனும் இணக்கமாகவும் செயல்படவில்லை என்பதே அதன் உள்நிலை.
பல்வேறு வழக்கறிஞர் அமைப்புகள் விரைவான நீதிக்காக, முழுமையான சமூக நீதிக்காக, கூடுதல் நீதிபதிகள், எல்லா வட்டங்களிலும் நீதிமன்றங்கள், பரவலாக்கப்படும் நீதிமன்ற முறைமை… இவற்றை அடைய முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
பூனைக்கு மணி கட்டுவது சுலபம். அதன் “கிண்கிணி’ ஓசையைத் தொடர்ந்து கேட்பதுதான் கடினம்.
(கட்டுரையாளர்: உயர் நீதிமன்றம் மற்றும் மத்திய நிர்வாகத் தீர்ப்பாணையத்தில்
வழக்கறிஞர்).
bsubra said
குற்றவாளிகள் விடுவிக்கப்படும்போது நீதி தோற்றுவிடுகிறது: உச்ச நீதிமன்றம் சாடல்
மேல்முறையீட்டு நீதிமன்றங்கள், குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவரை நிரபராதி என விடுதலை செய்வதற்கு முன்னர், கீழ் நீதிமன்றங்களின் தீர்ப்புகளை சீர்தூக்கி பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளது உச்ச நீதிமன்றம்.
குற்றவாளியை நிரபராதி என விடுவிப்பது நீதிமுறையின் தோல்வி என்ற வகையில், ஒரு நிரபராதியை குற்றவாளி என தண்டிப்பதிலிருந்து எவ்விதத்திலும் குறைந்த அல்ல என நீதிபதிகள் அரிஜித் பசாயத் மற்றும் டி.கே.ஜெயின் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் கூறியுள்ளது.
கொலை, கொள்ளை குற்றச்சாட்டில் இருந்து 3 பேரை விடுவித்து ஹரியாணா மற்றும் பஞ்சாப் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இக்கருத்தைத் தெரிவித்துள்ளனர்.
1994-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி, தில்லியில் இருந்து ஹரியாணாவில் உள்ள ரோக்தக் என்ற இடத்துக்கு சென்று கொண்டிருந்த ரயிலில் வழிப்பறியில் ஈடுபட்ட மூவர், அந்த முயற்சியில் புருஷோத்தம் என்பவரை கத்தியால் குத்திக் கொலை செய்ததாகவும், 2 பேருக்கு குண்டுக் காயம் ஏற்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து கீழ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இது தொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், குற்றவாளிகளை அடையாளங்காட்டும் “சோதனை அடையாள அணிவகுப்பு’ நடத்தப்படவில்லை என்று கூறி 3 பேரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்து விட்டது. அடையாள அணிவகுப்பு நடத்த 3 பேரும் ஒத்துழைக்கவில்லை என அரசு தரப்பு வாதிட்டும் பயனில்லை.
பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றம் பின்பற்றிய இந்த அணுகுமுறையை குறை கூறியுள்ள உச்ச நீதிமன்றம், அணிவகுப்பு நடத்த குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒத்துழைக்கவில்லை என்ற அரசு தரப்பு வாதத்தை நிராகரித்ததற்கு உயர் நீதிமன்றம் எந்தக் காரணத்தையும் கூறாதது “ஏற்க இயலாதது’ என்று சாடியுள்ளது.
————————————————————
உ பியில் 4000 சிறைக்கைதிகள் விடுதலை
உத்தரபிரதேச சிறைகளில் பல குற்றங்களுக்காக 18,334 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களில் 4000 பேரை விடுவிப்பதாக முதல்வர் மாயாவதி தன் அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு அறிவித்தார். பயங்கர வெளிநாட்டு மற்றும் வெளிமாநில குற்றவாளிகள் விடுவிக்கப் படமாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 161 கீழும் குற்றவியல் சட்டம் 432 கீழும் உபி சிறை செயற்புத்தகம் பிரிவு 195,196 மற்றும் 197 கீழும் இவர்களை விடுவிக்க மாநில அரசிற்கு அதிகாரம் உள்ளது.