Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

BJP seals triumph in MCD polls, shuts out Congress : Op-Ed

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 9, 2007

தில்லி மாநகராட்சித் தேர்தல்

தில்லி மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் அந்த மாநகராட்சியை காங்கிரஸ் வசமிருந்து பாஜக கைப்பற்றியுள்ளது.

புதுதில்லியை நிர்வகிக்க தனி அமைப்பு உள்ளபோதிலும் தலைநகரையே கைப்பற்றி விட்டோம் என்பதுபோல பாஜக இந்த வெற்றியைப் பறைசாற்றிக் கொள்ள முற்படலாம். இத் தேர்தலின் முடிவுகள் மத்திய அரசு மீதும் தில்லி துணை மாநில அரசு மீதும் தில்லி மாநகராட்சி மீதும் மக்களுக்கு நிலவி வந்த அதிருப்தியைக் காட்டுவதாக பாஜக வர்ணிக்க முற்பட்டுள்ளது.

தில்லி துணை மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் முதல்வர் ஷீலா தீட்சித் ராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் பாஜக வற்புறுத்தியுள்ளது. இது அர்த்தமற்ற கோரிக்கையாகும். ஒரு மாநகராட்சிக்கு நடைபெறும் தேர்தல் முடிவை வைத்து மாநில அரசு பதவி விலக வேண்டும் என்றால் அதற்கு முடிவே இல்லாது போய்விடும். தில்லி மாநகராட்சியில் முதல்தடவையாக மாயாவதி கட்சி இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸின் தோல்விக்கு அக் கட்சிக்குள் நிலவிய உள்கட்சிப்பூசலே காரணமாகக் கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைவர்களே இதை ஒப்புக்கொண்டுள்ளனர்.

நாட்டில் எந்தவொரு பெருநகரை எடுத்துக்கொண்டாலும் அதன் பிரச்சினைகள் அதிகம். போதுமான அதிகாரமும் போதுமான வருமானமும் கிடையாது என்பது நாட்டில் உள்ள எல்லா மாநகராட்சிகளுக்கும் உள்ள பொதுவான பிரச்சினையாகும். ஆகவே மக்களின் அதிருப்தி மாநகரை ஆளுகின்ற கட்சி மீது திரும்புகிறது.

தில்லி தேர்தலில் குறிப்பாக வேறு சில பிரச்சினைகளும் சேர்ந்து கொண்டன. அது மிக நீண்டகாலமாக இருந்து வருகிற நில ஆக்கிரமிப்புப் பிரச்சினையாகும். கடந்த காலத்தில் ஆட்சியிலிருந்த எந்தக் கட்சியும் இதைக் கண்டுகொள்ளாமல் விட்டன. கடைசியில் நீதிமன்ற உத்தரவு காரணமாக நில ஆக்கிரமிப்புச் செய்யப்பட்ட பகுதிகளில் கட்டடங்களை இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று. ஆக்கிரமிப்பு நிலங்களிலிருந்து மக்களை வெளியேற்ற வேண்டியதாயிற்று. குடியிருப்புப் பகுதிகளில் விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்ட வர்த்தக அமைப்புகளின் பிரச்சினையும் சேர்ந்து கொண்டது. இவ்விதம் விதிமுறைகளை மீறி தொடங்கப்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இவையெல்லாம் பெரும் பிரச்சினையாக உருவெடுக்கவே பல தரப்பினரையும் திருப்திப்படுத்த அரசுத்தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. முடிவில் எந்தத் தரப்பையும் திருப்திப்படுத்த முடியாமல் போய்விட்டது.

புதிதாக ஆட்சிக்கு வரும் பாஜகவுக்கும் இது தலைவலியாக அமையலாம். இப் பிரச்சினையைத் தீர்ப்பதில் அதற்கு மாநில அரசு, மத்திய அரசு ஆகியவற்றின் ஒத்துழைப்பு தேவைப்படும்.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, தில்லி தேர்தலில் காங்கிரஸýக்கு ஏற்பட்ட தோல்வியைத் தனித்துப் பிரித்துப் பார்க்க இயலாது. சில மாதங்களுக்கு முன்னர் மகாராஷ்டிர மாநிலத்தில் மாநகராட்சிகளுக்கு நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி மும்பை மாநகரில் மட்டுமன்றி வேறு சில நகரங்களிலும் தோல்வியைக் கண்டது. அதன் பின்னர் பஞ்சாப், உத்தரகண்ட் மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் தோல்வி கண்டது. உ .பி.யில் இப்போது ஏழு கட்டங்களாக நடைபெறும் மாநில சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரஸýக்குப் பெருத்த வெற்றி வாய்ப்பு உள்ளதாகச் சொல்ல முடியாது.

புதுச்சேரியைப் போலவே துணை மாநில அந்தஸ்தைக் கொண்ட தில்லி யூனியன் பிராந்தியத்துக்கு அடுத்த ஆண்டு கடைசியில் தேர்தல் நடக்க இருக்கிறது. இப் பின்னணியில் அடுத்தடுத்த தோல்விகளுக்கு என்ன காரணம் என காங்கிரஸ் மத்திய தலைமை ஆராய வேண்டியது அவசியம்.

==============================================================
மீட்சிப் பாதையில் பாரதீய ஜனதா!

நீரஜா செüத்ரி

மீட்சிப் பாதையில் செல்கிறது பாரதீய ஜனதா. சமீபகாலமாக, எல்லா இடங்களிலும் அதன் தலைவர்கள் நினைப்பதற்கும் அதிகமாகவே அது வெற்றிகளைக் குவித்து வருகிறது.

தில்லி மாநகராட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 272 வார்டுகளில் 164-ஐ அது பிடித்திருக்கிறது. உத்தராஞ்சல், பஞ்சாப் சட்டப்பேரவை பொதுத் தேர்தல்களிலும், உத்தரப்பிரதேசத்திலேயே சில மாதங்களுக்கு முன்னால் நடந்த நகரசபைத் தேர்தலிலும் அது வெற்றி பெற்றது.

சொல்லப்போனால் உ.பி. நகரசபைத் தேர்தல் வெற்றிதான் அதற்கு திருப்புமுனையாக அமைந்தது. இரண்டாண்டுகளாக சோர்ந்து கிடந்த அதன் தொண்டர்கள் உற்சாகம் பெற்று கட்சிப் பணியில் தீவிரம் காட்டத் தொடங்கினர்.

இதனால்தான், சமீபத்திய முஸ்லிம் எதிர்ப்புப் “”பிரசார கேசட்” விவகாரம் பெரிய பாதிப்பை யாரிடத்திலும் ஏற்படுத்தவில்லை; அதேசமயம், பாஜகவின் சில தலைவர்களுக்கு அது அதிர்ச்சியைத் தந்தது. எனவேதான், சிறுபான்மைச் சமூகத்தினரை அச்சுறுத்தும் அந்த கேசட்டுக்காக தன்னைக் கைது செய்ய வந்தால், கைதாகிவிடுவது என்ற முடிவை கட்சியின் அனைத்திந்தியத் தலைவர் ராஜ்நாத் சிங் எடுத்தார்.

கேசட்டை வெளியிட்ட சில மணி நேரங்களுக்கெல்லாம் கட்சித் தலைமையே அதைத் திரும்பப்பெற உத்தரவிட்டது. அதில் ஆட்சேபகரமாகவும், வகுப்புகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் விதத்திலும் காட்சிகள், வசனங்கள் இருந்ததை அது உணர்த்துகிறது. கேசட்டில் வாஜபேயி, அத்வானி ஆகியோரின் படங்கள் உள்ளன. உத்தரப்பிரதேச பாஜக தலைவர் லால்ஜி தாண்டன் கேசட்டை லக்னெüவில் கட்சித் தலைமை அலுவலகத்தில் வெளியிட்டிருக்கிறார். பிறகு அதற்காக வருந்தி மன்னிப்பும் கோரியிருக்கிறார். நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையம் கையில் சவுக்கை எடுத்ததன் பிறகே, “”அது தங்களுக்குத் தெரியாமல் வந்துவிட்டது, ஏற்கெனவே திரையிடப்பட்டது, தேர்தலுக்காகத் தயாரிக்கப்படவில்லை” என்றெல்லாம் மழுப்பலான விளக்கங்கள் தரப்பட்டன.

தேர்தலுக்காகத் தயாரிக்கப்படவில்லை என்றால் பிரசாரம் உச்சத்தில் இருக்கும்போது கட்சித்தலைமை அலுவலகத்தில் அதை வெளியிடுவானேன்?

இந்த விவகாரம் எப்படிப் போனாலும், பாரதீய ஜனதா, தான் நினைத்ததை சாதித்துவிட்டது. “”முஸ்லிம்கள் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே வருகிறது, ஹிந்துக்கள் சிறுபான்மைச் சமூகமாகும் ஆபத்து இருக்கிறது” என்ற அச்சத்தை அது விதைத்துவிட்டது. உத்தரப்பிரதேச மக்கள் தொகையில் முஸ்லிம்களின் பங்கு 18.5% என்று 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இந்த விவகாரம் வெளியான மறுநாளே, முஸ்லிம்கள் உத்தரப்பிரதேசத்தில் சிறுபான்மைச் சமூகத்தவர் அல்ல என்று அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி ஒரு வழக்கில் தீர்ப்பளித்திருக்கிறார். ஒரே விஷயத்தை பாஜக கேசட் குரூரமாகவும், நீதிமன்றத் தீர்ப்பு வேறுவிதமாகவும் பதிய வைத்திருக்கின்றன.

இப்போது பாரதீய ஜனதாவில் ஆர்எஸ்எஸ் ஆதிக்கம்தான் அதிகம்; அவர்கள் செய்ததுதான் அந்த கேசட் தயாரிப்பு என்று ஒரு வட்டாரம் கூறுகிறது. கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங், கட்சியை விரைவாக வெற்றிப்பாதைக்கு இட்டுச் சென்று அடுத்த நாடாளுமன்ற பொதுத் தேர்தல் மூலம் பிரதமராகிவிடத் துடிக்கிறார் என்று மற்றொரு வட்டாரம் கருதுகிறது.

தேர்தல் வந்துவிட்டால் சங்கப் பரிவாரங்களின் உதவி பாரதீய ஜனதாவுக்குத் தேவைப்படுகிறது. இப்போது கட்சி முன் உள்ள சவால் எல்லாம், ஹிந்துக்களிலேயே மிதவாதிகளைத் தன்பக்கம் ஈர்ப்பதுதான். இவர்கள்தான் “”உண்மையில் பெரும்பான்மையானவர்கள்”. கேசட்டில் வெளியான காட்சிகளையும் வசனங்களையும் இவர்கள் ஏற்கமாட்டார்கள், முகம் சுளிப்பார்கள். ஜின்னாவைப் பற்றி அத்வானி பேசியது போன்ற பேச்சுகளே இவர்களை ஈர்க்கும். கட்சியின் ஆதரவாளர்கள் எண்ணிக்கையைப் பெருக்க நினைத்து அத்வானி அப்படி பாகிஸ்தானில் பேசியிருந்தாலும், அவர் பேசிய இடமும், சூழ்நிலையும்தான் அவரைக் குற்றவாளியாக்கிவிட்டது. அதற்காக அவரை சங்கப் பரிவாரத் தலைமை கடுமையாகக் கண்டித்தது.

தில்லியில் பாஜகவுக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்திருப்பது விலைவாசி உயர்வு, குடியிருப்புப் பகுதிகளில் கடைகளுக்கு சீல் வைத்தது, அங்கீகாரமற்ற கட்டடங்களை இடித்தது போன்ற விவகாரங்களால் கொதித்துப் போனதால்தான்; “”ஒரு முஸ்லிம் குடும்பம் 35 குழந்தைகளைப் பெறுவது” குறித்து கவலைப்பட்டு அவர்கள் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை. இந் நிலையில் ராஜ்நாத் சிங், மிதவாத ஹிந்துக்களையும் ஈர்க்கும்வகையில் செயல்பட வேண்டும்; மாறாக தீவிரவாத ஹிந்துத்துவாவைக் கையாளக்கூடாது.

முஸ்லிம்கள் உத்தரப்பிரதேசத்தில் சிறுபான்மையினர் அல்ல என்று அலாகாபாத் உயர் நீதிமன்ற ஒற்றை நீதிபதி அளித்த தீர்ப்பால் முஸ்லிம் வாக்குகள் ஒரு சேர சமாஜவாதி கட்சிக்குப் போகலாம்; ஆனால் இந்த சர்ச்சை நீடிக்காததால் முலாயமின் வாக்கு வங்கி மேலும் வலுவடையும் வாய்ப்பு குறைந்துவிட்டது.

இந் நிலையில் கேசட் விவகாரம் பாஜகவின் வெற்றி வாய்ப்பைக் குறைத்துவிட்டது; அதன் தலைவர்கள் தாங்கள் பேசியதையே மறுக்கும் நிலைமை ஏற்பட்டுவிட்டது.

தேர்தல் வந்துவிட்டாலே எல்லா வழிகளையும் பிரசாரத்தில் கையாள்வது வழக்கம் என்றாலும் பாஜகவின் இந்த கேசட் தரம் தாழ்ந்த ஒரு செயலாகும்.

வெற்றிமீது வெற்றிகளைக் குவித்துவரும் ஒரு கட்சியின் நடவடிக்கையாக இது தெரியவில்லை, எதையாவது செய்து வெற்றி பெற்றுவிடத் துடிக்கும் “”நிதானமற்ற நடவடிக்கையாகவே” தெரிகிறது; எல்லாவற்றையும்விட முக்கியம், இது போன்ற நடவடிக்கைகளுக்கு அரசியல் அரங்கில் அவசியமே இல்லை.

தமிழில்: சாரி.
==============================================================

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: