Thi Vai Goplal Iyer passes away – Memoirs & Anjali
Posted by Snapjudge மேல் ஏப்ரல் 6, 2007
“ஓயாத தமிழ் அலை ஓய்ந்தது’
“தமிழ்க் கடல்’ என்றும், “நூற்கடல்’ என்றும் போற்றப்படும் பண்டித வித்வான் தி.வே. கோபாலையர் காலமான செய்தி தமிழன்பர்களுக்குத் தாங்க முடியாத அதிர்ச்சி.
ஒரு நடமாடிய தமிழாக வாழ்ந்தவர்; சங்க இலக்கிய இலக்கணங்கள் அனைத்தும் அவர் நினைவில்; மூலமும், உரையும் முழுமையாக மனத்தில் ஏந்திய மனிதக் கணினி; பணம், பதவிகளை விரும்பாத இல்லறத் துறவி.
1964ஆம் ஆண்டு. என்னைப் போன்ற ஆயிரமாயிரம் புலவர்களை உருவாக்கிய திருவையாறு அரசர் கல்லூரியின் முதல்வராக அவர் வந்தபோது தொடங்கிய அறிமுகம் இறுதிவரை தொடர்ந்தது.
நெற்றியில் திருநீறும், வாயில் வெற்றிலையுமாக தூய வெண்ணிறமான ஜிப்பா, வேட்டியுடன் அவர் நடந்து வரும் கம்பீரத்தை மாணவர்களாகிய நாங்கள் எதிர்நின்று பார்த்து ரசிப்போம். முதல்வர் என்ற செருக்கோ, பெரும்புலவர் என்ற ஆணவமோ அவரிடம் இருந்ததில்லை.
ஒருசமயம் அவரை எதிர்த்தே கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அதனையும் அவர் ஒரு புன்முறுவலோடு எதிர்கொண்டார். அவரைக் கண்டித்து எழுதப்பட்ட துண்டறிக்கையை ஒரு மாணவர் அவரிடம் நீட்டியபோது, அமைதியாக வாங்கிப் படித்து அதில் உள்ள பிழைகளைத் திருத்தித் திரும்பக் கொடுத்த பெருந்தன்மையை என்னென்பது! திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்கத்திலும், தஞ்சை தொல்காப்பியர் கழகத்திலும் அவர் தொல்காப்பியத்தைப் பற்றி ஆற்றிய உரைகள் தமிழறிஞர்களையே வியப்பில் ஆழ்த்தின. தொல்காப்பியத்தின் அனைத்து உரைகளையும் ஒப்பிட்டு ஒரு மணி நேரத்திற்கும் மேல் உரையாற்றினார். அவர் முடித்தபோது அரங்கமே அதிர்ந்தது. தொல்காப்பியம் பற்றி அறியாதவர்களும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அப்போதுதான் பலருக்கு தொல்காப்பியமே அறிமுகம் ஆனது.
அவர் வகுப்பில் பாடம் நடத்துவதே ஓர் அறிவார்ந்த அழகு. வகுப்புக்கு வந்ததும் அன்றைக்கு என்ன பாடம் என்று கேட்டுவிட்டு, புத்தகத்தை மூடி வைத்து விடுவார். இலக்கணமாக இருந்தாலும் இலக்கியமாக இருந்தாலும் இனிய குரலில் வாய் விட்டுப் பாடுவார். நச்சினார்க்கினியரும், இளம்பூரணரும், அடியார்க்கு நல்லாரும், பரிமேலழகரும், சிவஞான முனிவரும் வகுப்பு முடியும்வரை வந்து வந்து போவார்கள். முந்தையோர் உரைகளை அவர் விளக்கும்போது ஒரு புதிய பரிமாணம் தோன்றும். அவரது உரைக்கு எதிராக வினாக்கள் தொடுத்தாலும் அந்தக் கடல் கலங்காது; கவலைப்படாது. உரையாசிரியர்களுள் நச்சினார்க்கினியர் அவருக்கு மிகவும் பிடிக்கும். அவரை எதிர்த்துக் கேட்டால் சிரித்துக் கொண்டே கூறுவார்: “”அவன் நச்சினார்க்கே இனியன்…”
அவர் ஏராளமான நூல்கள் எழுதியிருக்க முடியும்; என்றாலும் எழுதவில்லை. அதற்குக் காரணம் அவர் இந்த வெளியுலக விளம்பரத்துக்கு அப்பாற்பட்டவராகவே வாழ விரும்பினார். அவர் நினைத்திருந்தால் விருதுகளையும், பதவிகளையும் வென்றெடுக்க முடியும். ஆனால் அவர் எந்தவித புகழையும், பரிசுகளையும் மதித்ததில்லை. “பரிசும் பாராட்டும் தேடிவர வேண்டும். தேடி அலைவது தமிழுக்கு அவமானம்’ என்று கூறுவார். கல்லூரியிலிருந்து ஓய்வுபெற்றதும் புதுச்சேரி பிரெஞ்சு கலை ஆய்வு நிறுவனம் அவரை அழைத்துக் கொண்டது.
எண்ணிறந்த ஆய்வுக் கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். அவை தனி நூல் வடிவம் பெறவில்லை. அண்மையில் தமிழ் மண் பதிப்பகம் வெளியிட்ட தொல்காப்பியம் – செம்பதிப்பு 14 தொகுதிகளுக்கும் இவர் பதிப்பாசிரியராகச் செயல்பட்டார். புதுச்சேரி இந்தியப் பள்ளியின் ஆய்வு மாணவர்களுக்காக இவரால் பிழைநீக்கிச் செப்பம் செய்யப்பட்ட தொல்காப்பிய நூல்களை அடிப்படையாகக் கொண்டு அவை பதிப்பிக்கப்பட்டன. இதுதவிர இவர் அரும்பாடுபட்டுத் தயாரித்த தமிழ் இலக்கணப் பேரகராதி பல தொகுதிகளாக வெளிவந்துள்ளன.
மரபுவழிவந்த தமிழ்ப் புலவர் வரிசையில் இவர் கடைசித் தலைமுறை என்று கூறலாம். எழுத்தாளரும், பத்திரிகையாளருமான திருலோக சீதாராமனும், தஞ்சை வழக்கறிஞர் டி .என். இராமச்சந்திரனும் இவரைப் பெரிதும் மதித்து வெளியுலகத்துக்கு அறிமுகப்படுத்த துணை நின்றனர். எனினும் இந்தக் கடல் எந்த எல்லைக்குள்ளும் அடங்கவில்லை.
இப்போது இந்த ஓயாத தமிழ் அலை ஓய்ந்துவிட்டது; சாயாத தமிழ் மலை சாய்ந்துவிட்டது. ஆயினும் தமிழ் இருக்கும்வரை அவர் பெயர் இருக்கும்; நெஞ்சம் இருக்கும்வரை நினைவிருக்கும்.
This entry was posted on ஏப்ரல் 6, 2007 இல் 6:08 பிப and is filed under Anjali, Author, Biosketch, Books, History, Memoirs, Notable, people, Persons, Professor, Research, Scholar, Teacher, Writer. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, அல்லது trackback from your own site.
bsubra said
Thinnai
தமிழ்நூற்கடல் தி.வே. கோபாலையர் மறைவு (22.01.1926 – 01.04.2007)
மு.இளங்கோவன்