Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Jesus Christ – Christmas, Good Friday & Easter Wishes

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 6, 2007

சிலுவைப்பாதையும் புனிதவெள்ளியும்!

வி. ரூஃபஸ்

இறை மகன் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்புக்கு (ஈஸ்டர் நாள்) முன் உள்ள நாற்பது நாள்கள் தவக்காலமாக, நோன்புக் காலமாக உலக கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப்படுகிறது.

தவக்காலத்தின் கடைசி அங்கமாக உலகெங்குமுள்ள தேவாலயங்களில் புனித வெள்ளியன்று சிலுவைப்பாதை நிகழ்ச்சி மிக முக்கியமானதொன்றாக நடைபெறுகிறது. அக் காலத்தில் நடந்த வரலாற்றின் நினைவாக இன்றும் இயேசு கிறிஸ்துவைத் தியானித்து வழிபாடு செய்கிறார்கள்.

சிலுவைப்பாதை என்பது பதினான்கு தலங்களாகப் பிரிக்கப்படும். இறைமகனை சிலுவையில் அறையும்படி பிலாத்து என்கின்ற அரசன் தீர்ப்பளிக்கிற நிகழ்வு முதலாம் தலமாகவும், இறுதியில் அவர் கல்லறையில் அடக்கம் செய்யப்படுவது பதினான்காம் தலமாகவும் கொள்ளப்படுகிறது. அதன்படி…

தலம் 1 : பிலாத்து இயேசுவுக்கு மரண தண்டனை அளித்தது.

தலம் 2 : இயேசு தன் தோளில் சிலுவை சுமந்தது.

தலம் 3 : இயேசு முதன்முறையாக கீழே விழுந்தது.

தலம் 4 : அன்னை மரியாளும், இயேசுவும் சந்தித்தது.

தலம் 5 : சிமியோன் இயேசுவிற்கு உதவிக்கரம் நீட்டியது.

தலம் 6 : வெரோனிக்காள் இறை மகனின் ரத்தம் தோய்ந்த முகத்தைத் துடைத்தது.

தலம் 7 : இயேசு இரண்டாம் முறையாகக் குப்புற விழுந்தது.

தலம் 8 : கல்வாரிப் பயணத்தில் பங்கேற்கும் பெண்கள்.

தலம் 9 : மூன்றாம் முறையாக இயேசு குப்புற விழுவது.

தலம் 10 : இயேசுவின் ஆடைகள் களையப்படுதல்.

தலம் 11 : இயேசுவை சிலுவையில் அறைதல்.

தலம் 12 : இறைமகன் உயிர் பிரிந்தது.

தலம் 13 : இறந்த மகனை தாய் மரியாள் மடியில் கிடத்தியது.

தலம் 14 : கல்லறையில் இயேசு அடக்கம் செய்யப்படுதல்.

மேற்கண்ட தலங்களில் நம் வாழ்க்கைக்குப் பாடம் கற்றுக் கொடுக்கிற தலம் எண் ஐந்து. அதை நம் வாழ்க்கையில் பின்பற்றினால் நம் வாழ்வு ஒளிரும்.

அத்தலத்தைப் பற்றி புனித விவிலியத்தில் காணுகின்றபோது நம் பாவங்களுக்காக இறைமகன் இயேசு தாமே சிலுவையைச் சுமந்துகொண்டு, கரடு முரடான பாதையில் கல்லும் முள்ளும் கால்களில் தைக்க “மண்டையோடு’ (எபிரேய மொழியில் கொல்கொதா) என்னுமிடத்திற்குச் சிலுவையைச் சுமந்து செல்கிறார்.

“அப்போது அவரின் சிலுவையைச் சுமக்க ஒரு புண்ணியவான் வருகிறார். சீரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவர், வயல்வெளிகளில் வந்து கொண்டிருந்தார். படைவீரர்கள் அவரைப் பிடித்து, அவர் மேல் இயேசுவின் சிலுவையைச் சுமந்து கொண்டு போகச் செய்தார்கள்.’ (லூக்கா-23:26)

அவ்வாறு இயேசுவின் பாடுகளில் பங்கேற்கும் பேறு, முதன்முதலில் சீமோனுக்குத்தான் கிடைத்தது.

மேற்கண்ட நிகழ்ச்சியின் வாயிலாகக் கற்றுக் கொள்ளும் பாடம் என்னவெனில் பிறர் துன்ப, துயரங்களில் நாமும் பங்கேற்க வேண்டும் என்பதைத்தான்.

இதே கருத்தை புனித விவிலியத்தில் எசாயா எனும் பகுதியில், “கொடுமைத்தளைகளை அவிழ்ப்பதும், நுகத்தின் பிணையல்களை அறுப்பதும், ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புவதும், பசித்தோருக்கு உணவைப் பகிர்ந்து கொடுப்பதும், தங்க இடமில்லாத வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர் உடுக்க உடை கொடுப்பதும், உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக் கொள்ளாதிருப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு! அப்போது உன் ஒளி விடியல் போல் எழும்; விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும். உன் நேர்மை உனக்கு முன் செல்லும்; ஆண்டவரின் மாட்சி பின்சென்று காக்கும்’ (எசாயா 58: 6-8) எனக் காணலாம்.

அதாவது நம்மிடமுள்ள ஆணவம், தீண்டாமை, வீண் பெருமை, கொத்தடிமைத்தனம், ஏழை-பணக்காரன் என்ற பாகுபாடு, ஆண்-பெண் என்ற பேதம் போன்ற கட்டுகளை அறுத்து எறிந்துவிட வேண்டும்.

ஆம்! நம் பெற்றோர், சகோதர-சகோதரிகள், உறவினர்கள் மற்றும் அண்டை அயலார்களின் துன்ப-துயரங்களில், அவர்கள் படும் வேதனைகளில் நாமும் பங்கேற்று அன்பின் ஆழத்தைப் பதிய வைக்க வேண்டும்.

இயேசு கிறிஸ்து நம்மில் மாறாத அன்பு வைத்ததால்தான் நம் பாவங்களுக்காக பாவச்சிலுவையைச் சுமந்தார்; கல்வாரி மலையில் நடந்தார்; நமக்காக இறந்தார்; நமக்காக உயிர்த்தார் என்பதை நம் உள்ளத்தில் நிறுத்தி அவரின் வார்த்தைகளின்படி நாம் நம் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக் கொள்ள சித்தமானால் புனித வெள்ளியும், உயிர்ப்புப் பெருவிழாவும் உண்மையுள்ளதாகவும், அர்த்தமுள்ளதாகவும் அமையும்.

—————————————————————————————————————–
மகிழ்வைத் தேடி…!

சகோதரி ரோசரி

நான்கு நற்செய்தியாளர்களில் மத்தேயுவும் லூக்காவும் மட்டுமே இயேசுவின் பிறப்பு பற்றிய செய்தியை நமக்கு அளிக்கின்றனர்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் இயேசுவின் பிறப்பு பற்றிய மத்தேயுவின் செய்தி இனிப்பும் கசப்பும் கொண்டது. இதற்கு மாறாக லூக்காவின் செய்தி இனிப்பு மட்டுமே.

மத்தேயுவில் காணப்படும் இயேசுவின் பிறப்பு பற்றிய முன்னறிவிப்பு செய்தி பல அம்சங்களைக் கொண்டுள்ளது. வானதூதர் கனவின் மூலமாக அறிவிக்கும் எழுத்து முறையையும், பிறப்பு பற்றி வானதூதர் தோன்றி அறிவிக்கும் எழுத்து முறையையும் தன்னகத்தே கொண்டுள்ளதைக் காணலாம்.

இவை இரண்டும் பழைய ஏற்பாட்டு நூல்களில் காணப்படும் எழுத்து முறைகள். எடுத்துக்காட்டாக அபிமெலக் (ஆதி.20.1), லாபான் (ஆதி.31.24), யாக்கோபு (ஆதி.31.24) போன்றோர் கனவுகள் மூலம் இறைவனின் செய்தியை அறிகின்றனர். சாம்சன் (நீதி. 13) போன்றோரின் பிறப்பும் வானதூதர்களால் அறிவிக்கப்படுகின்றனர்.

சூசைக்கும் மரியாளுக்கும் மண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் இன்னும் கூடி வாழவில்லை. ஆனால் மரியாளர் கருவுற்றிருப்பது சூசைக்குத் தெரிய வருகிறது. அவருக்கு ஒரே குழப்பம். யூத மரபுப்படி மண ஒப்பந்த முறிவு சீட்டு தந்துவிடலாம். அல்லது தவறு நடந்து விட்டது என ஊர் அறியச் செய்து தண்டனையை வாங்கித் தரலாம். இதில் சூசை, மரியாளை இகழ்ச்சிக்கு உட்படுத்தாமல் ரகசியமாக முறிவுசீட்டு அளிக்கத் திட்டமிட்டார்.

இச்சமயத்தில்தான் வானதூதர் அவருடைய கனவில் தோன்றி “”மரியாளை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம்” என கடவுளின் திட்டத்தை வெளிப்படுத்துகிறார். “”மரியாள் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு நீர் இயேசு என பெயரிடுவீர்” என்றும் கூறுகிறார்.

இயேசு என்ற பெயர் விண்ணகத்தில் இருந்து வந்தாலும் அதைச் சூட்டுவது என்னவோ சூசையே! தந்தை என்ற பிணைப்பை இது ஏற்படுத்துகிறது. இயேசுவின் தந்தையாக இருந்து அவர் ஆற்ற வேண்டிய கடமைகளையும் உணர்த்துகின்றது எனலாம்.

மேலும் பழைய ஆகமம் கூறும் முன்னறிவிப்பு இயேசுவின் பிறப்பில் நிறைவேறுகிறது என சுட்டிக்காட்டப்படுவதையும் பார்க்கிறோம். மொத்தத்தில் சூசையின் கனவு ஓர் இறையியல் பொக்கிஷம். இயேசு யார்? எங்கிருந்து வந்தவர்? என்ன செய்யப் போகிறார்? போன்ற கேள்விகளுக்கு விடையாக இருப்பதுதான் சூசை கண்ட கனவு. மேலும் இயேசு ஏதோ ஒரு வரலாற்று நபர் மட்டும் அல்ல; என்றும் நம்மோடு வாழும் கடவுள் (இம்மானுவேல்). இந்த அறிவிப்பு நூலின் இறுதியிலும் (28.16-20) தொடர்வது மிகவும் குறிப்பிடத்தக்கது. இதை உணர்கின்றவர்களுக்கு சூசையின் கனவு ஆயிரம் அர்த்தங்களைச் சொல்லும்.

கிறிஸ்துவின் பிறப்பு அகில உலகிற்கும் பெருமகிழ்ச்சியூட்டும் நற்செய்தியாகவே அறிவிக்கப்படுகிறது. (லூக்கா 2.10)

கிறிஸ்மஸ் பெருவிழா, உலக மீட்பராக இயேசு பிறந்ததை மையப்படுத்தும் விழா.

அன்பின் உன்னத அடையாளமாய் உருவெடுத்த இறைமகன் இயேசு உலகில் பிறந்த நிகழ்வை மகிழ்வுடன் நினைவுகூறும் விழா.

வாழ்வின் சுமைகளை மறந்து, அச்சுறுத்தும் கவலைகளைக் களைந்து, சலித்துப்போன வாழ்க்கைச் சூழலைத் தவிர்த்து, ஆண்டவனின் பிறந்த நாளை அர்த்தமுள்ளதாக வாழ அழைக்கும் அன்பின் பெருவிழா.

எந்த திருவிழாவானாலும் அதற்கொரு கொண்டாட்டம் இருக்கும். அக்கொண்டாட்டத்தில் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கும்.

கிறிஸ்து பிறப்புவிழா மகிழ்வின் திருவிழா. இந்த மீட்பரின் வருகையால் “மகிழ்ச்சி’ எல்லோருக்கும் பொதுவாக்கப்படுகிறது. இயற்கை மகிழ்கிறது. பாலை நிலமும், பாழ்வெளியும் அகமகிழ்கிறது. மக்கள் மகிழ்கின்றனர். தள்ளாடும் கால்களும் தளர்ந்த கரங்களும் திடப்படுத்தப்படுகின்றன.

கிறிஸ்துவின் வருகை “”மீட்பை” நம் அனைவருக்கும் உரிமைச் சொத்தாக நிலைநிறுத்தியது. மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியைக் கொணர்ந்தது. மகிழ்ச்சி, கிறிஸ்தவர்களின் அடையாளம். ஏனெனில் அவர்கள் கிறிஸ்துவில் மீட்பைக் கண்டு உணர்ந்தவர்கள்.

கிறிஸ்து பிறப்பின் திருப்பிரசன்னம் மகிழ்ச்சியை விதைத்தது. கிறிஸ்துவின் மாட்சிமைக்குரிய செயல்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்தின.

இத்தகைய மகிழ்ச்சியை, மாபெரும் நற்செய்தியை, அதாவது இம்மானுவேல் – “”கடவுள் நம்மோடு”, நம் மத்தியில், நம்மில் ஒருவராக மனிதனாக வந்து பிறந்துள்ளதைக் கொண்டாடுவதில்தான் எத்தனை எத்தனை அர்த்தங்கள்!

புத்தாடை அணிந்து, ஆலயம் சென்று திருவழிபாட்டில் பங்கேற்று, இறைவனின் ஆசி பெற்று, இனிப்புகள் வழங்கி, நட்புறவை வளர்த்து, உறவுகளைப் பலப்படுத்தி, இறை – மனித உறவுக்குச் சான்று பகர்வதில்தான் எத்தனை மகிழ்ச்சி! இது மனிதநேயத்தை வளப்படுத்தும் அன்பின் விழா.

பாலன் இயேசுவுக்கு வண்ணக்குடில் அமைப்பது, வீடுகளில் விதவிதமான நட்சத்திர விளக்குகள், வீதிகளில் அழகான தோரணங்கள்… இவையாவும் வெளி அடையாளங்கள் மட்டுமே.

அநேக நேரங்களில் மகிழ்ச்சியின் அர்த்தங்களைத் தொலைத்துவிட்டு மகிழ்ச்சியைத் தேடுவதாக எண்ணிக் கொண்டு, இன்பத்தை, மாயையைத் தேடி ஓடிக்கொண்டிருக்கிறது இன்றைய சமுதாயம்.

“”நான் மகிழ்ச்சியை அடைய வேண்டுமென நெடுங்காலம் பாடுபட்டேன்.

இந்த மகிழ்ச்சியை எங்கோ தொலைவில் தேடினேன்.

மகிழ்ச்சி என்பது ஒரு நதியின் நடுவில் இருக்கும் தீவு என்றிருந்தேன்.

அதுவே நதியாக இருந்திருக்கலாம்.

மகிழ்ச்சி என்பது பாதையின் முடிவில் இருக்கும் ஒரு சத்திரத்தின் பெயர் என்றிருந்தேன்.

ஆனால் அதுவே பாதையாக இருந்திருக்கலாம்.

மகிழ்ச்சி என்பது நாளை என்று நினைத்திருந்தேன்.

அதுவோ, இப்போதே, இங்கேயே இருக்கிறது.

நானோ அதை எங்கெங்கோ தேடினேன்” என்கிறார் மைக்கில் ஆடம்.

இறைவன் தன்னையே மனித குலத்தோடு பகிர்ந்து கொண்டதுபோல், நம்மையும், நம்மிடமுள்ளவைகளையும், இல்லாதவர்களோடு, ஏழை, எளியவரோடு பகிர்ந்து கொள்வதில்தான் நம் கொண்டாட்டங்களின் உண்மை அர்த்தத்தை, பலனை அனுபவிக்க முடியும்.

கிறிஸ்து பிறந்த அன்று வானகத் தூதர்கள் பாடிய “”விண்ணகத்தில் இறைவனுக்கு மகிமை, மண்ணகத்தில் மாந்தருக்கு அமைதி” என்ற பாடலின் வாழ்த்தொலி நம் இல்லங்களிலும், உள்ளங்களிலும் எதிரொலிக்கட்டும்.

இறைவன் தரும் மகிழ்ச்சியைப் பிறரோடு பகிர்ந்து வாழ்வதில் நிறைவைக் காண்போம். நிலை வாழ்வை நோக்கிப் பயணிப்போம்.

—————————————————————————————————————–

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: