Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Sri Lanka: Attack on fishermen serious issue – No concerns when the fishermen from Tamil Nadu died

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 4, 2007

கண்ணீரில் தத்தளிக்கும் தமிழக மீனவர்கள்

த.நா. மதிவாணன்

“”ஆழ்கடல் சென்று மீன்பிடிப்போம்; நாளும் உழைத்து நாமும் முன்னேறி, நமது நாடும் வளம்பெற பாடுபடுவோம்” எனத் தன் ஆசைக் கணவருக்கு அன்புமொழி கூறி கடலுக்கு மீன்பிடிக்க இன்முகத்துடன் வழியனுப்புவது வழக்கமான காட்சி.

ஆனால் இன்று…! “”எப்பம்மா அப்பா வருவாருன்னு” கேள்வி கேட்டுத் துளைக்கும் தன் மூன்று பிள்ளைகளுக்கும் கண்ணீரை மட்டும் பதிலாகச் சொல்லி இனித் தன் வாழ்வு செல்லும் வழியறியாது தவிக்கும் தமிழக மீனவப் பெண்ணின் வேதனை சொல்லி மாளாது.

முருங்கைவாடி கிராமத்தில் வசித்து வந்த ராமு என்ற மீனவர் இலங்கைக் கடற்படையால் சுடப்பட்டு மாண்டு போக அவரது மனைவி முத்துலட்சுமி, நான்கு குழந்தைகளுடன் ஓலைக்குடிசையில் ஒட்டிய வயிறுடன் எதிர்காலத்தை எண்ணிக் கலங்கி காலம்கழிக்கும் வேதனைச் சம்பவம்.

நாகையில் அக்கரைப்பேட்டை மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு. இது ஏதோ நிகழ்வு அல்ல. நித்தம் நடக்கும் கண்டனத்துக்குரிய சம்பவங்கள்.

இதுவரை சுமார் 112 மீனவர்கள் இலங்கை ராணுவத்தினரால் சுடப்பட்டு மாண்டு போயுள்ளனர். பலர் காயமுற்றுள்ளனர். இத்தகைய சூழலில் எப்படி மகிழ்வோடு மீன்பிடிக்கச் செல்ல இயலும்? எப்படி மீனவப் பெண்கள் தங்கள் கணவன்மார்களை தைரியமாக வழியனுப்பிட முடியும்?

வான் பொய்த்துப் போனாலும், வருகின்ற நீர் வராது போனாலும், விவசாயம் குறைந்து போனாலும், வற்றாது வளம் கொழிக்கும் கடல் வளம் கண்டு நாட்டின் ஏற்றத்திற்கு கடலை உழுபவன்தான் மீனவன்.

“”மீனவர்களின் உழைப்பு சிந்திடும் வியர்வைத் துளிகளால் கடல் நீர் உப்பானது” இது கவிதையல்ல. மீனவனின் உழைப்பின் சிறப்பு.

இத்தகு வரலாற்றுச் சிறப்புக்குரிய மீனவன் நாட்டின் பொருளாதார ஏற்றத்திற்கும் அன்னியச் செலாவணியின் அதிக வருவாய்க்கும் ஓய்வின்றி நித்தமும் உழைக்கும் உழைப்பாளி.

இத்தாலி, நார்வே, சுவீடன், டென்மார்க் போன்ற நாடுகளில் உள்ள மீனவர்கள் செல்வச் செழிப்பில் மேலோங்கி உள்ளனர்.

ஆனால் நம் நாட்டில் மீனவர்களின் நிலை என்ன? அரை வயிற்றுக் கஞ்சிக்கும் அவதி! கடலுக்குச் சென்றால் மீண்டும் கரைக்குத் திரும்புவோமா என்ற அச்சம்.

ரூ. 2500 கோடிக்கு மேல் அன்னியச் செலாவணியை ஈட்டித் தருகிற மீனவர்களின் நலன் காக்கப்பட வேண்டும். கரையில் வீழ்ந்த மீன் தத்தளிப்பதுபோல் கண்ணீரில் தத்தளிக்கின்றனர் மீனவர்கள்.

தமிழகத்தில் உள்ள கடலோர மீனவ கிராமங்களில் வசிக்கும் சுமார் 65 லட்சம் மீனவர்களின் வாழ்வாதாரம் மீன்பிடித் தொழில் மட்டுமே.

தமிழக மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்கையில் அவ்வப்போது இலங்கை ராணுவத்தால் தாக்கப்படுவது சாதாரண நிகழ்வாகிப் போய்விட்டது வேதனைக்குரியது.

இலங்கைக் கடற்படையினரைக் கண்டித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதும் பின்னர் அதைப்பற்றி மறந்துபோவதும் இயல்பாகிவிட்டது.

பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பங்களுக்கு நிவாரணம் தருவதால் மட்டும் அவர்களின் இன்னல்கள் தீரப் போவதில்லை. மீனவர்கள் இனியும் பாதிக்காதவண்ணம் காக்கப்பட வேண்டியது அரசின் பொறுப்பு.

படிப்பறிவில்லா பாட்டாளி மீனவர்கள் உழைப்பைத் தவிர வேறொன்றுமறியா ஏழை மக்கள். இவர்கள் கடல் எல்லையைத் தாண்டி அன்னிய நாட்டுக்குள் செல்வதால் சுடப்பட்டார்கள் என்பது ஏற்புடையதா? நடுக்கடலில் கண்ணுக்குத் தெரிகிற வகையில் எல்லைக்கோடு ஏதுமுள்ளதா? வழி தவறி வந்தாலும் இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களை எச்சரித்து அனுப்பிவிட வேண்டும் அல்லவா? அல்லது அவர்களை எச்சரித்து இந்திய கடலோரக் காவல்படையினரிடம் ஒப்படைக்கலாம் அல்லவா?

இவ்வாறு மனிதாபிமான முறையில் செயல்படுவதை விட்டுவிட்டு, கடல் எல்லையை அறியாமல் தாண்டி வரும் தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்ல எந்தச் சட்டமும் அனுமதிக்கவில்லை. இதை இலங்கைக் கடற்படையினருக்கு உணர்த்த வேண்டியது இந்திய அரசின் முக்கியக் கடமை.

இந்திய அரசு கடலோரக் காவல் படைக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் பணத்தைச் செலவழிக்கிறது. இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் கொடூர நிகழ்வுகளின்போது நமது கடலோரக் காவல் படை எங்கே போனது?

பன்முறை இந்நிகழ்வுகள் நடந்தேறிய போதும், ஒருமுறைகூட நம் கடலோரக் காவல்படையினர் கண்களில் இச்சம்பவங்கள் படாதது வியப்பூட்டுகிறது. கடலோர மீனவர்களைக் காப்பாற்ற வேண்டிய கடலோரக் காவல்படை தங்கள் கடமையைச் செய்யாமல் எங்கே போனது?

கிழக்கே வங்கக் கடல், மேற்கே அரபிக் கடல், தெற்கே இந்துமாப் பெருங்கடல் என முக்கடலாலும் நமது நாடு சூழப்பட்டுள்ளது. ஓர் உயரிய குன்றின் மீது நின்று பார்த்தால் மூன்று கடல்களும் தனித்தனியாகத் தெரிகிறதா? ஏதேனும் தனித்தனி எல்லைக்கோடுகள்தான் உள்ளனவா? இவையாவும் நம் மூதாதையர்கள் வைத்த பெயர்கள். இதுதான் கடல்எல்லை என்பதை திட்டவட்டமாக மீனவர்கள் அறிந்துகொள்ள வழியேதும் செய்யப்பட்டதா? இல்லையென்றுதான் கூற வேண்டும். எனவே, மனித உள்ளங்கள் எண்ணிப் பார்க்க வேண்டிய மனிதாபிமான விஷயம் இது.

பல நூற்றுக்கணக்கான இந்திய மீனவர்கள் இறந்தும் உலகில் மிகச் சிறப்பிடம் பெற்ற நமது இந்தியக் கடற்படை ஒருமுறைகூட இலங்கைக் கடற்படையினருக்கு எச்சரிக்கை விடுக்காதது மீனவர்கள் நெஞ்சில் நீங்காத வேதனையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லையா?

ஒரு ராணுவ அமைப்பு ஏற்படுத்தப்பட்டதன் நோக்கமே அந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதற்காகத்தான்.

அதைவிடுத்து இலங்கை நட்புநாடு எனக் கூறிக்கொண்டு இந்திய அரசு தமிழக மீனவர்கள் விஷயத்தில் அலட்சியமாக நடந்துகொண்டு வருகிறது.

இலங்கைக் கடற்படை மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இந்த அவலநிலைக்கு ஓரளவு முடிவு ஏற்பட்டிருக்கும்.

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொல்லப்படும் சம்பவம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுவிடம் இந்தியா புகார் தெரிவிக்க வேண்டும். இலங்கை அரசிடமிருந்து இழப்பீடு பெற்று மீனவர்களுக்குத் தரவேண்டும்

நித்தம் கடல் காற்றை மூச்சாய் வாங்கி, உப்பு நீரால் வாழ்க்கை நடத்தி, நாட்டின் பொருளாதார வளத்தை மேம்படுத்த அயராது உழைத்துவரும் மீனவர்களின் வாழ்வு விடிவும் இன்றி முடிவும் இன்றி வினாக்குறியாகவே இருக்க வேண்டுமா? அவர்களின் துயரத்துக்கு விடிவுகாலம் ஏற்படுவது எப்போது?

(கட்டுரையாளர்: நிர்வாகத் தலைவர், தமிழக மீனவர் இளைஞர் அணி).


மீனவர்களை மீட்க மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக கூறுகிறது

தமிழக மீனவர்களுக்காக திமுக நடத்திய பேரணி-ஆவணப் படம்
தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக திமுக பேரணி-ஆவணப்படம்

தமிழகத்திலிருந்து காணாமல் போன இந்த மீனவர்களை மீட்க இந்தியாவின் மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகத்தை ஆளும் திமுக கூறியுள்ளது.

இந்தச் சம்பவம் இந்திய எல்லையைக் கடந்து சர்வதேச கடற்பரப்பில் இடம்பெற்றதால் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சட்டபூர்வமான அதிகாரம் கிடையாது என திமுகவின் அதிகாரபூர்வ பேச்சாளர் இளங்கோவன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

மத்திய அரசை வற்புறுத்தி உரிய நடவடிக்கை எடுக்கக் கோருவதுதான் தமிழக அரசு தற்போதைய நிலையில் செய்யக் கூடியது எனவும் அவர் தெரிவித்தார்.

இந்திய அரசால் விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த மீனவர்கள் தற்போது இலங்கையில் இருப்பதால், இந்திய அரசு இலங்கை அரசுடன் பேசி அவர்களை மீட்க ஆவன செய்யுமாறு இந்திய அரசு கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.


ஜோர்டான் நாட்டு கப்பலில் இருந்த சரக்குகளை விடுதலைப் புலிகள் அப்புறப்படுத்திவிட்டனர் என அந்த கப்பல் நிறுவனம் கூறுகிறது

கப்பலிருந்து சரக்குகள் அகற்றப்படுவதை காட்டும் படம்
சரக்குகள் அகற்றப்படுவதை காட்டும் படம்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இலங்கையின் வடக்கே முல்லைத்தீவுப் பகுதியில் வைத்து ஜோர்டான் நாட்டு சரக்கு கப்பலான ஃபாரா கால நிலை கோளாறு காரணமாக சிக்கிக் கொண்டது.

ஜோர்டான் நாட்டுக் கப்பலில் இருந்த சரக்குகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு விட்டதாக அந்தச் சரக்குக் கப்பலுக்கு உரிமையாளரான சலாம் சர்வதேச போக்குவரத்து மற்றும் வர்த்தக நிறுவனத்தின் தலைவர் சையத் சுலைமான் கூறியுள்ளார்.
அந்தக் கப்பலில் இருந்து எடுத்துச் செல்லக் கூடிய அரிசி, விளக்குகள், ஜெனரேட்டர்கள் போன்றவை எடுத்துச் செல்லப்பட்டு விட்டன என்றும் கப்பல் சுத்தமாக துடைத்தெடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இச்சம்பவத்திற்கு விடுதலைப் புலிகளைத் தவிர வேறு யார் மீதும் பழி போட தனக்குத் தெரியவில்லை எனவும் அவர் கூறுகிறார்.

கப்பலை மீட்பதற்காக ஜோர்டான் வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலமாக தொடர்பு கொண்டதாகவும், காப்புறுதி நிறுவனங்கள், மதிப்பீடு செய்பவர்கள் போன்றோரை பாதுகாப்பாக அங்கு அனுப்ப வழியினை ஏற்படுத்திக் கொடுக்க இலங்கை அதிகாரிகள் முயற்சிகள் எடுத்த போதிலும், அது நடைபெற இயலாமல் போயிற்று என்றும் தங்களுடைய முயற்சிகள் தோல்வியடைந்தன எனவும் சையது சுலைமான் தெரிவித்தார்.

தமது கப்பலை மீட்பது தொடர்பாக விடுதலைப் புலிகளுடன் நேரடியாக தொடர்புகளை ஏற்படுத்த தங்களுக்கு அனுமதி, அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்றும், இந்தச் சம்பவம் ஒரு கடற்கொள்ளை என்பது தனது கருத்து மட்டுமல்ல, நிபுணர்களின் கருத்தாகவும் உள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.


4 பதில்கள் -க்கு “Sri Lanka: Attack on fishermen serious issue – No concerns when the fishermen from Tamil Nadu died”

 1. bsubra said

  தேவை உறுதியும் தெளிவும்

  இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் அடுத்த சில வாரங்களில் தமிழர்களுக்கும் இதர சிறுபான்மையினருக்கும் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வழி செய்யப்படும் என்று அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபட்சய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் உறுதி அளித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

  “சார்க்’ உச்சி மாநாட்டில் பங்கேற்க தில்லிக்கு வந்திருந்த ராஜபட்சய, மன்மோகன் சிங்கை புதன்கிழமை சந்தித்து மேற்கண்ட உறுதியை அளித்துள்ளதாகத் தெரிகிறது.

  அப்போது, “இலங்கை இனப் பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காண முடியாது; அரசும் விடுதலைப் புலிகளும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும்; அதிகாரப் பகிர்வு குறித்து ஆராய அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் பரிந்துரைகள் மீது குறிப்பிட்ட காலவரம்புக்குள் நடவடிக்கை எடுக்கவேண்டும். அதன் மூலம், இலங்கையின் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் இறையாண்மைக்கு உட்பட்டு அனைத்துத் தரப்பினரும் ஏற்கக்கூடிய தீர்வை எட்டுவதற்கு முயற்சி எடுக்க வேண்டும்’ என்று இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணப் முகர்ஜி வலியுறுத்தினார்.

  இத்தகைய சூழ்நிலையில், மகிந்த ராஜபட்சய அளித்துள்ள உறுதி பரிபூரணமாகச் செயல் வடிவம் பெற்றாக வேண்டும். இலங்கை அரசு சமாதான முயற்சிகளை மேற்கொண்டால் போதிய உதவிகளைச் செய்யத் தயாராக இருப்பதாகவும் இந்தியா உறுதி அளித்துள்ளது கவனிக்கத் தக்கது.

  கொழும்பு விமானப்படை தளத்தின் மீது விடுதலைப் புலிகள் விமானத் தாக்குதலை முதல் முறையாக நடத்தியுள்ளது கவலையை அதிகரிக்கச் செய்துள்ளது.

  இத்தகைய கவலைகள், அச்சத்தைப் போக்க அக்கறை செலுத்த வேண்டியதில் இரு தரப்பினருக்கும் சமமான பங்கு உள்ளது.

  இனப் பிரச்சினையைத் தீர்க்க உதவும் வகையில் இந்தியா ஒரு புதிய யோசனையைச் சில காலத்துக்கு முன் தெரிவித்திருந்தது. இந்தியாவில் மாநிலங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் விதத்திலான சர்க்காரியா கமிஷன் அறிக்கையை அளிக்க முன் வருவதாகவும் அறிவித்திருந்தது. ஆனால், அதன் மீது இலங்கை அரசு போதிய ஈடுபாடு காட்டவில்லை.

  இதற்கிடையில் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலை தரும் இன்னொரு தகவல். இத்தகைய கொடூர செயல்களில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கோரியுள்ளதை இலங்கை அரசு கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். அப்போதுதான் நம்பிக்கை துளிர் விடும்.

  விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே சமாதானப் பேச்சுக்கு வழிவகுப்பதில் நார்வே நாடு முக்கியப் பங்காற்றி வருகிறது. அதன் பணி மீண்டும் தொடர வேண்டும்.

  பற்றி எரிகிற தீயை அணைக்க நீரைக் கொண்டு வருவது போல், இப்போதைய நிலையில் இலங்கை அரசும் போராளிகளும் செய்ய வேண்டியவை இவை:

  இலங்கை அரசு: 1) ராணுவ கெடுபிடியைக் கைவிட வேண்டும். 2) தமிழ் மக்கள் தங்கு தடையின்றி அந்நாட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று வர ஏற்பாடு செய்ய வேண்டும். 3) சமாதானப் பேச்சுவார்த்தைக்குப் போராளிகளை வெளிப்படையாக அழைக்க வேண்டும். 4) இந்திய மீனவர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

  போராளிகள்: 1) அச்சுறுத்தல் போக்கைக் கைவிட வேண்டும். 2) சமாதானத் தீர்வில் முழுமையான நம்பிக்கையை வெளிப்படுத்த வேண்டும். 3) நார்வே முன் முயற்சியில் சமாதானப் பேச்சுக்கு உடனே தயாராக வேண்டும். 4) தமிழக மீனவர்கள், இலங்கையின் இதர மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

  தற்போது இரு தரப்பினருக்கும் தேவை உறுதியும் தெளிவும்.

 2. bsubra said

  தமிழக மீனவர்களுக்கு தற்காப்பு ஆயுதங்கள் வழங்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

  சென்னை, ஏப். 10: தமிழக மீனவர்களுக்கு தற்காப்பு ஆயுதங்கள் வழங்கக் கோரி, விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர் சென்னையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். அமைப்பின் பொதுச் செயலாளர் திருமாவளவன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, நிருபர்களிடம் திருமாவளவன் பேசியது:

  தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். தமிழக மீனவர்களைக் காப்பதில் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மீனவர்கள் பலர் உயிரிழந்தும், மத்திய அரசு அமைதி காத்து வருகிறது.

  தமிழக மீனவர்களுக்கு தற்காப்பு ஆயுதங்கள் வழங்க வேண்டும். இனிமேலாவது மத்திய அரசு இப்பிரச்சினையில் தலையிட்டு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், தமிழக மீனவர்களுக்காக பொது அமைப்புகளுடன் சேர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் போராட்டம் நடத்தும் என்றார் திருமாவளவன்.

  ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 3. bsubra said

  தமிழகத்துக்கு அவப்பெயர் ஏற்படுவதைத் தடுக்கவே மீனவர் கொலையில் விடுதலைப்புலிகளின் பங்கு குறித்த தகவலைத் தான் வெளியிட்டதாகக் கூறுகிறார் தமிழக முதல்வர்.

  தமிழகத்துக்கு அவப்பெயர் ஏற்பட்டு விடக்கூடாது என்ற காரணத்தினாலேயே, கடந்த மார்ச் மாதம் 29 திகதி கன்னியாகுமரி மீனவர்கள் கொலை செய்யப்பட்டதற்கு விடுதலைப்புலிகள்தான் காரணம் என்று தான் பகிரங்கப்படுத்தியதாக தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

  இந்த மீனவர்கள் கொலைச் சம்பவமும், கொல்லத்தில் இருந்து சென்ற மீனவர்கள் காணாமல்போன சம்பவமும் இன்று தமிழக சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டன.

  இந்த விவாதத்துக்குப் பதிலளிக்கும் போதுதான் கருணாநிதி இவ்வாறு பேசினார்.

  இந்த கடத்தப்பட்ட மீனவர்கள் குறித்து தமிழக அரசுக்குக் கிடைத்த அனைத்துத் தகவல்களையும் தான், இந்திய பிரதமருக்கு அறிவித்ததோடு, இந்த மீனவர்களை இலங்கையின் உள்ள இந்திய தூதரகத்தின் ஊடாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் கேட்டிருப்பதாகவும் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

  இந்த மீனவர்கள் கடத்தப்பட்ட விடயம் குறித்து தமிழக காவல் துறையினர் நடத்திய புலன் விசாரணைகளில் சில உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன என்று கூறியுள்ள, இந்திய வெளியுறவு அமைச்சின் சார்பில் பேசவல்ல அதிகாரியான நவ்தேஜ் சர்ணா அவர்கள், இந்தப் புலனாய்வும், அது குறித்த சட்ட ரீதியிலான நடவடிக்கைகளுக்குப் பின்னர், தாம் அடுத்த கட்டம் குறித்து முடிவு எடுப்போம் என்றும் கூறினார்.

  அதேவேளை தமிழக காவல்துறையினரால் விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் என்று கைது செய்யப்பட்டுள்ளவர்களில், ஒருவர், இந்த மீனவர்களை, விடுதலைப்புலிகள்தான் கடத்தினார்கள் என்று குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்கும் வீடியோ பிரதிகளை இந்திய ஊடகங்கள் இன்று வெளியிட்டுள்ளன.

  இதற்கிடையே கடத்தப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிப்பதற்கான முயற்சிகள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள இந்தியாவின் மத்திய புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குனரான கார்த்திகேயன் அவர்கள், இந்திய குடிமக்களை எவர் கடத்தினாலும், அவர்கள் மீது சாம,பேத, தான மற்றும் தண்ட முறைகளைப் பயன்படுத்தி இந்தியக் குடிமக்களை மீட்பது இந்திய அரசின் கடமை என்று தெரிவித்துள்ளார்.

 4. bsubra said

  காணாமல்போன இந்திய மீனவர்களில் 11 பேர் ராமேஸ்வரம் திரும்பினர்

  இந்தியாவில் இருந்து கடந்த மார்ச் மாதம கடலில் மீன் பிடிக்கச்சென்று காணாமல் போய், பின்னர் விடுதலைப்புலிகளால் கடத்தப்பட்டதாக தமிழக பொலிஸார் கூறிய, இந்திய மீனவர்கள் 12 பேரில் 11 பேர் இன்று ராமேஸ்வரத்தில் வந்திறங்கினார்கள்.

  முதலில் ஐந்து மீனவர்கள் வந்ததாகத் தமிழோசைக்கு தகவல் தெரிவித்த ராமநாதபுரம் காவல் சரக துணைக்காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, இவர்கள் அனைவரையும் சென்னைக்கு விசாரணைக்கு அனுப்பி இருப்பதாகத் தெரிவித்தார்.

  இந்தத் தகவலை உறுதிப்படுத்திய தமிழகக் காவல் துறைத் தலைவர் முகர்ஜி, மேலும் ஆறு பேரும் பத்திரமாக வந்து சேர்ந்துவிட்டதாக இந்த ஐந்து பேர் கூறியதாகவும் தெரிவித்தார்.

  ஆயினும் இவர்களுடன் சென்ற இன்னுமொரு கேரள மீனவரின் கதி குறித்து இன்னமும் தெரியவில்லை.

  இந்த இந்திய மீனவர்கள் விடுதலைப்புலிகளால் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக, தமிழக பொலிஸார் சமீபத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  தாங்கள் இந்த மீனவர்களை கடத்திச்சென்று தடுத்து வைத்திருப்பதாகக் கூறப்படுவதை, விடுதலைப்புலிகள் மறுத்திருந்தனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: