Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for மார்ச் 29th, 2007

NYU professor Srinivasa SR Varadhan awarded 2007 Abel Prize in mathematics

Posted by Snapjudge மேல் மார்ச் 29, 2007

ஆபல் பரிசு

“கணிதத்துக்கான நோபல் பரிசு’ என்று மதிப்புடன் குறிப்பிடப்படும் ஆபல் பரிசு, கணிதத்தில் தனிப்பெரும் சாதனை புரியும் மேதைகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுவதாகும். நோபல் பரிசு போலவே மிக உயர்ந்த பரிசுத் தொகை (ரூ.4.5 கோடி) கொண்டது.

நார்வே நாட்டு கணித மேதை நீல்ஸ் ஹென்ரிக் ஆபலின் நினைவாக, ஆண்டுதோறும் ஆபல் பரிசு வழங்கப்படும் என 2001-ல் நார்வே அரசு அறிவித்தது. 2003-ம் ஆண்டு முதன் முதலில் ஆபல் பரிசு வழங்கப்பட்டது.

நீல்ஸ் ஹென்ரிக் ஆபல் (1802-1829), நமது நாட்டு மேதை ராமானுஜத்தைப் போலவே, மிக இளம் வயதிலேயே கணிதத்தில் பல சாதனைகள் புரிந்தவர். ராமானுஜத்தைப் போலவே மிக இளம் வயதிலேயே காச நோயால் தாக்கப்பட்டு உயிரைப் பறிகொடுத்தவர். அபிலியன் சார்பு, அபிலியன் குலம், அபிலியன் தேற்றம் போன்றவை கணிதத்துக்கு ஆபலின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள்.

கணிதத்துக்கு நோபல் பரிசு வழங்கப்போவதில்லை என்ற தகவல் வெளியானதை அடுத்து, சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னரே “ஆபல் பரிசு’ உருவாக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டது. இரண்டாம் ஆஸ்கர் என்ற மன்னர் அதற்கான நிதியுதவி செய்ய முன்வந்தார். ஆனால் நார்வே மற்றும் சுவீடன் நாடுகளுக்கு இடையிலான உறவில் சிக்கல் ஏற்பட்டதை அடுத்து 1905-ல் ஆபல் பரிசுத் திட்டம் கைவிடப்பட்டது. அதன் பின்னர் நீல்ஸ் ஹென்ரிக் ஆபலின் இருநூறாவது ஆண்டை முன்னிட்டு, நார்வே “ஆபல் பரிசை’ அறிவித்தது. உலகளவில் அங்கீகாரம் பெற்ற 5 கணித மேதைகள் கொண்ட குழு, நார்வே அறிவியல் கழகத்தின் சார்பில் பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்கிறது. 2007-ம் ஆண்டுக்கான ஆபல் பரிசைப் பெற்றவர் சென்னையில் பிறந்த, அமெரிக்க வாழ் கணிதப் பேராசிரியர் ஸ்ரீநிவாசா எஸ் வரதன்.

“ஃபீல்ட்ஸ் மெடல்’ எனும் பரிசும் கூட, கணிதத்துக்கான நோபல் பரிசு எனக் குறிப்பிடப்படுகிறது. ஆனால், அது 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை, 40 வயதுக்கும் குறைவானவர்களுக்கே வழங்கப்படுவதாகும். இதேபோல், சுவீடன் அரச கழகம் 1982 முதல் வழங்கி வரும் “கிராஃபூர்டு பரிசு’, 2004 முதல் வழங்கப்பட்டு வரும் “ஷா பரிசு’ போன்றவையும் கணிதத்துக்கான நோபல் பரிசு என்றே வர்ணிக்கப்படுகின்றன.

Posted in Abel, Award, Chennai, mathematics, Maths, Nobel, Prize, probability | Leave a Comment »

Adoption process in India – Analysis, Backgrounder, Suggestions

Posted by Snapjudge மேல் மார்ச் 29, 2007

தளரட்டும் நிபந்தனைகள்

இந்தியக் குழந்தைகளைத் தத்தெடுப்பதில் வெளிநாட்டவர் பலருக்கு ஆசை உள்ளது. குறிப்பாக, இந்தியக் கலாசாரம், ஆன்மிகம் இவற்றால் கவரப்பட்ட வெளிநாட்டவர், ஓர் இந்தியக் குழந்தையைத் தத்தெடுக்க விரும்புவது இயற்கையே. ஆனால், சிக்கலான சட்டவிதிமுறைகள் காரணமாக வெளிநாட்டவரால் தத்தெடுக்கப்படும் இந்தியக் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

2001-ம் ஆண்டில் 1298 குழந்தைகள் வெளிநாட்டவரால் தத்தெடுக்கப்பட்டனர். 2006-ல் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 853 மட்டுமே! சுனாமியால் சில ஆயிரம் குழந்தைகள் தாய், தந்தையரை இழந்த நிலையில் தத்துகொடுக்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு மாறாக, குறைந்திருக்கிறது!

இந்திய அரசு இதைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு, குழந்தைகளை வெளிநாட்டவர் தத்தெடுக்கும் விதிமுறைகளை எளிமைப்படுத்த ஓர் ஆய்வுக் குழுவை அமைத்துள்ளது.

வெளிநாட்டவர் ஓர் இந்தியக் குழந்தையைத் தத்தெடுக்க விரும்பினால் இரு நாடுகளிலும் அங்கீகாரம் பெற்ற ஓர் அமைப்பின் மூலமாகத்தான் அணுக முடியும். இவ்வாறு அங்கீகாரம் பெற்ற சில நிறுவனங்களும்கூட, வெளிநாட்டவரிடம் அதிகப் பணம் பெற்று குழந்தைகளை விற்ற மோசடிச் சம்பவங்களால் தத்துக்கொடுக்கப்படும் விதிமுறைகள் கடுமையானதாக மாற்றப்பட்டன. அவை நியாயமானவையே. என்றாலும் சில விதிமுறைகள் தளர்த்தப்பட வேண்டியவை. குறிப்பாக, தத்தெடுப்பவரின் வயது வரம்புகள்.

தற்போதுள்ள நிபந்தனையின்படி, தத்தெடுக்க விரும்பும் கணவன் – மனைவி இருவருடைய வயது கூட்டுத்தொகை 90க்குள் இருக்க வேண்டும். ஒருமைப் பெற்றோர் (சிங்கிள் பேரன்ட்) என்றால் 30 முதல் 45 வயது வரை இருக்க வேண்டும் போன்ற வயது வரம்புகள் இக்காலத்திற்கு பொருத்தமற்றவை. பிரேசில் நாட்டில் தத்தெடுக்கப்படும் குழந்தை அல்லது சிறாரின் வயதைவிட தத்தெடுப்பவர் குறைந்தபட்சம் 15 வயது அதிகமானவராக இருக்க வேண்டும் எனும் நிபந்தனை எளிமையானதாக இருக்கிறது.

தத்தெடுக்கப்படும் இந்தியக் குழந்தையின் நலன் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் நிபந்தனைகளை அமைத்துக் கொண்டால் போதுமானது.

தத்தெடுக்கும் நேரத்தில் ஒரு தம்பதி வசதியுடன் வாழவும் பின்பு அந்த வசதியை பிறகு இழக்கவும் நேரிடலாம். அதேபோன்று, தத்தெடுப்பதற்கு முன்பாக “குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்திருந்த தம்பதி’, தத்தெடுத்த சில மாதங்களில் விவாகரத்தும் பெறலாம். எந்த நிலையிலும் தத்துக்கொடுக்கப்பட்ட குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படக்கூடாது என்பதை உறுதி செய்வதாக நிபந்தனைகள் அமைந்தால் போதும்.

தத்தெடுக்கும் வெளிநாட்டவர் அக்குழந்தையை தமது நாட்டில் தங்கள் தத்துப்பிள்ளை என்று ஆவணப்படுத்தி, அந்நாட்டுக் குடியுரிமை பெற்றுத் தருவதற்கு 2 ஆண்டு கால அவகாசம் அளிக்கிறது இந்திய அரசு. அதே நேரத்தில், அக்குழந்தை ஏதோ ஒரு காரணத்தால் கைவிடப்படும் நிலை வந்தால், அந்நாட்டு அரசு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிப்பதைக் காட்டிலும், தத்தெடுப்போர் இக் இக்குழந்தைகளின் பெயரில் குறிப்பிட்ட தொகையை வைப்புநிதியாகச் செலுத்த நிபந்தனை விதிப்பது நடைமுறையில் பயனுள்ளதாக இருக்கும்.

உள்நாட்டில், இந்தியப் பெற்றோர் தத்தெடுக்கும் வழிமுறைகளும் எளிமையாக்கப்பட வேண்டும். “தத்தெடுக்கும் தம்பதிக்கு ஏற்கெனவே ஒரு தத்துப் பிள்ளையோ, சொந்த மகனோ, பேரன் பேத்தியோ தத்தெடுக்கும் வேளையில் இருக்கக்கூடாது’ என்பதுபோன்ற விதிகள் தேவையற்றவை. சொந்தமாக ஒரு குழந்தை இருப்பினும் தங்களுக்கு இன்னொரு தத்துப்பிள்ளை வேண்டும் என்கிற ஆசையும், அதற்கான வசதியும் இருப்பின் அதை ஏன் அனுமதிக்கக் கூடாது?

Posted in Adoption, Analysis, Angelina, Anjelina, Backgrounder, Brad, Brad Pitt, Children, History, Jolie, Kid, solutions, Suggestions | Leave a Comment »