Centre sanctions subsidy for sugar exports, says Pawar
Posted by Snapjudge மேல் மார்ச் 28, 2007
“சர்க்கரை உற்பத்தி 260 லட்சம் டன்களாக உயரும்’
புது தில்லி, மார்ச் 28: 2006-07-ம் ஆண்டுக்கான கரும்பு அரைவைப் பருவத்தில் சர்க்கரை உற்பத்தி 260 லட்சம் டன்களைத் தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் சர்க்கரை உற்பத்தி 193 லட்சம் டன்களாக இருந்தது. கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் உற்பத்தி அதிரித்துள்ளதாக சர்க்கரை ஆலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்க்கரை உற்பத்தி நடப்பாண்டில் 250 லட்சம் டன்களைத் தாண்டும் என, இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம், தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு ஆகியவை அரசுக்கு அறிக்கை அளித்திருப்பதாக மத்திய அமைச்சர் சரத்பவார் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.
மகாராஷ்டிரம், உத்தரப்பிரதேசம், கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் தற்போது கரும்பு அரைவைப் பருவமாகும். எனவே சர்க்கரை உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என கரும்பு ஆலை அதிகாரிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
மாநில சர்க்கரை ஆலைகள் ஆணையரின் அறிக்கைப்படி நடப்பு அரைவைப் பருவத்தில் சர்க்கரை உற்பத்தி, 238.34 லட்சம் டன்களை எட்டும் என அரசு மதிப்பீடு செய்திருந்தது.
============================================================================================
சர்க்கரை ஏற்றுமதிக்கு ரூ.850 கோடி ஊக்கத்தொகை
புனே, மார்ச் 28: சர்க்கரை ஏற்றுமதி செய்வதற்காக மத்திய அரசு ரூ.850 கோடி ஊக்கத் தொகை அனுமதித்துள்ளது. நடப்பாண்டில் சர்க்கரை உற்பத்தி அதிகரிக்கும் என்பதால் கடந்த ஜனவரி முதல் சர்க்கரை ஏற்றுமதிக்கான தடை நீக்கப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார் புனேயில் தெரிவித்தார்.
நடப்பாண்டில் சர்க்கரை உற்பத்தி 250 லட்சம் டன்களை எட்டும் என்றும், ஏற்கெனவே 40 லட்சம் டன் உபரியாக கையிருப்பு உள்ளது என்றும், ஆண்டுக்கு நமது உள்ளூர் தேவை 190 லட்சம் டன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சர்க்கரை ஏற்றுமதிக்கு, துறைமுகம் உள்ள மாநிலங்களில் டன் ஒன்றுக்கு 1300-ம் பிற இடங்களில் ரூ.1400-ம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்றார்.
கோதுமை உற்பத்தி நடப்பாண்டில் 72 லட்சம் டன்களாக இருக்கும். கோதுமை ஏற்றுமதிக்கு அரசு அனுமதிக்காது. தேவையைப் பொறுத்து தரமுள்ள 30 லட்சம் டன் கோதுமை இறக்குமதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
bsubra said
15 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்ய பரிசீலனை: பவார்
புது தில்லி, மே 1: சர்வதேசச் சந்தையில் விலை அதிகம் இல்லை என்றாலும், உபரி சர்க்கரையில் 15 லட்சம் டன்னை ஏற்றுமதி செய்வது குறித்துப் பரிசீலனை செய்து வருகிறோம் என்று வேளாண்துறை அமைச்சர் சரத் பவார் தெரிவித்தார்.
மக்களவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின்போது அவர் தெரிவித்த தகவல்கள் வருமாறு:
“2006-07 சர்க்கரைப் பருவத்தில் நாட்டின் ஒட்டுமொத்த சர்க்கரை உற்பத்தி அளவு 250 லட்சம் டன்களாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.
கடந்த பருவத்தில் உபரியாக மிஞ்சிய சர்க்கரை அளவு 44 லட்சம் டன்கள். 190 லட்சம் டன் அளவுக்கு உள்நாட்டில் சர்க்கரை பயன்படுத்தப்பட்டது.
சர்வதேசச் சந்தையில் சர்க்கரைக்கு இப்போது கிராக்கி இல்லை. எனவே விலை சரிந்திருக்கிறது. இருந்தாலும் 15 லட்சம் டன் சர்க்கரையை விற்க அரசு பரிசீலித்து வருகிறது. சர்வதேசச் சந்தையைத் தொடர்ந்து கவனித்து வருவோம்; நமக்குச் சாதகமான நாளில் விற்றுவிடுவோம். சர்க்கரை உற்பத்தி, நுகர்வு எப்படி இருந்தாலும் முடைக்கால கையிருப்பாக 20 லட்சம் டன் சர்க்கரையை வைத்துக் கொள்ள தீர்மானித்துள்ளோம். திடீரென உள்நாட்டில் போக்குவரத்துக் கட்டணம் அல்லது இதர செலவு அதிகரித்தால் ஏற்படக்கூடிய அதிகச் செலவுகளைத் தவிர்க்க இந்த கையிருப்பு உதவும்.
கடற்கரையோரம் உள்ள சர்க்கரை ஆலைகள் சர்க்கரையை ஏற்றுமதி செய்தால் அவற்றுக்கு ஊக்குவிப்புத் தொகை வழங்கப்படும். ஒரு டன் சர்க்கரைக்கு ரூ.1,350 என இத்தொகை வழங்கப்படும். பிற ஆலைகளுக்கு இந்த ஏற்றுமதி ஊக்குவிப்பு டன்னுக்கு ரூ.100 ஆக மட்டுமே இருக்கும்.
சர்க்கரையை தேவைக்கும் அதிகமாக உற்பத்தி செய்வதால், கரும்பு விவசாயிகளுக்கு ஆலைகள் தரவேண்டிய நிலுவைத் தொகை அளவு அதிகமாகிவிடக் கூடாது என்ற எண்ணத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார் பவார்.