101 farmers commits suicide in Kerala in last 10 months
Posted by Snapjudge மேல் மார்ச் 28, 2007
10 மாதங்களில் கேரளத்தில் 101 விவசாயிகள் தற்கொலை
திருவனந்தபுரம், மார்ச் 28: கடந்த 10 மாதங்களில் கேரளத்தில் 101 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
இத்தகவலை கேரள வேளாண்துறை அமைச்சர் முல்லைக்கரை ரத்னாகரன் சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இந்தப் பட்டியலில் வயநாடு மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 46 விவசாயிகளும், கோழிக்கோட்டில் 11 விவசாயிகளும், திருவனந்தபுரத்தில் 10 விவசாயிகளும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த ரத்னாகரன் தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்ட 549 விவசாயிகளின் குடும்பத்துக்கு அரசு இழப்பீட்டுத் தொகை வழங்கியுள்ளது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டதாக ரத்னாகரன் கூறியுள்ளார்.
==============================================================
சிறு வியாபாரிகளைச் சீரழிக்கும் பன்னாட்டு மூலதனம்
இரா. செழியன்
இந்தியாவின் சிறு வியாபாரிகளை ஒடுக்கும் வகையில், உள்நாட்டு வர்த்தக நிறுவனங்களின் துணையுடன் வெளிநாட்டு பெரும் மூலதன நிறுவனங்கள் படையெடுத்துவர ஆரம்பித்துள்ளன.
இந்தியாவில் உள்ள 1 கோடி 20 லட்சம் வியாபாரிகளில் பெரிய அளவில் வர்த்தக நிறுவனங்கள் வைத்திருப்பவர்களின் அளவு 4 சதவீதம் என்று கூறப்படுகிறது. எஞ்சிய 96 சதவீதம் பேர் சிறு விற்பனையாளர்கள்.
சிறிய கடைகள் வைத்திருப்பவர்களிலிருந்து மார்க்கெட்டில் கூறுகட்டி காய்கறி, பழங்களை விற்பவர்கள் வரை ஒவ்வொருவரும், அதிகமான மூலதனம் இல்லாமல், தனிப்பட்டு தானே முதலாளியாக, தொழிலாளியாக, விற்பனையாளராக, தொழில் நடத்தி, நாள்தோறும் கிடைக்கும் குறைந்த வருமானத்தை வைத்து தனது குடும்பத்தைக் கட்டிக் காப்பதில் அவதிப்படுகின்றனர்.
தொடர் சில்லறைக் கடைகளை இந்தியாவில் அமைக்க பிரமாண்டமான வெளிநாட்டு பன்னாட்டு நிறுவனங்கள் முன்வந்துள்ள நிலைமை, சிறு வியாபாரிகளை இந்திய வணிகத்துறையிலிருந்து அடியோடு அகற்றிவிடும்.
சில்லறைக் கடைகளை அமைக்க இந்திய ரிலையன்ஸ் நிறுவனம் ஆரம்பித்துவிட்டது. இந்த நிறுவனத்தின் முதலாளி முகேஷ் அம்பானி உலகப் பிரசித்த பெற்ற செல்வச் சீமான். 2007 ஆம் ஆண்டின் உலக செல்வந்தர்களின் பட்டியலில் அவர் 14-வது இடத்தில் இருக்கிறார். அவரிடம் உள்ள நிறுவனங்களின் சொத்து மதிப்பு 20 பில்லியன் அமெரிக்க டாலர் – இந்திய மதிப்பீட்டில் அது 88 ஆயிரம் கோடி ரூபாய்.
“ரிலையன்ஸ் பிரெஷ்’ என்ற பெயரில் சில்லறைக் கடைகளை அம்பானி நிறுவனம் ஆரம்பித்துள்ளது. இதற்கு ஒதுக்கப்பட்டுள்ள முதலீடு 800 கோடி ரூபாய். தில்லியில் 8 சில்லறைக் கடைகள் திறக்கப்பட்டு விட்டன. சென்னையிலும் அதன் கடைகள் வந்துவிட்டன.
காய்கறிகள், பழங்கள், மாமிசம், மீன்வகை, உணவுப் பொருள்கள், அன்றாட அடிப்படைத் தேவைக்கான பண்டங்கள் அனைத்தையும் ஓரிடத்தில் விற்கும் இந்த அமைப்புகளுக்குத் தேவையான, குளிர் சாதனக் கிடங்குகள், குளிர்சாதன லாரிகள், குளிர்சாதன விற்பனைக்கூடங்கள், பாதுகாப்பு அறைகள், பனிப்பெட்டிகள், விளம்பரத் தட்டிகள் எல்லாவற்றையும் மேல்நாட்டு முறையில் அமைத்து, தோட்டத்தில் விளைந்த காய்கறி பழங்களை நேரடியாக, சில்லறைக் கடையில் “புதிதாக’த் தருவதால், அந்தக் கடைகளுக்கு, “ரிலையன்ஸ் பிரெஷ்’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
இந்தச் சில்லறைக் கடைகள் மூலம் நடைபெறும் விற்பனை இன்னும் மூன்றாண்டு காலத்தில் 1000 கோடி ரூபாய் அளவுக்கு வந்துவிடும் என்று ரிலையன்ஸ் நிறுவனத்தினர் எதிர்பார்க்கின்றனர்.
ஹைதராபாத், ஜெய்ப்பூர், சென்னை ஆகிய மூன்று நகரங்களில் வைக்கப்பட்டுள்ள ரிலையன்ஸ் கடைகளுக்கு வரக்கூடிய 2 லட்சம் வாடிக்கையாளர்களை உறுப்பினர்களாகச் சேர்க்க ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த “கர்ரேபோர்’ என்ற நிறுவனம் சில்லறை விற்பனையில் உலகத்தில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அந்த நிறுவனத்திற்கு 30 நாடுகளில் 12 ஆயிரம் கடைகள் இருக்கின்றன. அதற்குச் சென்ற ஆண்டில் நடைபெற்ற வியாபாரத்தின் அளவு சுமார் 40 லட்சம் கோடி ரூபாய்! தாம் ஆரம்பித்த இந்திய நாட்டு சில்லறை வியாபாரத்துக்குத் துணைபுரிய அந்தப் பிரான்ஸ் நாட்டு நிறுவனத்துடன் ரிலையன்ஸ் உடன்படிக்கை செய்துகொண்டுள்ளது.
பிரான்ஸ் நிறுவனத்துக்கு உலகில் இரண்டாவது இடம் என்றால், சில்லறை வியாபாரத்தில் உலகில் முதலிடத்தில் உள்ள “வால்மார்ட்’ என்ற பன்னாட்டு நிறுவனத்துடன் உடன்படிக்கை செய்து கொண்டு “பாரதி’ என்று மற்றோர் இந்திய நிறுவனம் சில்லறை வியாபாரத்தில் இறங்க முடிவு செய்துள்ளது. அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட “வால்மார்ட்’ உலக அளவில் சென்ற ஆண்டில் செய்த விற்பனையின் அளவு 350 பில்லியன் டாலர்; அதாவது 15 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய்! நமது இந்திய அரசின் சென்ற ஆண்டின் வரவு – செலவுத் திட்டத்தின் மொத்த அளவு 5 லட்சத்து 82 ஆயிரம் கோடி ரூபாய்!
111 கோடி மக்களை ஆட்சிசெய்யும் ஒரு நாட்டின் வரவு- செலவைவிட, சில்லறை வியாபாரத்தில் ஒரு நிறுவனத்தின் ஓர் ஆண்டு விற்பனையின் அளவு இரண்டரை மடங்குக்கும் மேலாக இருக்கிறது. சில்லறை வியாபாரம், ஆனால் கல்லாப்பெட்டி வசூல் உலக நாடுகளின் பலவற்றின் வருமானத்தைவிடப் பெரியது, பிரமாண்டமானது.
டாடா நிறுவனமும் சில்லறைக் கடைகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த “உல்வொர்த்’ என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட ஆரம்பித்திருக்கிறது. “உல்வொர்த்’ நிறுவனத்தின் ஆண்டு விற்பனை அளவு 1 லட்சத்து 67 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல்!
பெருத்த அளவில் சில்லறைக் கடைகளை வைத்திருக்கும் வணிக முறை வெளிநாடுகளில் வளர்ந்திருக்கிறது. அமெரிக்காவில் உள்ள வியாபாரத்தில் 85 சதவீதம் பெரிய நிறுவனங்களிடம் இருக்கிறது. அதன் அடிப்படையில் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் சில்லறை வியாபாரத்தை பன்னாட்டு நிறுவனங்களின் சங்கிலித் தொடர் அமைப்புகளிடம் ஒப்படைப்பது, 96 சதவீதமுள்ள சிறு வியாபாரிகள் கை – கால்களில் இரும்புச் சங்கிலிகளைப் போட்டு வாழ்நாள் முழுவதும் வறுமைச் சிறையில் அவர்களை அடைத்து வைப்பதாக முடியும்.
2004 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் தலைமையில் மத்தியில் ஆட்சி அமைத்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு குறைந்தபட்ச பொதுசெயல் திட்டத்தை வெளியிட்டது. இதில் அரசின் ஆறு அம்ச அடிப்படைக் குறிக்கோள்களில் ஒன்றாகக் கூறப்பட்டிருப்பது: “”7 முதல் 8 சதவீத அளவில் வளர்ந்து வரும் இந்தியப் பொருளாதார வளர்ச்சியில், எல்லோருக்கும் வேலை வாய்ப்பைத் தந்து, ஒவ்வொரு குடும்பத்துக்கும் பாதுகாப்பான நிலையான நல்வாழ்க்கை அளிக்க முற்படுவோம்”.
ஆனால் இன்று உள்நாட்டு முதலாளிகளுடன் இணைந்து ஆயிரம் கோடி, லட்சம் கோடி என்று மூலதனம் உடைய பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்குள் நுழைந்து, இந்தியப் பொருளாதாரத்தைச் சீரழிப்பதுடன், சிறு வியாபாரிகளின் வாழ்வை அடியோடு அழித்துவிட முயல்வது சரியா?
“”எல்லோருக்கும் வேலை”, “”ஒவ்வொரு குடும்பத்தின் நல்வாழ்வுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்” என்று இக்கூட்டணியின் சார்பில் தரப்பட்ட வாக்குறுதிகள் என்ன ஆயிற்று? கிடைத்த வேலைகள் போகின்றன, இருந்த நல்வாழ்வு நாசமாகிறது!
நடுத்தரக் குடும்பத்தினரின் சுயவேலை வாய்ப்புத் திட்டமாக விளங்கும் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது மிகுந்த வேதனையை அளித்து வருகிறது.
அன்னிய மூலதன உதவியுடன் ரிலையன்ஸ், பாரதி, டாடா என்று அடுத்தடுத்து இந்திய நிறுவனங்கள் தொடர் சில்லறைக் கடைகளை அமைக்க ஆரம்பித்துவிட்டன!
சிறிய மீன்களை பெரிய மீன்கள் விழுங்கிவிடுவதைப்போல, இந்தியாவின் சிறு வியாபாரிகளை விழுங்க பெரிய நிறுவனங்கள் வந்துவிட்டனவே! இந்தப் பேராபத்தைத் தடுக்க மத்திய – மாநில அரசுகள் என்ன செய்துள்ளன?
உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில், சில்லறைக் கடைகளில் நடைபெறும் விற்பனையில் நாளொன்றுக்கு 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பெறுகிற “வால்மார்ட்’ இந்தியாவின் சில்லறை மார்க்கெட்டில் நுழைந்து விட்டதே! “வால்மார்ட்’ அமைப்புக்கு வால் பிடிக்கும் அமைப்பாக இந்திய அரசும் இந்தியப் பொருளாதாரமும் ஆகிவிட்டனவா?
சுதந்திர இந்தியாவில், சுயவேலையில், சுயமுதலீட்டில், சுயமாகப் பாடுபட்டு, சுயமரியாதையுடன் வாழ்வு நடத்தும் எண்ணற்ற சிறு வியாபாரிகள் வேலையிழந்து, வீடிழந்து, பொருளிழந்து, வாழும் வகை இழந்து, பிறந்த நாட்டில் அகதிகளாக, அநாதைகளாக, அலைய வேண்டிய நிலைமை வேகமாக வந்து கொண்டிருக்கிறது.
சுனாமிப் பேரலை தாக்கினால், கடலோரத்தில் உள்ள சிற்றூர்களும் சிறு குடிசைகளும் அழிக்கப்பட்டு மணல் மேடுகளாக மாறுவதைப்போல், உலகளாவிய பொருளாதாரப் பேரலை உழைப்பவர்களை, உழைத்துப் பிழைக்கும் சிறு வியாபாரிகளைக் கல்லறைகளுக்கு அனுப்பும் காலதேவனாக ஆகிவிடும்.
கடல் அலை கொந்தளித்தால், நாடு தாங்காது. ஏழைகளின் மனம் கொந்தளித்தால் நாடாளும் அரசு தாங்காது.
(கட்டுரையாளர்: நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்).
ரிலையன்ஸ் நிறுவனத்தால் சிறு வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு பாதிப்பு வராது என்கிறார் பொருளாதார வல்லுநர்
![]() |
![]() |
ரிலையன்ஸ் நிறுவனக் கடையின் துவக்க விழா-ஆவணப் படம் |
ரிலையன்ஸ் நிறுவனம் காய்கனிகளை விற்க சென்னையில் சூப்பர் மார்க்கெட்டுகளை தொடங்கியது முதலே அரசியல் சர்ச்சை ஏற்பட்டது.
70 லட்சம் மக்கள் வசிக்கும் சென்னை மாநகரில் உள்ள பெருகி வரும் மத்தியதர மக்களிடையே உள்ள மேல்தட்டு மக்களை குறிவைத்துதான் இந்தக் கடைகள் திறக்கப்பட்டுள்ள எனவும், இதனால் சிறு வியாபாரிகளுக்கு எந்த பாதிப்பும் வராது எனகிறார் பொருளாதார வல்லுநர் பேராசிரியர் ஜனகராஜன்.
ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமல்லாமல், இது போன்ற வர்த்தகத்தில் பல நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றன என்பதை சுட்டிக்காட்டிய அவர், வெளிநாட்டிலிருந்து பெரிய அளவில் அந்த நிறுவனங்கள் கொள்முதல் செய்வதால் நுகர்வோருக்கு குறைந்த விலையில் பொருட்களை விற்க முடிகிறது எனவும் கூறுகிறார்.
இது போன்ற நிறுவனங்கள், இடைத் தரகர்கள் இன்றி விவசாயிகளிடமிருந்து பொருட்களை நேரடியாக வாங்குவதால் விவசாயிகளும் பலனடைவார்கள் என்றும் அவர் தெரிவிக்கிறார்.
உலக மயமாக்கலில் ஒரு நாடு ஈடுபடும் போது, குறிப்பிட்ட துறைகளுக்குத் தான் தமது சந்தை திறந்திருக்கும் எனக் கூறமுடியாது என்பதனையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மறுமொழியொன்றை இடுங்கள்