சென்னை துறைமுகத்தில் ரூ.100 கோடியில் இரண்டு பலஅடுக்கு கார் நிறுத்தும் இடம் ஓராண்டில் அமைக்கத் திட்டம்: துறைமுகத் தலைவர் தகவல்
சென்னை, மார்ச் 27: ஏற்றுமதிக்கு முன்பாக கார்களை நிறுத்தி வைப்பதற்கு வசதியாக, சென்னை துறைமுகத்தில் ரூ. 100 கோடியில் இரண்டு பலஅடுக்கு கார் நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட உள்ளன. ஒவ்வொன்றுக்கும் தலா ரூ. 50 கோடி செலவிடப்பட உள்ளது.
மேலும், வணிக வளாகமும், உணவகமும் துறைமுகத்தில் திறக்கப்படும் என்று துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் கே. சுரேஷ் தெரிவித்தார்.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் “நியூ கெட்ஸ்’ வகைக் கார், சென்னை துறைமுகத்தில் இருந்து ஜெர்மனிக்கு திங்கள்கிழமை ஏற்றுமதி செய்யப்பட்டன. மொத்தம், 4,000 கார்கள் கப்பல் மூலம் செல்ல உள்ளன.
இதற்கான நிகழ்ச்சி சென்னை துறைமுகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் கே. சுரேஷ் கூறியது:
சென்னை துறைமுகத்தில் இருந்து, பன்னாட்டு கம்பெனிகளின் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கார்கள் கடந்த ஆண்டு ஏற்றுமதி செய்யப்பட்டன.
ஏற்றுமதி செய்வது தொடர்பாக, ஹூண்டாய் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. 12 ஆண்டுகளுக்குப் பிறகும், அந்த ஒப்பந்தம் தொடர்கிறது.
ஏற்றுமதிக்கு முன்பாக, கார்களை நிறுத்த துறைமுகத்தில் இடம் உள்ளது. அந்த இடத்தில் 6,000 கார்கள் வரை நிறுத்தலாம். ஆனால், அந்த இடம் போதாது எனக் கூறுகின்றனர். இதனால், துறைமுகத்தில் பல அடுக்கு கார் நிறுத்தும் இடங்கள் இரண்டை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம்.
இதற்கு ரூ. 100 கோடி மதிப்பிடப்பட்டு உள்ளது. உரிய நிறுவனங்களை அழைத்துப் பேசி, ஓராண்டுக்குள் கட்டி முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். மேலும், உயர்தர உணவகமும், வணிக வளாகமும் அமைக்கப்படும் என்றார் கே.சுரேஷ்
நிகழ்ச்சியில், தொழில்துறைச் செயலாளர் சக்திகாந்த தாஸ், ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் எச்.எஸ்.ஹீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
==================================================================
திமுக ஆட்சியில் ரூ.10,750 கோடி அன்னிய முதலீடு: ஸ்டாலின்
ஸ்ரீ பெரும்புதூரை அடுத்த ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.75 கோடி முதலீட்டில் ஜப்பான் நாட்டின் கொமாட்சு கனரக வாகன உற்பத்தி ஆலையை புதன்கிழமை துவக்கி வைத்தார்
உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின். உடன் (இடமிருந்து) தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தாமோ.அன்பரசன், கொமாட்சு தலைவர் எம்.சகானே, ஜப்பான் துணைத் தூதர் ஓய், கோடாகி, தொழில் துறைச் செயலர் சக்திகாந்ததாஸ், டி.யசோதா எம்.எல்.ஏ.
காஞ்சிபுரம், மார்ச் 29: திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் ரூ.10,750 கோடி நேரடி அன்னிய முதலீடு வந்துள்ளது என உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில், ரூ.75 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஜப்பான் நாட்டின் கொமாட்சு கனரக வாகனங்கள் தயாரிப்பு ஆலையை புதன்கிழமை திறந்து வைத்து அவர் பேசியது:
தமிழகம் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற இடமாக உள்ளதால், 10 மாதங்களில் 10 பெரிய நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.
ரூ.10,750 கோடி நேரடி அன்னிய முதலீடு பெறப்பட்டதுடன், 39 ஆயிரம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும், 65 ஆயிரம் பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பும் கிடைத்துள்ளது. முதல்வர் கருணாநிதியின் சீரிய முயற்சியால் தமிழகம் தொழில் துறையில் மேன்மேலும் வளர்ந்து வருகிறது.
ஒரகடம் தொழிற்பூங்காவில் தேசிய மோட்டார் வாகன ஆராய்ச்சி மையம், நிசான் மோட்டார் ஆலை உள்பட பல்வேறு பெரிய நிறுவனங்கள் தங்கள் ஆலைகளை இங்கு அமைக்கவுள்ளன. மோட்டார் வாகன உற்பத்தி தொழிலுக்கு ஏற்ற இடமாக ஒரகடம் மாறி உள்ளது.
முதலீட்டாளர்களின் அனைத்து தேவைகளையும் தமிழக அரசு நிறைவேற்றும் என்றார் ஸ்டாலின்.
கொமாட்சு இந்தியா ஆலை மேலாண் இயக்குநர் எஸ்.யுயுனோ வரவேற்றார். தலைவர் எம்.சகானே ஆலை குறித்து திட்ட விளக்கவுரை ஆற்றினார். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தாமோ.அன்பரசன், தொழில்துறைச் செயலர் சக்திகாந்ததாஸ், ஜப்பான் துணைத் தூதர் ஒய்.கோடாகி, எல் அன்ட் டி நிறுவனத் தலைவர் ஏ.எம்.நாயக், ஆ.கிருஷ்ணசாமி எம்.பி, டி.யசோதா எம்.எல்.ஏ. ஆகியோர் பேசினர்.
ஆட்சியர் பிரதீப் யாதவ், எம்.எல்.ஏ.க்கள் கே.சுந்தர், எஸ்.ஆர்.ராஜா, மாவட்ட ஊராட்சித் தலைவர் டி.துரைசாமி, ஒன்றியக் குழுத் தலைவர் ஆ.மனோகரன், எஸ்.பி. அமல்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.