Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Uttar Pradesh Elections – Anlaysis: Neeraja Chowdhry on Rahul Gandhi Politics

Posted by Snapjudge மேல் மார்ச் 26, 2007

சர்ச்சைக்கு வித்திட்ட ராகுல் காந்தியின் பிரசாரம்!

நீரஜா செüத்ரி

“”இந்திரா காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சியில் இருந்திருந்தால் பாபர் மசூதியை இடிக்கவிட்டிருக்க மாட்டார்கள்” என்று ராகுல் காந்தி பேசியதை நியாயப்படுத்தவும், விளக்கம் அளிக்கவும் காங்கிரஸ் தலைவர்கள் எந்தெந்த வகையிலோ முயல்கின்றனர்; ஆனால் தனிப்பட்ட முறையில் பேசும்போது தருமசங்கடத்தில் நெளிகின்றனர்.

உத்தரப்பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பிரசாரத்தைத் தொடங்கியுள்ள ராகுல் காந்தி, எதிர்க்கட்சியினரைத் தாக்குவதாக நினைத்து சொந்தக் கட்சிக்காரர்களையே தாக்கிவிட்டார். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது பி.வி. நரசிம்மராவ்தான் பிரதமராக இருந்தார். உத்தரப் பிரதேச அரசைக் கலைக்கவும் தேவைப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில், மத்திய அமைச்சரவை என்று பல்வேறு அமைப்புகளும் அவருக்கு முழு அதிகாரத்தை அளித்திருந்த நிலையிலும் மசூதி இடிக்கப்பட்டதைத் தடுக்க அவரால் முடியவில்லை.

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்திருந்தால் மசூதியை இடிக்கவிட்டிருக்க மாட்டார் என்பது உண்மையே. ஆனால், சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் சிலைகளை வைக்க, கதவுகளின் பூட்டைத் திறக்க உத்தரவிட்டதும் அவரே; ஷா பானு வழக்கில் அவருடைய கணவரே ஜீவனாம்சம் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னர், அதை செல்லாததாக்க ஒரு மசோதா கொண்டுவந்ததும் அவரே. இவ்விரு செயல்களும் மக்களை மத அடிப்படையில் அணி திரள வைத்தன. மூடப்பட்ட இந்த அத்தியாயங்களை மீண்டும் மறுவாசிப்பு செய்யவே ராகுல் காந்தியின் கருத்து உதவியிருக்கிறது. இந்நிலையில், ராகுலின் இக்கருத்து பாரதீய ஜனதாவுக்குத்தான் அரசியல் லாபத்தை அள்ளித்தரும். பாபர் மசூதி இடிப்பு என்ற விவகாரம் ஹிந்துக்களைப் போலவே முஸ்லிம்களுக்கும் “”நடந்து முடிந்துபோன” ஒரு விஷயம்தான்.

அவ்வப்போது, “”ராமருக்குக் கோயில் கட்டுவோம்” என்று அரற்றிக் கொண்டிருந்தாலும், அயோத்தி விவகாரம் இனி தேர்தல் ஆதாயத்துக்குப் பயன்படாது என்பதை சங்கப் பரிவாரங்கள் உணர்ந்திருக்கின்றன. எனவேதான் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு என்று பிற விஷயங்களுக்கு முக்கியத்துவம் தருகின்றன.

மத ரீதியாக மக்களைத் திரட்டும் பிரச்சினைகளைப் பேசினால் அதனால் பலன் அடைவது பாரதீய ஜனதாவும் சமாஜவாதி கட்சியும்தான். ஹிந்துத்துவா கொள்கையைத் தொடர்ந்து வலியுறுத்தும் பாஜக கூட இப்போது, நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவுக்கு இன்னும் தண்டனையை நிறைவேற்றாதது குறித்தும், அரசின் நிதி ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் பேசியது குறித்தும்தான் கண்டனம் தெரிவித்து வருகிறது.

ராகுல் காந்தியின் கருத்தால் முஸ்லிம்கள், காங்கிரஸýக்கு மீண்டும் ஆதரவு தருகிறார்கள் என்று வைத்துக்கொண்டால் கூட, முஸ்லிம்களின் வோட்டு சமாஜவாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ், ராஷ்ட்ரீய லோக தளம், ஜன மோர்ச்சா என்று ஐந்து வெவ்வேறு கட்சிகளுக்குப் பிரிந்து போகும்.

அதே சமயம், மேல் சாதியினரின் வாக்குகள் பாஜகவுக்கு குவியும். சமீபத்தில் நடந்த உத்தரப் பிரதேச உள்ளாட்சி மன்றத் தேர்தல் முடிவும், உத்தரகண்ட் பேரவைத் தேர்தல் முடிவும், மேல் சாதியினர் பாஜக பக்கம் சாய்ந்துவிட்டதையே உணர்த்துகின்றன.

இந்த நாட்டை ஆள்வதற்குத் தகுதி உள்ள குடும்பம் “”நேரு-காந்தி” குடும்பம்தான் என்பதையே ராகுலின் பேச்சு வலியுறுத்துகிறது. குடும்ப ஆட்சி என்றாலே எழும் கண்டனக் குரல்கள் இப்போது அடங்கி வருகின்றன. இப்போது இதுதான் நடைமுறை என்றாகி வருகிறது.

இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவின் அரசியல் 500 குடும்பங்களால் மட்டுமே கட்டுப்படுத்தப்படும் நிலைமை ஏற்பட்டுவிடலாம். இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 4-வது இடம்தான் கிடைக்கும் என்று பேசப்படும் நேரத்தில், ராகுலின் கருத்து காரணமாக காரசாரமான விவாதங்கள் தொடங்கிவிட்டன. ராகுல் பேசியது சரியே என்று காங்கிரஸ் தொண்டர்கள் வீறாப்போடு எதிர்வாதம் செய்கின்றனர். சாரமற்று, விறுவிறுப்பற்று இருந்த தேர்தல் பிரசாரம் சூடுபிடித்திருக்கிறது. அந்த வகையில் ராகுலின் பேச்சு வரவேற்கத்தக்கதே.

ராகுல் காந்தி வளர்ந்துவரும் இளம் தலைவர்; இளைய சமுதாயத்தின் பிரதிநிதி. அந்த வயது மக்களின் கனவுகளை, ஆசைகளை, நியாயங்களை பிரதிபலிக்கும் கருத்துகளை அவர் எடுத்துவைக்க வேண்டும்.

பாபர் மசூதி இடிப்பு பிரச்சினை செத்துவிட்டது. நரசிம்மராவும் மறைந்துவிட்டார். நடந்த சம்பவத்துக்கு சோனியா காந்தியும் மக்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டார். முஸ்லிம்களை ஈர்க்கவும், நம்பிக்கை ஊட்டவும் வேறு வழிகள் உள்ளன. வளமான, வலிமையான இந்தியாவை உருவாக்க, தான் மேற்கொள்ளவிருக்கும் உத்திகளை, லட்சியங்களை ராகுல் காந்தி தனது பிரசாரத்தில் முன் நிறுத்த வேண்டும்.

தமிழில்: சாரி.

=========================================================
உ.பி. தேர்தல்: பகுஜன் சமாஜ் கட்சியில் அதிக அளவில் கிரிமினல்கள் போட்டி

லக்னெü, ஏப். 11: உத்தரப்பிரதேச மாநில பேரவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் அதிக குற்றப்பின்னணி கொண்டவர்கள் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

முதல் மற்றும் 2-ம் கட்ட தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் கொடுத்த தகவல்களை உத்தரப்பிரதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்பு ஆராய்ந்தது.

அதன்படி

 1. பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர்கள் (33.33%) அதிக குற்றப்பின்னணி கொண்டவர்களாக உள்ளனர்.
 2. பாஜகவினர் (27.03%) 2-ம் இடத்திலும்,
 3. சமாஜவாதி கட்சியினர் (26.5%) 3-ம் இடத்திலும்,
 4. காங்கிரஸ் கட்சியினர் (20.17%) 4-ம் இடத்திலும்,
 5. ராஷ்டிரீய லோக்தளம் கட்சியினர் (18.31%) 5-ம் இடத்திலும் உள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது.

அதேபோல

 1. சமாஜவாதி கட்சியினரில் அதிகம் பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.
 2. இரண்டாம் இடத்தில் பகுஜன் சமாஜ் கட்சியினரும்,
 3. பாஜக,
 4. காங்கிரஸ் ஆகிய கட்சியினர் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோருக்கு (PAN Number) நிரந்தர கணக்கு எண் இல்லை.

=========================================================

Dinamani – May 8

மாயாவதிக்கு உ.பி. மேல்சாதியினர் ஆதரவு!

நீரஜா சௌத்ரி

கடந்த வாரம் அலாகாபாதில் மாயாவதி பேசிய தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ஓரத்தில் நின்று கவனித்துக் கொண்டிருந்தேன். அப்போது பிற்பகல் மணி 3. வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. அருகில் “”2 பேர்” நின்றுகொண்டு மேடையையே ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

வெயிலோ, மழையோ -சகோதரி மாயாவதியைப் பார்க்க தலித்துகள் காத்திருப்பதில் வியப்பு ஏதும் இல்லை; ஆனால் “”அந்த இருவரும்” தலித்துகள் அல்ல, வைசிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள், வியாபாரிகள். முலாயமின் “”அடியாள் அரசு” முடிவுக்கு வர வேண்டும் என்ற ஆர்வத்தில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு வாக்களிக்க முடிவு செய்தவர்கள்.

பொதுக்கூட்டங்களுக்கு வருகிறவர்கள் எல்லோரும் அந்த கட்சிக்கே வாக்களித்துவிடமாட்டார்கள் என்பது நாம் அனுபவத்தில் அறிந்த பாடம். ஆனால் பொதுக்கூட்டத்துக்கு வரும் கூட்டம், தலைவர்களின் செல்வாக்கை எடைபோட உதவுகிறது. மாயாவதியின் பொதுக்கூட்டத்துக்கு வருகிறவர்கள், அவர் பேச்சின் முக்கியப் பகுதியில் கைதட்டவும், ஆரவாரம் செய்யவும் தவறுவதே இல்லை.

ராகுல் காந்தியின் பிரசாரத்தின்போது அவருடைய வாகனத்துக்கு இணையாக துடிப்போடு ஓடிவரும் இளைஞர்களைப் பார்க்கும்போது, காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்வு ஊட்டப்பட்டுவிட்டது என்று புரிகிறது.

அலாகாபாதில் நடந்த அத்வானியின் பொதுக்கூட்டத்துக்கு வந்தவர்களிடையே பெரிய பரபரப்போ, உற்சாகமோ இல்லை. ஆனால் வந்தவர்கள் அனைவரும் பாஜகவுக்கே வாக்களிக்கத் தீர்மானித்துவிட்டவர்கள் என்பதில் சந்தேகமே வரவில்லை.

மாயாவதியின் பொதுக்கூட்டத்துக்கு வந்த 2 வைசியர்களும், உத்தரப்பிரதேசத்தில் மேல் சாதியினரிடையே ஏற்பட்டுள்ள மனமாற்றத்தை உணர்த்துகின்றனர். 2007 உ.பி. சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வித்தியாசமாகவே இருக்கப் போகிறது. முஸ்லிம்கள் தங்களுடைய சமூகத்தைச் சேர்ந்தவர்கள், அல்லது தங்களுடைய சமூகத்துக்கு இணக்கமானவர்கள் யார் என்று பார்த்து வாக்களிப்பார்கள். உத்தரப்பிரதேசத்தில் பிராமணர்கள் இம்முறை அந்த வகையில்தான் வாக்களித்து வருகின்றனர்.

தங்கள் கட்சி சார்பில் பிராமணர்கள் போட்டியிடாத தொகுதிகளில்தான் மாயாவதி கட்சியின் பிராமண வேட்பாளர்களுக்கு பிராமணர்கள் வாக்களிப்பார்கள் என்று பாஜக நம்புகிறது. மாயாவதி 86 பிராமணர்களை வேட்பாளர்களாக நிறுத்தியிருக்கிறார். எனவே கடைசி 2 சுற்று வாக்குப்பதிவில் அவருடைய கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று முந்தும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அதிக இடங்களில் வென்ற தனிப்பெரும் கட்சியாக அவருடைய கட்சி வரும் வாய்ப்பும் இருக்கிறது.

மாயாவதி கட்சிக்கு 150 இடங்களுக்கு மேல் கிடைத்து, காங்கிரஸ் கட்சிக்கும் 40 இடங்கள் வரை கிடைத்தால், சுயேச்சைகள் ஆதரவுடன் மாயாவதி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கிறது.

இவ்விரு கட்சிகளைத் தவிர பிற கட்சிகளின் கூட்டணி அரசுக்கு வாய்ப்பே கிடையாது. அதிக இடங்களில் வென்ற 2-வது கட்சியாக பாஜக வரும் என்பதால், பாஜக-பகுஜன் சமாஜ் கூட்டணி அரசும் சாத்தியம்தான்! இரு கட்சிகளும் ஏற்கெனவே இருமுறை கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளன. ஆனால், பாஜக தொண்டர்கள் மாயாவதியுடன் கூட்டணியே கூடாது என்று இப்போது பலமாக எதிர்ப்பதால் இம் முறை அப்படியொரு வாய்ப்பே கிடையாது என்று திட்டவட்டமாக மறுக்கின்றனர் கட்சித் தலைவர்கள்.

உத்தரப் பிரதேசமும் பிகார் வழியிலேயே செல்வதாக பாஜக தலைவர்கள் கருதுகின்றனர். யாருமே ஆட்சி அமைக்க முடியாமல் மீண்டும் பேரவைக்குத் தேர்தல் நடந்தால், அதிக இடங்களைப் பெற்ற தனிப்பெரும் கட்சியாக வரும் வாய்ப்பு தங்களுக்கே அதிகம் என்று அவர்கள் கணக்கு போடுகின்றனர். எனவே, குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவருவதை பலமாக எதிர்த்தாலும், உள்ளூர அதை வரவேற்பார்கள் என்று தெரிகிறது. இந்தத் தேர்தலில் 2 தவறுகளைச் செய்துவிட்டதாக பாஜக தலைமை கருதுகிறது. முலாயம் சிங் அரசைத் தீவிரமாக எதிர்க்காதது முதல் தவறு. பிகாரில் நிதீஷ்குமார் அமைத்த சாதிக் கூட்டணியைப் போல, உத்தரப்பிரதேசத்தில் அமைக்காமல் போனது இரண்டாவது தவறு என்று அவர்கள் கருதுகின்றனர்.

ஆட்சி அமைக்க சில எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுதான் தேவை என்ற நிலை மாயாவதிக்கு ஏற்பட்டால், காங்கிரஸ் கட்சி ஆதரவு தரக்கூடும். அதே சமயம், குடியரசுத் தலைவர் ஆட்சிதான் ஒரே வழி என்றாலும் காங்கிரஸýக்கு மகிழ்ச்சிதான். ஏன் என்றால் பேரவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு அதற்கு 4-வது இடம்தான். குடியரசுத் தலைவர் ஆட்சி என்றாலோ, தில்லியில் உள்ள மத்திய அரசின் மூலம் உத்தரப்பிரதேசத்தை மறைமுகமாக ஆளலாம்.

மாயாவதி ஆட்சி அமைப்பதாக இருந்தால் அதை உடனடியாக, மின்னல் வேகத்தில் செய்வதையே காங்கிரஸ் விரும்பும். நேரம் கடத்திக் கொண்டே இருந்தால், பதவி ஆசை காட்டி பிற கட்சியினர் முதலில் காங்கிரûஸத்தான் உடைப்பார்கள் என்று காங்கிரஸ் தலைவர்களுக்கு அனுபவபூர்வமாகவே தெரியும்.

தமிழில்: சாரி.

7 பதில்கள் -க்கு “Uttar Pradesh Elections – Anlaysis: Neeraja Chowdhry on Rahul Gandhi Politics”

 1. bsubra said

  ராகுல் முன்னுள்ள உண்மையான சவால்

  நீரஜா செüத்ரி – (தமிழில்: லியோ ரொட்ரிகோ)

  உத்தரப் பிரதேச அரசியலில் ராகுல் காந்தி எந்த அளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்துவார் என்பது பற்றித்தான் அரசியல் வட்டாரத்தில் இப்போது பரபரப்பாக விவாதிக்கப்பட்டுவருகிறது. அதோடு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இரு “அரசியல்’ கருத்துகளைக் கூறியதன் மூலம் தனக்குத் தானே அவர் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் பாதிப்புகளைப் பற்றியும் விவாதிக்கின்றனர்.

  தனது மக்கள் சந்திப்புப் பயணம் மூலமாக பெரும் கூட்டத்தை ராகுல் காந்தி கூட்டுகிறார் என்பது உண்மைதான்; ஆனால், அந்தக் கூட்டமெல்லாம் வாக்குகளாக மாறிவிடும் என்று கூற முடியாது. தனது குடும்பத்தின் பெருமையைப் பற்றிப் பேச நினைத்த அவர், “நேரு ~ காந்தி குடும்பத்தினர் பதவியில் இருந்திருந்தால், நிச்சயமாக பாபர் மசூதி இடிக்க அனுமதிக்கப்பட்டிருக்காது’ என்றும், “பாகிஸ்தானை இரண்டாகப் பிரித்தது இந்திரா காந்திதான்’ என்றும் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது. அதுவரை மந்தமாக இருந்துகொண்டு இருந்த காங்கிரஸின் தேர்தல் பிரசாரத்தில் அது பரபரப்பையும் உண்டாக்கிவிட்டது.

  நிருபர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கையில் அவர் இதைக் கூறவில்லை. எனவே, யோசிக்காமல் அவர் அப்படிக் கூறிவிட்டதாகச் சொல்ல முடியாது. சாதி அடிப்படையிலும் சமய அடிப்படையிலும் இரு கூறாகப் பிரிந்து கிடக்கிறது உத்தரப் பிரதேசம். அங்கு நடத்தப்பட்டுவரும் அவரது தேர்தல் பிரசாரத்தில் அரசியல் ரீதியில் ஒரு விறுவிறுப்பையும் ஓர் உத்வேகத்தையும் ஏற்படுத்துவது அவரது பேச்சின் நோக்கமாக இருந்திருக்கக்கூடும்.

  1980-ம் ஆண்டுகளில் நாம் பார்த்த ராஜீவின் அரசியல்பாணியை நினைவூட்டுகிறது ராகுலின் பேச்சு. அப்போது பரபரப்பாகப் பேசப்பட்ட ஷா பானு வழக்கில், “விவாகரத்து செய்யப்பட்ட முஸ்லிம் பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்கப்பட வேண்டும்’ என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், பழைவாத முஸ்லிம்களின் கருத்துகளுக்கு ஏற்ப, நீதிமன்றத்தின் தீர்ப்பைச் செல்லாததாக்கும் வகையில், முஸ்லிம் மகளிர் சட்டத்தை நிறைவேற்றினார், அப்போது பிரதமராக இருந்த ராஜீவ்.

  பிறகு, கொதிப்படைந்திருந்த இந்துக்களை “தாஜா’ செய்யும் நோக்கத்தில், சர்ச்சைக்குரிய பாபர் மசூதி ~ ராமஜன்மபூமி வளாகத்துக்குப் போடப்பட்டிருந்த பூட்டைத் திறந்துவிட்டார் ராஜீவ். இரு ஆண்டுகளுக்குப் பின், அந்த இடத்துக்கு அருகிலேயே நடைபெற்ற செங்கல் பூஜை சடங்குக்கும் அவர் அனுமதி அளித்தார்.

  ராகுல் காந்தியும் அதேபோன்ற “சமநிலை’ அரசியல் அணுகுமுறையைப் பின்பற்றுவதாகத் தெரிகிறது. முஸ்லிம்களின் நலன்களைத் தனது குடும்பம் பாதுகாக்கும் என்ற உறுதியை அவர்களுக்கு அளிக்கும் வகையில், “பாபர் மசூதியை இடிக்க விட்டிருக்க மாட்டோம்’ என்றும், மேல்சாதி இந்துக்களின் ஆதரவை மீண்டும் பெறும் நோக்கத்தில், “பாகிஸ்தான் இரண்டு நாடானது’ குறித்தும் அவர் பேசியிருக்கக்கூடும்.

  ஏனென்றால், நீதிபதி சச்சார் குழு அறிக்கை, நாட்டின் செல்வாதாரங்கள் மீது சிறுபான்மையினருக்கு முதல் உரிமை இருக்கிறது என்னும் பிரதமரின் கருத்து, நாட்டின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் திட்டத்தைச் செயல்படுத்த அர்ஜுன் சிங் எடுத்த முடிவு, அப்சல் குருவுக்கு மரண தண்டனையை இன்னும் நிறைவேற்றாமல் இருப்பது ஆகிய காரணங்களால் மேல்சாதி இந்துக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். இது இத் தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு உதவக்கூடும் என்று காங்கிரஸ் தலைவர்களே ஒப்புக்கொள்கின்றனர். நமது தேசப்பற்றைக் காட்டிக்கொள்வதற்கு பாகிஸ்தான் மீது வசைமாரி பொழிவதும் ஒரு வழி என்ற ஒரு நிலைமை இத்தனை ஆண்டுகளில் உருவாகிவிட்டதுதான் துரதிருஷ்டவசமான ஒரு சிக்கல். ராகுலும் அதில் சிக்கிக்கொண்டுவிட்டார்.

  காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்கள் என்னென்ன விளக்கங்களை அளித்தாலும் சரி; பாதிப்பு ஏற்பட்டது, ஏற்பட்டதுதான். வெளியுறவில் ஏற்பட்ட பாதிப்பை ஒருபுறம் வைத்துவிடுவோம். ஓர் இளம் தலைவர்; எதிர்காலத்தில் இந்தியாவின் பிரதமராக வரக்கூடியவர்; நவீன கண்ணோட்டமும் தொலைநோக்குப் பார்வையும் கொண்டவர்; மதச்சார்பற்ற கொள்கையில் உறுதியானவர் என்ற பெயர் ராகுலுக்கு இருக்கிறது. மேற்கண்டவாறு ராகுல் பேசிய அதேநாளில்தான், “உ.பி.யின் எதிர்காலம் ராகுல்’ என்று வர்ணித்திருந்தார் பிரதமர். அரசியல் வானில் புதிய நட்சத்திரமாக வலம் வரும் ராகுல் காந்தி, எப்பொழுதோ முடிந்துபோன, பிரிவினைத்தன்மை கொண்ட பழைய பிரச்சினைகளை இப்போது எழுப்ப வேண்டிய அவசியம் ஏதுமில்லை. அத்தகைய பிரச்சினைகளைக் கையாள்வதில் கைதேர்ந்தது பாரதீய ஜனதா கட்சி. அவற்றைக் கையில் எடுத்ததன் மூலம், பாஜகவுடன் மோத வேண்டிய நிலைமைக்கு ராகுல் தள்ளப்பட்டுவிட்டார்.

  அந்தப் பிரச்சினை, தேர்தல் களத்தில் தேவையில்லாமல் பின்வாங்கும் நிலைமைக்கு அவரைத் தள்ளிவிட்டது. வீட்டுவசதி, குடிநீர், சாலைகள், வேலைவாய்ப்பு, வளர்ச்சித் திட்டங்கள், ஊழல் ஒழிப்பு ஆகிய பிரச்சினைகளை முன்வைத்து, வேறொரு தளத்தில், இளைஞர்களை இலக்காகக் கொண்டிருப்பவர் ராகுல். காங்கிரஸ் ஊழியர்களுக்கும் தலைவர்களுக்கும் உத்வேகம் ஊட்டி, அவர்களைக் கடுமையாக உழைக்க வைப்பதும், மக்களிடம் மீண்டும் செல்ல வைப்பதும் அவர் முன் இருக்கும் அடுத்த சவால்.

  அவ்வப்போது சில தவறுகள் செய்தாலும் சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டாலும்கூட, தீவிர அரசியலில் ராகுல் காந்தி இறங்கிவிட்டார் என்பது காங்கிரஸ் கட்சிக்கு ஒரு சாதகமான அம்சம். இதை அவரே ஐயத்துக்கிடமின்றித் தெளிவாக்கிவிட்டார்.

 2. bsubra said

  From Kalki
  குடும்ப சென்டிமென்ட் – குறுக்கு வழி!

  பாகிஸ்தான் பிளவுபட நேரு குடும்பமே காரணம் என்று சொல்லிக்
  கொள்வது, இன்றைய சூழலில் பெருமைக்குரிய விஷயமே அல்ல. சம்பந்தப்பட்ட பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் உணர்வுகளையும் உரசிப் பார்த்துச் சவால் விடுகிறது இந்தத் தற்பெருமை! இதன் விளைவுகளைப் பற்றி யோசித்திருந்தால் ராகுல் காந்தி இவ்வாறு பேசியிருக்க மாட்டார். ‘நேரு குடும்பம்’ சென்டிமென்ட்டையே மீண்டும் மீண்டும் பயன்படுத்தி, குறுக்குவழியில் வாக்கு சேகரிக்க முற்படும் அரசியல் முதிர்ச்சியின்மையின் அறிகுறி இது!

  இது போதாதென்று, பிரதமர் வேறு நேரு குடும்ப வாரிசான ராகுல்காந்திதான் காங்கிரஸ¤டைய நம்பிக்கை நட்சத்திரம் என்றும், அவரன்றி வேறு யாராலும் உ.பி.யை உத்தாரணம் செய்ய முடியாது என்றும் பேசியிருக்கிறார்! தேர்தல் பிரசாரத்தின்போதுதான் மன்மோகன் சிங் பேசினார் என்ற போதிலும், அவருடைய உயர்வுக்கும் கௌரவத்துக்கும் துளியும் பொருத்தமற்ற பேச்சு!

  பிரதமராக விளங்குபவர், ஒரு கூட்டணி அரசின் பல்வேறு கட்சிகளைச் சமாளித்து நல்லாட்சி வழங்கி வருவதையும் இதனால், மக்களின்
  மகிழ்ச்சிக்கும் நம்பிக்கைக்கும் தமது கட்சி பாத்திரமாகி வருவதையும் எடுத்துச் சொல்லி அல்லவா காங்கிரசுக்கு வோட்டு கேட்க வேண்டும் ? ஆனால், அவரும் அந்த நேர்ப் பாதையை விடுத்து, நேரு குடும்ப துருப்புச் சீட்டையே நாடியிருக்கிறார்!

  காங்கிரஸ் தலைமை, நேரு குடும்ப ஆளுமை நிழலின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முற்படவில்லை என்பதுடன் விடுபட
  விரும்பவுமில்லை! இதனால்தான் ராகுல் காந்தியும் வேறு வழியின்றி குடும்பப் பெருமை பேச நேர்ந்திருக்கிறது.

  ராகுல் சொன்னதைப்போல், இந்திரா காந்திதான் கிழக்குப்
  பாகிஸ்தானில் கிளர்ந்த அதிருப்தியைச் சாதகமாக்கிக்கொண்டு பங்களாதேஷ் உருவாக ராணுவ உதவி அளித்தார். ஆனால், அந்த வரலாற்றை இப்போது எடுத்துரைப்பதில், அப் போராட்டத்தில் பங்களாதேஷ் விடுதலைப் போராளிகளுக்கு இருந்த பங்கு மறக்கப்பட்டதால் பங்களாதேஷ¤க்கு வருத்தம். பாகிஸ்தானின் தோல்வியைச் சுட்டிக்காட்டியதால் அந்த நாட்டுக்கும் அதிருப்தி. ஏற்கெனவே இவ்விரண்டு நாடுகளுடனான அயலுறவுக் கொள்கை மெச்சும்படியில்லை. இந்நிலையில், எரிகிற நெருப்பில் எண்ணெய்
  ஊற்றுவதைப்போல் பேசி அதை மேலும் சோதனைக்கு
  உட்படுத்தியிருக்கிறார் ராகுல் காந்தி. விளைவு, எதிர்கட்சியினரின் வெறும் வாய்க்கு அவல் கிடைத்துவிட்டது.

  இதில் வேடிக்கை என்னவென்றால், பாகிஸ்தானை மட்டம் தட்டுவதன் மூலம் ஹிந்து வோட்டுக்களைப் பெறும் திட்டத்தில்தான் ராகுல் காந்தி இப்படிப் பேசினார், என்றொரு விமர்சனம் வேறு வலம் வருகிறது!

  மொத்தத்தில் அண்டை நாடுகளை அதிருப்திக்குள்ளாக்கி,
  எதிர்கட்சிகளைப் பலப்படுத்தியதுடன் மக்களுக்கு காங்கிரஸிடமிருந்து சிறிதளவு நம்பிக்கையையும் ஆட்டம்காணச் செய்யக்கூடியது ராகுல் காந்தியின் இந்தப் பேச்சு.

  இந்தியாவின் வளர்ச்சிக்கு நேருவின் பங்களிப்பும், இந்திரா, ராஜீவின் பங்களிப்பும் வரலாறாகிவிட்டன. ஆனால், அந்தப் பழைய சாதனையில் குளிர்காய்வதன் மூலம் இன்று மக்களை ஈர்க்க முற்படுவது விபரீதமாக முடியும்.

  புதிய தலைவர்கள், நம்பிக்கையூட்டும் நல்ல திட்டங்களைப் பற்றிப் பேச வேண்டும். தனி நபர் வழிபாட்டுச் சிறையிலிருந்து காங்கிரஸ் கட்சியை விடுவிக்க வேண்டும். அதுவே கட்சிக்கும் நாட்டுக்கும் நல்லது.

 3. bsubra said

  உ.பி.யில் புதிய சிக்கல்

  உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத்துக்குப் பல கட்டங்களில் நடைபெறும் வாக்குப்பதிவு இன்னமும் முடிந்தபாடில்லை. இந்தநிலையில் ஏற்கெனவே வாக்களித்துவிட்டு வருபவர்களிடம் வழக்கமான முறையில் கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டுள்ளன. இவை இத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது என்பதைக் காட்டுகின்றன.

  மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி அதிக இடங்களைப் பெற்று முதலிடத்தையும் பாஜக இரண்டாவது இடத்தையும் முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சி மூன்றாவது இடத்தையும் பெறலாம் என்றும் அவை கூறுகின்றன. ஆனால் தேர்தல் முடிவுகள் இந்தக் கருத்துக்கணிப்புகளின்படிதான் இருக்கும் என்று சொல்ல முடியாது. தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை பலம் கிடைக்காது என்றே அரசியல் விமர்சகர்களும் கருதுகின்றனர். அப்படிப்பட்ட நிலைமையில் தேர்தலில் கணிசமான இடங்களை வென்ற கட்சிகள் பேச்சு நடத்தி கூட்டணி அரசை அமைப்பதுதான் ஒரேவழியாகும்.

  ஆனால் உ.பி.யில் எளிதில் இப்படியொரு கூட்டணி அரசு அமையும் என்று தோன்றவில்லை. ஏனெனில் மாயாவதி கட்சிக்கும் முலாயம் சிங் கட்சிக்கும் ஜென்மப் பகை. பாஜகவுடன் முலாயம் சிங் கூட்டணி சேர வாய்ப்பில்லை. முலாயம் சிங் அரசியல் தற்கொலையில் ஈடுபடமாட்டார். மாயாவதி முன்னர் காலை வாரிவிட்டார் என்பதால் அவருடன் கூட்டணி சேர பாஜக தயக்கம் காட்டலாம். அதுபோல பாஜகவுடன் கூட்டணி சேர மாயாவதி எளிதில் முன்வர மாட்டார். ஏனெனில் மாயாவதி மீது ஏற்கெனவே வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் பாஜகவும் இடம்பெறுகின்ற அரசை ஏற்படுத்துவதன் மூலம் மத்திய ஆட்சித் தலைமையைப் பகைத்துக் கொள்ள மாயாவதி விரும்ப மாட்டார். மாற்று ஏற்பாடு ஒன்று சாத்தியமே. அது மாயாவதி அல்லது முலாயம் சிங் அரசு அமைக்க, மற்றவர் அதை வெளியிலிருந்து ஆதரிப்பதாகும். ஆனால் எந்த ஓர் ஏற்பாடானாலும் பேச்சு நடத்தி முடிவு எடுக்கக் குறைந்தது ஒரு வாரம் ஆகலாம். ஐரோப்பிய நாடுகளில் கூட்டணி அரசு தொடர்பான பேச்சுகள் பலவாரங்கள் நடப்பது உண்டு.

  ஆனால் உ.பி.யில் எல்லாமே இரண்டொரு நாள்களில் முடிவடைந்தாக வேண்டும் என்ற அவசர, அவசியம் உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 11-ம் தேதி நடைபெற உள்ளது. அரசியல்சட்ட விதிகளின்படி மே 15-ம் தேதிக்குள் புதிய அரசு ஏற்பட்டாக வேண்டும். அப்படி இல்லாவிடில் இடைக்கால ஏற்பாடாக குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியாக வேண்டும். இதில் ஒரு சிக்கல் உள்ளது.

  உ.பி.யில் புதிதாக அமையும் சட்டமன்றத்தின் உறுப்பினர்கள் பதவி ஏற்பது தாமதமானால் அல்லது உடனடியாகப் புதிய அரசு ஏற்பட வாய்ப்பு இல்லை என்று கூறி குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டால் வருகிற ஜூலையில் நடக்க இருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் உ.பி. மாநிலத்தின் நானூறுக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.

  ஆகவேதான் இப்போது அரசியல் சட்ட நிபுணர்கள் சிலர் ஒரு யோசனை கூறியுள்ளனர். புதிய அரசு அமையும்வரை காத்திராமல் மாநில ஆளுநர் உ.பி. சட்டமன்றத்தை உடனடியாகக் கூட்டி உறுப்பினர்களைப் பதவி ஏற்கும்படி செய்ய வேண்டும் என்பது அந்த யோசனையாகும். உ.பி.யில் புதிய அரசு அமையும் விஷயத்தையும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவி ஏற்கிற விஷயத்தையும் ஒன்றோடொன்று முடிச்சுப் போட வேண்டியதில்லை என்று பல சட்ட நிபுணர்கள் கூறியுள்ளனர்.

  இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த விஷயத்தில் தேர்தல் கமிஷனுக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை. தேர்தல் முடிவுகளை அறிவித்தவுடன் தேர்தல் கமிஷனின் பொறுப்பு முடிந்து விடுகிறது. பின்னோக்கிப் பார்க்கும்போது உ.பி. மாநில சட்டமன்றத் தேர்தலைத் தேர்தல் கமிஷன் இவ்வளவுநாள் இழுத்தடித்திருக்க வேண்டியதில்லை என்றே தோன்றுகிறது.

 4. bsubra said

  மாயாவதியின் வெற்றி

  மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.

  உத்தரப்பிரதேச மாநிலத்தில் முலாயம் சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியின் ஆட்சியில் நிலவிய பல குறைபாடுகளும், மத்திய அரசுடன் நிலவிய மோதல் போக்கும், ஊழலும் எனப் பல காரணங்களால் மக்கள் மனநிலை அரசுக்கு எதிராக இருந்தது.

  அளவுக்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கைத் தேர்தலுக்கு முன்பாக எதிர்கொள்ள வேண்டியிருந்த முலாயம் சிங் யாதவ், இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவது மிகமிகக் கடினம் என்பது பொதுவாக அனைத்து அரசியல் நோக்கர்களாலும் தெரிவிக்கப்பட்டது. அது இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

  தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் போராடும் பகுஜன் சமாஜ் கட்சி தற்போது பிராமணர்களுக்கு எதிரான போக்கைச் சற்றுத் தளர்த்தி அவர்களையும் அரவணைத்துச் செல்ல முற்பட்டுள்ளதும் முஸ்லிம் வாக்குகளும்தான் தற்போதைய வெற்றிக்குக் காரணம். தாங்கள் வெற்றி பெற முடியாவிட்டாலும், பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தங்கள் தயவில்தான் மாயாவதி அல்லது யாதவ் ஆட்சி நடக்கும் என்று நினைத்த காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளுக்கும் இது இரட்டைத் தோல்வி.

  காங்கிரஸ் தலைவி சோனியாவும் ராகுல் காந்தியும் பலவிதங்களில் பிரசாரம் செய்தபோதிலும் இத்தேர்தலில் காங்கிரஸ் குறைந்த இடங்களில்தான் வெற்றி பெற முடிந்தது. தேர்தல் பிரசார விடியோ குறுந்தகடு விவகாரத்தில் தேர்தல் கமிஷனின் குற்றச்சாட்டுகளுக்கும் கோபத்துக்கும் ஆளான பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்ற தொகுதிகளும் மிகக் குறைவே.

  இந்திய தேசிய கட்சிகள் எனக் கருதப்படும் காங்கிரஸýம் பாஜகவும் புதுதில்லிக்குப் பக்கத்திலேயே இருக்கும் மாநிலத்தில் வலுவாக முத்திரை பதிக்க முடியாதது ஏன் என்பதை அக்கட்சிகள் மறுசிந்தனை செய்ய வேண்டும்.

  பகுஜன் சமாஜ் கட்சித் தலைவி மாயாவதியும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவும் மெய்யாகவே ஏழைகளாக வாழ்க்கையைத் தொடங்கியவர்கள். தங்களை இன்றளவும் ஏழைகளின் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். என்றாலும், தேர்தலின்போது தெரிவித்த சொத்து விவரப்படி, இவர்கள் கோடிக்கணக்கில் சொத்துகள் உள்ளன.

  முலாயம் சிங் யாதவ் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு நடைபெற்று வருகிறது. மாயாவதி ஏற்கெனவே தாஜ் காரிடார் விவகாரத்தில் சிக்கி, நீதிமன்றத் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறார்.

  நாட்டின் மிகப் பெரிய மாநிலம் உத்தரப்பிரதேசம். ஆனால் எந்த வளர்ச்சியும் இல்லாமல் பின்தங்கியிருக்கும் மாநிலத்திலும் முதலிடம் பெறும். சுகாதாரத்திலும் பின்தங்கியுள்ள மாநிலம் இது. ஒரு லட்சம் குழந்தைகளில் 700 குழந்தைகள் இறந்துவிடுகின்றன. நாட்டின் சராசரி 407தான். ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகளை அதிகம் கொண்டிருக்கும் மாநிலமும் இதுதான்.

  தொழில்துறையிலும் இந்த மாநிலம் மிகவும் பின்தங்கியுள்ளது. முன்பு கான்பூர் ஜவுளித் தொழிலில் சிறந்து விளங்கியதெல்லாம் கனவாய் பழங்கதையாய் மாறிக்கொண்டிருக்கிறது. கொலை, கொள்ளைக்கு அளவே இல்லை. அண்மையில் நொய்டாவில் குழந்தைகள் பலர் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பேசப்பட்டது. சுமார் 17 கோடி மக்களைக் கொண்ட இந்த மாநிலத்தைக் குறைந்தபட்சம் 3 மாநிலங்களாகப் பிரித்தால் மக்களுக்குப் பயன் கிடைக்கும் என்று அரசியல் மற்றும் பொருளாதார நோக்கர்கள் கூறுகின்றனர்.

  ஆனாலும் தில்லிக்குப் பக்கத்தில் இருக்கும் இந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் கிடைக்கும் வெற்றிதான் மத்தியில் ஆட்சி அமைப்பவரைத் தீர்மானிக்கிறது. இதனால், மாநிலத்தைப் பிரிக்காமல் மக்களைப் பிரித்தாளுகின்றன அரசியல் கட்சிகள்.

  இந்நிலையில் வெற்றி பெற்ற மாயாவதி, இந்த மாநிலத்துக்கு எத்தகைய முன்னேற்றத்தைக் கொண்டு வருவார் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

 5. bsubra said

  உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி வெற்றி

  இந்தியாவில் ஜனத்தொகை மிகுந்த மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியை தலித் சமூகத்தில் பிறந்த அதன் தலைவர் மாயாவதி வெற்றிக்கு இட்டு சென்றுள்ளார்.

  உத்தரப்பிரதேசத்தில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தனிப்பட்ட ஒரு கட்சிக்கு இப்போதுதான் முதல் முறையாக பெரும்பான்மை கிடைத்துள்ளது. 402 இடங்களுக்கு 7 கட்டமாக நடந்த தேர்தலில், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி அனைத்துக் கருத்துக் கணிப்புக்களையும் மீறி தனிப் பெறும் பெறும்பான்மை பெற்றுள்ளது.

  பதினேழரை கோடி பேர் வசிக்கும் இம் மாநிலத்தில் இருந்து நாடாளுமன்றத்தின் கீழவைக்கு 80 உறுப்பினர்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதால், இந்தத் தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தலாகக் கருதப்படுகிறது.

  சர்மர் என்று கூறப்படும் தோல்வேலைகளைச் செய்யும் சாதியைச் சேர்ந்த பிறந்த மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி தலித் மக்களின் கோரிக்கைகளை முன்னேடுக்கும் ஒரு அரசியல் கட்சியாக தன்னைப் பிரகடனம் செய்து கொண்டாலும், இந்தத் தேர்தலில் அக்கட்சி மிக அதிக அளவில் முன்னேறி ஜாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தது.

 6. bsubra said

  உ.பி.யில் 15 ஆண்டு கூட்டணி ஆட்சிக்கு முடிவு: முதல்வராகிறார் மாயாவதி

  லக்னெü, மே 12: உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

  மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 402 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் முடிவு அறிவிக்கப்பட்ட 398 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சி 203 இடங்களைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. இதன் மூலம் மாயாவதி 4வது முறையாக முதல்வராகும் வாய்ப்பு கிட்டியுள்ளது.

  சமாஜவாதி, பாரதீய ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்பார்த்ததைவிட கணிசமான தொகுதிகளை இழந்துள்ளன.

  பகுஜன் சமாஜ் கட்சியின் வெற்றி மூலம் மாநிலத்தில் கடந்த 15 ஆண்டுகளாக நிலவிவந்த கூட்டணி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

  தலித் தலைவராக திகழ்ந்துவந்த மாயாவதிக்கு, இம்முறை பிராமணர்களும், உயர்சாதி வகுப்பினரும் அதிக அளவில் வாக்கு அளித்துள்ளனர். இதனால் சமாஜவாதி மற்றும் பாரதீய ஜனதா கட்சிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

  இத்தேர்தலில் தலித்துகள் அதிகம் வசிக்கும் பகுதியிலும் துணிச்சலாக தனது கட்சி சார்பில் உயர்சாதி வேட்பாளர்களை நிறுத்தினார். 86 பிராமணர் உள்பட 138 உயர்சாதி வகுப்பினர்களை தனது கட்சி சார்பில் வேட்பாளர்களாக நிறுத்தினார்.

  முஸ்லிம்கள், இதர பிற்பட்ட வகுப்பினர் மற்றும் தலித்துகளுக்கும் கணிசமான தொகுதிகளை பகிர்ந்தளித்தார்.

  நடந்துமுடிந்த தேர்தலில் அவர் தனது தேர்தல் உத்தியை மாற்றியமைத்ததால் அனைத்து வகுப்பினரும் அவருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

  கடந்த தேர்தலில் 143 தொகுதிகளைக் கைப்பற்றிய சமாஜவாதி கட்சி, இம்முறை 98 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியுள்ளது. கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக கடந்த தேர்தலை விட 38 தொகுதிகள் குறைவாக 50 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் தீவிர பிரசாரம் எடுபடவில்லை. அக்கட்சிக்கு 22 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. சுயேச்சைகள் மற்றும் இதர கட்சிகள் 25 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளன.

  மாநில பாஜக தலைவர் தோல்வி: அலாகாபாத் தெற்கு தொகுதியில் போட்டியிட்ட பாஜகவின் மாநிலத் தலைவரும், பேரவைத் தலைவருமான கேசரிநாத் திரிபாதி இத்தேர்தலில் தோல்வியடைந்தவர்களில் முக்கியமானவர். அதேபோல் அப்னா தளம் தலைவர் சோனேலால் படேலும் வெற்றிவாய்ப்பை இழந்துள்ளார்.

 7. […] * இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவின் அ…. […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: