Free education & other Tamil Nadu Budget policy analysis
Posted by Snapjudge மேல் மார்ச் 23, 2007
கல்லூரிவரை கல்வி இலவசம்
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் அன்பழகன் வெளியிட்டுள்ள பல அறிவிப்புகள், ஏற்கெனவே முதல்வர் கருணாநிதியால் பல்வேறு நிகழ்வுகளில் வாக்குறுதி அளிக்கப்பட்டவை.
உதாரணமாக, மனவளர்ச்சி குன்றியோருக்கும் ஊனமுற்றோருக்கும் உதவித்தொகை, புதிதாக இரு மருத்துவக் கல்லூரிகள், மேலும் 5 லட்சம் குடும்பங்களுக்கு இலவச காஸ் இணைப்பு வழங்க ரூ.100 கோடி, சிறுபான்மையினர் நலன்காக்க தனி இயக்ககம் போன்றவை.
அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் திமுக அரசில் எப்போதுமே உள்ளவை. மற்ற திட்டங்கள் நிர்வாக வளர்ச்சி சார்ந்தவை. இருப்பினும் நடப்பாண்டு நிதிநிலை அறிக்கையில் கல்விக்கு மேலதிகமான கவனம் தரப்பட்டுள்ளது.
அரசுக் கலைக் கல்லூரிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. ஏழைகளுக்கு இலவச உயர்கல்வி இன்றைய இன்றியமையாத் தேவை. இந்தச் சலுகையை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தினால் இத்திட்டம் நிறைவானதாக இருக்கும்.
பிளஸ்2 படிப்பு வரை தமிழ் வழியில் படிப்போருக்கு தேர்வுக் கட்டணம் மிகக் குறைவானது என்றபோதிலும் அதையும்கூட செலுத்த முடியாத ஏழைகள் பலர் கிராமங்களில் உள்ளனர். தற்போதைய கல்விச் சூழலில் அரசுப் பள்ளியும் தமிழ் வழிக் கல்வியும் ஏழைகளுக்காகத்தானோ என்ற நிலைமை உள்ளதால் இந்தத் தேர்வுக் கட்டண ரத்து பயன் தரும்.
கல்வியில் பின்தங்கிய மாணவர்களின் சிறப்புப் பயிற்சிக்காக ரூ.1.23 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க விஷயம். ஆனால், இப் பயிற்சியில் மீண்டும் அரசுப் பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்துவதைத் தவிர்க்கலாம். பதிலாக, சிறப்பாகச் செயல்படும் தனியார் பள்ளி ஆசிரியர்களை இத் திட்டத்தில் பயன்படுத்திக் கொண்டால் அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் புதிய ஆசிரியர்களின் புதிய பயிற்றுமுறையினால் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.
பள்ளி, கல்லூரிப் பேருந்துகளுக்கு வரி குறைப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறியிருக்கிறது. இருப்பினும், பள்ளி, கல்லூரி வாகனங்களில் செல்லும் மாணவர்களுக்கு இந்த நிர்வாகங்கள் வசூலிக்கும் கட்டணங்கள் அதிகமாக உள்ளன. வரியைக் குறைப்பதுடன் பள்ளி, கல்லூரி வாகனத்தில் செல்லும் மாணவர்களுக்கான கட்டணங்களையும் கணிசமாகக் குறைக்க யோசனை கூறினால் பெற்றோருக்குப் பயன் கிடைக்கும்.
அத்தியாவசியப் பண்டங்களின் மீது வரிக் குறைப்புகள் ஏதும் நேரடியாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவற்றை அரசே கொள்முதல் செய்து நியாயவிலைக் கடைகள் மூலம் விற்பனை செய்யும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறைந்த விலையில் மக்களுக்கு பருப்பு, எண்ணெய் வழங்க முடியும் என்று அரசு நம்புகிறது. இது எந்த அளவுக்குப் பயன்தரும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
சத்துணவில் அளிக்கப்படும் முட்டைகளின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. பல நாட்களில் முட்டைகள் சிறியனவாகவும் அழுகியும் இருப்பதாகப் புகார்கள் எழுகின்றன. முட்டைக்குப் பதிலாக சத்துமாவு உருண்டை கொடுக்கலாம். இந்த சத்துமாவு உருண்டைகளை அந்தந்த சத்துணவுக் கூடங்களைச் சேர்ந்த குழந்தைகளின் தாய்மார்களைக் கொண்ட சுயஉதவிக் குழு மூலம் தயாரித்துப் பெறலாம். இந்தத் தாய்மார்களையே கோழி வளர்ப்பின் மூலம் முட்டையையும் வழங்கச் செய்யலாம்.
மருந்துகளின் விலை உயர்வும், தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கப்படும் கட்டணமும் நடுத்தர மக்களை மிகவும் பாதிப்பதாக உள்ளன. இதனை ஒழுங்குபடுத்துவதற்கான எந்த முயற்சியும் அறிவிப்பும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை.
ravidreams said
தகவலுக்கு, ஆய்வுக்கு நன்றி. கலைக்கல்லூரிக் கட்டண ரத்து வரவேற்கப்பட வேண்டியது. நிச்சயம் இதை அனைத்து அரசு மருத்துவ, நுட்பக் கல்லூரிகளுக்கும் விரிவு படுத்த வேண்டும்
bsubra said
உயர்கல்வியின் சவால்களும் வாய்ப்புகளும்
ந. ஜெகநாதன்
மனித வளர்ச்சிக்கான ஆதாரங்களில் அறிவு மிகவும் முக்கியமான ஒன்றாகும். அறிவு வளர்ச்சியில் உயர்கல்வி பெரும் பங்காற்றுகிறது. மனித மூலதனத்தை உருவாக்கவும் பயன்படுகிறது.
புதிய பொருளாதாரக் கொள்கையின் காரணமாக உயர்கல்வியில் ஏராளமான சவால்கள் உருவாகியுள்ளன. உயர்கல்விக்கான அரசின் நிதி ஒதுக்கீடு குறைந்து கொண்டே வருகிறது.
வளர்ந்த நாடுகளில் பள்ளிக்கல்வியை முடித்துவிட்டு உயர்கல்விக்கு வரும் மாணவர்களின் சதவீதம் 20 முதல் 25 ஆக உள்ளது. ஆனால் இந்தியாவில் இது வெறும் எட்டு சதவீதமாக உள்ளது. உயர்கல்வி செலவுகள் அதிகரிப்பாலும், பள்ளிக்கல்வியின் தரத்தில் நகர்ப்புறத்திற்கும் கிராமப்புறத்திற்கும் இடையே அதிக அளவில் வேறுபாடு உள்ளதாலும் உயர்கல்விக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை, குறிப்பாக கிராமப்புறத்திலிருந்து குறைந்துள்ளது.
உயர்கல்வி பாடத்திட்டம் படித்தவுடன் வேலைக்குச் செல்லும் வகையில் இல்லை. பாடத்திட்டங்கள் வேலைவாய்ப்புச் சந்தைக்கு ஏற்றாற்போல் அறிவை வேகப்படுத்துவதாகவும் இல்லை.
உலகமயமாக்கலில் கல்வித்தரம் மிக முக்கியம். ஆனால் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை எந்த அளவிற்கு வேகமாகப் பெருகிக் கொண்டு வருகிறதோ அதைவிட அதிக வேகத்தில் கல்வித்தரம் கீழ்நோக்கிச் சென்று கொண்டுள்ளது. ஆசிரியர், மாணவர்களின் ஈடுபாடு உயர்கல்வியில் குறைவாகவே உள்ளது.
சமூக பொருளாதார நிலைகளினால் உயர்கல்வியில் சாதி, மதம், பாலினம், வருமானம் ஆகியவைகளின் அடிப்படையில் மாணவர்கள் வேறுபடுத்தப்படுகிறார்கள். நாட்டில் தொழில் துறைகள் தான் அதிகமாக உயர்கல்வியினால் பயன் பெறுகின்றன. ஆனால் விவசாயத்துறை வளர்ச்சிக்குப் போதுமான உயர் கல்வியும், விரிவாக்க ஆராய்ச்சி மற்றும் சேவையும் ஏற்படுத்தப்படவில்லை. மேலும் திட்டமிட்ட உயர்கல்வி வகுக்கப்படாததனால் பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பயன்படும் வகையில்தான் அறிவுசார் சொத்துரிமை பயன்படுத்தப்படுகிறது.
உலக வர்த்தக அமைப்பின் மூலமாக வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் உயர்கல்வியைத் தருவதற்காக இந்தியாவிற்குப் படையெடுக்கின்றன. இதனால் உயர்கல்வியையும், ஆராய்ச்சியையும் கொடுத்துக் கொண்டுள்ள அரசு மற்றும் அரசு நிதி பெறும் கல்விக்கூடங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட உள்ளது.
தரமுள்ள உயர்கல்வியைப் பெற மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். இதற்காக ஏராளமான பணத்தைச் செலவிட வேண்டியுள்ளது. இதைத் தடுக்க இந்திய பல்கலைக்கழகங்கள் போதிய நடவடிக்கைகளை எடுத்ததாகத் தெரியவில்லை.
ஆராய்ச்சிக்கு அதிக ஊக்குவிப்பின்மை, வேலைவாய்ப்புக்கு உரிய கல்விப் பாடத்திட்டங்கள் இல்லாமை, சமத்துவம் இல்லாமை, நிர்வாகப் பிரச்சினைகள் மற்றும் சீர்கேடுகள் ஆகியவைகள் இன்றைய உயர்கல்வியில் உள்ள முக்கியச் சவால்களாக உள்ளன.
நவீன இந்தியாவில் தொழில் சார்ந்த பொருளாதாரத்தைப் புதிய பொருளாதாரக் கொள்கை அறிவு சார்ந்த பொருளாதாரமாக மாற்றியுள்ளது. இது அதிகமாக உழைக்கும் மக்களைக் கொண்ட இந்தியாவில் புதிய வேலைவாய்ப்பை உருவாக்கப் பயன்படும். மேலும் தனியார்மயமாக்கலினால் கல்விக்கூடங்கள் அதிகரித்து நடுத்தர பொருளாதார நிலைக்கு மேலே உள்ள மாணவர்கள் உயர்கல்வி பெற வாய்ப்பளித்துள்ளது. இத்துடன் கல்வி நிதி மற்றும் கடன் கிடைப்பதாலும், வேலைவாய்ப்பு உத்தரவாதம் இருப்பதாலும் நடுத்தர வர்க்க மக்கள் கூடத் தங்களின் பிள்ளைகளை வெளிநாட்டு உயர்கல்விக்கு அனுப்ப வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் உயர் தரத் தொழில் நுட்பத்தைக் கொண்டு வருவதால் இந்தியாவில் உள்ள உயர்கல்விக்கான ஆதாரங்கள் முழுமையாகப் பயன்படுத்த வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வலுவான கல்விப் போட்டியால் கல்வித்தரம் உயர வாய்ப்புள்ளது.
உயர்கல்வி முறையாக நிர்வகிக்கப்பட்டு, ஒழுங்குபடுத்தப்பட்டு மேலான தொழில் நுட்பத்துடன் இந்திய மாணவர்களுக்குத் தர வாய்ப்புள்ளது. இது தகுதியுள்ள மாணவர்களுக்கு நல்லதொரு வாய்ப்பையும் நாட்டத்தையும் உயர்கல்வியில் ஏற்படுத்தியுள்ளது. மேலும் கல்வித் தர போட்டியினால் உயர்கல்வியில் அதிக அளவு பெண்கள் இடம்பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலே கூறப்பட்டுள்ள வாய்ப்புகள் சாத்தியமாவதும் அனைத்துத் துறைகளிலும் சமவளர்ச்சியைப் பெறுவதும் அரசுகள் பன்முக அணுகுமுறையைத் தகுந்த முறையில் திட்டமிட்டுத் திறன்படச் செயல்படுத்துவதைச் சார்ந்துள்ளது.
உயர்கல்வியை மேம்படுத்த பல்வேறு செயல்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். அரசின் பங்கு உயர்கல்வியில் அதிகரிக்கப்பட வேண்டும். அரசே உயர்கல்விக் கூடங்களை கிராம மற்றும் பின்தங்கிய பகுதிகளில் போதிய அளவு தொடங்கி செவ்வனே நடத்த வேண்டும். பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள கிராமப்புற மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆறு சதவீத நிதியை உயர்கல்விக்காக அரசு ஒதுக்க வேண்டும். அவற்றில் இரண்டு சதவீதம் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு ஒதுக்கப்பட வேண்டும்.
உயர்கல்விக்கு ஒதுக்கப்படும் நிதி முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர். எனவே உயர்கல்விக்கு ஒதுக்கப்படும் நிதி முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.
தொடக்கக் கல்விக்கும் மேல்நிலைக் கல்விக்கும் போதிய முன்னுரிமை தந்து உயர்கல்வியுடன் தொடர்புப்படுத்தி மேல்நிலைப் பள்ளியைக் கடக்கும் மாணவர்களில் 20 சதவீதமாவது உயர்கல்வியை வந்தடைய அரசு வழிவகைகள் செய்ய வேண்டும்.
நாடும், மனிதவளமும் மேம்படத் தரமுள்ள மற்றும் வேலைவாய்ப்பைத் தரும் கல்விப்பாடத் திட்டங்களை கீழ்நிலையிலிருந்து மேல்நிலை வரை தொடர்புப்படுத்தி மாற்றியமைக்க வேண்டும். இது தற்போது மிக அவசியமான ஒன்றாகும்.
உயர்கல்வியில் அனைத்து நிலைகளிலும் மாணவர்களுக்கு சமவாய்ப்பைத் தரவேண்டும். உயர்கல்வியில் பல்வேறு மொழிகளுக்கும், குறிப்பாக தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.
உயர்கல்வி வளர்ச்சியை தேசிய முக்கியத்துவம், நாட்டின் பண்புகள், திறன் வளர்ப்பு மற்றும் பன்னாட்டு கல்விப்போட்டி ஆகியவைகளைக் கருத்தில் கொண்டு திறனுடன் மேற்கொள்ள வேண்டும்.
இந்தியாவிற்கு வரும் பன்னாட்டு கல்வி நிறுவனங்களை தேசிய முக்கியத்துவம் மற்றும் இந்திய சமுதாயப் பொருளாதார நிலைகளின் அடிப்படையில் ஒழுங்குபடுத்திக் கட்டுப்படுத்த வேண்டும்.
உயர்கல்வியில் உரிய ஊக்க நடவடிக்கைகள் மூலம் ஆசிரியர்கள்-மாணவர்களிடையே கல்வியில் ஊக்கமும் நாட்டத்தையும் ஏற்படுத்தி மிகுந்த ஈடுபாடு அடையச் செய்ய வேண்டும். உயர்கல்வியில் ஏற்படும் சவால்கள் அனைத்தையும் ஆசிரியர்களும் மாணவர்களும் கல்விக்காக ஏற்படும் வாய்ப்புகளாக மாற்ற முயற்சிக்க வேண்டும். இந்திய உயர்கல்வியில் அனைத்துத் துறைகளிலும் சமத்துவக் கல்வியைப் பெற அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இத்தகைய செயல்திட்டங்கள் உயர்கல்வியில் உள்ள சவால்களை முறியடித்து மேம்படச் செய்யும் என்பதில் ஐயமில்லை.
(கட்டுரையாளர்: இணைப்பேராசிரியர், சி.பி.எம். கல்லூரி, கோவை).
bsubra said
கற்றது பாதி அளவு
எழுத்தறிவு பெற்றவர் என்பதற்கு குறைந்தபட்ச அடையாளம் பேசும் மொழியைப் படிக்கவும் எழுதவும் செய்வதுதான்.
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 5ம் வகுப்பு பயிலும் மாணவர்களிடம் ஜூன் 2006-ல் நடத்தப்பட்ட ஆய்வின்படி, 60 சதவீத மாணவர்களால் மட்டுமே படிக்க முடிகிறது; 34 சதவீத மாணவர்களால் மட்டுமே எளிய கூட்டல், கழித்தல் கணக்குகளைப் போடமுடிகிறது. இந்த ஆய்வு முடிவுகள் தமிழகக் கல்வித் துறைச் செயல்பாடு குறித்து மிகப்பெரிய கேள்வியை எழுப்புகிறது.
இதேபோல, தனியார் பள்ளிகளிலும் 5-வது வகுப்பு மாணவர்களிடம் ஓர் ஆய்வு நடத்தியிருந்தால், தனியார் பள்ளி, அரசுப் பள்ளிகளில் நிலவும் மாறுபட்ட கல்விச்சூழல் பற்றியும் இது யாருடைய தவறு, இந்தத் தவறு எங்கே நடந்துள்ளது என்பதையும் அறிந்திருக்க முடியும்.
ஒரு தொடக்கப் பள்ளி மாணவனுக்கு அறிவியல் வினாக்களுக்கான விடையும், வரலாற்றுத் தகவல்களும் தெரிந்திருக்கவில்லை என்றால் குற்றமில்லை. படிக்கக்கூட தெரியவில்லை என்பது கவலை அளிக்கும் விஷயம். மாணவர்கள் எழுதும்படி பணிக்கப்பட்டிருந்தால் எத்தனை சதவீதம்பேர் பிழையின்றி எழுதியிருப்பார்கள் என்பது இன்னொரு அச்சம் தரும் கேள்வி!.
இந்த அடிப்படைக் கோளாறின் விளைவுதான், பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்களும்கூட தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளையும் பிழையின்றி எழுதத் தெரியாதவர்களாக இருக்கக் காரணம்.
எழுதப் படிக்கத் தெரியாமல் நடுநிலைப் பள்ளிக்கும் உயர்நிலைப் பள்ளிகளுக்கும் செல்லும் இவர்கள், எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் 30 ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு மட்டும் “சரியான விடையை எழுதிக் கொடுத்து’, அதனுடன் கருணை மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுகிறார்கள். தொடர்ந்து மேனிலைப் பள்ளியிலும் சேர்கிறார்கள். இவர்களில் பலர் பிளஸ்2 தேர்ச்சி பெற முடிவதில்லை. இவர்களுக்கு கிடைக்கும் கல்விச் செல்வம் “பிளஸ்2 தேர்ச்சி பெறவில்லை’ என்ற சான்றிதழ் மட்டுமே.
தனியார் பள்ளிகளைப் போன்று அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்குப் போதிய வசதிகள் இல்லை என்றும் கற்பித்தல் உபகரணங்கள் இல்லை என்றும் காரணம் சொல்ல முடியாது. ஏனெனில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் தொடக்கப் பள்ளிகளுக்கு பணம் கணிசமாக அளிக்கப்படுகிறது.
மாநில அரசு 15 சதவீதமும் மத்திய அரசு 85 சதவீதமும் நிதிச்சுமையைப் பகிர்ந்துகொள்ளும் இத்திட்டத்தில், நடப்பு நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசு தனது பங்காக மட்டும் ரூ.385 கோடி ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தில் மூன்றில் ஒரு பங்கு புதிய வகுப்பறைகளைக் கட்டுவதற்காகச் செலவிடப்பட்டாலும் மீதமுள்ள நிதி முழுதும் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தல், கற்பித்தல், உபகரணங்கள் வாங்குதல், புதிய உத்திகளைப் புகுத்திக் கற்பித்தல் ஆகியவற்றுக்காகச் செலவிடப்படுகிறது. மாணவர்கள் கற்பதை ஒரு சுமையாகக் கருதாதபடி பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு “கற்றல் இனிமை’ பயிற்சி அளிக்கப்படுகிறது.
தொகுப்பூதியம் பெற்று வந்த 45,987 ஆசிரியர்களை காலமுறை ஊதியத்துக்கு மாற்றியதன் மூலம் ஆண்டுக்கு ரூ.400 கோடி கூடுதல் செலவை ஏற்றுள்ளது தமிழக அரசு.
இத்தனைக்குப் பிறகும் 5-ம் வகுப்பில் படிக்கும் பாதிப் பேருக்கு எழுதப் படிக்கத் தெரியவில்லை என்றால், யாரைக் குறை சொல்வது?
ஊருக்குள் மரியாதையை மட்டுமே பெற்று, போதிய ஊதியம் இல்லாமல், கரும்பலகை வசதிகளின்றி திண்ணைகளிலும் கோயில் மண்டபங்களிலும் மரத்தடியிலும் மாணவர்களுக்குத் தமிழை எழுதவும் படிக்கவும் கற்பித்த அன்றைய ஆசிரியர்களின் பணியை நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை.