துயிலெழ வேண்டும் தொழிலாளர் துறை
எஸ். சம்பத்
தொழிலாளர்களுக்கும், தொழிலக நிர்வாகிகளுக்கும் இடையே பாலமாக, சமரச அலுவலராக, நீதித்துறை இணை அதிகாரத்துடன் செயல்பட்டு பிரச்சினைகளை விரைவாக தீர்த்துவைக்க வேண்டியது தொழிலாளர் நலத்துறை.
அந்த அமைப்பு இப்போது “”அதிகாரமற்ற அமைப்பு போல” தூக்கத்தில் இருப்பதால் ஏராளமான தொழிலாளர்களின் வாழ்வுரிமை கேள்விக்குறியாகிவிட்டது.
தொழிலாளர் நலச் சட்டங்களிலேயே முக்கியமானது 1947-ல் இயற்றப்பட்ட தொழில் தகராறுகள் சட்டம்தான்.
தொழிலாளர்கள் தரப்பில் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி எளிதாகப் பலன்களைப் பெற முடிகிறதா என்று பார்த்தால், இல்லை என்ற பதிலே விடையாகக் கிடைக்கும். இது கடந்த பத்தாண்டு காலமாக தமிழகத்தில் நிலவும் நிலைமை.
தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்குவது, தொழிலாளர்களுக்கு விரோதமாகச் செயல்படுவது, தொழிலகத்தில் அமலில் உள்ள நடைமுறைகளை முன் அறிவிப்பின்றி மாற்றுவது, தொழிலாளர் நீதிமன்றம் பிறப்பிக்கும் தீர்ப்புகளை அமல்படுத்துவது, நிர்வாகத்துக்கும் தொழிலாளிக்கும் இடையே வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது தொழிலாளியை வேலை நீக்கம் செய்வதாக இருந்தால் (தொழிலாளர் நலத்துறையிடம்) முன் அனுமதி பெறுவது, நியாயமாக தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப் பயன் நிலுவையைக் கோருவது போன்றவை தொடர்பாகத்தான் அடிக்கடி தகராறுகள் எழுகின்றன.
சமீப கணக்கெடுப்புகளின்படி சென்னையில் மட்டும் கடந்த ஆண்டில் சுமார் 7,600 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் சேர்த்தால் நூற்றுக்கணக்கில் வருகின்றன.
தொழில் தகராறு சட்டங்கள் பொருந்தி வருகிற நிறுவனங்களில் பணிபுரிகிற தொழிலாளர்கள், தங்கள் பிரச்சினைகளுக்காக நேரடியாக உயர் நீதிமன்றம் செல்ல முடியாது.
மாறாக, சமரச அலுவலர் முன்பு இப் பிரச்சினையை எழுப்பி அதில் சமரச முறிவு ஏற்பட்ட பின்னர், இதை நீதிமன்றத் தீர்ப்புக்கு விடலாமா, கூடாதா என்று அரசின் தொழிலாளர் துறை முடிவு செய்த பின்னரே வழக்கு தொடுக்க முடியும். அப்படியே தொடுத்தாலும் அந்த வழக்கில் தீர்ப்பு வர பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
அப்படியே தொழிலாளர் நீதிமன்றமோ, தீர்ப்பாயமோ ஒரு தீர்ப்பை தொழிலாளருக்குச் சாதகமாக வழங்கிவிட்டாலும், உடனடியாக நிர்வாகத்தின் தரப்பில் அதற்கு மேல் முறையீடு செய்யப்பட்டு நியாயம் கிடைப்பது மேலும் தாமதப்படுத்தப்படும்.
நடுநிலையான தொழிலாளர்துறை ஆணையர்கள் பணியில் இருந்தபோது தொழிலாளி மீதும் நிர்வாகத்தின் மீதும் தமது அதிகாரத்தை சரியாகப் பிரயோகப்படுத்தும் நிலைமை முன்னர் இருந்தது. அவற்றை நிர்வாகங்களும் ஏற்கும் நிலைமையும் இருந்தது.
இப்போது தொழிலாளி தரப்பில் ஒரு வழக்கு தொடரப்பட்டால், எதிர் மனுதாரராகிய நிர்வாகத்திடம் ஒருமுறைக்கு இருமுறை கேட்டுக் கொண்ட பிறகே வழக்கை விசாரணைக்கு எடுப்பதா, வேண்டாமா என்று முடிவு செய்யப்படுகிறது.
இதையெல்லாம் மீறி ஒரு வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்று பல வருடங்கள் வாதிட்ட பிறகு, “”அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது” என்று தீர்ப்பு வருவது தொழிலாளர்களுக்கு பேரிடியாக அமைகிறது. சமீப காலத்தில் இப்படிச் சில தீர்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன.
அரசு போக்குவரத்துக் கழகங்கள் தோன்றி 23 ஆண்டுகளுக்குப் பிறகு, 1995-ல் பொது நிலையாணைகள் உருவாக்கி சான்றிடப்பட்டது. அதில் சில அம்சங்களை எதிர்த்து நிர்வாகமும், தொழிற்சங்கங்களும் தனித்தனியே மேல்முறையீடு செய்தன.
கடந்த 11 வருடங்களாக தொழிலாளர் துறையால் அவை விசாரிக்கப்பட்டு முடிவுக்கு வராததால், போக்குவரத்துக் கழகங்கள் தோன்றி 34 ஆண்டுகள் ஆனபிறகும் பொது நிலையாணை ஏற்படாத அவல நிலை தொடர்கிறது.
2001-ல் போனஸ் தொடர்பான வழக்கு நிலுவையிலிருக்கும்போது போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் அனைத்திலும் சுமார் 600 பேர் வரை பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
அது தொடர்பாக, தொழில் தகராறு சட்டப்பிரிவு 33 (1) (ஏ)-ன்படி வேலை நீக்கத்துக்கு ஒப்புதல் கேட்ட மனுக்கள் மீது இன்னமும் முடிவெடுக்கப்படாமல் நிலுவையில் இருக்கின்றன. இதனால் வேலை நீக்கம் செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்துக்கும் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இந்த உதாரணம் அரசுத்துறை நிறுவனத்தைப் பொறுத்தது. தனியார் துறை தொடர்பாக எப்படி இருக்கும் என்று ஊகித்துக் கொள்ளலாம்.
தொழிலாளர் நலத்துறையை தட்டி எழுப்பி, நிலுவையிலிருக்கிற வழக்குகளை முடித்து வைத்தால் மட்டுமே, “”தொழில் தாவா சட்டம்” இயற்றப்பட்டதன் நோக்கம் நிறைவேறும்.
(கட்டுரையாளர்: தொழிற்சங்க நிர்வாகி).